தொன்மைச் சமயத்தைப் பற்றி விளக்க முற்பட்ட பல்வேறு கோட்பாடுகளுள் ஒன்று. இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றலைப் பற்றிய கோட்பாடான உயிரியத்தை (Animatism) வகுத்தவர் ஆர். ஆர். மாரட்டு (R. R. Marett) ஆவார். உயிர்ப்புள்ளதும் புரிந்துகொள்ள முடியாததும் உருவமற்றதும் ஆகிய இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றல் இயற்கையின் வரையறைக்கு அப்பாலும் மனித ஆற்றலுக்கு உட்படாத அனைத்துச் செயல்களையும் இயக்கவல்லது. இந்த ஆற்றல் உலகிலுள்ள அனைத்து உயிரில்லாப் பொருள்களிலும் குடி கொண்டிருக்கும். இதன் தோற்றம் மனித உணர்வுகளுக்கப் பால் காணப்பட்டாலும் செயல் திறனாகவோ மிகச் சிறப்பான மனிதச் செயல்களின் வழியாகவோ வெளிப்படும் இயல்புடையது. மலனீசியரைப் பற்றி ஆராய்ந்த மாரட்டு உயிரியத்தையே ‘மானா கோட்பாடு’ (Manaism) என்றும் குறிப்பிடுகிறார். ‘மானா’ (Mana) என்னும் சொல் மலனீசிய மொழியிலிருந்து வந்ததாகும். மானீசியர் பின்பற்றிய இம்மானாக் கோட்பாடு இயற்கை கடந்த நிகழ்வு, ஆவிகளின் நம்பிக்கைக்குட்பட்டது மட்டுமன்று; இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றல்களும் இதற்குக் காரணமாக உள்ளன. இவற்றின் ஆற்றல் உயிர்ப் பொருள்களைச் சார்ந்து தோன்றும், ‘மானா’ என்பது சிறப்பான உயிர்ப்புள்ள ஆற்றலாதலால், இந்தச் சிறப்பாற்றல் சில அரிய செயல்களை இயக்குந் தன்மை கொண்டதாகும். இதனால், சிறப்பாற்றல் பெற்ற மனிதர்களை ‘மானா’ என்றே குறிப்பிடுகின்றனர். கைவினைஞனுக்குக் கைதேர்ந்த கைவினைப் பொருள்களை உருவாக்கும் திறமையையும், கவிஞனுக்குப் புகழ்பெற்ற கவிதைகளை இயற்றும் திறனையும் ‘மானா’ கொடுக்கிறது என்று கருதுகின்றனர். மேலும், படகு செலுத்துதல், போர்த்திறன் போன்றவற்றில் ஒருவன் தன் உடனொத்த உறுப்பினரைக் காட்டிலும் மிகுந்த திறன் பெற்றிருப்பதற்கு ‘மானா’ ஆற்றலே காரணம் என்று நம்புகின்றனர். பாலினீசிய மக்களும் இத்தகைய கருத்தையே கொண்டுள்ளனர். இயற்கைப் பொருள்களின் ஆற்றல், மனித உருவம் அல்லது திறன் ஆகியவற்றின் வழியே மக்களிடையே மனக் கிளர்ச்சியை உண்டுபண்ணுகிறது. இதுவே, அவர்களின் பண்பாட்டில் வேரூன்றிய சமய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இவ்வித ‘மானா’ நம்பிக்கை இந்திய ஆதிக்குடிகளிடையே ‘போங்கா’ (Bonga) என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றது. பல்வேறு ஆவிகளும் அவற்றின் செயல்களுமே, மனித விதியை வரையறை செய்கின்றன என்றும் ஆவியுலக நம்பிக்கையிலிருந்து மாறுபட்டது ‘போங்கோ கோட்பாடு’ என்றும் மசும்தார் (D.N. Majumdar) கூறுகிறார். ஆவி, அண்டம் அத்தனையும் கடந்த ஆற்றலே ‘போங்கா’ எனப்படுவது. இது கணக்கிட முடியாததும் உயிரில்லாததுமாகும். இது