கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். நாகனார் என்பது இவர் இயற்பெயராகும். நாகனார் என்னும் பெயர் கொண்ட பிற புலவர்களினின்றும் வேறுபடுத்தி உணரும் வகையில் ‘இனிசந்த’ என்னும் அடை சேர்த்து இவ்வாறு வழங்கப்பட்டார். ‘இவர் பெயரை விளக்குங்கால், இவர் இனிய குரலோடு பாடவல்லராதல் பற்றி இவ்வடைமொழி கொடுக்கப்பட்டார் போலும்’ எனக் கருத்துரைத்த பின்னத்தூர் அ. நாரயணசாமி அய்யர், ‘சந்தம் – குரல், இனிய சந்தம் இனி சந்தம் என விகாரப்பட்டது’ என்று விளக்கமும் தந்துள்ளார். ‘இனிசந்த’ என்பது ஊர்ப் பெயரின் திரிந்த வடிவா அடைமொழியா என்பது தெரியவில்லை என்று தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. இவரது ஒரே பாடல் நற்றிணை 66–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல், தலைமகனோடு உடன்போக்கில் தன் மகள் சென்றதுணர்ந்த நற்றாய் அது அறமென உணர்ந்தும், அவள் செல்லும் பாலை நிலத்தின் வெப்பக் கொடுமையால் அவளுடைய கண்கள் சிவந்து ஒளி மழுங்கி அலமருமே என்று எண்ணித் தன் வீட்டிலிருந்து வருந்திக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. தன்னை விரும்பிய காதலனைக் கூடிச்சென்ற போதிலும், சூடிய மாலை சிக்குண்டாலும், அணிந்த வளையல் நழுவினாலும், இடையில் அணிந்த காஞ்சியின் பொற்காசுகள் பிறழ்ந்தாலும் அவற்றைச் செப்பம் செய்து கொள்ள அறியாது அழுபவள் என்று தன் மகளின் இளமைத் தன்மையினை நினைந்து நற்றாய் வருந்துவது நயம்படக் காட்டப்பட்டுள்ளது.