மனிதர்களிடம் அமைந்திருக்கும் பண்புகளுக்கு விளக்கம் தரும் பல்வேறு கொள்கைகளுன் இரு காரணிக் கொள்கையும் (Two Factor Theory) ஒன்றாகும். அவர்களிடம் காணப்படும் நுண்ணறிவுக்கு அடிப்படையாக இரு காரணிகள் இருக்கின்றன என்பதே இக்கொள்கையின் முதற் கூற்று ஆகும். இக்கொள்கையினை முதன் முதலில் நுண்ணறிவுக் கோட்பாட்டின் விளக்கமாக எடுத்துரைத்தவர் இசுபியர்மன் (Spearman) என்னும் ஆங்கிலேய உளவியல் அறிஞர் ஆவார். நுண்ணறிவுச் செயல்களுக்கு அடிப்படையாக ஒரு பொதுக்காரணியும் (General Factor), அதைத் தவிர மக்களின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக ஒரு தனிப்பட்ட சிறப்புக் காரணியும் (Specific Factor) உள்ளனவென்று இசுபியர்மன் குறிப்பிட்டார். ஏதேனும் இரு செயல்களுக்கு இடையே இருக்கக்கூடிய தொடர்பு பொதுக் காரணியின் காரணமாக அமைகிறது என்றும் அவர் கூறினார். ஒரு செயலுடன் தொடர்புடைய இரு காரணிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தால், பொதுக்காரணி (G. factor) மிகுதியாக இருப்பதாக அறியலாம். சிறப்புக் காரணிகள் மிகுதியாக இருந்தால், பொது சிறப்பு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு மிகுதியாக இல்லை என்பதை அறியலாம். இவ்வாறாக இருகாரணிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பு நன்கு புலப்படும். இந்தப் பல்வேறுபட்ட தொடர்புகளைச் சோதனைகள் மூலம் இணைக்கமுடியும். ஏனென்றால், இவ்விரண்டும் பொதுக்காரணியுடன் (G) தொடர்பு கொண்டிருக்கின்றன. இவ்வாறு குறிக்கப்பட்ட சோதனையில் குறைவான பொதுக் காரணித் தொடர்பு உள்ளது. இதற்கும் மற்ற இரு சோதனைகளுக்கும் தொடர்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையே இது குறிக்கிறது. ஒவ்வொருவரின் நுண்ணறிவிலும் பொதுக் காரணி எந்த அளவிற்கு அமைந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்வதே உளவியல் (நுண்ணறிவு) சோதனைகளின் நோக்கமாக இருக்க வேண்டும். பொதுக் காரணித் தொடர்பான செய்திகள் மிகுதியாக அமைந்த ஒரே சோதனையை மட்டுமே கொண்டு நுண்ணறிவை மதிப்பீடு செய்ய முடியும் என்று இசுபியர்மன் கூறினார். பல சோதனைகள் கொண்ட சோதனை அடுக்கு இதற்குத் தேவையில்லை என்றும் அவர் கருதினார். பொதுக் காரணியை மதிப்பீடு செய்வதற்காக இரேவன் (Raven) என்னும் ஆங்கிலேய உளவியலறிஞர் முன்னோக்குச் சோதனைச் சிக்கல்களை (Progressive Matrices) அமைத்தார். இச்சோதனையில் 60 உருவரைகள் (Designs) இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் ஏதேனும் ஒரு பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நீக்கப்பட்ட பகுதி விடைகளுள் ஒன்றாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து ஆட்படுநர் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் 12 சிக்கல்கள் அடங்கிய ஐந்து பகுதிகள் இச்சோதனையில் அமைந்துள்ளன. தொடக்கப் பகுதிகள் எளிமையானவை, பிற்பகுதிகள் கடினமானவை. இச்சோதனையின் இரு எளிமையான எடுத்துக்காட்டுகள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சோதனைக்குக் கால அளவு இல்லை. நூற்றுமானப் புள்ளிகள் {Percentile Scores) தரப்படுத்தப்பட்டுள்ளன. இப்புள்ளிகள் 1407 குழந்தைகள், இரண்டாம் உலகப்போரில் பங்கு கொண்டிருந்த 3665 இராணுவத்தினர், 2192 நாட்டு மக்கள் (வயது வந்தோர்) ஆகியவர்களிடம் சோதனை அளிக்கப்பட்டுக் கிடைத்த விடைகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் கிடைத்தவையாகும். இச்சோதனை, பண்பாட்டுச் சமநிலை படுத்தப்படவில்லை. ஆதலின் உலகெங்கிலுமுள்ள நாடுகளில் இச்சோதனையை எவ்வித மாற்றமும் இன்றி எடுத்துப் பயன்படுத்துதல் இயலாது. இச்சோதனையை மாற்றிப் புறத்தேற்றச் சோதனையாக மனிதர் வரைபடச் சோதனை என்னும் பெயரில் குட்இனபு, ஆரிசு (Goodenough & Harris) ஆகியவர்கள் அமைத்தனர். மனிதர் வரைச் சோதனையின் மதிப்பீடுகளும் அளவைகளும் வரையப்பட்ட படம் ஆண் அல்லது பெண் என்பதற்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கின்றன. காட்டெலின் பண்பாட்டுக் கட்டுப்பாடில்லா நுண்ணறிவுச் சோதனையும் (Cattell's Culture Fair Intelligence Test) பொதுக் காரணியை மதிப்பீடு செய்யும் சோதனையாக அமைந்துள்ளது. இச்சோதனையின் அடிப்படையில் இக்காலத்தில் உலகெங்கிலும் பல நாடுகளிலும் நுண்ணறிவுச் சோதனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இச்சோதனையின் சில பகுதிகள் எடுத்துக்காட்டுகளாக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. காட்டெலின் பண்பாட்டுச் சமச் சோதனை—சில எடுத்துக்காட்டுகள். பொதுக் காரணி என்பது பல செயல்களிடையே காணப்படும் தொடர்பினை ஒருவர் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது. சில திறன்களுக்குப் பொதுக்காரணி அதிகமாகவும் சிறப்புக்காரணி குறைவாகவும் தேவைப்படுகிறது. வேறுசில திறன்களுக்குச் சிறப்புக்காரணி மிகுதியாகவும் பொதுக் காரணி குறைவாகவும் தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாகக் கணிதத்தில் தேர்ச்சியடைவதற்குச் சிறப்புக் காரணியைப்போல் பன்மடங்கு பொதுக்காரணி தேவை. ஆனால், ஓவியம் இசை போன்றவற்றில் திறன் பெறுவதற்குப் பொதுக்காரணியை விடச் சிறப்புக்காரணி மிகுதியாகத் தேவைப்படுகிறது. பொதுக்காரணி நுண்ணறிவு தேவைப்படும் எல்லாச் செயல்களுக்கும் தேவைப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட தனிச் செயல்களில் மட்டுமே சிறப்புக்காரணிகளில் தேவை மிகுதியாக இருக்கிறது. ஆதலின் ஒவ்வொரு செயலும் ஒரு பொதுக்காரணி, அச்செயலுக்குரிய குறிப்பிட்ட ஒரு சிறப்புக்காரணி ஆகிய இரண்டின் தொடர்பு கொண்டு நடைபெறுகிறது. இதனைப் பின்வரும் சமன்பாட்டினால் சுருக்கமாக விளக்கலாம். :செயல் = பொதுக்காரணி + சிறப்புக்காரணி ::::(அல்லது) ::பொ + சி = செ :::G + S = A G+S = A காரல் இசுபியர்மன், பொதுக்காரணி ஒருவன் பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்குக் காரணமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். சூழ்நிலைகளின் அடிப்படையிலும் அனுபவங்களின் காரணமாகவும் ஒருவன் அடையும் திறன் உளவியலாரால் சிறப்புக்காரணி என்று கூறப்படும். மனிதனின் நுண்ணறிவு என்பது பொதுக்காரணி, சிறப்புக்காரணி ஆகியவற்றின் தொகுப்பாகும் என்று இசுபியர்மன் கூறுகிறார். எல்லாச் செயல்களிலும் ஒரு பொதுக்காரணியும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறப்புக்காரணிகளும் இடம்பெறுகின்றன. இசுபியர்மனின் இருகாரணிக் கொள்கையை எதிர்த்தவர்களுள் எட்வர்டு தார்ன்டைக்கு (Edward Thorndike) என்னும் அமெரிக்க உளவியலறிஞர் முக்கியமானவராவார். தார்ன்டைக்கு பலகாரணிக் கொள்கையைத் (Multifactor Theory) தோற்றுவித்தார். நுண்ணறிவுக்குச் சில அடிப்படை உள ஆற்றல்கள் காரணிகளாக இருக்கின்றன என்று வேறு சில உளவியலறிஞர்கள் கூறினர். கல்போர்டு (Gulford) போன்ற உளவியலறிஞர்கள் மனிதனின் நுண்ணறிவு மூன்று அடிப்படைத் திறன்களில் அடங்கியுள்ளது என்று கூறினர். வெர்னன் (Vernan), சிரில் பர்ட்டு (Cyril Burt) போன்றவர்கள் நுண்ணறிவுச் சிறப்புத்திறன்கள், சிறப்புத்திறன்களின் தொகுதிகள் அல்லது குழு, பொதுத்திறன் என அடுக்கமைவாக உள்ளன என்று கூறினர். பியாசே (Piaget), எபு (Hebb) போன்ற உளவியலார்கள் நுண்ணறிவு பற்றிய பல ஆய்வுகளைச் செய்துள்ளனர். ::காண்க: உளவியல் சோதனை நுண்ணறிவு. துணை நூல் Anastasi Anne, Psychological Testing. Colber Macmillan Publishers (International), New York, 1976.