எவ்வித உருவத்தையும் வடிவத்தையும் ஏற்கும் தன்மை உடையதன்று; விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் உயிர் கொடுக்கக்கூடியது; வளர்ச்சியைத் தூண்டக்கூடியது; மழை, புயல், வெள்ளம், கடுங்குளிர் ஆகியவற்றிற்கும் காரணமாக அமைவது. ஓ (Ho), முண்டர் மற்றும் சோட்டா நாக்பூர் ஆதிக்குடிகளிடையே தெளிவான ‘போங்கா’ நம்பிக்கை காணப்படுவதாக மசும்தார் கூறுகிறார். இவர் போங்காவை மலனீசியரின் ‘மானா’ என்ற சொல்லிற்கும் மானாக்கோட்பாட்டிற்கும் இணையானது எனக் கூறுகிறார். உலகளாவிய ஆதிக்குடியினரின் நம்பிக்கைகளின் வழி உயிரியத்தின் வேறுசில கூறுகளையும் அறியலாம். சிரிகட்டாவ், அப்பாச்சி, பகண்டர், அசுதெக்கு ஆகியோர் இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றலுடன் மக்களுக்கு மிக நெருக்கமான பிணைப்பு இருப்பதாக நம்புகின்றனர். இம்மக்களின் பேராளாகத் திகழ்வது ‘மலை ஆவி’ என்றும், விழாக் காலங்களில் இது அடிக்கடி இக்குடிகளைக் கண்காணிக்கிறது என்றும் கருதுகின்றனர். இதுதவிர, மனிதமலை ஆவிகள், இவர்களின் விலங்குகளையும் செல்வத்தையும் காக்கின்றன என்றும், வேறுசில இயற்கை ஆற்றல்கள் (மானா) புயல் மற்றும் நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுகின்றன என்றும் நம்புகின்றனர். இவர்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிறுமலைகளின் ஆற்றலே இவர்களுக்கு நல்ல தண்ணீரை வழங்குகிறது என்பதனால் இம்மலைகளுக்குச் சிறப்பான வழிபாடுகளைச் செய்கின்றனர். கொசையன் (Gossaiyan) என்னும் இயற்கைக்கப்பாற்பட்ட ஆவியை மாலர் வழிபடுகின்றனர். இந்த ஆகியை வழிபடத் தவறினால் நோய், பஞ்சம், தண்ணீர்ப் பற்றாக்குறை, குறைந்த உணவு உற்பத்தி ஆகியவை ஏற்படுகின்றன என்று நம்புகின்றனர். உயிரற்ற, இயற்கைக்கப்பாற்பட்ட ஆவிகளின் பால் நம்பிக்கை கொண்ட சமயத்தை ஆவியுலகக் கோட்பாட்டின் (Animism) மூலம் முதன் முதலில் தைலர் (Tylor) அறிமுகப்படுத்தினார். ஒருவரது உடல் இறந்தபின் அல்லது அழிக்கப்பட்டபின் அவரது ஆவி நிலைத்திருக்கின்றது; இல்வாவிகளே உலக நிகழ்ச்சிகளை ஆட்கொள்கின்றன என்பதே இக்கோட்பாட்டின் கருத்தாகும். உயிரியக் கோட்பாடு, ஆவியுலகக் கோட்பாடு ஆகிய இவ்விரண்டு கோட்பாடுகளும் மானிடவியல் துறைக்கு அறிமுகமாகியதிலிருந்தே இரண்டையும் வேறுபடுத்தித் தொன்மைச் சமயத்தை ஆராய்ந்து வந்தனர். துணை நூல்கள் Lowie, R., Primitive Religion, Liveright Publishing Corporation, New York, 1948. Marett, R. R., The Threshold of Religion, Methuen, London, 1968. Radin, P., Primitive Religion: Its Nature and Origin, The Viking press, New York, 1937. Wallace, A., Religion: An Anthropological view, Random House, New York, 1937.