அரசியல்சார் மானிடவியல்
araciyalcār māṉiṭaviyal
மானிடவியலின் பெரும் பிரிவுகளுள் ஒன்றான பண்பாட்டு மானிடவியல், பல துணைப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.
மானிடவியலின் பெரும் பிரிவுகளுள் ஒன்றான பண்பாட்டு மானிடவியல், பல துணைப் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இத்துணைப் பிரிவுகளுள் ஒன்றான அரசியல்சார் மானிடவியல் சமுதாய அமைப்பில் பொதுச் செயற்பாடுகளின் முறைமை, அமைப்பு, செயற்படும் முறை, நிருவாக அமைப்பு முதலானவற்றையும், இவ்வமைப்புகளின் செயற்பாடுகளைக் கட்டமைத்து நிற்கும் ஆட்சியுரிமை, அதிகார அமைப்பு முதலானவற்றையும் அறியும் பெரும் பரப்பினைக் கொண்டிருக்கிறது. அரசியல்சார் மானிடலியலின் பரப்பு வெவ்வேறு காலக்கட்டங்களில் விரிவடைந்துகொண்டு வந்ததால் இத்துறையின் வரம்பை அறிய ஒன்றுக்கும் மேற்பட்ட தெளிவான வரையறைகளைக் காணவேண்டும்.
தொடக்கக் காலத்தில், ஆதிக்குடிகள், பழங்குடிகள், கிராமச் சமூகம் முதலான சிறு சமூகங்களையே முதன்மையாக அறிய முற்பட்டிருந்த பண்பாட்டு மானிடவியலார், அச்சமூகத்தின் ஒவ்வொரு அமைப்பையும் பெரும்பாலும் தனி நிலையில் நின்றே ஆராய்ந்து வந்தனர். கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இச்சிறுகுழுக்களின் ஆட்சிமுறையையும் அதிகார அமைப்பையும், இவை உறவுமுறைக்குழு, சமயம், பொருளாதாரம் முதலான சமூக அமைப்புகளுடன் கொண்டிருந்த தொடர்பினையும் மட்டுமே ஆராய்ந்தறிந்தனர்.
பண்பாட்டு மானிடவியலார் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே வாழ்க்கையமைப்பில் ஒருபடித்தான நிலையினைக் கொண்டிருந்த சிறு குழுக்களையும், தொழில் துறையை மையமாகக் கொண்ட விரிவடைந்த வாழ்க்கையமைப்பைப் பெற்றுள்ள நகரம் சார்ந்த சமூகங்களையும் ஆராய முற்பட்டனர். இதனால் இத்துறையின் பரப்பும் இதன் அனைத்துத் துணைப் பிரிவுகளின் பரப்புகளும் விரிவடையத் தொடங்கின.
வேட்டையாடி உணவு தேடும் சமூகம் முதல், நாடோடி, ஆயர்குடி, வேளாண்மை, கிராமம் மற்றும் நகரச் சமூகம் வரையிலும், ஆதிக்குடி பண்பாட்டிலிருந்து நகர்ப்புறப் பண்பாடு வரையிலும், வேட்டையாடி உணவு சேகரிக்கும் பொருளாதார அமைப்பிலிருந்து தொழிற்பகுப்பும், தொழிற்புரட்சியும் கொண்ட மின்னணுச் சக்தியால் இயங்கும் இயந்திர மனிதன் ஈட்டும் பொருளாதார முறை வரையிலும், அம்பெய்து போரிட்ட முறையிலிருந்து அணு ஆயுதப் போர்முறை வரையிலுமான இத்துணை வேறுபாடுகளினூடே நூற்றுக்கும் மேற்பட்ட சமூக, சமய அமைப்புகளைக்கொண்டுள்ள மக்களின் அரசியலமைப்பு, ஆட்சியமைப்பு, அதிகார அமைப்பு முதலானவற்றை அறிவதே இன்றைய வளர்நிலை அரசியல்சார் மானிடவியலின் பரப்பாகும்.
தலைவனற்ற ஆதிக்குடி, வயது அடிப்படையிலான குழுத் தலைவன், மறைநிலை சமூகத் தலைவன் (Secret Society's Chief), கால்வழித் தலைவன், படையுரிமை ஆளுநர், தெய்வத் தன்மையற்ற ஆளுநர், நடுவண் தலைமை, ஆதிக்குடி ஆட்சிக்குழு, நிலமானிய ஆட்சி, அடிமையாட்சி, பண்ணையடிமை முறை, பணித்துறை ஆட்சி, பல்பதவியாண்மை, குடியேற்ற ஆதிக்க அரசு, கிராமப் பஞ்சாயத்து, குடியரசாட்சி, மக்களாட்சி, பொதுவுடைமை ஆட்சி, இராணுவ ஆட்சி முதலான பல்வேறு அமைப்புகளைக் கொண்ட ஆட்சி முறையின் அரசியலமைப்பு, அதிகார அமைப்புச் சட்ட முறைகள், முதலானவற்றையும் இந்த அமைப்பின் விளைவுகளைச் சார்ந்து செயற்படும் சமூக, பொருளாதார, சமய அமைப்புகளையும் அறிவதே அரசியல்சார் மானிடவியலின் பரப்பாகும்.
பொது வாழ்க்கை, தனி வாழ்க்கை, சமூக–பண்பாட்டு அமைப்புகள் ஆகிய அனைத்தும் அரசியலமைப்பிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டே இயங்க வேண்டியிருப்பதால், அரசியலே வாழ்க்கையின் கருவாக அமைகிறது. சிறு தலைமையமைப்பிலிருந்து சிக்கலான ஆட்சியமைப்புவரை உள்ள ஆட்சியமைப்புகள் அனைத்தும், வாழ்வின் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் முதன்மையான முடிவுகளைக் கொண்டுவருகின்றன. ஒரு குறிப்பிட்ட பரப்பில் வாழும் பலதரப்பட்ட வகுப்பினர், தாம் வாழும் பரப்பால் ஒன்றாகக் காணப்படினும் ஒரே அரசியல் போக்குகளை ஏற்பதில்லை. இதன்வழி, அவர்கள் வகுப்பு, குழு, கட்சி, உட்கட்சி என்று பாகுபட்டு அந்தந்த அமைப்பின் தகுதி நிலைக்கேற்பச் செயற்படுகின்றனர். இவ்வேறுபாடே மாநிலம், இனம், நாடு. இவற்றின் அடிப்படையில் மாறுபடின் போர் நடப்பும் எளிதாகிறது. பரந்த அடிப்படையில் காணும்பொழுது, நாட்டுப் பண்பு பற்றிய ஆய்வினையும் அரசியல் மானிடவியல் ஏற்று நிற்கக் காணலாம். ஆதிக்குடி, சிற்றூர், நகர சமூகங்கள் அனைத்தையும் குடியரசு, மக்களாட்சி ஆகிய ஆட்சியமைப்புகள் உள்ளடக்கிக் காண்பதால், இவ்வாட்சி முறையில் மக்களின் மனப்பாங்கு, வாக்கெடுப்பில் பங்கேற்று ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் முறை, வாழும் பரப்பு, வகுப்பு, இனம், மொழி, சமயம் முதலான கூறுகளின் பிரதிபலிப்பு ஆகியவற்றை அறிந்து, அரசியலமைப்புடனும் பண்பாட்டுடனும் ஒன்றிணைத்து அரசியல் சார் மானிடவியல் ஒப்பிட்டாய்கிறது.
வரலாறு, அரசியல், அரசியற் பொருளாதாரம், அரசியல் சமூகவியல் முதலான வாழ்வியல் பிரிவுகளும் அரசியலமைப்பையும், அதிகார அமைப்பையும் முதன்மையான நிலையில் ஆய்ந்தறிந்தாலும், அரசியல் சார் மானிடவியல் தனித்தன்மை கொண்ட விரிவானதொரு பரப்பாக விளங்குகிறது. மனிதன் தோன்றிய காலம் முதற்கொண்டு படிமுறை வளர்ச்சியினூடே அவன் பங்குகொண்டு செயல்புரியும் ஒவ்வொரு அமைப்பையும் முழுமையாக அறியும் துறையாக மானிடவியல் இருப்பதனாலும், இவ்வமைப்புகளையே பண்பாட்டு ஒப்பாய்வுகள் முறையில் ஆராயும் பரப்பினைக் கொண்டிருப்பதனாலும் இந்த ஆய்வுப் பரப்பை அறிய முற்படும் பிறவாழ்வியல் பிரிவுகளிடமிருந்து இது தனித்து நிற்கிறது.
மானிடவியல், அரசியல் வகைபாடுகளையும் அதன் ஏனைய கூறுகளையும் கி.பி. 1861–ஆம் ஆண்டு மெய்னி (Maine) எழுதி வெளிவந்த ‘தொன்மைச் சட்டம்’ படைப்பிலிருந்தே ஆராயத் தொடங்கியது. இந்நூலில் மெய்னி, தொன்மைச் சமூகத்தை உறவுமுறைக் குழுக்களாகவும் வாழிடப் பரப்புச் சார்ந்த குழுக்களாகவும் பாகுபடுத்துகிறார். தொன்மைச் சமூகத்தில் உறவுமுறை கொண்ட குழுக்களே அதிகார அமைப்பில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பது மானிடவியலில் இவரது கருத்தாகும். பண்பாட்டு முதன்மையான துணைப் பிரிவுகளுள் ஒன்றான அரசியல்சார் மானிடவியல் அமைவதற்கு 1940–ஆம் ஆண்டு போர்ட்சு (Fortes), எவான்சு பிரிட்ச்சர்டு (Evans–Pritchard) ஆகியோர் தொகுத்து வெளியிட்ட ‘ஆப்பிரிக்க அரசியல் முறைகள்’ என்ற நூலே தூண்டுகோலாய் அமைந்தது. இதன் பின், 1959–ஆம் ஆண்டு ஈசுடன் தாம் எழுதிய கட்டுரைகளில், அரசியல் அமைப்பு அதன் செயல்முறை முதலான சார்புடைய வேற்றுமைக் காரணிகளை, அவை செயற்படும் சமூக அமைப்புகளையும், பொதுவாழ்வின் செயற்பாடுகளையும் மானிடவியல் நோக்கில் ஆராய்வதே அரசியல் மானிடவியலின் பங்கு எனத் தெளிவாகச் சுட்டினார். மேலும், அரசியல் அறிஞர்தம் ஆய்வின் நிலைக்கும் மானிடவியலாரின் ஆய்வு நிலைக்குமிடைப்பட்ட களத்தை இவர் அறுதியிட்டார். பொதுவாக அரசியலமைப்பை ஆராயும்பொழுது குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்களையே (Institutions) அரசியல் அறிஞர்கள் எடுத்தாள்கின்றனர். சமூகத்தின் அனைத்து அமைப்புகளைக் குறித்த கள விவரங்களையும், பண்பாட்டிற்கிடையே இவ்வமைப்புகள் தொடர்பான ஒப்பீட்டாய்வுத் திறனையும் மானிடவியல் ஆய்வுப் பரப்புக் கொண்டுள்ளமையால், ஏனைய வாழ்வியல் பிரிவுகளைவிட அரசியல் மானிடவியலில், அனைத்துப் பகுதிகளையும் தெளிவாக அறிய முடிவதைச் சுட்டுகிறார். இக்காலத்தில், மாறுபட்ட அனைத்து அரசியல் அமைப்புகளையும், வகைபாடுகளையும் அறியும் ஒருபடித்தான ஆய்வுகளே மிகுந்திருந்தன. 1960–க்குப் பின்னரே, அரசியல் மாற்றங்கள், தலைமை முறை அமைப்பு, சமூக அமைப்பு, கட்சி, உட்கட்சி வேறுபாடு, சட்டவகைகள், மாதிரியான விதிகள் (Normative Rules), முறைமை நிலைமை (Legitimacy) முதலானவற்றைப் பற்றிய கோட்பாடுகள் வகுக்கப்படலாயின. எட்மண்டு இலீச்சு (Edmund Leach) என்பவரால் 1954 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘மேட்டுநில பர்மாவின் அரசியல் முறை’ எனும் நூலே இம்மாற்றத்திற்குத் துணை நின்றது. பிரடரிக் பார்த்து (Fredrick Barth) பாதன் (Pathan), 1959–இல் மக்களிடையே மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக வகுத்த ‘விளையாட்டுக் கொள்கை’யும் தொன்மைச் சமூக அரசியல்மைப்புகளின் வேறுபட்ட நிலையினை அறிய முற்பட்டது.
எந்த ஒரு மனித சமூகத்திலும் அதனைச் சார்ந்த உறுப்பினர்களோ குழுக்களோ சமநிலையில் நடத்தப்படுவதில்லை. அனைத்துச் சமூகங்களிலுமே சமூக உரிமைகளிலும், சமூகப் பயன்பாடுகளிலும் சமநிலையின்மை நிலவுகிறது. இவையே ஆற்றலையும் ஆணையுரிமையையும் செயற்படுத்த வழிகோலுகின்றன. இதனாலேயே மக்கள் தம் சமூகங்களில் காணப்படும் சமநிலையின்மையையும், அதனைச் சார்ந்த அதிகார அமைப்பையும் ஆணையுரிமையையும் அறிய வினா எழுப்புகின்றனர். இம்மாதிரியான காலக்கட்டங்களிலேயே அரசியல் கோட்பாடுகள் வகுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பழங்குடித் தன்மையிலிருந்து விடுபட்டு நகரச் சமூகமும், மாநிலங்களும் உருவான பொழுதே, கிரேக்கச் சிந்தனையாளரான பிளேட்டோவின் அரசியல் சிந்தனை தோன்றியது. இந்த நிலைமாறுபாடு எளிய சமூக முறைகளைச் சிக்கலான வலையமைவு கொண்ட சமூக மாற்றத்திற்குக் கொண்டு சென்றதால் பிளேட்டோ காலத்திய கிரேக்கர்கள், எவ்வகையான சமூக முறை நிலைப்படுத்தப்பட வேண்டும்? அதன் தெளிவான வழி என்ன? இவ்வழிமுறைகளை அமைக்கும் பொழுது அதன் வரம்பு எவ்வாறு நிருணயிக்கப்பட வேண்டும்? இவ்விதிமுறைகளைச் செயற்படுத்தி ஆள்பவர் யார்? எவ்வாறு சமூக உரிமைகளைப் பங்கீடு செய்வது முதலான வினாக்களை எழுப்பினர். இவ்வனைத்துத் தொடர்பினையும் ஒன்றிணைத்து அறிவதே அரசியல் துறை என்பது வரையறுக்கப்பட்டது.
மானிடவியலார் தொடக்கக் காலத்தில் சிறு குழுக்களிடையேயும், சிறு சமூகத்தினரிடையேயும் காணப்பட்ட அதிகார அமைப்புகளை ஆராயும் பொழுது, இச்சமூகங்களின் வலையமைவின் இரு காரணிகளாகப் ‘புறத்தோற்றப் பிணைப்பு’ (Surface Relationship), ‘உள்ளமைந்த பிணைப்பு’ (Organic Solidarity) ஆகியனவற்றை ஆழ்ந்தறியலாயினர். மக்கள் தனியாகவோ கூட்டாகவோ சமூக வாழ்வில் ஈடுபடும்பொழுது புறத்தோற்றப் பிணைப்புகளான ‘கூட்டுறவு’, ‘இணைப்பு’, ‘தொடர்பு’, ‘பிணைப்பு’, ‘கூட்டு’ முதலான சமூக முறைமைகளையேற்றுச் செயற்படுகின்றனர். வாழும் நிலப்பரப்பாலோ உறவுத் தொடர்பாலோ பண்பாட்டாலோ ஒன்றுபட்ட குழுக்களிடையே காணப்படும் ‘நம்மவர் உணர்வை’ அடிப்படையாகக் கொண்டே உள்ளமைந்த பிணைப்பு செயற்படுகிறது. புறத்தோற்றப் பிணைப்பும், உள்ளமைந்த பிணைப்பும் ஒன்றிணைந்து செயற்படும் பொழுது ‘போட்டி’, ‘சண்டை’, ‘வாதம்’, ‘சச்சரவு’, ‘கருத்து வேறுபாடு’, ‘உட்பூசல்’, ‘சொற்போர்’, முதலான மேம்போக்கான குழப்பங்கள் சமூகத்தில் ஏற்பட்டு இவையே சமூக முரண்பாடாகவும் சமூகப் போராட்டமாகவும் உருப் பெறுகின்றன. மேற்கண்ட சமூக முறைகளை உள்ளடக்கிச் செயற்பட்ட அரசியல் அமைப்பை ஆராய்ந்த மானிடவியலார், உடனிணக்கத்திற்குரிய முறைமை நிலைமை (Consensual Legitimacy), ஆதாரமும் முறைமை நிலைமையும், ஆற்றலும் முறைமை நிலைமையும், அதிகார முறைமை முதலான கருதுகோள்களை வகுத்தனர்.
இது தவிர்த்து, வகுப்பு முரண்பாட்டையும் சமூக மாற்றத்தையும் ஏற்றுள்ள சமூகத் தொடர்புகளின் வழி அமைந்த உற்பத்தியமைப்பே, சமூக வாழ்வை நிருணயிக்கின்றது என்ற ‘வரலாற்றுப் பொருள் முதல் வாதம்’ (Historical Materialism), ‘வகுப்பு’ (Class), ‘சுரண்டுதல்’ (Exploitation) ‘உடைமை மாற்றம்’ (Alienation), ‘அரசு’, ‘தனிமனிதர் கருத்தாய்வு’ (Ideology) முதலான கோட்பாடுகனை முன்வைத்து ஆராய்ந்தனர். இக்கோட்பாடுகளின் குறைந்தபட்ச வரையறைகளைக் காரல் மார்க்சு குறிப்பிடுவதாவது;
வகுப்பு: ஒருபடித்தான மக்களைக் கொண்ட இக்குழு, முதலாளிகளாகவோ உற்பத்தியில் பங்கேற்கும் தொழிலாளிகளாகவோ முரண்பாடுடைய குழுவாகவோ சமூகத்தில் இயங்கவல்லது. தொழிலாளிகள் அல்லது வேலையாட்கள் ஈட்டு உற்பத்தித் திறனுக்குக் குறைவாக ஊதியமளிப்பது அல்லது ஒருசாராரின் உடைமைகளை அதிகார உரிமைகொண்ட குழுவினர் தன்வசப்படுத்துதலே சுரண்டுதல் எனப்படும். ஒருவன் தம் வாழ்வின் விதியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இழக்கும் நிலைமையே உடைமை மாற்றமாகும். குறிப்பாக, இது தான் பங்குகொண்டுள்ள தொழில் செயற்பாடுகளிலும், பங்குபெற்ற உற்பத்திப் பொருட்களின் மீதும் கொண்டுள்ள உரிமையைக் கைவிடுவதாகும்.
அரசு: ஒரு சமூக நிறுவனமான இவ்வமைப்பு, அதிகாரத்தையும் சட்டத்தையும் துணைக்கொண்டு பொருளாதாரம், சமூகம் முதலிய அமைப்புகளில் கருத்து வேறுபாடு கொண்டுள்ள குழுவினரைக் கீழ்ப்படிய வைக்க அதிகார வகுப்பினரால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்.
தனிமனிதர் கருத்தாய்வு என்பது, ஒருசில வகுப்பினரின் எதிர்ப்பை அடக்கவும் உழைக்கும் வகுப்பினரின் புரட்சியான செயற்பாடுகளைக் குறைக்கவும் சில ஆதிக்க வகுப்பினர் தம் கருத்தைச் செயற்படுத்துவதாகும்.
