இருப்புக் காரணம்
iruppuk kāraṇam
இருப்புக் காரணம் என்பது ஒரு பொருள் இருப்பதற்கான காரணம் அல்லது மெய்ப்பிப்பு (Reason or Justification) என்ற பொருளைத் தருவது.
இருப்புக் காரணம் என்பது ஒரு பொருள் இருப்பதற்கான காரணம் அல்லது மெய்ப்பிப்பு (Reason or Justification) என்ற பொருளைத் தருவது. எடுத்துக்காட்டாக, ‘கிழக்கிந்திய வாணிகக் குழுவின் வலிமைக்கு உரிய காரணம் மூன்றுவகையாகக் கையாளப்பட்ட அதனுடைய கொள்கைச் செயலே ஆகும்’ என்று மார்லிபர்க்கு என்னும் ஆசிரியர் கூறுகிறார். ஏதேனும் ஒரு நிறுவனம் இருப்பதற்குரிய நோக்கம் நடைமுறையில் செயற்படாமல் போகுமாயின், அந்நிறுவனத்தின் இருப்புக்காரணமும் இல்லாமற் போய்விடுகிறது.
இருப்புக்காரணம் என்ற கருத்து இக்கால அறிவியலில் ஓர் ஆதாரமான அல்லது அடிப்படையான கொள்கையாகக் கையாளப்படுகிறது. இந்தக் கருத்தைத் தத்துவ இயலிலிருந்து (Metaphysics or philosophy) பிரித்தெடுத்து, ஆராய்ந்து இக்கால உலகுக்கு வழங்கி, அரியதொண்டு செய்தவர் இம்மானுவல் காண்ட்டு (Immanual Kant) என்ற செருமானியத் தத்துவ அறிஞராவார். அவர் கி.பி. 1724–ஆம் ஆண்டு முதல் கி.பி. 1804–ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் இலெப்னிசு (Leibniz), உல்பு (Wolff), ஐசக்கு நியூட்டன் (Isac Newton), சான் இலாக்கு (John Locke), தாவீது இயூம் (David Hume), உரூசோ (Roussea) போன்ற ஆசிரியர்களுடைய கருத்துக்களை ஆராய்ந்தார்.
மனிதனுடைய புலன்களால் காணப்படும் உலகப் பருப்பொருள்கள் எல்லாம் அவை புலன்கனால் அறியப்படும் வடிவத்திலில்லாமல், அவற்றுக்குரிய தன்மையை ஒட்டி வேறொரு வடிவில் இருக்கின்றன என்று அவர் உணர்ந்தார். பொருள்களின் உண்மை வடிவை அறிவதற்குத் தருக்கமுறை ஏற்றதன்று. தருக்கமுறை அறிவை முறைப்படுத்துவதற்குத்தான் உதவுகிறதே தவிர, ஒரு பொருளைப் பற்றிய உண்மையான அறிவுத்திரட்சி வளருவதற்கு உதவிசெய்ய வில்லை என்று அவர் கூறினார். அறிவு என்பது செயல்முறை என்ற அனுபவத்திலிருந்துதான் பெறப்படுகிறது. தத்துவம் என்பது வாழ்வின் கடைசி உண்மைநிலையை (Ultimate Real) ஆராய்ந்து காணவில்லை. தத்துவத்தினால் செய்யக்கூடிய ஒரே வேலை மனிதருடைய அறிவையும், ஆற்றலின் தன்மையையும், வரம்புகளையும் அறியுமாறு செய்தலே ஆகும். புலன் ஆற்றலும் (Power of the Senses), அறியும் ஆற்றலும் (Power of the Reason) வெவ்வேறானவை. அறிவின் அமைப்பு புலன்களின் அமைப்பினின்று வேறானது; சிறப்பானது. ஒரு பொருளைப் பற்றிய இடமும் (Space) காலமும் புலன்களால் உணரக்கூடியவாறு அமைந்த புலன்வடிவங்களே. இங்குக் காணப்படும் உலகத்தின் தோற்றம் புலன்களாலறியப்படுவதாக உள்ளது. உலகத்தின் உண்மையான தன்மை மனித அறிவாற்றலினாலும், ஆராயும் திறத்தினாலும் அறியப்படுகிறது. காணப்படும் உலகத் தோற்றமும், ஆராயப்படும் உலகத்தின் தன்மையும் வெவ்வேறானவை. இக்கருத்துகளை அவர் கி.பி. 1770–ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘புலனுக்கும் அறிவுக்கும் தோன்றும் உலகத்தின் வடிவமும் கொள்கைகளும்’ (On the Form and Principles of the Sensible and Intelligible World) என்ற நூலில் வெளியிட்டுள்ளார்.
புலன்களுக்குப் பொருட்கள் எவ்வாறு தோன்றுகின்றனவோ அவ்வாறே அவைகளைப் புலன்கள் மனிதர்க்குக் காட்டுகின்றன. பொருட்களைப் பற்றிய அறிவாராய்ச்சியினால் உண்டாகும் கருத்துகள் பொருட்கள் எவ்வாறு உண்மையில் இருக்கின்றனவோ அவ்வாறே அவற்றைக் காட்டுகின்றன. காண்ட்டு கணிதம், இயற்பியல் ஆகியவற்றின் ஆதாரக் கொள்கைகளை ஒப்புக்கொண்டார். மனித அறிவாற்றல் ஒவ்வொரு பொருளின் அளவு, பண்பு தொடர்பு, வழி, மறு வடிவங்கள் முதலியவற்றை அறிய உதவுகின்றன; புலன்களும் அறிவும் சேர்ந்து ஒரு பொருளைப் பற்றிய செயலறிவு அல்லது அனுபவம் ஏற்படுதற்கு முன்னரே, அதைப் பற்றிய தொகுப்பான கருத்தைத் தருகின்றன; இவ்விரண்டும் தரும் கருத்துத்தான் ஒரு பொருளைப் பற்றிய உண்மையான கருத்து என்று அவர் ‘பகுத்தறிவுக் கோட்பாட்டைப் பற்றிய ஒரு திறனாய்வு’ (A Critique of Pure Reason) என்ற தமது நூலில் கூறியுள்ளார்.
காண்ட்டு கூறிய கருத்துகள் தத்துவ இயலில் இவருக்கு முற்பட்டோருடைய கருத்துக்களை மறுத்தனவாயினும், அவை பிற்காலத்தில் அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயனுள்ள நம்பகமான ஆதாரங்களை அளித்தன. ஆகையால் ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய உண்மையான அல்லது இருப்புக் காரணத்தைக் கூறுதல் வேண்டுமாயின். அந்நிகழ்ச்சியை அல்லது பொருளைப் பற்றிய புறத்தோற்றத்தையும், அதனுடைய உண்மையான தன்மையையும் அல்லது இயல்பையும் அறிதல் வேண்டும்.
துணை நூல்கள்
Weldon, T.D., Kant's A Critique of Pure Reason, Oxford, 1945.
Bird Graham, Kant's Theory of Knowledge, London, 1962.
Ross, W.D., Kant's Ethical Theory, Oxford, 1954.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 206)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8wjfwgs2/
தமிழ்“இருப்புக் காரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8wjfwgs2/APA
Oliyon Research. (2026). இருப்புக் காரணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8wjfwgs2/MLA
"இருப்புக் காரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8wjfwgs2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment