இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்
ileṭcuvorttu villiyam pirayōr
தேசிய அறக்கட்டளையும் குற்றத் திருத்த அமைப்பும் (National Conference of Charities and Correction) உருவாகுதற்கு அடிகோலியவர்.
தேசிய அறக்கட்டளையும் குற்றத் திருத்த அமைப்பும் (National Conference of Charities and Correction) உருவாகுதற்கு அடிகோலியவர். இவ்வறக்கட்டளை அமைப்பு ஏழைக் குழந்தைகளுக்குத் தனியாகப் பாதுகாப்பு மையங்களை உருவாக்குதல், மனநிலை பிறழ்ந்த (பைத்தியம்) குழந்தைகளுக்கும் காக்கை வலிப்பு நோயுள்ள குழந்தைகளுக்கும் பாதுகாப்பு மையங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்குப் பாடுபட்டு வந்தது. இலெட்சுவொர்த்து (Letchworth, William Pryor) நியூயார்க்கிலுள்ள பிரான்சுவில் (Bronzville) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தம் 15–ஆம் வயதிலேயே வாணிகத்தில் ஈடுபட்டு இரும்பு உற்பத்தித் தொழிலில் சிறந்தவரானார். மனித இனத்திற்குச் சேவை செய்வதில் இவர் கொண்டிருந்த ஆர்வத்தால் பெருமதிப்பிற்குரியவராக எல்லோராலும் போற்றப்பட்டார்.
நியூயார்க்கிலிருந்த அறக்கட்டளை அமைப்பில் இவர் உதவித் தலைவராகவும் பின்னர்த் தலைவராகவும் பணி புரிந்தார். இவர் ஏழை இல்லங்களிலிருந்த குழந்தைகளின் நிலையை ஆய்ந்து, பொதுமக்கள் அக்குழந்தைகளிடம் பரிவு காட்டும்படி செய்தார். இதன் விளைவாக நியூயார்க்கு அரசின் சட்டமன்றம், 3 முதல் 16 வயது வரையிலுள்ள குழந்தைகளை ஏழை இல்லங்களிலிருந்து தனி இல்லங்களுக்கு மாற்றுமாறு ஆணையிட்டது.
இவர் இளங்குற்றவாளிகள், பைத்தியம் பிடித்த ஏழைகள் ஆகியோருக்கு மருத்துவமளித்துக் காப்பதில் ஆர்வம் கொண்டார். இவர் கி.பி. 1880–ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மனநிலை பிறழ்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ முறையை ஆய்வு செய்தார். அதன் விளைவாக ‘அயல்நாடுகளில் மனநிலை பிறழ்ந்தவர்கள்’ (‘The Insane in Foreign Country’) என்ற நூலை இயற்றினார். நியூயார்க்கில் கிரெய்கு காலனி (Craig Colony) என்ற நிறுவனத்தைக் காக்கை வலிப்புடையவர்களுக்காக முதன்முதலில் ஏற்படுத்தினார்.
இவர் நியூயார்க்கு அரசிற்கு 1000 ஏக்கர் நிலத்தைப் பூங்கா அமைப்பதற்காக வழங்கினார். நியூயார்க்கு அரசு 1909–ஆம் ஆண்டில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்காக (Feeble–minded) ஏற்படுத்திய நிறுவனத்திற்கு இவர் நினைவாக ‘இலெட்சுவொர்த்துக் கிராமம்’ எனப்பெயரிட்டுச் சிறப்பித்தது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 437)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8nv7fcbu/
தமிழ்“இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nv7fcbu/APA
Oliyon Research. (2026). இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8nv7fcbu/MLA
"இலெட்சுவொர்த்து வில்லியம் பிரயோர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8nv7fcbu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment