காசுமீர மன்னன் அவந்திவருமனால் உண்டாக்கப் பெற்றதோர் ஊர். அவந்திவர்மனின் ஆட்சிக் காலம் கி.பி. 855 முதல் கி.பி. 883 வரையாகும். வந்திபூர் என்று இக்காலத்தில் வழங்கும் ஊரையே அவந்திபுரம் என்று கூறுவர். இவ்வூர் ஓர் அழிவுச் சின்னமாக இருக்கிறது. பண்டைய காசுமீரத்தின் கட்டடக் கலைக்கும் அழகான நினைவுச் சின்னங்களுக்கும் இவ்வூர் சிறந்த எடுத்துக்காட்டு என்பது இராசதரங்கிணி என்னும் நூலின் கூற்றாகும். இந்நகரத்தில் அவந்திவருமன் அவந்தீசுவரர் என்னும் சிவன் கோயில் கட்டினார் என்றும் அந்த நூல் கூறுகிறது. காசுமீரத்தின் தொடக்கக்கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறிக்கும்போது அவந்திபுரத்தையும் குறிப்பர்.