இது எல்லா இடங்களிலும் பரவிக் காணப்படும் கணுக்காலித் தொகுதியைச் சேர்ந்த உயிரியாகும். சிலந்தி பல்வேறு பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் கொண்டுள்ளது. இது நச்சுத் தன்மை உடையது என்ற எண்ணம் மக்களிடையே காணப்படுகிறது. எல்லாச் சிலந்திகளும் நச்சுச் சுரப்பிகளைக் (venom gland) கொண்டுள்ளன. ஆனால், அவை மிகவும் அரிதாகவே மனிதனைக் கடிக்கும் பழக்கமுடையன. இவற்றில் மிகச் சில சிலந்திகளே கொடிய நச்சுத் தன்மை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. பட்டுப் போன்ற இழைகளால் பின்னப்பட்ட வலைகளுக்குள் வீழ்கின்ற பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. கணுக்காலிகள் தொகுதியில், எண்காலிகள் வகுப்பில், சிலந்திகள் வரிசையில், இவை ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக வகைப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில முக்கிய குடும்பங்கள் வருமாறு. டைஸ்டெரிடே. இக்குடும்பத்தைச் சேர்ந்த சிலந்தி 12—13 மி.மீ. நீளமுடையது. இரண்டு இணைச் சுவாசத் துளைகள் வயிற்றின் கீழ்ப் புறம் திறக்கின்றன. இவ்வகைச் சிலந்தி மரப்பட்டை மற்றும் கற்களின் அடியில் வசிக்கின்றது. மறைவாகக் கட்டிய வலைகளில், இரை விழுந்தவுடன் அவற்றைத் தாக்கிக் கொல்லும். ஊஃனோஃபிடே. குதிக்கும் இச்சிறிய சிலந்தி ஒரு மில்லி மீட்டர் நீளமுடன் காணப்படுகின்றது. அமெரிக்க மேற்கு மாநிலங்களில் பெருமளவில் வசிக்கிறது. சைடோடிடே. இந்த உமிழும் சிலந்தி வலை கட்டுவதில்லை. ஆனால் இரையைப் பிடிப்பதற்குக் கோழை போன்ற நீர்மத்தை உமிழ்கின்றது. இவ்வகைச் சிலந்தி பெரும்பாலும், நிழற்பாங்கான இடங்களிலும், கட்டடங்களின் இருள் சூழ்ந்த பகுதிகளிலும் காணப்படுகின்றது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வேட்டையாடும் சிலந்தி. வேட்டையாடும் சிலந்தி 4—15 மி.மீ. நீளமுடையது. பெரும்பான்மையான இனங்கள் சீரான இருண்ட நிறமுடையன. ஆனால், சில இனங்களில் வரிகள் அல்லது புள்ளிகள் காணப்படுகின்றன. இவ்வகைச் சிலந்தி குழல் வடிவ மறைவிடங்களிலும், கற்களின் அடியிலும், குப்பை கூளங்களிடையேயும் வலைகளைப் பின்னுகின்றது. குதிக்கும் சிலந்தி. இச்சிலந்தி நடுத்தர மற்றும் சிறிய அளவுடையது. நன்கு தடித்த உடல் அமைப்பும், குறுகிய கால்களும் சிறப்பாக அமைந்த கண்களும் சிறப்புப் பண்புகளாக அமைந்து, பிற குழுக்களிடமிருந்து இச்சிலந்தியை வேறுபடுத்திக் காட்டுகின்றன. உடல் மயிர் தெளிவான வண்ணமுடையதாகக் காணப்படுகின்றது. சில இனங்கள் எறும்பு போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றன. இவை, தங்களுக்குத் தேவையான இரைக்காக வேட்டையாடுகின்றன. கற்களுக்கடியிலும், குப்பை கூளங்களுக்கு இடையிலும் வலைகளைப் பின்னுகின்றன. உடல் அமைப்பு. சிலந்தியின் உடலைத் தலை, மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி எனப் பிரிக்கலாம். வயிற்றுப் பகுதி கண்டங்களற்றுக் காணப்படுகின்றது. தலைப் பகுதியில் மார்பு, கண், வாயுறுப்பு, கால் ஆகியன அமைந்துள்ளன. வயிற்றுப் பகுதியில் இன உறுப்பு, சுவாசத் துளை, வலை பின்னும் உறுப்பு ஆகியவை அமைந்துள்ளன. மார்புப் பகுதியின் மேற்புறம் கடின ஓட்டினாலும் (carapace) கீழ்ப்பகுதி தகட்டாலும் (sternum) மூடப்பட்டுள்ளன. தகட்டின் முன் பகுதியில் உதடு அமைந்துள்ளது. கண்கள். சிலந்திக்கு எட்டுக் கண்கள் உள்ளன. ஆனால், ஒரு சில சிலந்திகள் சில கண்களையே பெற்றுள்ளன. கண்களின் எண்ணிக்கை, அமைப்பு போன்ற பண்புகளைக் கொண்டு அவற்றின் குடும்பத்தை அறியலாம். நச்சுப் பல். தலை, மார்புப் பகுதியின் முன் பகுதி இறுதியில் இடுக்கிகள் அமைந்துள்ளன. இவை கண்களுக்குக் கீழ் நோக்கியவாறு காணப்படும். இவற்றில் இரு கண்டங்கள் உள்ளன. அடிக்கண்டம் தடிப்பாகவும், நுனிக் கண்டம் நச்சுப் பல்லாகவும் காணப்படுகின்றன. சிலந்தியின் நச்சுச் சுரப்பி நாளங்கள் நச்சுப் பல்லின் நுனியில் திறக்கின்றன. நச்சுப் பற்கள் பெரும்பாலான சிலந்திகளில் பக்கவாட்டில் அசைகின்றன. பேரிடுக்கி (pedipalps). இவை இடுக்கியின் பின்னும், கால்களுக்கு முன்னும் அமைந்துள்ளன. இவை கால்களைப் போன்று காணப்படுகின்றன. இவற்றின் அடிக் கண்டம் பெரியதாகக் காணப்படுகிறது. இது அரைக்கும் தாடையைப் போன்று செயல்படுகிறது. உதடு இரு உள் தகடுகளுக்கு (Endite) இடையில் அமைந்துள்ளது. ஆண் சிலந்திகளில் பேரிடுக்கிகளின் நுனிக் கண்டம் புணர் உறுப்பாக மாறியுள்ளது. கால்கள். கால்கள் பொதுவாக முதற்கண்டம், இரண்டாம் கண்டம், தொடை, முட்டி கீழ்க் கால் உள்ளெலும்பு (tibia), நடுக் கணுக்கால், கணுக்கால் என ஏழு கண்டங்களைப் பெற்றுள்ளன. காலில் மூன்று கூரிய நகங்கள் உண்டு. இவற்றில் இரண்டு இணையாகவும், மூன்றாவது தனித்தும் காணப்படும். கணுக்கால் கண்டத்தின் முனையில் மயிருண்டு. பல சிலந்திகளில் இரண்டு கூரிய நகங்கள் மட்டுமே உள்ளன. நகங்களின் கீழ்ப்பகுதியில், அடர்த்தியான மயிர்க் கற்றைகள் உள்ளன. கணுக் கால் கணு மற்றும் முன்னிடைக் கணுக்கால் கணுக்களில் காணப்படும் மயிர் உணர்வுகளைக் கடத்துகிறது. வயிற்றுப் பகுதி. வயிற்று முன் பக்க இறுதியில் கீழ்ப் புறம் ஒரு பள்ளம் குறுக்காகக் காணப்படுகிறது. இது மேல் வயிற்றுப் பள்ளத்தின் பின் புறத்தில் திறக்கிறது. சிலந்திகள் மூச்சுக் குழல்களைக் (trachea) கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் ஒரு மூச்சுத் துளைத் திறப்பின் மூலமே தொடர்பு கொண்டுள்ளன. மூச்சுத் துளைகள் மிகவும் சிறியனவாகக் காணப்படுகின்றன. பாலின உரு வேறுபாடுகள். ஆண், பெண் சிலந்திகள் தங்கள் உருவ அளவில் வேறுபடுகின்றன. பெண் சிலந்தி, ஆணை விடப் பெரிய உருவில் காணப்படுகின்றது. கலவியின் போது, சிலந்தி தனக்கே உரிய இனக் கவர்ச்சிச் செயலை மேற்கொள்கின்றது. கலவி முடிந்தவுடன், பெரும்பான்மையான இனங்களில் ஆண் சிலந்தியே பெண் சிலந்தியைக் கொன்று உண்கின்றது. வலை பின்னுவான்கள். பெண் சிலந்தியின் இனப்புழைத் திறப்பில், எபிகைனம் (epigynum) கூம்பு வடிவில் கடின அமைப்புடன் காணப்படுகின்றது. இந்த அமைப்பு இனத்திற்கு இனம் வேறுபடுவதால், இதைச் சிறந்த வகைப்பாட்டிற்குரிய பண்பாகக் கருதலாம். வயிற்றில் பின்பகுதியின் கீழ்ப்புறத்தில், ஆறு விரல்கள் போன்ற வலைபின்னுவான்கள் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து சிலந்திப் பட்டுக் கிடைக்கிறது. இரண்டு அல்லது நான்கு விரல் போன்ற வலை பின்னுவான்கள் சில இனங்களில் அரிதாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு வலை பின்னுவான்களின் நுனியிலும் நூற்புக் குழாய்கள் காணப்படுகின்றன. சிலவற்றில், இவை நூற்றுக் கணக்கில் உள்ளன. சில சிலந்திக் குடும்பங்களில் பட்டு உறுப்பு (crybellum) அமைந்துள்ளது. இது வலை பின்னுவானுக்குச் சற்று மேலாகக் காணப்படும். சிலந்தியின் உருமாற்ற வளர்ச்சி. சிலந்தி, வளர்ச்சியின் போது, குறைந்த அளவே உருமாற்றமடைகின்றது. முட்டையிலிருந்து வெளி வந்தவுடன் மிகச் சிறியதாகவும், பெற்றோரைப் போன்ற அமைப்பைக் கொண்டும் காணப்படுகின்றது. பொதுவாக, இது மறு வளர்ச்சித் திறனை (regenerative power) மிகுதியாகக் கொண்டுள்ளது. சிலந்தி தன் முட்டைகளை மென்மையான கூட்டினுள் இடுகின்றது. இக்கூடுகள் வடிவ அமைப்பில் வேறுபடுகின்றன. சிறு குச்சி, மரப்பட்டை, சந்து, பொந்து, வலை அருகு முதலிய இடங்களில் கூடு கட்டுகின்றது. சில கூடுகளைப் பெண் சிலந்தியே சுமந்து செல்கின்றது. முட்டையிட்ட பின், ஏறக் குறைய இருபது நாளிலேயே குஞ்சுகளைப் பொரிக்கின்றது. இளம் சிலந்திகள் முட்டை உறையினுள்ளேயே தங்கியிருந்து, இளவேனிற்காலத் தொடக்கத்தில் வெளி வருகின்றன. பெரும்பாலான இளஞ்சிலந்திகளைச் சிலந்திகளே உண்டு விடுவதால், அவற்றில் சில இளஞ்சிலந்திகளே பிழைக்கின்றன. உணவு முறைகள். அனைத்துச் சிலந்திகளும் பிற பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. பூச்சிகளைக் கடித்து, நஞ்சினைச் செலுத்துவதன் மூலமே சிலந்தி செயல்படுகின்றது. சிலந்தி பல்வேறு முறைகளில் தம் இரையைப் பிடிக்கின்றது. ஓணான் சிலந்தி, குதிக்கும் சிலந்தி ஆகியன இரை தேடும் போது, இரைகளைத் தாவிப் பிடிக்கின்றன. வணடுச் சிலந்தி பூக்களின் மீது காத்திருந்து பூக்களைத் தேடி வரும் தேனீக்களையும், ஈக்களையும், பிற பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றது. சிலந்திப்பட்டு. பலவகையான பட்டுப் போன்ற இழைகளைச் சிலந்தி நூற்கின்றது. பட்டுப் போன்ற இழைகள், சிலந்தி செல்லும் இடமெல்லாம் பாதை போல் தொடர்ந்து செல்லும். பட்டு நூல்கள் மிகச் சிறிய துளிகளாக ஒட்டும் பொருள்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் இரைகள் அகப்படுகின்றன. பெரும்பான்மையான சிலந்திகள் பட்டுப் போன்ற, இழைகளால், கட்டிய வலையின் மூலமே பூச்சிகளைப் பிடிக்கின்றன. சிலந்தி வலையின் வகைகள். சிலந்திகளால் பின்னப்படும் வலைகள், பல முதன்மையான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு சிலந்தி இனத்தின் வலையும், அதற்கே உரிய தனிப் பண்புகளை வெளிக் காட்டும் நிலையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. வீட்டுச் சிலந்தியும், பிற சிலந்தியும் முறையற்ற அமைப்பில் வலைகளைப் பின்னுகின்றன. ஏடு வகைச் சிலந்திகள், நெருக்கமாக ஏடு போன்று சாய்வாக அமைந்த வலைகளைப் பின்னுகின்றன. புனல் வலைச் சிலந்தியின் வலை, ஏடு போன்று இருந்தாலும், அதன் வடிவம் புனல் போன்றிருக்கும். கண்ணிக் கதவுச் சிலந்தி, ஓநாய்ச் சிலந்தி ஆகியன சுரங்கப் பாதையில் வலைகளைப் பின்னுகின்றன. பொருளாதாரச் சிறப்பு. சிலந்தி இயற்கைப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு பெறுகின்றது. எண்ணிக்கை மிகுந்து காணப்படுவதால், பூச்சிகளையும் வேறு சில உயிரிகளையும் இரையாகக் கொள்வதன் மூலம், அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, சிலந்தி துணைசெய்கிறது. சிலந்தியைப் பல்வேறு விலங்குகளும் உணவாகக் கொள்கின்றன. சிலந்தியின் பட்டு ஒளியியல் கருவிகளில் குறுக்கு இழைகளாகப் பயன்படுகிறது. —கி.வாசுதேவன்