இதில் ஆற்றலால் செலுத்தப் படும் அச்சுத் தண்டில் அலகுகள் பொருத்தப் பட்டிருக்கும். காற்று அல்லது நீர் ஆகியவற்றில் இது ஒரு முன் செல்லக் கூடிய தள்ளு விசையை உண்டாக்கும். கப்பல் மற்றும் வானூர்திகளைச் செலுத்தப் பயன் படும் செலுத்திகளே (propeller) சிறந்த வகையாகும். 1796ஆம் ஆண்டு ஜான் பிட்ச் என்பார் கப்பல்களுக்கான முதல் திருகு செலுத்தியைக் கண்டு பிடித்தார். இச்செலுத்தி ஓர் உருளையான தண்டைச் சுற்றிய அகல் சுருள் அமைப்பைக் கொண்டிருக்கும். 1836ஆம் ஆண்டில் ஸ்வீட–அமெரிக்கக் கண்டு பிடிப்பாளரான ஜான் எரிக்சன் என்பார் இறகுகள் கொண்ட செலுத்தியைக் கண்டு பிடித்தார். கடல் வழி செலுத்தி. திருகு மரத்தைத் துளையிடுவது போலச் செலுத்தி, நீரினுள் செல்லும். ஒவ்வொரு சுற்றின் போதும் செலுத்தி முன்னே செல்வது, புரியிடைத் தொலைவு (pitch) எனப் படும். புரியிடைத் தொலைவுக்கும், செலுத்தி, நீரில் முன் செல்லும் உண்மையான தொலைவுக்கும் உள்ள வேறுபாடு நழுவல் (slip) எனப் படும். திறன் வாய்ந்த கடற்படைச் செலுத்திக்கு நழுவல் 15% இருக்கும். கப்பற் படைக் கப்பல்களில் 3 இறகுகளைக் கொண்ட செலுத்திகள் இருக்கும். வணிகக் கப்பல்களில் நான்கு இறகுகளைக் கொண்ட செலுத்திகள் இருக்கும். கப்பல் சென்று கொண்டிருக்கும் போது, அதன் பின் புறத்திலிருந்து நோக்கினால், ஒற்றை–திருகு கப்பல்களிலுள்ள செலுத்திகள் வலத் திசையாகவோ, வலஞ்சுழியாகவோ திரும்பும். இரு–திருகு கப்பல்களில் வெளித் திரும்பும் செலுத்திகள் இருக்கும். முன் பக்க நகர்வுக்கு, கப்பலின் வலப் பக்கத் திருகு வலஞ் சுழியாகவும், இடப் பக்கத் திருகு இடஞ் சுழியாகவும் திரும்பும். இரு பொறிகளில், ஒன்றின் திசையைத் திருப்பியும், மற்றொன்றை முழுதுமாக முன் செல்லுமாறு வைத்திருப்பதன் மூலமும், இரட்டைத் திருகு கப்பல்களை எளிய வழிகாட்டியாகச் செய்யலாம். வெப்பச் சலனச் செலுத்திகள் உயர் விரைவுகளில் குறைந்த திறன் கொண்டிருக்கும். ஏனெனில், அவற்றில் வெற்றிடம் ஏற்படும். இவ்வெற்றிடம் செலுத்தி திரும்பும் போது உண்டாகும். உயர் விரைவுகளில் செலுத்தியின் திறனை உயர்த்துமாறு வெற்றிடம் அமைந்திருக்கும். இவ்வகைச் செலுத்திகள் மீ உயர் வெற்றிடச் (super cavitating) செலுத்திகள் எனப் படும். வானூர்திச் செலுத்தி. இதைக் காற்றுத் திருகு எனவும் கூறுவர். இது பொறியின் ஆற்றலை உந்து விசையாக மாற்றும். இவ்வுந்து விசை வானூர்தியைக் காற்றில் முன் செலுத்தவோ, இழுக்கவோ பயன் படும். வானூர்தியின் இறக்கைகளைப் போல, வடிவமைக்கப் பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலகுகளைக் கொண்டிருக்கும். இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம், இறகுகளில் பயன் படுத்தும் அலகுகளைப் போலக் காற்றிதழ்ப் பகுதிகளாக (airfoil sections) இருக்கும். இதன் திறன் குறைந்தால், அலகுகளின் நுனியிலுள்ள வேகம் ஒலியின் வேகத்தை விட விரைவாக உயர்வதால், இதன் இரைச்சலும் உயரும். நிலையான புரியிடைத் தொலைவுச் செலுத்தி. அலகுகள் அமைக்கப் பட்டிருக்கும் கோணம் நிலையாக இருக்கும். இவ்வகைச் செலுத்திகள், பறத்தலின் ஒரே ஒரு விரைவிற்கும், குறிப்பிட்ட ஆற்றல் வெளியீட்டிற்கும் திறன் பெற்றிருக்கும். கட்டுப் படுத்தக் கூடிய புரியிடைத் தொலைவுச் செலுத்தி. செலுத்தி சுழன்று கொண்டே தலை கீழாக இறங்கும் போது, அலகுகளின் கோணம் செம்மைப் படுத்துமாறு அமைந்தால், அது கட்டுப் படுத்தக் கூடிய புரியிடைத் தொலைவுச் செலுத்தி எனப் படும். இம்முறை மனிதராலோ, தாமாகவோ கட்டுப் படுத்தப் படும். வெவ்வேறு காற்று விரைவுகளில் வெவ்வேறு இயங்கு முறைகளுக்கு, திறன் மிகுந்த அலகின் கோணம் கிடைப்பதற்கு இம்முறை பயன் படும். இறகுத் தொகுதிச் செலுத்தி. பொறி இயங்காமலிருக்கும் போது, அலகுகளின் கோணம் அவற்றிற்குச் சீரோட்டம் கிடைக்குமாறு உயர்த்தப்படுமானால், அச்செலுத்திகள் இறகுத் தொகுதிச் செலுத்திகள் (feathering propeller) எனப் படும். பொறி இயங்காமலிருக்கும் போது, விமானி விமானத்தை இறகு போல் பறக்க விடுவார் அல்லது அலகுகளின் முன் மற்றும் பின் முனைகளைப் பறக்கும் பாதைக்கு இணையாக இருக்குமாறு சுழல விடுவார். இது செலுத்தியின் காற்றுத் தடையைக் குறைத்துப் பொறியைக் காக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> திசை மாற்றக் கூடிய புரியிடைத் தொலைவுச் செலுத்தி. இதில் உந்து விசையின் திசை மாற்றப் படும் போது, புரியிடைத் தொலைவின் திசையும் மாற்றப் படும். இது ஒரு தடையாக விளங்கி, நிலத்திற்குச் செல்லும் நில ஓட்டத்தைக் குறைக்கும். சக்கரத் தடைகள் இயங்கா வண்ணம் வானூர்தியின் ஏற்ற இறக்க ஓடு பாதை உறைநீர் அல்லது பனி ஆகியவற்றால் மூடப் பட்டால், பெரிய வானூர்திகளில் இதன் பயன் இன்றியமையாததாகக் கருதப் படும். —இரா. இந்து நூலோதி. John D. Anderson. Introduction to Flight, McGraw-Hill Book Company, New York, 1970. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->