உலகில் காணப்படும் மனித இனங்களுள் சிலவற்றை உயர்ந்த இனமென்றும் வேறு சிலவற்றைத் தாழ்ந்த இனமென்றும் நம்பி வந்த கருத்திற்குத் துணைநிற்கும் தவறான வாதத்தைக் கையாளும்போது பயன்படுத்தப்பட்ட சொல்லே இனக் கொள்கை (Racism) என்பது. இனங்களுள் சில உயர்ந்தனவென்றும் வேறு சில தாழ்ந்தனவென்றும் எண்ணுங்கருத்து மக்களிடையே பல்வேறு காரணங்களால் தோன்றியது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் மனித குலத்தை உயர்ந்த, தாழ்ந்த இனங்களாகத் தங்கள் விருப்பப்படி வகைப்படுத்தினர். இவ்வாறு வகைப்படுத்தியதனால் பிற்காலத்தில் இனவகைப்பாட்டுக் கருத்தை உருவாக்கும்பொழுது இவர்களின் கருத்துப் பெருஞ்செல்வாக்குப் பெற்றது. முற்காலத்தில் வாழ்ந்த கிரேக்க அறிஞர்கள் மனிதக்குலத்தை நாகரிகமடைந்தவர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும் இருபெரும் குழுக்களாகப் பகுத்தனர்; பின்னர், கிரேக்கரல்லாதோரைக் காட்டுமிராண்டிகள் எனக் குறிப்பிட்டனர். இதன் வழித் தோன்றியதே உரோம உயர்குலத் தன்மை (Roman Superiority) என்னும் கருத்து. உரோமானிய அரசியல் கருத்துகளே ஏனைய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்ததென உரோமானிய அறிஞர்கள் கூறி வந்தனர். இடைக் காலத்தில் இறையியல் அறிஞர்கள் (Theologian Scholars), மனிதகுலத்தைக் கிறித்தவர்கள், புறச் சமயத்தினர் (Infidel), ஈத்தூசுவினர் (Heatheus) என முப்பெரும் குழுக்களாகப் பகுத்தனர். பின்னர் நார்டிக்கு (Nordic), ஆரியர் (Aryan) பற்றிய கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு இனக்கொள்கை கருத்து விரைந்து வலுப்பெற்றது. செருமனியில் நாசிகள் 1930–இல் ஆட்சியைக் கைப்பற்றியபோது, தம் அண்டைப் பகுதிகளில் வாழ்ந்த யூதமக்கள் உயிர்சார் அமைப்பில் தம்மைவிடத் தாழ்ந்தவர்கள் என்று கருதி, அவர்களை ஒழிக்க முனைந்தனர். இந்த இனக்குழுப் போராட்டம் ஏனைய இனப் போராட்டங்களைக் காட்டிலும் முதன்மை இடத்தைப் பெற்றது. ஆக்சுபோர்டு ஆங்கில அகர முதலியில் இனம் என்னும் சொல்லுக்கு, ‘மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகிய உயிர்களின் ஒரு பொதுவான மரபு அல்லது தோற்றம்’ என்னும் விளக்கம் காணப்படுகிறது. கி.பி. பதினாறு, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஆங்கில மொழியில் இனம் என்னும் சொல்லுக்கு மேற்கண்ட பொருளே வழங்கியது. மானிடவியலாளர்கள் இனம் என்னும் சொல்லை முழுவதுமாக உயிரியல்சார் அறிவுடனே நோக்குகின்றனர். ஆதலால், இவர்கள் இனம் என்னும் சொல்லை ஒரு குடும்பம் என்றோ நாடு என்றோ, குழு என்றோ அணுகுவதில்லை. இனம் ஓர் உயிரியல் சார் இயல்நிகழ்ச்சியாதலால், அதன் உள்ளுறைத் தன்மையை உயிரியல்சார் சொல்வழக்கிலேயே வரையறை செய்ய வேண்டும். இதனால், இனத்தை உயிரியல்சார் சொல்வழக்கில் காணும் மக்கட்குழு, மரபுவழிப் பண்பிலும் அதனைச் சார்ந்த உடற்கூற்று அமைப்பிலும் ஒரு படித்தானதாகக் காணப்படும். ஊட்டன் (Hooton) என்பவர் இனம் பற்றி வரையறை செய்யும்பொழுது, ‘இனம் மனிதகுலத்தின் மிகப் பெரும் பிரிவாகும்; உறுப்பினர்களனைவரும் தமக்குள் மிகச் சில மாறுபாடுகளைக் கொண்டிருப்பினும், உருவத்தோற்றத்திலும் உடல்சார்ந்த பண்புகளிலும் மிகுதியான வேறுபாட்டினைப் பெற்றிராத பொதுவான மரபையுடைய ஒரு குழுவாவர்’ எனக் கூறுகிறார். ஒரு குழுவிற்கும் மற்றொரு குழுவிற்கும் இடையே காணப்படும் உடல்சார்ந்த கூறுகளை மானிடவியலார் தனித்து எடுத்து, அவற்றை அக்குழுவின் சிறப்பு அலகுகளாக வரையறை செய்தனர். முற்காலத்தில் ஒரு குழுவிற்குள் காணப்பட்ட மிகச் சிறிய வேறுபாடுகளை முன்வைத்துச் சிறுசிறு இனமாகப் பாகுபடுத்தினர். இவற்றிற்கு அமெரிக்க இந்தியர்களின் வகைப்பாடுகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இனக்கூறுகள் (Racial Traits), உடனிகழ்வு (Mutation) மாற்றத்தால் மாற்றம் பெறக்கூடியன. இதனால், இனம் ஒரு நிலையான குழுவாக இருக்காமல் மாறுந் தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. இதன் கூறுகளின் பண்பு நிலை குன்றாமலிருக்கும் தன்மை மரபுப் பண்புகளைக் கொண்டு செல்லும் மரபணுவின் இயல்பினைப் பொறுத்தது. ஒரு குழுவினரின் மணமுறையும் இனக்கூறுகளின் பண்பினை மாற்றக் கூடியதாகும். மேற்கூறிய பண்புகளுள் ஏதாவது ஒன்றில் மாற்றம் ஏற்பட்டால் கூட, இனக்குழு முழுவதிலும் மாற்றம் ஏற்படும். சில அறிஞர்கள் இனம், இனக்கொள்கை ஆகிய இவ்விரண்டு சொற்களின் பொருளில் ஓர் ஐயப்பாடு உள்ளதாகக் கூறினர். உரூத்து பெனிடிக்டு (Ruth Benedict) என்னும் மானிடவியலார் இனக்கொள்கையை விவரிக்கும் போது, ‘இனக்கொள்கை இக்கால மூடநம்பிக்கையாகும். இது சில இனக்குழுக்களைப் புறக்கணித்துச் சில தூய்மையான கூறுகளையுடைய இனக்குழுக்களை நிலைபெறச் செய்வதாலேயே நாகரிகத்தைப் பெறமுடியும் என்னும் நம்பிக்கையின் பிடிவாதக் கொள்கையே’ என்று விளக்குகிறார். மேலும், இவர் இனத்தையும் இனக்கொள்கையையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டுகிறார். இனக்கொள்கை இனத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதன் உட்பொருளை அறிவியல் அடிப்படையில் மட்டுமே ஆராய வேண்டும். இது மதம் என்னும் அமைப்பைப் போன்றே காட்சியளிக்கிறது. இதன் நம்பிக்கைகளை வரலாற்றுப் பின்னணியுடனும் தெளிவாக அறிய வேண்டும் என்பது இவர் கருத்து. இனக்கொள்கைக் கோட்பாடு ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் தோன்றியதாகும். இக்கோட்பாடு இக்காலத்தில் அரசியல் அமைப்புடன் அமைப்புடன் மிகுந்த தொடர்பு பெற்றுச் சமூகத்தில் வேரூன்றிய நிலையினைப் பெற்றுவிட்டது. இனக்கொள்கையும் பண்பாட்டுச் செயல்களும் உலகின் மிகச் சிறந்த நாகரிக வளர்ச்சிக்கு உயர்ந்த இனமே முதன்மையான பங்கேற்கிறது என முற்கால இனக் கோட்பாடுகள் கூறிவந்தன. வடமேற்கு ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்கள் (Nordic) மிகுந்த அறிவினையும் பெருந்தன்மையினையும் மற்றும் பல உயர்ந்த குணங்களையும் கொண்டிருந்தனர். இவர்களே இக்கால நாகரிகத்தை உருவாக்கக் காரணமாக இருந்தனர் என்று மொழிவார் மாடிசன் கிராண்டு (Madison Grant). ஏனைய மக்கள் மேற்கூறிய சிறந்த குணங்களைப் பெற்றிராததால், வடமேற்கு ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்களாக இருந்தனர் என அவர் கூறுகிறார். கவுண்டு கோபிநீவு (Count Gobineau) என்னும் அதிஞர், நாகரிகம் தோன்றியதற்கும் அதன் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தவை இனங்களுக்கிடையே காணப்பட்ட வேறுபாடுகளே எனச் சொல்கிறார். இவர் கருத்துப்படி, தூய இனங்களும் வளர்ச்சிபெற்ற இனங்களுமே வளர்ச்சிக்கு அடிப்படையானவையாகக் காணப்பட்டன. இடைப்பட்ட கலப்பினத்தவர்கள் நாகரிக வீழ்ச்சிக்கே அடிகோலினர் என்றும், வெள்ளை இனத்தவர்களான ஆரியர்கள் உயர்ந்த இனமென்றும், இவர்கள் மிகுந்த அறிவுத்திறன் கொண்டிருந்தனர் என்றும், இவர்களாலேயே உயர்ந்த நாகரிகத்தை நிலை நாட்ட முடிந்தது என்றும் மொழிகிறார் கோபிநீவு. இனத்தைப் பற்றிய இந்தக் கருத்துகள் அனைத்தும் அறிவியல் அடிப்படையற்றவையே. அக்கால அறிஞர்கள் அறிவியல் பின்னணியுடன் சிந்திக்கவில்லை. இனக்கூறுகள் (Racial Traits) உயிர்சார் அடிப்படையில் மரபுவழியில் கொண்டுவரப்படுவது. ஆனால், பண்பாட்டுக் கூறுகள் உயிர்சார் மரபுவழியில் கொண்டுவரப்படுவதில்லை; பயிற்சி முறையிலும் கல்வி முறையிலுமே நிலை நிறுத்தப்படுகின்றன. அனைத்து இனங்களும் சம அளவில் அறிவுத் திறன் பெறுவனவாக இருக்கின்றன. பெரும்பான்மையான சமூக அறிவியலாரின் கருத்துப்படி, ஆளுமை, அறிதிறன் முதலானவை பெரும்பான்மையாகச் சமூகச் சூழ்நிலையாலேயே வரையறுக்கப்படுகின்றன. எனவே, ஓர் இனம் வேறோர் இனத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்றும், அறிவுத்திறன் பெற்றது என்றும், உயர்ந்த இனத்தவரே நாகரிகத்தைத் தோற்றுவிப்பவர்கள் என்றும் கூறுவது வீணான வாதமாகும். இக்கருத்துகள் அனைத்தையும் நன்குணர்ந்த சில அறிஞர்கள் இனக்கொள்கையை ஒரு வெற்றுப்புனைந்துரை என்றே சொல்கின்றனர். இனக்கொள்கையும் படிநிலை முறையும் சமூகச் சமநிலையின்மையின் அடிப்படையில் காணப்படும் பொதுவான அமைப்பைப் படிநிலைமுறை என வரையறை செய்யலாம். இம்முறை பிறப்பின் அடிப்படையிலோ வேற்றுக் காரணிகளின் அடிப்படையிலோ அமையப் பெறலாம். தகுதிநிலையைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்ட குழுக்களாக (Rank Groups) வகைப்படுத்தும் முறையை அறிவதால், இந்த வகைப்பாட்டிற்கான காரணிகளையும் அதன் விளைவுகளையும் கண்டறியலாம். பிறப்பைக் கொண்டு குறிப்பிடப்படுகிற படிநிலை அடிப்படையில் காணப்பெறுகிற உலகளாவிய இனக்கொள்கையில், உடற்கூறுகள், சமூகத்தில் வேறுபாடுகளைக் கொண்ட பல்வேறு குழுக்களை உருவாக்கக் காரணமாவதை அறியலாம். சமூகத்தில் சமநிலையற்ற நிலை, மனிதனின் விருப்பத்திற்குட்பட்டதும் ஒரு செயற்கையான விதிப்புமாகும். இயற்கையின் தேவைகளுக்காக உருவெடுத்த இக்குழுக்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டு அவனால் கற்கப்பட்டவை. ஆகையால், இந்த நிலைமையை மனிதன் தோற்றுவிக்காமலும் கற்றுணராமலும் இருக்க முடியும். பிறப்பின் அடிப்படையில் அமையும் தகுதி நிலைக் குழுக்களைச் சார்ந்தவர்கள் அனைவரும், தாங்கள் இவ்வகையான பாகுபாட்டால் கொடுமைக்குள்ளாவதால் இப்பாகுபாட்டைக் குற்றமாக எண்ணுகின்றனர். ஆனால், பாகுபாடு கொண்ட சமூகத்தை வகுப்பதின் மூலம் பலனடையும் குழுக்களைச் சார்ந்தவர்கள் இதனை ஆதரித்துப் பேசுகின்றனர். இரு குழுவினருமே மற்றொருவரின் ஆளுமையிற் (Personality) புகுந்து, கற்பனையாக அவர் நலன்களின் அனுபவத்தை அனுபவிப்பவரே. இதனால், பொறாமை எண்ணமும் குற்றம் நினைத்தலும் ஒரு குழுவினரிடமிருக்க, மற்றொருவர் குற்ற எண்ணம் கொண்டு பயப்படுவர். உயிரியல்சார் கருத்து என்று தன்முனைப்புக் கொண்ட, நேர்மையான பகுத்தறிவு எண்ணத்துடன் இனக்கொள்கையை விளக்க முற்படுவது நம்பிக்கையற்ற வீண்வாதமாவதுடன், இக்கொள்கைகளின்பால் புரட்சிகரமான உணர்வுகளை எதிர்த்து வாதமிடுதலுமாகும். இனப்படிநிலை (Racial Stratification) முறைகள் உயிரியல்சார் அடிப்படைகளற்ற ஒரு சமூகவியல் நிகழ்ச்சியாகும். தெளிவாகத் தெரிகிற சில மரபுவழி அமையும் பண்புகளான தோல் நிறம், மயிர் வடிவம், முக ஒப்புமை, உயரம் முதலானவற்றைக் கொண்டே, மூதாதையரையோ இன அடையாளத்தையோ கணக்கிடுவர். இந்த நிறத்தடை பெரும்பாலான சமுதாயத்தில் காணப்படுவதாகும். மக்களைப் பல குழுக்களாகப் பாகுபடுத்தக் கையாளப்படும் அளவைகளுள் சில நம்பத்தக்கனவாக இல்லை இன அடையாளங்களை உறுதிப்படுத்தக் கையாளப்படும் விதிகள் சமுதாயத்துக்குச் சமுதாயம் மாறுபடுகின்றன. அமெரிக்காவில் ஒருவன் தன் முதல் மூதாதையர் கறுப்பராக இருப்பின் அவனும் கறுப்பன் என்றே கருதப்படுகிறான். இவன் மூதாதையர்கள் பலர் வெள்ளையர்களாக இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாது இவ்விதச் சமூக விதிப்பை ஏற்படுத்துகின்றனர். ஆப்பிரிக்காவிலுள்ள, பெரும்பாலான அமெரிக்கக் கறுப்பர்கள், கறுப்பர்கள் என்று கருதப்படுவதே இல்லை. இன்று இந்தியாவிலும் தந்தைவழி வெள்ளை மூதாதையர்களே ஆங்கிலோ–இந்தியர்கள் (Anglo-Indians) எனப்படுகின்றனர். இவ்வகை வெள்ளையர்களே வெள்ளையர் என்று கூறப்படுகின்றனர். தாய்வழி ஐரோப்பிய மூதாதையர்கள் தொடர்பற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். இனவகையில் படிநிலையுற்ற சமூகங்களின் புறத்தோற்றக் கூறுகள், ஒருவனின் சமூக அடையாளத்தைக் காட்டுவதாகவே அமைகின்றன. அண்மைக் காலத்தில் தோன்றிய அமெரிக்க நீக்கிரோப் புரட்சியில் நீக்கிரோக்கள் தங்களின் உரிமையை வற்புறுத்தியது ஆளும் இனத்திற்கு (வெள்ளையர்) எதிர்ப்பாய் அமைந்தது. அமெரிக்கச் சமூகத்தின் வரலாற்றில் முழுவதிலும் வெள்ளையர்கள், நீக்கிரோக்களின் எதிர்மறையான பண்புகளையே தாம் எண்ணியபடி கூறிக்கொண்டதோடல்லாமல், நீக்கிரோக்களை நம்பவைப்பதிலும் முயற்சி செய்தனர். ஆனால், இன்று அரசியல் தெளிவுடைய நீக்கிரோக்கள் தம் குழந்தைகளுக்குத் தம்மினத்தின் உண்மைக் கருத்துகளையும் கறுப்பர்களே அழகானவர் என்பதையும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். வெள்ளையர்கள் பன்றிகளென்று வெள்ளையர்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளைத் தங்கள் குழந்தைகளிடம் எடுத்துரைக்கின்றனர். ‘அமெரிக்கக் கொள்கை’ மக்களை இனச்சார்பு அடிப்படையில் வேறுபடுத்துவதில் மிகுந்த பற்றுக் கொண்டிருக்கவில்லை. எனினும், இனக்குழுக்களை வேறுபடுத்தி நடத்தும் முறைகள் இதில் காணப்படுகின்றன. ஆங்கில மானிடவியலாளரான பேராசிரியர் ஆசுலே மாண்டகு (Ashley Montagu) அமெரிக்க இனக்கொள்கையைப் பற்றிப் பேசும்போது, ‘அமெரிக்க நாட்டிலிருப்பவர்களாகிய நாம் இனக்கொள்கை என்னும் ஒட்டுநோயை நம் அரசியல் அமைப்பிலிருந்து நீக்கும் நம்பிக்கையைத் கொண்டிருக்கலாம். இந்த நம்பிக்கை மட்டும் நமக்குப் போதுமானதாக இராது. இதற்கான செயலில் முனைய வேண்டும். அறிவால் இதனைச் சிந்தித்துச் செயற்படுவதோடு, இந்த ஒட்டுநோயினை முழுவதுமாக அறிந்து கொள்வதும் இதனை எம்முறையில் அணுக வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள்ளுதலும் வேண்டும்’ எனக் கூறினார். நீக்கிரோக்கள் வெள்ளையர்களைப் போன்று அறிவுத் திறன் பெற்றிருக்கலில்லை என்னும் கருத்தை அமெரிக்கக் கொள்கை ஏற்றுச் செயற்பட முற்படக்கூடாது. தொன்மை உரோமானியரைப் போன்றே ஆங்கிலேயர்களும் தங்கள் குடிமக்கள் என்னும் கருத்தை நிலை நிறுத்தி, இவர்களுக்கென்று தனி உரிமைகளைக் கொடுத்து மதித்து வந்தனர். இதைப்போன்றே தம் அதிகார வரம்பிற்குட்பட்ட குடியேற்ற நாடுகளிலும் இக்கொள்கையைக் கையாண்டனர். பெரும்பான்மையான சமூகங்களில் மனிதர்களுக்கு இடையேயான உறவுகளும் குழுக்களுக்கிடையேயான உறவுகளும் ஒருங்கிணைந்த நிறுவனமாகச் செயற்படுவதே, வரலாற்றின் பெரும்பான்மைக் காலங்களில் நிகழ்கிறது. இவ்வகையான கூட்டமைப்புப் பெரும்பாலும் சமயக் கருத்துகளையும் சமய நடைமுறைகளையும் சார்ந்தே காணப்படும். மதம் பண்பாட்டின் ஒரு பகுதி. படிநிலை குழுக்களில் அவரவர் பண்பாட்டுக் கருத்துகளை நிலைநிறுத்தி, உறவு முறைகளை ஒரே வகையில் கொண்டு செல்லும் போது, ஒருவித பாதிப்பு இக்குழுக்களிடையே காணப்படுகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் இன உறவுகள் பற்றிய ஆய்வுகள் ஒப்பீட்டுச் சமூகப் படிநிலை (Comparative Social Stratification) ஆய்வுகளின் மையமாக அமைகிறதெனலாம். இனக் கொள்கையும் சாதிக் கொள்கையும் பிறப்பின் அடிப்படையில் தகுதியைப் பெறும் சாதி முறை இந்துச் சமூகத்தின் தனித் தன்மையாகும். இந்தியாவில் உள்ள இந்துச் சமூகத்தினரின் சாதி, பிறப்பின் அடிப்படையில் படிநிலைத் தகுதியைப் பெற்று, வெவ்வேறு குழுக்களுடனும் சார்ந்து வாழும் குழுவாகும். சாதி ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைச் சார்ந்தது; பண்பாட்டால் தனிப்பட்டது; வாழ்க்கைத் தொழில் பெரும்பாலும் மரபுவழியில் வருவது; அகமண அமைப்புடையது. ‘இனம்’ ‘சாதி’ ஆகிய இவ்விரண்டு சொற்களும் உயிர்சார் பண்புகளின் அடிப்படையில் இல்லாமல், பிறப்பின் அடிப்படையிலான மக்கள் குழுக்களையே குறிக்கிறது. மனித சமூகத்தில் இவ்விரண்டுமே சமூக வாழ்வில் சம தகுதியின்மையையும் மனிதன்பால் மனிதன் கொண்டுள்ள மனிதத் தன்மையற்ற தன்மையையும் காட்டுகின்றன. ஜெ.பா. துணை நூல்கள் Ashley Montagu, The Concept of Race, The free Press of Glencoe, London, 1964. Benedict, R., Race and Racism, Routledge and Kegan Paul, London, 1983. Oliver C. Cox, Caste, Class and Race, Garden City, Doubleday, New York, 1948. Rex, John, Race Relations in Sociolgical Theory, Routledge and Kegan Paul, London, 1983. Synder, L.L., The Idea of Racism–Its Meaning and History, Princeton, 1962.