இருப்பைக்குடிக் கிழவன்
iruppaikkuṭik kiḻavaṉ
பாண்டியச் சிற்றரசனும் அரசியல் அதிகாரியுமான இவன் சீமாற சீவல்லவன் (கி.பி.
பாண்டியச் சிற்றரசனும் அரசியல் அதிகாரியுமான இவன் சீமாற சீவல்லவன் (கி.பி. 815–862), இரண்டாம் வரகுண பாண்டியன் (கி.பி. 862–890) ஆகிய இரு பாண்டிய வேந்தர்களின்கீழ் பணிபுரிந்தவன். இவன் எட்டிச் சாத்தான் எனவும் சத்துரு பயங்கர முத்தரையன் எனவும் அழைக்கப்பட்டான். இருக்கன்குடினயத் தலைநகராகக் கொண்டு, சாத்தூர்ப் பகுதியை இவன் ஆண்டு வந்தான். இப்பகுதி இருஞ்சோணாடு எனவும் சொல்லப்பட்டது. இவன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியினை நாட்டின் நீர்ப்பாசனத்தைப் பெருக்குவதில் செலவிட்டான். இவன் எண்ணிறந்த குளங்களையும் ஏரிகளையும் வெட்டி அவற்றைப் பழுது பார்த்து, வரலாற்றில் தனது முத்திரையைப் பதித்துள்ளான். வறட்சிக்குப் பெயர் பெற்ற இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியான, இருஞ்சோணாட்டை வளப்பம் மிக்க பகுதியாக மாற்றிய பெருமை இவனைச் சாரும்.
ஆதாரங்கள்
இருப்பைக் குடிக் கிழவனின் நீர்ப்பாசனப் பணிகள். கோயிற் பணிகள் மற்றும் பிற பணிகளைப் பற்றி அறிந்து கொள்ள, இருக்கன் குடிப்பாறைக் கல்வெட்டு, நென்மேனி கண்மாய்க் கல்வெட்டு, சின்ன கொல்லப்பட்டிக் கல்வெட்டு, இருக்கன்குடியில் உள்ள நீண்ட அகவல் பாடல் கல்வெட்டு ஆகியன பெருந்துணை புரிகின்றன.
நீர்ப்பாசனப் பணிகள்
இவனது நீர்பாசனப் பணிகள் நான்கு வகைப்படும். அவையாவன: 1. புதிய ஏரிகளை வெட்டுதல். 2. பழைய குளங்களை ஆழப்படுத்திக் கரையை உயர்த்தி, அவற்றில் மடை அமைத்தல். 3. பெரிய குளங்களில் உள்ள கரைகளை இடித்து நீண்ட, உயர்ந்த கரைகளை அமைத்தல். 4. பழைய மடைகளைப் புதுபித்தல்
புதிய ஏரிகளை வெட்டுதல்
இவன் தென் வெளியங்குடி, கும்மணமங்கலம், இருப்பைக்குடி, கொழுவூர் போன்ற ஊர்களில் ஏரிகளை வெட்டுவித்தான். முதலிரண்டு ஊர்களில் வெட்டப்பட்ட ஏரி இவனது பேரால் கிழவனேரி என்று பெயர் பெற்றது. இருப்பைக் குடியில் திருமாலேரியை வெட்டினான். கொழுவூரில் சீமாறன் சீவல்லபன் பெயரில் மாறனேரி ஒன்றையும், புகழ்நெறி நடை ஏரி, புகழ் மலி ஏரி என்னும் பெயர் கொண்ட இரு ஏசிகளையும் வெட்டினான். சிறீவல்லபமங்கலம் என்னும் ஊரில் இவன் திருநாராயணன் ஏரியை வெட்டி, அதற்குக் குளவாயோடு மடையும் அமைத்தான்.
பழைய குளங்களைச் சீரமைத்தல்
கொழுவூரில் உள்ள செங்குளத்தையும், அரசங்குளத்தையும் இவன் செப்பனிட்டான். ஆலங்குடிப் பெருங்குளம் இவனால் சீர்படுத்தப்பட்டு, மடையும் புதிதாக அமைக்கப்பட்டது.
பழைய கரையை இடித்துப் புதுக்கரையமைத்தல்
இவன் பல பழங்குளங்களில் இருந்த பழைய, பழுதுபட்ட கரைகளை இடித்து, புதுக்கரைகளைக் கட்டினான். அவற்றுள் சிலவற்றுக்குக் ‘கிழவனேரி’ என பெயர் மாற்றினான். இவற்றுள் இருப்பைக்குடி வள்ளைக்குளம், நென்மலிப்பெருங்குளம், சிறுபுத்தூர் பாழிக்குளம் ஆகியன குறிப்பிடத்தக்கன.
மடைகளைப் புதுப்பித்தல்
இவன் சாத்தனூரில் பெருங்குளம், புதுக்குளம் ஆகியவற்றைச் சீர்திருத்தி மடைகளை அமைத்தான். சில குளங்களை இவன் கற்கள் கொண்டு பலப்படுத்தினான்.
பிறபணிகள்
நீர்ப்பாசனத்தைப் பெருக்க ஏரிகளையும் குளங்களையும் வெட்டிய இத்தலைவன், கோயில் கட்டுவதிலும் மண்டபம் கட்டுவதிலும் அம்- பலம் அமைப்பதிலும் பேரார்வம் கொண்டிருந்தான். எம்மதமும் சம்மதம் என்னும் பரந்தகொள்கையைக் கடைப்பிடித்த இவன், முதலூரிலும் தென் வெளியங்குடியிலும் சிவன் கோயில்கள் அமைத்தான். இருப்பைக்குடியில் சமணப் பெரும்பள்ளி ஒன்றினையும் அமைத்தான்.
அக்காலத்தில் ஊர்ச்சபையினர் அம்பல மண்டபங்களில் கூடியிருந்து ஊரின் நிருவாகத்தைக் கவனித்து வந்தனர். ஊர்த் தொடர்பான எந்தச் செய்தியும் இவ்வம்பலத்தில்தான் பேசப்படும். உள்ளாட்சி நிருவாகத்தில் ஈடுபாடு கொண்ட இருப்பைக்குடிக் கிழவன், இருஞ்சோணாட்டின் பல பகுதிகளில் அம்பலமண்டபங்களைக் கட்டினான். இவற்றுள் சில கருங்கற்களால் அமைக்கப்பட்டன. இக்கிழவன் கட்டிய அம்பலங்களுள் இருப்பைக்குடி, தென்வெளியங்குடி, நென்மேலி, கும்மணமங்கலம் முதலான ஊர்களில் அமைக்கப்பட்டவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.
பாண்டிய நாட்டைச் சோழ நாடு போன்று செழுமையாக்கிய இச்செயல் வீரன், ‘சத்துருபயங்கர முத்தரையன்’ எனவும் குறிக்கப்படுவதால், எதிரிகளை வென்ற மாவீரனாகவும் விளங்கினான் என்றறியலாம். இவன் சீமாற சீவல்லபனின் ஆணத்தியாகவும் பணிபுரிந்தான்.
இருப்பைக்குடிக் கிழவன் மேற்கொண்ட நீர்ப் பாசனப் பணிகள் இன்றும் பயனளிப்பதால் (எடுத்துக்காட்டு: இருப்பைக் குடியில் உள்ள மேலமடைப் பெரிய குளம், ஆலம்பட்டிக்குளம்) இவனது பெரும் பணி போற்றுதற்குரியது. ம.இரா.த.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 219)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9rhju93q/
தமிழ்“இருப்பைக்குடிக் கிழவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9rhju93q/APA
Oliyon Research. (2026). இருப்பைக்குடிக் கிழவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9rhju93q/MLA
"இருப்பைக்குடிக் கிழவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9rhju93q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment