நொதி
noti
அனைத்து நொதிகளும், புரதத் தன்மையையும், பெரிய மூலக் கூறுகளையும் கொண்டவையாகும்.
அனைத்து நொதிகளும், புரதத் தன்மையையும், பெரிய மூலக் கூறுகளையும் கொண்டவையாகும். இவற்றின் மூலக் கூறின் எடை 1.5 x104106 இருக்கும். ஏனைய புரதங்களைப் போலவே, இவை நிலையற்றவையும், இயல்பிழந்தால் செயலற்றனவாயும் இருக்கும். பெரும்பாலான நொதிகள் பெரிய பாலிபெப்டைடு அல்லது புரதப் பகுதியையும், வேறு வகையான இணைக் காரணி (co–factor) ஒன்றினையும் பெற்றிருக்கும். இணைக் காரணி இல்லையேல், நொதிகள் செயலற்றிருக்கும். இந்த இணைக் காரணிகள், இணை திறன் இரண்டுடைய உலோக அயனிகளாகும். சில நேரங்களில், சிறிய மூலக் கூறு எடை கொண்ட, புரதத் தன்மையற்ற கரிமப் பொருள்களும், இணை காரணியாகச் செயலாற்றும். இங்கு, இணைக் காரணிகள் புரதப் பகுதியுடன் தளர்வாகப் பிணைக்கப் பட்டிருக்கும். இவ்வகையான நொதிகளிலிருந்து பெறப் படும் இணைக் காரணிகள், இணை நொதிகள் (coenzyme) எனப் படும். பிற இயல்பான நொதிகளில், இணைக் காரணிகளுடனான தொடர்பு இறுக்கமாக இருக்கும். இவை ஹாலோ நொதிகள் (holoenzyme) எனப் படும். நொதி எந்தப் பொருளின் மீது வினை புரியுமோ, அப்பொருளின் பெயருடன் 1ஏஸ் (-ase)எனும் பகுதியைச் சேர்த்து, அந்நொதிக்குப் பெயரிடுவர். எடுத்துக் காட்டாகச் சூக்ரோசைக் குளுகோசாகவும், ஃபிரக்டோசாகவும் பிரிக்கின்ற நொதிக்குச் சுக்ரேஸ் என்று பெயர். மால்டோசை நீர்ப் பகுப்பு (Hydrolyse) செய்கிற நொதிக்கு மால்டேஸ் என்று பெயர். இவ்வகையான பெயரிடும் முறை, அந்நொதியின் வினையின் வேதித் தன்மையை எடுத்துக் காட்டப் போதுமானதாக இல்லை. எனவே, அனைத்துலக உயிர் வேதியிலார் சங்கத்தின் (International Union of Biochemists) 1961ஆம் ஆண்டின் பரிந்துரையின் படி, அனைத்து நொதிகளும் ஆறு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. அவை குழுமாற்றி (Transferase), நீராற் பகுப்பி (Hydrolase), ஆக்சிஜன் ஏற்ற ஒடுக்கி (Oxido-reductase), லையேஸ் (Lyase), ஐசோமெரேஸ் (Isomerase), இணைப்பு நொதி (Ligase) என்பன. ஒரு பொருளின் மூலக் கூறில் உள்ள ஒரு தொகுதியைப் பிறிதொரு பொருளுக்கு மாற்றுகிற வினைக்குக் காரணமான நொதி குழு மாற்றி ஆகும். ஒரு பொருளின் வேதித் தன்மையை நீரால் சிதைப்பது, நீராற் பகுப்பி எனப் படும். ஒரு வினையின் போது, வினை புரியும் பொருளின் மீது ஆக்சிஜனை ஏற்றும் அல்லது அப்பொருளிலிருந்து ஆக்சிஜனை ஒடுக்கும் நொதி ஆக்சிஜனேற்ற ஒடுக்கி வகையைச் சாரும். ஒரு மூலக் கூறின் இரு பகுதிகளுக்கு நடுவே, இரு பிணைப்புகளை(double bond)உருவாக்கும் நொதி லையேஸ் ஆகும். ஒரு மூலக் கூறின் பகுதிகளின் நிலையை மாற்றி, வடிவ ஐசோமெர் (geometrical isomer), ஒளியியல் ஐசோமெர் (optical isomer), இடஐசோமெர் (spatial isomer) ஆகியவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றுகிற நொதி ஐசோமெரஸே் எனப் படும். இரண்டு பொருள்களை ஆற்றல் மிகுந்த பாஸ்பேட் பிணைப்பை உடைப்பதால், வெளியாகும் ஆற்றலைக் கொண்டு இணைக்கும் நொதி இணைப்பு நொதியாகும்.
அனைத்து நொதிப் பொருள்களும் வினையின் வேகத்தை அதிகரிக்கின்றன. ஆனால், அவ்வினையின் ஆற்றலின் தேவையை மிகுதியும் குறைக்கின்றன. இத்தன்மையின் விளைவாக, வெப்ப நிலை மாறுபாடுகளைத் தாங்கி, ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் மிக வேகத்தோடு, அதிக மூலக் கூறுகளை வினைக்கு ஆட்படுத்தும். ஹைட்ரஜன்–பர்–ஆக்சைடு சிதைவடைந்து, ஆக்சிஜனாவும், நீராகவும் பகுப்படைய வேண்டுமானால், நிலையில் ஒரு மூலக் கூறுக்கு 18,000 கலோரி ஆற்றல் தேவைப் படுகிறது. ஆனால், காடலேஸ் (catalase) எனும் நொதி, இவ்வினையில் ஈடுபடுமானால், ஒரு மூலக் கூறுக்கு 5,500 கலோரிகளே போதும். இவ்வாறு நொதிப் பொருளின் விளைவாக வினைக்குத் தேவையான ஆற்றலின் அளவு இயல்பான அளவை விட மூன்றில் ஒரு பங்கே ஆகும்.
எந்த நொதிப் பொருளும் வினையின் போது, வினைப் பொருளோடு (substrate) ஒரு தற்காலிகப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இதன் காரணமாக, நொதி வினைப் பொருள் கூட்டமைப்பு (Enzyme–substrate complex). உருவாகிறது. இதன் பின்னரே, இக்கூட்டமைப்பில் உள்ள வினைப் பொருள் வேதி வினைக்கு ஆட்பட்டு, வினைப் பொருளைத் தருகிறது. நொதிப் பொருள் எவ்வித மாற்றமுமின்றி, மீண்டும் வினைக்காக வெளியேறுகிறது. 1880ஆம் ஆண்டில் வேர்ட்ஸ் என்பார், தம் கோட்பாட்டில் இதை விளக்கினார். பின்னர் 1890ஆம் ஆண்டில், எமில் ஃபிஷர் என்பாரால் பூட்டு–சாவிக் கோட்பாடு (lock and key hypothesis) உருவாக்கப் பட்டது. இக் கோட்பாட்டின் படி,நொதியுயம், வினைப் பொருளும் ஒன்றோடொன்று பூட்டு, சாவியைப் போலப் பொருந்திக் கூட்டமைப்பை உருவாக்குகின்றன. ஒவ்வொரு நொதியிலும் வினை புரியும் பகுதிகள் உண்டு. இவ்விடத்தில் வினைப் பொருள் இணையும். இவ்விணைப்பு ஹைட்ரஜன் அல்லது நீரெதிர்ப்பும் (Hydrophobic) மின் நிலையியல் பிணைப்பாகும். இதைத் தொடர்ந்து, வினைப் பொருளில் உள்ள பிணைப்புகள் உடைந்து. புதிய வினைப் பொருள் உருவாகிறது.
நொதிப் பொருள் இருக்கிற வினை புரியும் பகுதிகளின் வேதிப் பண்பு முழுமையாகக் கண்டறியப் படவில்லையாயினும், சில நொதிகளில் மட்டும் ஓரளவிற்குக் காணப் பட்டுள்ளன. அதனை நோக்குகையில், வினை புரியும் பகுதி அமினோ அமிலச் சங்கிலி (Amino acid chains) என்பது புலனாகும். சில நொதிகளில் இது ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கச் சங்கிலிகளையும் பெற்றிருக்கும். இந்தப் பக்கச் சங்கிலி பக்கத்திலேயே அமைந்திருக்க வேண்டும் என்பதில்லை. அது ஆங்காங்கே அமைந்திருப்பின், நொதியின் மூலக் கூறு மூன்றாம் நிலை மடிப்புக்கு உள்ளாகும் போது, அருகருகே அமையும். வினை புரியும் பகுதி பெரும்பாலும் -SH, -OH, -NH₂ கார்பாக்சைல் ஆகியவற்றின் தொகுதிகளில் ஏதாவதொன்றைப் பெற்றிருக்கும். நொதிப் பொருள், இணைப்புப் புரதத் தன்மை உடையதாயின், அதன் வினை புரியும் பகுதியில், ஓர் இணைக் காரணி அடிப்படைப் பொருளாக அமைந்திருக்கும்.
ஒவ்வொரு நொதியும் குறிப்பிட்ட வினை புரியும் பொருள்களோடு மட்டுமே வினையாற்றும். ஆனால், சில நொதிகள் தனக்குரிய வினை புரியும் பொருள்களைப் போன்ற பிற பொருள்களுடனும் வினை புரியும். சில, நொதிகள் அல்லது ஒளியியல் ஐசோமெர்களுடன் மட்டுமே வினை புரியும். எனவே ஒரே ஐசோமெர் இரண்டு ஆக்ஸிடேஸ்களைப் பெற்றிருக்கும். ஒன்று ஐசோமெருக்காகவும், மற்றொன்று ஐசோமெருக்காகவும் அமையும். இத்தகைய குறிப்பு வினைகளைப் பெற்றிருப்பினும், சில அமினோ அமில ரசிமேஸ் நொதிகள் மற்றும் ஐசோமெர்களுக்கிடையே ஒளியியல் ஐசோமெர்களை ஒன்றுக்கொன்று மாற்றும் தன்மையன. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது இந்நொதிகள் வினை புரியக் காரணம் வினை புரியும் பொருளின் அளவு, மூலக் கூறு அமைப்பு, மின்னமைப்பு ஆகியவற்றோடு ஒத்திருப்பதே ஆகும். சில நொதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வினை புரியும் பகுதிகள் அமைந்திருக்கும். பெப்டிடேஸ், எஸ்டரேசஸ் போன்றவை இவ்வகையில் அடங்கும். சில நொதிகள் ஒரே பொதுப் பண்புடைய பல பொருள்கள் மேல் வினை புரியலாம். இப்பண்பிற்கும் குழுக் குறிப்பு வினை (Group specificity) எனப் பெயர். எடுத்துக் காட்டாகப் பெப்சின், பெப்டைடு பிணைப்பு எந்த பொருளில் இருந்தாலும், அதன் மேல் வினை புரியும். எஸ்டரேசஸ், எஸ்டர் இணைப்புகளைத் தாக்கும்.
ஒரு நொதியின் செயல் வேகத்தைக் கட்டுப் படுத்தப் பல காரணிகள் உள்ளன. வினை புரியும் பொருளின் அடர்த்தி அதிகரிக்கப் படும். அதே விகிதத்தில் வினையின் வேகமும் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட நிலை வந்தவுடன், அதற்கும் மேல் செய்யும் அடர்த்தி அதிகரிப்பு எவ்விதப் பயனும் தராது. எனவே, எந்த அடர்த்தி நிலையில் வினை வேகம் உச்ச நிலை அடைந்ததோ, அந்நிலையில் நொதியின் மூலக்கூறுகள் நிறை–நிலை (saturation) அடைந்து, நொதி–வினை புரியும் பொருள் கூட்டமைப்பாக (Enzyme–substrate complex) இருக்கும். இது மீகெய்ல்ஸ்–மெண்டன் சமன்பாடு மற்றும் மீகெய்ல்ஸ்–மென்டன் மாறிலி இச்செயல் வினை மூலம் விளக்கப் படுகிறது. நொதியின் அடர்த்தியும், வினை புரியும் பொருளின் அடர்த்திக்கு ஏற்ப அதிகரிக்கப் படின், வினை வேகம் அதிகரிக்கும். ஆனால், ஒவ்வொரு நொதி மூலக் கூறும் மிகு ஆற்றல் கொண்டிருப்பதால், மிகக் குறைவான அடர்த்தியே அதிகப் பொருள்களைத் தாக்கும் தன்மை படைத்ததாகும். எனவே, நொதி அடர்த்தியின் உச்ச நிலையை எளிதில் காண இயலாது.
அனைத்து வேதி வினைகளுக்கும் வெப்ப நிலை ஒரு காரணியாக இருப்பது போலவே, நொதிகளின் வினை வேகத்திற்கும் அது அடிப்படையாக விளங்குகிறது. ஆனால், அனைத்து வெப்ப நிலையிலும், நொதிகள் தன் உயர்ந்த அளவு செயல் திறனைக் காட்டுவதில்லை. எந்த வெப்ப நிலையில் ஒரு நொதிப் பொருள் தன் உயர்ந்த அளவு செயல் திறனோடு வினை புரிகிறதோ, அதுவே, அந்நொதிக்கு ஏற்ற வெப்ப நிலை (Optimum temperature) ஆகும். இவ்வெப்ப நிலையை விட, மிகக் குறைந்த உறை வெப்ப நிலையிலும், மிக உயர்ந்த வெப்ப நிலையிலும், நொதிகளின் வினை வேகம் குறைந்து, தன் செயல் திறனையே இழக்கும்.
ஒவ்வொரு நொதியும், ஒரு குறிப்பிட்ட ஹைட்ரஜன் அயனியின் அடர்வு (PH) நிலையில் கூடுதல் செயல் திறனோடு வினை புரியும். அந்த அடர்வு நிலை, பொருத்தமான ஹைட்ரஜன் அயனியின் அடர்வு நிலை (Optimum PH) ஆகும். 7.5 முதல் 8.0, 7.0, 6.9, 1.5 ஆகியவை முறையே லைபேஸ், கொலின்ஈஸ்டரேஸ், அமைலேஸ், பெப்சின் ஆகிய நொதிகளின் பொருத்தமான ஹைட்ரஜன் அடர்வு நிலைகளாகும்.
எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவையும் நொதிகளின் வினைத் திறனை அழிக்கும் காரணிகளாகும். சில பொருள்களின் சேர்க்கையால், நொதிகளின் செயல் திறன் மிகவும் குறைக்கப் பட்டு அல்லது தடுக்கப் பட்டு விடுகிறது. இப்பொருள் வினை அடக்கி (Inhibitors) எனப் படும். வினை புரியும் பொருளைப் போன்ற அமைப்புக் கொண்ட சில பொருள்கள் நொதியோடு வினை புரியும் பகுதியில் இணைவதால், அந்நொதியின் வினைத் திறன் பாதிக்கப் படுகிறது. இவ்வகையில், செயலாற்றி நொதி வினையைத் தடுக்கும் பொருள் போட்டி வினை அடக்கி (competitive inhibitor) எனப் படும். இத்தகைய வினைகள், வினை புரியும் பொருளின் அளவு அதிகரிக்கும் போது, மீளும் தன்மையுடையன. சான்றாக, ஆர்கனோ பாஸ்ஃபேட்டின் மூலக் கூறு அசிடைல் கொலினின் மூலக் கூற்றின் அமைப்பை போலவே இருப்பதால், பின்னதன் சிதைவை ஊக்குவிக்கிற அசிடைல் கொலின் எஸ்டரேஸ் எனும் நொதியின் வினை புரியும் பகுதியில் பொருந்தி, நொதியின் வினையைத் தடுத்து விடுகிறது. மற்றொரு வகையான வினை அடக்கி, போட்டியிடாத வினை அடக்கி (Non-competitive inhibitor) எனப் படும். இது, நொதியின் வினை புரியும் பகுதியில் பொருந்தாமல் வேறு பகுதிகளில் பொருந்தும். இதனால், நொதியில் வினை புரியும் பகுதி கிடைத்தாலும், வினை நடப்பதில்லை. ஏனெனில், வினை அடக்கி, நொதியின் வேதித் தன்மையை மாற்றி விடுகிறது. எனவே, வினை மீளும் தன்மை அற்றது. சான்றாக அஸ்காரிஸ் எனும் குடற்புழு சுரக்கிற இரண்டு பாலிபெப்டிடேசிஸ், பெப்சின், டிரிப்சின் ஆகிய நொதிகளின் வினையைத் தடுக்கும். இதன் மூலம் இவ்வுயிரி, மேற்சொன்ன நொதிகளால் செரிக்கப் படுவது தடுக்கப் படுகிறது. மூன்றாம் வகை வினை அடக்கி, போட்டியில்லா வினை அடக்கி (Un–competitive inhibitor) எனப் படும். இது நொதி வினை புரியும் பொருள் கூட்டமைப்போடு (Enzyme–substrate complex) இணைந்து, கூட்டமைப்புச் சிதைந்து, விளை பொருள் உருவாவதைத் தடுக்கிறது. இவ்வினை மீளும் தன்மை கொண்டதாகும்.
சில நொதிகளின் வினையைத் தொடக்கவும், நொதி வினையில் வேகத் திறனை அதிகரிக்கவும், சில பொருள்கள் நொதிகளுக்குத் தேவைப் படுகின்றன. அவை கிளர்வு ஊக்கி (Activator) எனப் படும். பெரும்பாலான நொதிகள் தங்கள் உயர் செயல் திறனுக்காக உலோக கனிம அயனிகளின் துணையைக் கொண்டுள்ளன. ஆர்ஜினேஸ், கோபால்ட், மாங்கனிஸ், இரும்பு ஆகியவற்றின் ஏதாவதொன்றின் அயனி இருந்தால்தான் நன்கு வினை புரியும். இத்தகைய பொருள்கள் நொதியோடு இணைவதால், புரத அமைப்பு சற்று மாறி, நொதியின் வினை ஊக்குத் திறன் அதிகரிக்கப் படுகிறது. இவற்றின் கூட்டமைப்பு தற்காலிகமாகவும், எளிதில் உடைந்து விடக் கூடியதாகவும் விளங்கும்.
அனைத்து நொதிகளும் சுரக்கப்படும் போதே, செயல் திறனோடு இருப்பதில்லை. அவை செயலற்ற நிலையில் சுரக்கப் படுகின்றன. இவ்வகை நொதிகள் முன் நொதிகள் (Proenzymes) எனப் படும். பெரும்பாலான செரிப்பு நொதிகள், குருதி உறைதலுக்கான நொதிகள் இவ்வகையைச் சார்ந்தவை. சான்றாகப் பெப்சினோஜன் என்னும் முன் நொதி, வயிற்றின் ஹைட்ரோ–குளோரிக் அமிலத்தால் செயல் திறன் மிக்க பெப்சின் நொதியாக மாற்றப் படுகிறது. இந்நிகழ்வின் போது, முன் நொதியின் சில பெப்டைடு இணைப்புகள் உடைக்கப் படுகின்றன. இதனால், இந்நொதியின் வினை புரியும் பகுதி முழுமையற்றதாயினும், முழு வினை புரியக் கூடிய தன்மை பெறுகிறது. —சா. முத்தழகு
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 289)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9rgehr2c/
தமிழ்“நொதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9rgehr2c/APA
Oliyon Research. (2026). நொதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9rgehr2c/MLA
"நொதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9rgehr2c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment