இறையியல்
iṟaiyiyal
இறையியல் என்பது இறைவனுடைய இயல்புகள், அவனுக்கும் உயிருக்கும் உலகிற்குமிடையேயுள்ள தொடர்பு, மேலும் அவனைப் பற்றிய கருத்துகள் அனைத்தையும் ஆய்தலைக் குறிக்கும்.
இறையியல் என்பது இறைவனுடைய இயல்புகள், அவனுக்கும் உயிருக்கும் உலகிற்குமிடையேயுள்ள தொடர்பு, மேலும் அவனைப் பற்றிய கருத்துகள் அனைத்தையும் ஆய்தலைக் குறிக்கும். சமயநெறிகள், சமயக் கோட்பாடுகள் ஆகியவை பற்றிய ஆய்வும் இதில் அடங்கும், இறையியல் (Theology) ஆய்வின் பயனாகத் தத்துவக் கொள்கைகள் உருவாக்கப்படும். இறையனுபவம் வாய்க்கப் பெற்றவர்களின் உள் உணர்வாலும், அறிவியல் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சியாலும் இறைக் கோட்பாடுகள் உருவாகின்றன.
வேதகாலத்தில் ஒரு சமயம் இந்திரன் முதலான கடவுளர்க்கும் மக்களுக்கும் வேள்வியின் வாயிலாக நெருங்கிய தொடர்பு இருந்தது. உபநிடதக் காலத்தில் குறியும் குணமும் அற்ற பிரமமே மெய்ப்பொருள் குணங்களும் ஆற்றலும் நிரம்பிய பிரமமே மெய்ப்பொருள் என்ற இருவகைக் கருத்துகளும் இடம் பெற்றிருந்தன. சங்கரர் முன்னதை மேலான நிலையில் உள்ள மெய்ப் பொருளாகவும் இரண்டாவதை அடுத்த படி நிலையில் உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் தொழில் புரிகிற, மக்களால் பக்தியுடன் வழிபடத் தக்க ஈசுவரனாகவும் கண்டார். அவர் காணப்படுகின்ற உலகம் அவனது மாயையால் ஏற்படும் தோற்றமே என்றும் குணம் குறியற்ற மெய்ப்பொருள் என்றும் கொண்டார்.
இராமானுசர் உயிரும் உலகமும், எல்லா நன்மைக் குணங்களையும் பெற்ற இறைவனான நாராயணனுக்கு உடல் போல்வன ஆதலின் மூன்றுமே மெய்ப்பொருள்கள் என்று கொண்டார். மத்துவர் கருத்து இறைவன் ஒருவனே சுதந்திரன்; உயிரும் உலகும் அவனை நோக்க மாறுபட்ட இயல்பை உடையவை; அவனருள் இல்லாமல் அவை இயங்கமாட்டா என்பதாகும். ஆயினும், மூன்றுமே உண்மைப் பொருள்கள் தாம் என்று இவரும் கருதினர். சைவ சித்தாந்திகள் கடவுளுக்குக் குணம் குறிகள் கடந்தநிலையும் குணங்குறிகளோடு கூடிய நிலையும் உண்டெனவும், இரண்டுமே ஒரே மெய்ப்பொருளின் நிலையெனவும் கருதுவர். இவர்களும் உலகு, உயிர், கடவுள் மூன்றுமே மெய்ப்பொருள் என்று கொண்டனர்.
யோக நெறியாளர் கடவுளை உலகத்தைப் படைப்பவனாகவோ முக்தியை அளிப்பவனாகவோ கருதார். அவர்கள் கடவுள் மற்ற உயிர்களைக் காட்டிலும் சிறப்புடைய ஒருவர்; ஆன்மா கட்டுண்ட நிலையிலிருந்து முத்திநிலை எய்துகிறது; ஆனால், கடவுளுக்கு என்றுமே கட்டுண்டநிலை இருந்ததில்லை என்பர்.
நியாய நெறியாளரின் கருத்துப்படி மற்ற உயிர்களைப் போல் இறைவனும் ஓர் ஆன்மா தான். ஆனால், அவன் எல்லாம் வல்லவன்; ஆன்மாக்கள் அத்தகையனவல்ல. இந்நெறியாளர் கூறும் பதினாறு மூல பதார்த்தங்களைக் கொண்டு உலகைப் படைப்பது அவனுடைய தொழில். ஆகவே, நியாய நெறியாளர் அவனைப் பரமான்மா என்பர். மற்ற உயிர்களைப் போலல்லாமல் இறைவன் உடல், மனம் ஆகியவற்றின் தொடர்பின்றியே எல்லாவற்றையும் அறியவும் செய்யவும் வல்லவன்.பெ.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 544)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9r7rdnjw/
தமிழ்“இறையியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9r7rdnjw/APA
Oliyon Research. (2026). இறையியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9r7rdnjw/MLA
"இறையியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9r7rdnjw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment