இவர் கி.பி. 1895 ஏப்பிரல் 6–ஆம் நாள் சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள விளாகம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தையார் அம்பலவாண பிள்ளை; தாயார் அம்மணி அம்மாள். தொடக்கக் கல்வியைச் சிதம்பரத்தில் முடித்தபின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate Course) சேர்ந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் விலங்கியல் துறையில் பி.ஏ. ஆனர்சு பட்டம் பெற்றார். பின்னர்ச் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் சேர்ந்து பயிற்சிப் பட்டமும் பெற்றார். கல்வி முடிந்ததும் பள்ளித் துணை ஆய்வாளராக நியமனம் பெற்றார். சிறிது காலத்துக்குப் பின் அனந்தப்பூர் அரசினர் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் விலங்கியல் துறையில் கூடுதல் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அப்போது பல்கலைக்கழக மாணவர் படைப் பயிற்சிப் பிரிவுக்குத் (U.T.C.) தலைவராகிப் (Captain) பல அதிகாரிகளுக்குப் பயிற்சி தந்தார். இராமநாதம் பிள்ளை, அ. பின்னர் 1942–இல் மங்களூரிலும் 1943–51 ஆண்டுகளில் கோவையிலும் அரசு கலைக் கல்லூரிகளின் முதல்வராகப் பணி புரிந்தார். ஓய்வு பெற்றபின் பெரிய நாயக்கன்பாளையம் இராமகிருட்டிண சங்கக் கல்லூரியில் சிறிதுகாலம் மதிப்பு முதல்வராகப் பணியாற்றினார். அதன்பின் 1952–56–ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் துணைவேந்தராக இருந்தபோது இவர் அவருக்கு உற்ற உதவித் துணைவேந்தராகப் பதவி வகித்தார். மாயவரம் ஏ.வி.சி. கல்லூரியின் தொடக்ககால முதல்வராக 1956–57 ஆண்டில் பணியாற்றினார். பின்னர் 1957–59 ஆண்டுகளில் மதுரை தியாகராசர் கல்லூரியில் முதல்வராக அமர்ந்தார். தமது நீண்டகாலக் கல்விப் பணியில் இவர் குறிப்பிடத்தக்க பல கல்வித் தொண்டுகள் புரிந்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்திலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் ஆட்சிக்குழு, ஆளவைமன்றம், கல்விக்குழு, பாடத்திட்டக்குழு போன்றவற்றில் பல ஆண்டுகள் தொடர்ந்து அங்கம் வகித்து வழிகாட்டியுள்ளார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘பொதுநல அரசு’ நாடுகளின் பல்கலைக் கழக மாநாட்டில் இவர் பங்குபெற்றார். இங்கிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா முதலிய வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கல்வி நிலையங்களையும் பார்வையிட்டுத் தாம் அங்குப் பெற்ற அனுபவத்தைத் தாய்நாட்டு உயர்கல்வித் துறையில் பயன்படுத்தினார். இவர் மூதறிஞர் இராசாசி அவர்களின் அன்புக்கு உரியவராக விளங்கினார். கடமையில் கண்டிப்பானவர்; அப்பழுக்கற்ற அதிகாரி; இளகிய மனம் உடையவர்; அனாதை விடுதிகளுக்கு உதவியதோடு ஏழை மாணவர் பலருக்கும் படிப்புவசதிகள் ஏற்படுத்தித் தந்தார். ஆழ்ந்த சமயப் பற்றும் மக்கட் பண்பும் உடையவர். இவர் மனைவியார் பெயர் திருமதி செகதாம்பாள். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் 1960 மே 24–ஆம் நாள் மறைந்தார். சீ.ஞா.