முதிர்ந்த பெண் விலங்கின் அண்டகத்தில் (ovary) சினை அணுச் செல் உருவாகிறது. சினை அணுச் செல் உருவாகும் முறையில் பெருகு நிலை, வளர் நிலை, முதிர் நிலை எனும் மூன்று நிலைகள் உள்ளன. பெருகு நிலையில், முதலில் மூல வளர் அடுக்குச் செல்கள் (primary germ cells) அண்டகத்தில் தோன்றி, பன்முறை மறைமுகப் பகுப்படைந்து, மிகுதியான செல்களைத் தோற்றுவிக்கின்றன. இச்செல்கள் சினை அணுத் தாய்ச் செல்கள் (oogonia) எனப்படும். இதில் இரட்டை எண்ணிக்கை குரோமோசோம்கள் (2n) உள்ளன. வளர் நிலையில் சினை அணுத் தாய்ச் செல்லும், நியூக்ளியசும் அளவில் பெரிதாகின்றன. குரோமோசோம்களின் இணைவு, குறுக்கெதிர் மாற்றம், சைட்டோப்பிளாச மாற்றம் ஆகியவை விந்துச் செல் ஆக்கத்தில் நிகழ்வது போன்றே நிகழ்கின்றன. இம்மாற்றங்களுக்குப் பின்னர், சினை அணுத் தாய்ச் செல், முதல் நிலைச் சினையணு வளர் செல்லாக (primary oocyte) மாறுகிறது. இதிலும், குரோமோசோம்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் (2n) இருக்கும். உயிரியின் வளர்ச்சிக்கு வேண்டிய பொருள்களைத் தேவையான அளவில் கொடுப்பதால், சினையணுச் செல் உருவாக்கத்தின் போது, நிகழும் வளர்ச்சி நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர் நிலையின் போது, முட்டையின் அமைப்பில் பல மாறுபாடுகள் தோன்றுகின்றன. முதல் நிலை. சினை அணு, குன்றல் பிரிவில் ஈடுபடுகிறது. இந்தப் பிரிவிற்கு முதல் முதிர்ச்சிப் பிரிவு (first maturation division) என்று பெயர். இதன் விளைவாக, இரு சமமற்ற சேய்ச் செல்கள் தோன்றுகின்றன. இவ்விரண்டில் பெரிதாக உள்ள சேய்ச் செல்லுக்கு, இரண்டாம் நிலைச் சினை அணு வளர் செல் (secondary oocyte) என்றும்,, சிறிய செல்லுக்கு முதலாம் துருவ உறுப்பு (first polar body or first polocyte) என்றும் பெயர். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இரண்டாம் நிலை. சினை அணு வளர் செல், இரண்டாம் முதிர்ச்சிப் பிரிவில் ஈடுபட்டு ஒரு வளர் நிலைச் சினை அணுச் (ootid) செல்லையும், ஓர் இரண்டாம் துருவ உறுப்பையும் உண்டாக்குகிறது. முதலாம் துருவ உறுப்பு இரு துருவ உறுப்புகளைத் தோற்றுவிக்கிறது. இந்தத் துருவ உறுப்புகள் அனைத்தும் பின்னர் சிதைந்து மறைந்து விடுகின்றன. சினை அணுச் செல் உருவாகும் முறையின் இறுதியில் ஒரு பெரிய ஒற்றைப்படைக் குரோமோசோம் எண்ணுடைய (haploid) வளர் நிலைச் சினை அணுச் செல்லும், மூன்று துருவ உறுப்புகளும் தோன்றுகின்றன. இளம் சினை அணு வளர் செல்களில் மைட்டோ காண்டிரியா மிகச் சிறிய அளவே காணப்படுகிறது. ஆனால், நீர் நில வாழ்வன, பறவை ஆகியவற்றில் வளரும் சினை அணு வளர் செல்களில் மைட்டோகாண்டிரியா ஒன்றாகச் சேர்ந்து, மைட்டோகாண்டிரிய மூட்டத்தைத் (mitochondrial clouds) தோற்றுவிக்கும். மைட்டோகாண்டிரியாவில் ஆக்சிஜனேற்ற நொதிகள் காணப்படுவதால், சினை அணுச் செல் வளர்ச்சியின் போது, ஆக்சிஜன் எடுத்துக் கொள்வது அதிகரிக்கப்படுகிறது. கோல்கை உறுப்புகள் (golgi bodies) இளம் சினை அணு வளர் செல்லின் மையப் பொருளைச் (centrosome) சுற்றிக் காணப்படுகின்றன. சிறு பாலூட்டிகளில், கோல்கை உறுப்புகள் ஒரு பெரிய உருண்டை வடிவப் பொருளாக மாறிப் பின்பு, சிதறி விடுகின்றன. நன்கு வளர்ச்சி பெற்ற சினை அணு வளர் செல்லில் கோல்கைப் பொருள், சைட்டோ பிளாசத்தில் சிதறிப் பின்பு, முழுதும் மறைந்து விடுகிறது. சினை அணு வளர் செல் வளர்ச்சியின் இரண்டாம் நிலையில், கருவுணவு தோன்றுகிறது. இது முன் கருவுணவாக்கம்,, கருவுணவாக்கம் என இரு நிலைகளைக் கொண்டுள்ளது. கருவுணவாக்கத்தின் போது, வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது. முட்டையின் உணவு சேமிப்பு, கருவுணவுத் துகள்களால் ஆனது. கருவுணவில் புரதங்கள், பாஸ்ஃபோ லிப்பிடுகள், சில கொழுப்புப் பொருள்கள் ஆகியவை காணப்படுகின்றன. இம்மூன்று பொருள்களின் அளவைப் பொறுத்துக் கருவுணவு மாறலாம். புரதக் கருவுணவு (proteinyolk) பெரிதும் முதுகு நாணற்றவையிலும்,, வளர்ச்சியுறா முதுகு நாணிகளிலும் (lower chordates) காணப்படுகிறது. நீர் நில வாழ்வனவற்றின் முதிர்ந்த முட்டையில், 45% புரதக் கருவுணவும்,, 25% கொழுப்பும், 8.1% கிளைக்கோஜனும், 20% சைட்டோப்பிளாசமும் உள்ளன. எலும்பு மீன்களில், கொழுப்பு, நுண்குமிழ்களாக (droplets) உள்ளது, ஊர்வன மற்றும் பறப்பனவற்றின் முட்டையில், சைட்டோப்பிளாசம் ஒரு மெல்லிய அடுக்காக மேற்பரப்பில் காணப்படுகிறது. வடிவம். பொதுவாக முதிர்ந்த முட்டை, உருண்டை வடிவமாக இருக்கும். பூச்சிகளில், இது நீண்டு உள்ளது. பறவைகளில், முட்டையின் மஞ்சள் பகுதியே முட்டைச் செல்லாகும். முட்டையின் முதிர்ச்சி நிலை. சினை அணு வளர் செல் வளர்ச்சி முடிந்தவுடன், குன்றல் பிரிவில் ஈடுபடுகிறது. இதே நேரத்தில், குரோமோசோம்கள் விரிவு நிலையை (diakinesis) அடைகின்றன. குன்றல் பிரிவில் சைட்டோப்பிளாசம் சமமற்ற நிலையில் பிரிகிறது. உட்கருச் சவ்வு உடைந்து, உட்கருவிலுள்ள பொருள்கள் சைட்டோப்பிளாசத்தில் கலக்கின்றன. இந்நிகழ்ச்சி, சில விலங்குகளில் கருவுறுதலுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. குன்றல் பிரிவின் இறுதியில், ஒரு பெரிய வட்ட வடிவமான ஒற்றைப்படைக் குரோமோமசாம் எண்ணுடைய சினை அணு உருவாகிறது. —சு. செல்லம்மாள் நூலோதி. B.I. Balinsky, An Introduction to Embryology, Fifth Edition, Holt-Saunders International Edition, Philadelphia, 1981.