அரசியலமைப்பு, அதன் வளர்ச்சி நிலைகள், அவ்வமைப்பு செயற்படும் முறைகள், அதன் பண்புகன் முதலான வகைப்பாட்டாய்வுகளைக் கொண்ட துணைப் பரப்பு, முதன்மையாக நான்கு கோட்பாடுகளைக் கொண்டுள்ளது. அவை ‘பகுத்தறிவாக்கம்’, ‘ஆணையுரிமை’, ‘தகுதிநிலைக் குழு’ ‘அரசியல் கட்சி’ என்பனவாகும். இனி, சமூகவியலாரான மாக்சு வெப்பர் (Max Weber) வகுத்த இக்கோட்பாடுகளின் தத்துவங்களை மானிடவியலில் ஏற்றுக்கொண்டு ஆராய்வதனைக் காணலாம்.
பகுத்தறிவாக்கக் கோட்பாடு, அரசியல் முறைகளில் காணப்படும் மாற்றங்களின் அமைப்புகளை மிகத் தெளிவான அளவைகளுடன் அறிவியல் நோக்கோடு ஆராய்கிறது. ஆணையுரிமை, தலைவனின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் அதிகார முறைகளை அறிவதாகும். ‘மரபுவழி’ ‘அருங்கொடைத் தலைமை’ (Charismatic), ‘சட்டம் சார்ந்த’ (Legal) எனும் இம்மூன்று அடிப்படை ஆணையுரிமை முறைகளையே இக்கோட்பாடு சுட்டுகிறது. பொதுவான சமூகப் பண்புகளைக் கொண்ட ஒரு குழுவின் வாழ்க்கை ஆதாரங்களை இயல்பான அல்லது எதிரிடையான அளவைகளைக் கொண்டு அக்குழுவின் சமூகத் தகுதியினை மதிப்பிடலாம் என்பதே தகுதிநிலைக் குழுக் கோட்பாட்டின் அடிப்படையாகும். அரசியல் கட்சி, ஆற்றலையும் ஆணையுரிமையையும் அவற்றைச் சார்ந்த எந்தக் கூட்டுரிமை அமைப்பையும் (Corporate Body) செயற்படுத்த விழையும் தனியமைப்பாகும்.
எமில் தர்க்கைமின் (Durkheim) வினைசெயற்பாடு முறையைச் சார்ந்த ஆய்வுகளையும், கோட்பாடுகளையும், அவரது சமகால மானிடவியலாரும் உளவியல் அமைப்பில் அரசியல் பற்றிய ஆய்வுகளை அறிய முற்பட்டவர்களும், அவரது ‘சமூக ஒருமைப்பாட்டுணர்வு’ (Social Solidarity), ‘சமூக ஒழுங்கு உணர்வின்மை’ (Anomic), ‘ஒன்றிணைந்த கருத்து நிலை’ (Collective Conscience) முதலான கோட்பாடுகளை ஏற்று ஆய்வு செய்தனர். இக்கோட்பாடுகளின் வழிச் சமூக முறைகள், சமூக அமைப்புகள், சமூகக் கட்டமைப்பில்லங்கள் முதலான கூறுகள், சமூகக் கட்டுப்பாட்டை அமைப்பதில் கொண்டிருக்கும் தொடர்புகள், செயற்பாட்டியல் முறையில் ஆராயப்படுகின்றன. மேலும், இந்த ஆய்வுகள், சமூகத்தில் உள்ள உறுப்பினர்கள் தம் சமூகத்தின்பால் கொண்டிருக்கும் பொதுவான உள்ளுணர்வுக் கருத்துகளும், நம்பிக்கைகளும் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டை அமைப்பதில் கொண்டுள்ள தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன.
‘தன்னலத்தன்மை’ (Factionalism), இன்றைய முதன்மையான ஆய்வுகளுள் ஒன்றாக ஆராயப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த முரண்பாட்டுடன் பொதுவான உடைமைகளின் மீது ஆற்றலைப்பெற விழையும் குழுக்களின் அரசியல் செயற்பாடுகளைத் தன்னலத் தன்மைக் கோட்பாடு ஆராய்கிறது. சீகல், பீல்சு, பிர்த்து பிரெஞ்சு, பென்டன் முதலானோர் இக்கோட்பாட்டை முன் வைத்துத் ‘தன்னலம் சார்ந்த அரசியல்’ எனும் உட்பிரிவையே இந்த ஆய்வுப் பரப்பில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஐரோப்பாவில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்திலிருந்தே பெருமளவு சமூக மாற்றமும் ஆய்வுணர்வும் காணப்பட்டன. பிரெஞ்சுப் புரட்சியும் தொழில்மயமாக்கமும், சமூக மற்றும் அரசியல் படிநிலையமைப்புகளை வெகுவாக மாற்றியமைத்தன.
இவ்வாறு அமைந்த மாற்றம் காரல் மார்க்சு (1818–1883), மாக்சு வெப்பர் (1864–1920), எமில் தர்க்கைம் (1858–1917) ஆகியோரிடையே ஆய்வுணர்வுக் கிளர்ச்சியைத் தூண்டியது. இவர்களின் ஆய்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அணுகு முறைகள், கோட்பாடுகள் மற்றும் எடுகோள்களே அரசியல்சார் அறிவியல், அரசியல் சார் சமூகவியல், அரசியல் சார் மானிடவியல் மற்றும் அரசியல் சார்ந்த ஆய்வுப் பரப்புகளைக் கொண்டுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் உட்கருவாக அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மார்க்சின் ‘உடைமை மாற்றம்’, வெப்பரின் ‘பணித்துறை யாண்மை’, தர்க்கைமின் ‘அன்னோமி’ கோட்பாடுகள் அனைத்தும் அரசியல் இயல்நிகழ்ச்சிகளைச் சார்ந்த பண்புகளை என்றென்றும் ஆராயும் தன்மை வாய்ந்தவை. இம்மூவரின் அணுகு முறைகள் ஒப்பீட்டாய்வாளர்களுக்கு விரிந்த ஆய்வுப் பரப்பினை அமைத்துத் தந்துள்ளன எனலாம். அரசியல் அமைப்பிற்கும் பொருளாதார அமைப்பிற்கும் உள்ள தொடர்புகளை மார்க்சும், குடியாட்சி முறைக்கும் பணித்துறை ஆட்சி முறைக்குமுள்ள தொடர்புகளை வெப்பரும், வளரும் சமூக உள்ளமைப்புகளின் செயற் பிணைப்புகள் மற்றும் அரசியல் முறைகளைத் தர்க்கைமும் ஒன்றுபடுத்திப் பகுத்தாய்ந்தனர்.
மரபுவழிச் சார்ந்த கட்டுப்பாட்டுணர்வுகளைக் கொண்ட தொன்மைச் சமூகங்களில் குடும்பம், வட்டாரக் குழு, உறவுமுறை மற்றும் சமய அடிப்படையிலமைந்த அதிகார அமைப்பே இக்குடிகளில் எழும் முரண்பாடுகளைக் கண்காணிக்கின்றது. வளர்ச்சியடைந்த சட்ட முறைகளைக் கொண்டிராத இக்குழுக்கள், மந்திரம் இயற்கைக்கப்பாற்பட்ட சக்திகளின் அடிப்படையிலான ‘குறிகூறல்’ ‘சோதனை முறை’, ‘தெய்வ ஆணைமொழி’ ‘மீளாப்பழிக்கு உட்படுத்துதல்’ முதலான சட்ட முறைமைகளைக் கொண்டிருக்கின்றன. தலைவனற்ற ஆதிக்குடி எனும் எளிய அதிகார அமைப்பிலிருந்து ஆதிக்குடி அரசாட்சி வரை காணப்படும் பல்வேறு அமைப்புகளை எசுகிமோ (Eskimo), இபுகாவு (Ifugao), நுயர் (Nuer), அசாந்தி (Ashanti) முதலான குடிகளின் சட்டப் பண்பாடுகளை மிக விரிவாக ஆராய்ந்து வெளியிட்டுள்ள முடிவுகளிலிருந்து அறியலாம். எசுகிமோ சட்டம், இபுகாவு சட்டம், நுயர் சட்டம், அசாந்திச் சட்டம் முதலான அமைப்புகளில் தனியார் சட்டம், பொதுச்சட்டம், கொடுங்கோன்மைச் சட்டம் முதலிய தொன்மைச் சட்டங்கள் காணப்படினும், அவை இன்றைய சட்ட முறைகளில் காணப்படும் குற்றச் சட்டம், சொத்துரிமைச் சட்டம், ஒழுங்குமுறைச் சட்டம் முதலானவற்றிற்கு ஈடான சட்டமுறைகளையும் கொண்டிருக்கின்றன.
இவ்வாறான வேறுபட்ட அமைப்புகளை அறிவதற்காக அரசியல்சார் மானிடவியலார் ஆதிக்குடி அதிகார அமைப்பை ‘நாடற்ற அமைப்பு’, ‘நாடு அமைப்பு’ எனப் பகுத்தாராய்கின்றனர். நாடற்ற அமைப்பில், தலைவனற்ற மிகச்சிறிய குழுக்கள், கிளைக்கால்வழிக் குழுத்தலைவன், வயது அடிப்படைக் ஆட்சிக் குழு, சிற்றூர்த் தலைவன், கூட்டியக்கம் மற்றும் வட்டாரக்குழுத் தலைவன் ஆகியோர் தலைமையமைப்பை ஏற்று ஆள்கின்றனர். நாடு அமைப்பில், தலைமையுரிமை, அரசாட்சி, ஆட்சிக்குழு முதலான அமைப்புகள் அரசியல், அதிகாரம் மற்றும் ஆணையுரிமைகளைச் செயற்படுத்துகின்றன.
மெய்னி, எவான்சு பிரிட்சர்டு, லீச், ஈசுடன், மார்க்சு, வெப்பர், தர்க்கைம் முதலான அறிஞர்கள் தொடங்கி இன்றைய வளர்நிலை ஆய்வாளர்கள் வரை அனைவருமே குடும்பம், உறவுமுறை, சமயம் இவற்றின் அடிப்படையிலான ஆய்வு முதன்மையானது என்கின்றனர். தொன்மைக் காலத்தில் குடும்பம், உறவுமுறை உறுப்பினர்கள் நேரிடையாக அதிகார அமைப்பில் பங்கு கொண்டனர். இன்றைய சமூக அமைப்பில் ‘அரசியல் சமூக வருக்கம்’ ஒவ்வொரு உறுப்பினரிடையேயும் அரசியல் உணர்வுகளைப் பல வயது நிலைகளில் பண்பேற்றுகிறது. குடும்பம், உறவு முறை, சமயம் எனும் சமூக அமைப்புகள் அரசியல் சமூக ஆக்கத்துடன் பல்வேறு குழு மக்கள் செயற்படும் முறையை ஆராய அடிப்படையாக அமைகின்றன. இந்த அமைப்பின் அனைத்துக் கூறுகளிலும் மானிடவியல் பரப்பு ஏற்றுள்ள முதிர்ச்சி நிலையே, அரசியல்சார் மானிடவியல், தான் சார்ந்திருக்கும் நாட்டின் அரசமைப்பைத் தேர்ந்தெடுத்தல், மாணவர் கிளர்ச்சி, வன்முறை, அரசியல் இயக்கங்கள், அவ்வியக்கங்களின் செயற்பாடுகள் முதலிய ஆய்வுப் பரப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்க அடிப்படையாகிறது.சீ.ப.
துணை நூல்கள்
Durkheim, E., “The Rules of Sociological Method”, Free press, New York, 1950.
Easton, D., “Political Anthropology”, Biennial Review of Anthropology, 1959.
ortes, M., and E.E., Evans Pritchard, (Eds) “African Political Systems”, Oxford University Press London, 1940.
Karl Marx, “Economic and Philosophical Method”, Free press, New York, 1940.
Max Weber, “The Theory of Social and Economic Organisation”, Free Press, New york, 1964.
Middleton, J., and David Tait, “Tribes without Rulers”, Routledge and Kegan Paul, London, 1958.
Swartz, J., Turner, V.W., and Tuden A., “Politica Anthropology,” Aldine Publishing Company, Chicago, 1966.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 694)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hz7gk6m/
தமிழ்“அரசியல்சார் மானிடவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8hz7gk6m/APA
Oliyon Research. (2026). அரசியல்சார் மானிடவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8hz7gk6m/MLA
"அரசியல்சார் மானிடவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8hz7gk6m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment