சோழ நாட்டைச் சேர்ந்தவர். இவர் குரு சர்வாத்ம சம்பு. கெளண்டில்ய கோத்திரத்தைச் சார்ந்த இவர் சிதம்பரத்தில் வாழ்ந்து வந்தார். இவர் வேதங்களையும் ஆகமங்களையும் பிற கருவி நூல்களையும் நன்கு கற்று உணர்ந்தவர். சர்வஞானோத்திரவிருத்தி, மிருகேந்திர விருத்தி, தீபிகை ஆகிய உரைநூல்களையும், பரார்த்த நித்திய பூசாவிதி போன்ற நூலையும் இயற்றினார். மேலும் தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், நாத காரிகை, போக காரிகை முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவையன்றி, இவர் எழுதிய பாசண்டாப சயம், நாட்டியாப்யுதயம் முதலான நூல்கள் காலிய வகையைச் சார்ந்தவை. இவர் பெயரால் வழங்கும் அகோரசிவ பத்ததி தமிழ்நாட்டில் இன்றும் சைவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆசிரியர் இந்நாளுக்கு இட்ட பெயர் கிரியாதிரமோத்யோதிகை என்பதாகும். ‘பத்ததி’ என்பது ‘மரபுவழி’ என்று பொருள்படும். பதினெட்டுப் பத்ததிகள் உள்ளன. அகோரசிவ பத்ததியில் நித்திய கருமவிதி, பவித்திர விதி, கணேச பூசை, இட்டலிங்க பூசை, சாமானியதீட்சை, விசேட தீட்சை, நிருவாண தீட்சை, ஆசாரியாபிடேகம், அபர கிரியை என்று கூறப்படும் அந்தியேட்டி பற்றிய விதிமுறை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.பெ.தி.