அரசியல் பொருளாதாரக் கொள்கை
araciyal poruḷātārak koḷkai
இன்று பொருளியல் என்று அறியக் கூடிய சமூக அறி- வியல், அதன் தொடக்கக் காலத்தில் “அரசியல் பொருளாதாரக் கொள்கை” என்று அழைக்கப்பட்டு வந்தது.
இன்று பொருளியல் என்று அறியக் கூடிய சமூக அறி- வியல், அதன் தொடக்கக் காலத்தில் “அரசியல் பொருளாதாரக் கொள்கை” என்று அழைக்கப்பட்டு வந்தது. கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஐரோப்பியச் சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் வருவாய், நாட்டின்வளம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்தாம், அரசியல் பொருளாதாரக் கொள்கையின் (Political Economy) தொடக்கம் எனலாம். ஆயினும் அந்த ஆய்வுகள் ஓர் ‘இயல்’ என்னும் தரத்தைப் பெறவில்லை. கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் தனியுரிமைக் கோட்பாடும் (Individualism), தாராளக் கொள்கை (Liberalism)யும் எழுந்த பொழுது அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை அலசி ஆராய்வதற்காக அரசியல் பொருளாதாரக் கொள்கை என்னும் ஒரு தனி இயல், வல்லுநர்களால் உருவாக்கப்பட்டது.
வரலாற்று ரீதியாக, அரசியல் பொருளாதாரக் கொள்கையின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் நான்கு காலக் கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நிலவிய அரசியல், பொருளாதார சமூக அமைப்புகள், நம்பிக்கைகள் அக்காலக் கட்டத்தில் நிலவிய அரசியல் பொருளாதாரக் கொள்கையின் தன்மையை நிருணயித்தன. முதல் காலக் கட்டம் கிரேக்க நகர அரசுகள் காலப்பகுதி ஆகும். அந்நகர அரசுகளில் மக்களாட்சி நிலவிய போதிலும் அடிமைகளுக்கும் வணிகர்களுக்கும் அரசியல் உரிமை மறுக்கப்பட்டது. குடியுரிமையுடையவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்குக் தேவையான ஓய்வும், நேரமும் கிடைக்கச் செய்ய அடிமை முறை இன்றியமையாதது என அரிசுடாட்டில் வற்புறுத்தினார். ஆட்சியாளர்களுக்குத் தனியாகச் சொத்து இருக்கக் கூடாது எனப் பிளாட்டோ (Plato) வாதிட்டார். ஆனால் தனியார் சொத்துரிமையை அரிசுடாட்டில் ஆதரித்தார். இரு அறிஞர்களும் தொழிற் பாகுபட்டு முறை (Division of Labour)யை வற்புறுத்தி, அதன் நன்மைகளைச் சுட்டிக் காட்டினர்.
இடைக்காலம், அரசியல் பொருளாதாரக் கொள்கை வளர்ச்சியின் இரண்டாம் கட்டமாகும். இடைக் காலத்தில் மிக வலுவான நிறுவனமாகக் கத்தோலிக்கத் திருச்சபை விளங்கியது. திருச்சபையின் தலையான நோக்கம் மறுமை, அறவொழுக்கம் ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளை மக்களிடைப் பரப்புவதைப் பற்றியே இருந்தது. இம்மையைப் பற்றி அது அதிக அக்கறை காட்டவில்லை. வணிகம் செய்வது, வட்டி வாங்குவது ஆகிய செயல்கள் இழிதொழிலாகக் கருதப்பட்டன. ஆயினும் இடைக் காலத்தின் பிற்பகுதியில் மக்களின் சுவனம் அதிகமாக இம்மையிலுள்ள அரசியல் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் திரும்பியது. அதில் அவர்கள் அதிக அக்கறை காட்டத் தொடங்கினர்.
அரசியல் பொருளாதாரக் கொள்கை வளர்ச்சியின் மூன்றாம் கட்டம் கி.பி. 16,17,18–ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய வணிகத்துவம் (Mercantilism) ஆகும். வணிகத்துவத்தைப் “பொருளாதார தேசியம்” (Economic Nationalism) என்று சொல்லலாம். வணிக வாதிகளின் ஒரே குறிக்கோள் நாட்டு நலனைப் பேணுதல் ஆகும். ஒரு நாட்டின் பலம், பாதுகாப்பு ஆகியவை, அந்நாட்டின் இருப்பிலுள்ள தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் அளவைப் பொறுத்திருக்கின்றன. எனவே அவற்றின் அளவைப் பெருக்க வேண்டும் என்றும், அதற்கான சிறந்த வழி ஏற்றுமதியைப் பெருக்கி, இறக்குமதியைக் குறைக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். வணிகத்துவம் அதன் குறிக்கோள்களை அடையத் தடையிலா வாணிகக் (Free Trade) கொள்கையை வலியுறுத்தியது. கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் தாமசு மன் (Thomas Mun), சர் சோசையா சைல்டு (Sir Josiah Child) போன்ற அறிஞர்கள், இங்கிலாந்தில் வணிகத்துவச் கொள்கையின் தீவிர ஆதரவாளர்களாகத் திகழ்ந்தனர்.
அக்கொள்கை நிலவிய காலத்தில் வாணிகத்திற்கு மிக்க முதன்மை அளிக்கப்பட்டமையால். விவசாயம் அடியோடு புறக்கணிக்கப்பட்டது. தொழில்களும் மிகுதியான அரசாங்கக் கட்டுப்பாடுகளுக்கு இலக்காகின. அந்நிலைக்கு எதிராகப் பிரான்சில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியது. இயற்கை வாதிகள் (Physiocrats) எனப் பெற்ற அந்த எதிர்ப்பு வாதிகள், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயற்கையான சமூக அமைப்பை அமைக்க வேண்டுமென்று வாதிட்டனர். மக்களின் பொருளாதார வாழ்க்கையில் அரசாங்கம் தலையிடக் கூடாது என்றும், அரசாங்கம் மிகக் குறைவான அடிப்படைப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டுமென்றும் இவர்கள் வற்புறுத்தினர். எனவே இவர்களுடைய கருத்துகள் “தலையிடாக் கொள்கை” (Laissez Faire) எனப்பட்டன. ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளே இயற்கைவாதிகள் செல்வாக்கோடு விளங்கிய போதிலும். அரசியல் பொருளாதாரக் கொள்கை ஓர் இயலாக மாற, அவர்களின் கருத்துக்கள் பெரிதும் உதவின. பிராங்காய் குசுனே (Francois Quesnay), தர்காட் (Turgot) ஆகியோர் இயற்கைவாதிகளில் புகழ் பெற்றவராவர்.
அரசியல் பொருளாதாரக் கொள்கைக்கு முறையான விளக்கம் அளித்து அதனை ஓர் இயலாக மாற்றிய பெருமை, இங்கிலாந்தைச் சார்ந்த ஆடம் சுமித்து (Adam Smith) என்பவரையே சாரும். அரசியல் பொருளாதாரக் கொள்கையின் தந்தை என அவர் போற்றப்படுகிறார். கி.பி. 1776–ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது நூல் (An Inquiry into the Nature and Causes of the Wealth of the Nation) அவருடைய ஆழ்ந்த அறிவிற்கும், ஆய்வுத் திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொழில் பகுப்பு முறையின் நன்மைகளை எடுத்துக்காட்டி அதன் வாயிலாகத்தான் ஒரு நாட்டின் செல்வத்தைப் பெருக்கமுடியும் என்று அவர் விளக்கினார். மேலுமவர் நாட்டின் செல்வ வளர்ச்சிக்கு வணிகம் இன்றியமையாத ஒரு கருவியாகும் என்று கூறித் தடையிலா வாணிகத்தின் நன்மைகளைச் சுட்டிக் காட்டினார். வெளிநாட்டு வாணிகத்தின் வாயிலாகத் தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்தான் ஒரு நாட்டின் பலம் அடங்கியிருக்கிறது என்னும் வணிக வாதிகளின் வாதத்தை அவர் மறுத்தார். மாறாக, ஒரு நாட்டின் செல்வம் அந்நாட்டு மக்களின் உழைப்பில்தான் (Labour) இருக்கிறது என அவர் வாதிட்டார். ஒரு பொருளின் மதிப்பு (Value) அதனை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பினால் ஏற்படுகிறது எனக் கூறி, சுமித்து “உழைப்பு மதிப்புக் கோட்பாட்டை” (Labour theory of value) உருவாக்கினார். தொழில் வளர்ச்சிக்கு மூலதனத்தின் (Capital) இன்றியமையாமையினையும் அவர் உணர்ந்திருந்தார். பொருளாதாரத் துறையில் அரசாங்கம் தலையிடாக் கொள்கையை அவர் ஆதரித்தார்.
ஆடம் சுமித்தின் நூலும், பொருளாதாரக் கருத்துக்களும் இங்கிலாந்தில் மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தன. சுமித்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கேற்பப் பல நாடுகளும் அவற்றின் வணிகக் கொள்கையில் தீவிர மாற்றங்களைப் புகுத்தின. பிரான்சில் ஜே.பி.சே (J.B. Say) என்பாரும் செருமனியில் காரல் என்றிச் ரா (Karl Heinrich Rau), என்பாரும், சுமித்தின் அரசியல் பொருளாதாரக் கொள்கையைப் பரப்பினர்.
சுமித்தின் காலத்தில் தொன்மை அரசியல் பொருளாதாரக் கோட்பாடு (Classical School of Political Economy) தொடங்கியது. அவர் காலத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் ஏற்பட்ட பல மாற்றங்களும், –தொழிற்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, நெப்போலியப் போர்கள், மக்கள் தொகைப் பெருக்கம், வெளிநாட்டு வாணிக வளர்ச்சி ஆகியனவும் நாட்டில் அரசியல், பொருளாதாரச் சிக்கல்கள் பலவற்றை உண்டு பண்ணின. அரசாங்கம், பாராளுமன்றம், சிந்தனையாளர்கள், ஆகியோரின் கவனம் அவற்றைச்சமாளிப் பதில் திரும்பியது. அவர்களின் விவாதங்களிலிருந்து தொன்மை அரசியல் பொருளாதாரக் கொள்கை புதிய பலகோட்பாடுகளைப் பெற்று முறையாக வளரத் தொடங்கியது. தாமசு இராபர்ட்டு மால்தசு (Thomas Robert Malthus), தேவிட் ரிக்கார்டோ (David Ricardo), சான் இசுடுவர்ட்டு மில் (John Stuart Mill) போன்ற வல்லுநர்கள் புதிய கோட்பாடுகளைத் தொன்மை அரசியல் பொருளாதாரக் கொள்கைக்கு வழங்கி, அதன் வளர்ச்சியைப் பேணினர். உணவுப் பொருள்களின் உற்பத்திப் பெருக்க விகிதம், மக்கள் தொகைப் பெருக்க விகிதம் ஆகிய இரண்டுக்குமிடையேயுள்ள இடைவெளியைச் சுட்டிக் காட்டும் மக்கள் தொகைக் கோட்பாட்டை (Theory of Population) மால்தசு வழங்கினார். பொருளாதாரச் சிக்கல்களை ஆராய, ரிக்காட்டோவும் மில்லும், மதிப்புக் கோட்பாட்டை (Theory of Value)யும் பகிர்வுக் கோட்பாட்டை (Theory of Distribution)யும் கையாண்டனர். பொருள்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட விலையில் மாற்றம் (Exchange) செய்யப்படுகின்றன. ஏன் சில பொருள் அதிக விலையிலும், சில பொருள்கள் குறைந்த விலையிலும் விற்கப்படுகின்றன என்பதை மதிப்புக் கொள்கை விளக்க முயன்றது. தேசிய வருமானத்தை நிலத்திற்கு வாரம், தொழிலாளிக்கு ஊதியம், மூலதனத்திற்கு வட்டி, தொழிலில் முனைவோருக்கு இலாபம் என்ற நான்கு உற்பத்திக் காரணிகளுக்கிடையே பங்கீடு செய்வதைப் பகிர்வுக் கோட்பாடு விளக்கியது.
தொன்மைப் பொருளாதார வல்லுநர்கள் உருவாக்கிய மற்றொரு கோட்பாடு “குறைந்து செல் விளைவு விதி” (Law of diminishing return) ஆகும். மக்கள் தொகைப் பெருக்கத்தினால் வளமற்ற நிலங்களிலும் விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது; அதனோடு ஆழ்ந்த வேளாண்மை (Intensive Cultivation)யும் மேற்கொள்ள வேண்டி வருகிறது. அவ்வாறு செய்யும்போது வேளாண்மைக்குப் பயன்படுத்தும் உழைப்பு, மூலதனம் ஆகியவற்றின் அளவிற்கேற்ப உற்பத்தியின் அளவு பெருகுவதில்லை என்ற கருத்தைத்தான் அவர்கள் குறைந்து செல்விளைவு விதி என்று குறிப்பிட்டனர்.
அரசியல் பொருளாதாரக் கொள்கை வளர்ச்சியின் இறுதிச்சட்டம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்குகிறது. கி.பி. 1850–ஆம் ஆண்டிற்குள் இங்கிலாந்தில் தொழிற் புரட்சியின் தீமைகள் வெளிப்படத் தொடங்கின. அப்புரட்சியின் விளைவாக ஆலை முறை (Factory System)யும், முதலாளித்துவ முறை (Capitalism)யும் எழுந்தன. அவ்விரண்டு முறைகளும் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கும், செல்வம் ஒரு சிறுபான்மையினரிடம் சென்று குவிவதற்கும் வழி கோலின. தொழிலாளர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. அந்த அவல நிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்றத் தொன்மைப் பொருளாதாரக் கொள்கையினால் இயலவில்லை. மாறாக தனியுரிமைக் கோட்பாடு, அரசின் தலையிடாக் கொள்கை போன்றவை தொழிலாளர்களின் நிலையை மேலும் சீர்கேடடையச் செய்ய உதவின. அந்நிலையிலிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்றும் பொருட்டு அரசியல் பொருளாதாரச் சிந்தனையாளர்கள் சமதருமக் கோட்பாட்டை (Socialism) உருவாக்கினார்கள். பொருளாதாரத் துறையில் காணக் கூடிய இழிவுகளை அகற்ற அரசு அதில் தீவிரமாகத் தலையிட வேண்டும்; உற்பத்திக் கருவிகள், வளங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்பன சமதருமக் கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கைகள் ஆகும்.
சமதருமக் கோட்பாடுகள் பல உருவங்களில் தோன்றி வளர்ந்துள்ளன. அவற்றில் சில மறைந்தும் போய்விட்டன. ஆயினும் காரல் மார்க்சு உருவாக்கிய விஞ்ஞான சமதருமக் கோட்பாடு (Scientific Socialism) இன்று ஒரு வலுவான அரசியல் பொருளாதாரக் கோட்பாடாகத் திகழ்கிறது. கி.பி. 1848–ஆம் ஆண்டில் வெளிவந்த பொதுவுடைமை அறிக்கை (Communist Manifesto) என்னும் நூலில் மார்க்சு அவருடைய விஞ்ஞான சமதருமக் கோட்பாட்டின் கொள்கைகளை விரிவாக விளக்கியுள்ளார்.
மனிதனுடைய சிந்தனை, செயல் ஆகியவை பொருளாதாரச் சத்திகளால் நிருணயிக்கப்படுகின்றன என்று மார்க்சு உலகுக்குப் பறை சாற்றினார். முதலாளித்துவ சமூகம் சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்கள் என இரு வகுப்புகளைக் கொண்டது என்பதும், அவ்விரு வகுப்புகளுக்கிடையே வருக்கப் போராட்டம் (Class War) ஏற்பட்டுச் சுரண்டப்பட்ட பாட்டாளி வருக்கம், சுரண்டும் முதலாளி வருக்கத்தைத் தோற்கடித்து, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிப் பாட்டாளி வருக்கத்தின் சருவாதிகார ஆட்சி (Dictatorship of the Proletariat)யை நிறுவும்; அந்த ஆட்சி முதலாளித்துவ முறையை அடியோடு ஒழித்துக்கட்டி, ஒரு பொதுவுடைமைச் சமூகத்தை அமைப்பதற்குப் பாடுபடும் என்பதும் மார்க்சின் சமதருமக் கொள்கையின் கோட்பாடாகும். காரல் மார்க்சின் காலத்திலிருந்து விஞ்ஞான சமதருமக் கோட்பாடு எனப்படும் பொதுவுடைமைக் கோட்பாடு (Communism) அரசியல் பொருளாதாரக் கொள்கையில் ஒரு முக்கியமான பகுதியாக மாறிவிட்டது
அரசியல் பொருளாதாரக் கொள்கை கி.பி. 20–ஆம் நூற்றாண்டில் “பொருளியல்” (Economics) என்னும் பெயருடன் ஒரு விஞ்ஞான இயலாக மாறியது. பொருளாதார வல்லுநர்கள் புதியபல உத்திகளையும் ஆய்வு முறைகளையும் கையாண்டு பொருளியலில் மிகுதியான புதிய கோட்பாடுகளையும் கருத்துகளையும் புகுத்தினர். அவற்றில் நலப் பொருளாதாரம் (Welfare Economics), நவீன பொருளாதாரம் (New Economies) ஆகிய இரண்டும் மிகச் சிறந்த கோட்பாடுகளாகும். நாட்டின் பொருளாதார நிலைமை, அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை ஆகியவை மக்களின் நலனை எப்படிப் பாதிக்கிறது என்பதை நலப் பொருளாதாரம் நுணுக்கமாக ஆய்கிறது. அதற்காக நாட்டிற் காணும் முற்றுரிமை (Monopoly), வரி விதிப்பு முறை (Taxation System), இறக்குமதிக் கொள்கை, விலை வாசிகளின் மீதுள்ள கட்டுப்பாடு, அரசாங்கத்தின் சமதருமக் கொள்கை ஆகியவற்றை நலப் பொருளாதாரம் ஆராய்கிறது. நலப் பொருளாதாரக் கருத்தைப் பற்றி விரிவான விளக்கத்தைக் கொடுத்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஏ.சி. பிகு (A.C. Pigou) ஆவார். அவருடைய “நலப் பொருளாதாரம்” (கி.பி. 1920 Economics of Welfare) என்னும் நூல் இன்றும் அக்கோட்பாட்டின் இலக்கணமாகத் திகழ்கிறது.
அடுத்து முதன்மையான முக்கியக் கோட்பாடாக விளங்கும் நவீன பொருளாதாரத்தைப் பொருளியலுக்கு வழங்கியவர் இங்கிலாந்தின் பொருளியல் மேதை ஜே.எம். கெயின்சு (J.M. Keynes) ஆவார். அவருடைய நூல் (The General Theory of Employment, Interest and Money 1936) நவீன பொருளாதாரக் கோட்பாட்டை விரிவாக ஆராய்கிறது. பொருள்களின் மீது நுகர்வோருக்கு ஆற்றலுள்ள தேவை தான் (Effective Demand) வேலை நிலைமையின் அளவை நிருணயிக்கிறது; ஆற்றலுள்ள தேவை குறையுமானால் பொருள்களின் உற்பத்தி அளவைக் குறைக்க வேண்டி வரும்; அது வேலையின்மைக்கும் (Unemployment), பொருளாதார வீழ்ச்சிக்கும் (Economic Depression) வழி கோலும்; ஆற்றலுள்ள தேவையின் அளவு, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் அளவை விட அதிகமாக இருப்பின் பணவீக்கம் (Inflation) ஏற்படும். எனவே கெயின்சு ஆற்றலுள்ள தேவையை நிருணயிக்கக்கூடிய காரணங்களை ஆழமாக ஆராய்கிறார். 1930 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபொழுது, அமெரிக்க அரசாங்கம் கெயின்சினுடைய பொருளாதாரக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்துப் பொருளாதார மறுமலர்ச்சியை உண்டுபண்ணுவதில் வெற்றி பெற்றதிலிருந்து நவீன பொருளாதாரக் கொள்கையின் திறன் நன்கு வெளிப்படுகிறது.
பொருளியலின் கொள்கைகளும் கோட்பாடுகளும் நிரந்தரமானவையல்ல; காலம், சூழ்நிலைகளுக்கேற்ப அவை மாறுபட்டுக் கொண்டேயிருக்கும். பொருளியலின் ஆய்வு முறையில் பலவியல் அணுகுமுறை (Inter– disciplinary approach) கடைப்பிடிக்கப்பட்டதின் விளைவாகப் பொருளியல், இன்று விரிவான ஒரு விஞ்ஞான இயலாக மாறிப் பல புதிய இயல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.எஸ்.மு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 704)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9d69cfp8/
தமிழ்“அரசியல் பொருளாதாரக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9d69cfp8/APA
Oliyon Research. (2026). அரசியல் பொருளாதாரக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9d69cfp8/MLA
"அரசியல் பொருளாதாரக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/9d69cfp8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment