இருளர்
iruḷar
தமிழ்நாட்டில் வாழும் தொன்மையான பழங்குடிகளுள் ஒருகுடியினர் ஆவர்.
தமிழ்நாட்டில் வாழும் தொன்மையான பழங்குடிகளுள் ஒருகுடியினர் ஆவர். இம்மக்கள் நீலகிரி, கோவை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களில் மிக்க எண்ணிக்கையிலும், செங்கற்பட்டு, கருநாடக மாநிலத்தில் சில பகுதிகள், கேரள மாநிலத்தில் பாலக்காடு சார்ந்த பகுதிகள், ஆகியவற்றில் பரவலாகவும் காணப்படுகின்றனர்.
இருளர்களை (Irular) வெல்லன் (Vellan), பூசாலி (Poosali), பூசாரி (Pujari), இரளிகா (Iraliga), இருளிகன் (Iruligan), காடு பூசாரி (Kadu Pujari), இருளிகர் (Iruligar) என்னும் பல பெயர்களில் குறிப்பிடுவர். இருளர் கறுத்த நிறத்தைப் பெற்றிருப்பதால் ‘இருளர்’ எனப் பெயர் பெற்றனர் என்று தர்சுடனும் (Thurston), இலூயிசும் (Luiz) கூறுவர். இருளர்களைப் பற்றிய தொன்மைக் கதைப்படி இருளர்கள் ‘இருள்’ (Irul) என்னும் மரத்திலிருந்து தோன்றியவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனாலேயே ‘இருௗர்’ எனப் பெயர் பெற்றனர் என்பதும் ஒரு வழக்கு.
இருளப் பெண்சோளம் காயவைத்தல்
தமிழகத்தில் இருளர்களின் எண்ணிக்கை 89,025 ஆகும். இருளர் நீக்கிரிட்டோ இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பி.எசு. குகாவும் (B.S. Guha) இருளர் ஆசுத்திரேலிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என ஆடன் (Haddon), எசு.எசு. சர்க்கார் (S.S. Sarkar) போன்றோரும் கூறுகின்றனர். தமிழகப் பழங்குடிகளில் இன்றளவும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உணவு சேகரித்துப் பொருளீட்டும் ஒருசில பழங்குடிகளுள் ஒருவராக இருளர் காணப்படுகின்றனர். இருளர் 12 முதல் 15 வரை வீடுகளைக் கொண்ட சிதறலான வாழிடப்பகுதியைக் கொண்டிருக்கின்றனர். மலைப் பகுதிகளில் சமமான இடத்தில் காணப்படும் இவர்களின் வீடுகள், கோரைப் புற்களாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்ட சிறிய குடிசைகளாகக் காணப்படுகின்றன. ஊர்த்தலைவனுக்கான குடிசை, குழந்தை பெறும்பொழுது அமைக்கப்படும் சிறிய குடிசை, கால்நடைகளுக்கான குடிசை, கோயில் முதலானவற்றிற்கு அமைக்கப்படும் குடிசைகள் ஆகியவை வாழிடக் குடிசைகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன.
இருளர்கள் பழந்தமிழுடன் நெருங்கிய தொடர்புடைய ‘இருள’ என்னும் கிளைமொழியைப் பேசுகின்றனர். இருப்பினும் பல்வேறு மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் வாழும் இவர்களின் கிளைமொழியில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருளர்கள் இரு பெரும் பொதுமரபினையுடைய இரு குலக் குழுவாகப் பிரிந்துள்ளனர். இக்குலக்குழுவில் குப்பெ, சம்பெ, தேவனெ, கல்கட்டி, கொடுவெ, புங்கெ, குறுநாக, பேராத என்னும் எட்டுக் கால்வழிகளுண்டு.
இருளர்
அம்மாவின் தம்பி மகளை மணப்பதே பெரும்பான்மையான திருமண முறையாகும். இரு குடும்பங்களுக்கிடையே மகளைப் பரிமாற்றம் செய்யும் முறையும், பல்மனைவி பெறும் திருமண முறையும் காணப்படுகின்றன. பெரும்பான்மையான திருமணங்கள் பெற்றோர்களால் நடத்திவைக்கப்பட்டாலும் தான் விரும்பியவளை அடைய ‘உடன்போக்குத் திருமணமும்’ இவர்களிடையே காணப்படுகிறது. இது தவிர்த்து, தான் மணக்க இருக்கும் பெண்ணின் வீட்டில் பணி செய்து மணக்கும் முறையும் திருமணத்திற்கு முன்னர் மணமகளும் மணமகனும் சிலகாலம் சேர்ந்து வாழ்ந்து அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின்னர் நடத்தும் ‘தேர்வுத் திருமணமும்’ இக்குடிகளிடையே காணப்படுகிறது. இருளர் சமூகம், திருமண விலக்கையும் விதவைத் திருமணத்தையும் கொண்டுள்ளது.
இருளர்களின் பொருளாதாரம் அரைநாடோடி வாழ்க்கையைச் சார்ந்ததாகும். காட்டுப் பொருள்களைச் சேகரித்தும், சாமை, தினை, கேழ்வரகு, சோளம் முதலான பொருள்களை விளைவித்தும், கால்நடைகளை வளர்த்தும் காப்பி, தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்தும் வாழ்கின்றனர். இருளர்கள் தேன் சேகரிப்பதிலும் பாம்பு பிடிப்பதிலும் வல்லவர்கள்.
இக்குடிகளிடையே அரசியல் அமைப்பு சிக்கலற்ற முறையானது. சிதறிக் காணப்படும் பல குடியிருப்புகளை ஒரே பிரிவாகக் கொண்டு ஒரு தலைவனைத் தேர்த்தெடுக்கின்றனர். இவர் ‘மூப்பன்’ எனக் கூறப்படுவர். இவருக்கு உதவியாக ஒவ்வொரு சிற்றூரிலும் ‘பஞ்சாயத்துக் குழு’ அமைக்கப்பட்டு, அது இவர்களது சமூக வாழ்வில் இயற்றப்படும் முடிவுகளையும் ஏற்படும் சிக்கல்களையும் கண்காணிக்கிறது. பன்னிரண்டுக்கும் மேற்பட்ட இந்துமதக் கடவுள்களை வழிபடுகின்றனர். இவற்றில் பெரும்பான்மையானவை தாய்த் தெய்வங்களாகும். முன்னோர் வழிபாடு இவர்களிடையே இன்றளவும் காணப்படுகிறது. இடுகாட்டின் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசையில் பல்வேறு உயர அளவில் காணப்படும் கற்களை நட்டு வழிபடுகின்றனர். உயரமான கற்களை முதியோர் இறந்ததையும் சிறிய கற்களைக் குழந்தைகள் இறந்ததையும் நினைவிற் கொள்ள அமைக்கின்றனர். இயற்கை வழிபாட்டையும் ஆவிகளின்பால் நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். இருளர் வாழ்க்கையில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் முதலிடம் உண்டு. திருமண விழா, குழந்தைக்குப் பெயரிடும் விழா, பூப்பு நீராட்டும் சடங்கு போன்றவற்றை முதன்மையாகக் கூறலாம். இறந்தவர்களைச் சதுரமான அல்லது வட்ட வடிவிலான குழியில் புதைப்பர். இவ்விடத்தைச் சில காலம்வரை காட்டு விலங்குகள் அணுகாமலிருக்கக் கள்ளிச் செடிகளைப் புதைகுழிக்கு மேல் வைப்பர்.
இருளர்கள் இந்து சமயத்தைத் தழுவித் தீண்டத் தகாதவர் சாதிக் குழுக்களின் நிலையினை அடைந்திருக்கின்றனர் எனலாம். சமவெளிச் சாதிக் குழுக்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தம்முள் ஏற்றுத் தம் பழங்குடித் தன்மையிலிருந்து மாறி வருகின்றனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 246)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8n3aqu4n/
தமிழ்“இருளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8n3aqu4n/APA
Oliyon Research. (2026). இருளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8n3aqu4n/MLA
"இருளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8n3aqu4n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment