சங்க காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களுள் ஒருவன். இவன் சோழர் குடியில் பிறந்தவன் என்பதனைச் சென்னி என்னும் பெயர் புலப்படுத்துகிறது. இளம் வயதிலேயே பேரறிவும் வீரமும் மிக்கவனாக இருந்தமை பற்றி இப்பெயர் அமைந்திருத்தல் கூடும். இடையன் சேந்தங் கொற்றனார் என்னும் புலவர் இவனை அகநானூற்று 375–ஆம் பாடலில் சிறப்பித்துக் கூறியுள்ளார். இம்மன்னன் தம் குடி காக்கும் கடமையால், யானைப் படை கொண்டு சென்று, போர் செய்து பகைவராக விளங்கிய வடுகரின் மதில் சூழ்ந்த பாழி என்னும் அரண்மனையினை அழித்தான். அப்போது அவன் யானைகள் அவ்வடுகர்களின் தலைகளைத் தம் கொம்பினால் குத்திச் சிதைத்தன. அதனால் அவற்றின் கொம்புகள் குருதிக் கறை படிந்து சிவந்து தோன்றின. இதனை உவமையாக்கிப் புலவர் அரிய பாலைக் காட்சி ஒன்றினைத் தம் பாடலில் சித்திரித்துள்ளார். ஆறலைகள்வர் அம்பினால் இறந்துபட்ட வழிச் செல்வோர் உடலங்களின் மீது அமர்ந்துண்டமையால், கழுகுகளின் கால்களில் குருதிக் கறை படிந்தது. அக்கழுகுகள் உட்கார்ந்- தமையால் செந்நிறமுற்றுக் காணப்படும் வெள்ளிய யாமரத்தின் கிளைகளுக்கு, சென்னியின் குருதிக் கறை படிந்த யானைக் கொம்புகளை உவமையாக்கிக் கூறியுள்ளார். இம்மன்னன் பகைவரின் பாழியினை அழித்த செயலைப் புலவர் ‘வினைவிறல், எழூஉத்திணி தோள் சோழர் பெருமகன், விளங்கு புகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி, குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார், செம்புறழ் புரிசைப் பாழி நூறி’ என்று குறிப்பிட்டுள்ளார் (அகம். 375; 10–13).