சுழல் முடுக்கி
cuḻal muṭukki
துகள்களை வட்டமான பாதையில் செலுத்தி முடுக்கும் கருவி சுழல் முடுக்கி (cyclotron) ஆகும்.
துகள்களை வட்டமான பாதையில் செலுத்தி முடுக்கும் கருவி சுழல் முடுக்கி (cyclotron) ஆகும். துகள்கள் வட்டத்தின் மையத்திலிருந்து தோன்றி, வெளி நோக்கிப் பரவும் ஒரு சுழல் வடிவப் பாதையில் பயணம் செய்யுமாறு, காலத்தால் மாறாத ஒரு காந்தப் புலத்தால் வழி நடத்தப்படுகின்றன. சுழல் முடுக்கியின் தத்துவத்தை 1930ஆம் ஆண்டில் லாரன்ஸ் என்பார் வெளியிட்டார். துகள் முடுக்கிகளில் பெரும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவை எல்லாவற்றிலும் சுழல் முடுக்கியின் தத்துவமே அடிப்படையாக அமைந்துள்ளது.
அடிப்படைத் தத்துவம். ஒரு காந்தப் புலத்திற்குச் செங்குத்துத் திசையில் நகரும் மின் துகளின் இயக்கத்திற்கு ω = qB/m என்னும் சமன்பாட்டை லாரன்ஸ் கண்டு பிடித்தார். இதில் ω என்பது துகளின் வட்ட இயக்கத்தின் கோணத் திசை வேகம். q என்பது துகளின் மின். m என்பது அதன் நிறை. B என்பது காந்தப் புலத்தின் காந்தத் தூண்டல், υ திசை வேகத்தில் r என்னும் ஆரம் உள்ள வட்டமான பாதையில் நகரும் ஒரு துகளின் கோணத் திசை வேகம் = υ/r துகளின் மேல் செயல்படும் காந்தப் புல விசை ω = qυB. இந்தச் செங்குத்து விசை ஒரு மைய நோக்கு முடுக்கத்தை ஏற்படுத்துகிறது. நியூட்டனின் இரண்டாம் விதிப்படி qυB = mυ²/rஇலிருந்து = என்னும் லாரன்சின் சமன்பாட்டைப் பெறலாம்.
புலம், மின், நிறை ஆகிய அனைத்தும் மாறாமலிருக்கும் போது, துகளின் கோணத் திசை வேகமும் மாறாமலிருக்கும் எனவும், அது குறிப்பாக நேர் போக்குத் திசை வேகத்தைப் பொறுத்திருக்கா து எனவும், லாரன்சின் சமன்பாடு காட்டுகிறது. அதிக நேர் போக்குத் திசை வேகமுள்ள துகள்கள், விட்டம் மிகுந்த வட்டப் பாதைகளில் ஓடும். திசை வேகத்தில் ஏற்பட்ட அதிகரிப்பைப் பயணப் பாதையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஈடு செய்து, கோணத் திசை வேகத்தை மாறாமல் வைக்கிறது. எனவே, பல விதமான திசை வேகங்கள் உள்ள அனைத்துத் துகள்களுமே ஒரு முறை வட்டப் பாதையில் சுற்றி வர, ஒரே நேரத்தையே எடுத்துக் கொள்ளும். எனவே, ஒரு மாறாத அதிர்வெண்ணுள்ள முடுக்கும் மின் முனையைப் பயன்படுத்த முடிகிறது,
சுழல் முடுக்கியின் அடிப்படை உறுப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. அரை வட்ட வடிவமுள்ள இரண்டு முடுக்கும், மின் முனைகள் ஒரு ரேடியோ அதிர்வெண் மின்னழுத்தத் தோற்றுவாயுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவை உள்ளீடற்ற பெட்டிகளாகும். அவை D என்னும் ஆங்கில எழுத்தின் வடிவத்தில் உள்ளமையால் D என்று பெயரிடப்பட்டுள்ளன. மின்னழுத்தத் தோற்றுவாயின் அதிர்வெண், முடுக்கப்படுகிற துகள்களின் சுழல் அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கும். கருவியின் மையத்தில் உள்ள ஒரு தோற்றுவாயிலிருந்து வெளியிடப்படுகிற அயனிகள் தமக்கு எதிரான மின் குறியுள்ள Dயை நோக்கி இழுக்கப்படுகின்றன. இரண்டு Dக்களுக்கும் இடையிலுள்ள மின்னழுத்தம் துகள்களின் வேகத்தை அதிகப்படுத்துகிற வகையில், திசை கொண்டுள்ள நேரத்தில் Dக்களுக்கிடையிலுள்ள இடைவெளியைக் கடக்கிற துகள்கள் முடுக்கத்திற்கு உள்ளாகின்றன. ஏனைய துகள்கள் இழக்கப்படுகின்றன.
இடைவெளியைக் கடந்து துகள் Dக்குள் செல்லும் போது, அது மின் விசையற்ற பகுதிக்குள் நுழைகிறது. ஆனால், அதன் மேல் செங்குத்தான காந்தப் புலம் செயல்பட்டு, ஒரு வட்டமான பாதையில் செலுத்துகிறது. அது அரை வட்டத்தைக் கடந்ததும், மீண்டும் Dக்களின் இடைவெளிக்கு வருகிறது. அந்தக் கணத்தில், Dக்களின் மின்னழுத்தத் திசை மாறி, துகளை மீண்டும் முடுக்கும் வகையில் அமைகிறது. இச்செயல்முறை மீண்டும், மீண்டும் பல முறை நிகழும். துகள் மீண்டும், மீண்டும் முடுக்கப்பட்டு, அதன் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, விட்டம் மிகுந்துள்ள பாதைகளில் பயணம் செய்யும். இறுதியில், அது காந்தப் புலத்தின் வெளி விளிம்புக்கு வந்து விடும். அப்போது திசை திருப்பி (deflection) எனப் படும் ஒரு மின் முனை, அனைத்துத் துகள்களையும் ஒரே பாதையில் Dயிலிருந்து வெளிப்படுமாறு செய்கிறது.குறைகள். 1937இல் பெதே, ரோஸ் ஆகியோர் சுழல் முடுக்கித் தத்துவத்தில் உள்ள இரண்டு அடிப்படையான குறைகளைக் கண்டு பிடித்தனர். முதலாவதாக, ஒரு துகளின் திசை வேகம் மிகுந்து கொண்டே போகும் போது, அதன் நிறை ஐன்ஸ்டீனின் விதிப் படி அதிகரிக்கும். υ என்னும் திசை வேகத்தில் செல்லும் ஒரு துகளின் நிறை m = \frac{m_0}{\sqrt {I-\upsilon^2/c^2 இதில் m₀ என்பது துகள் அசையாத போதுள்ள அதன் நிறை, c என்பது ஒளியின் திசை வேகம். எனவே துகளின் கோணத் திசை வேகம் υ²/c² என்னும் அளவைப் பொறுத்ததாகி விடுகிறது. υ குறைவாயிருக்கும் போது, அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும், காந்தப் புலம் மாறாது இருக்கும் போது, துகளின் நிறை படிப்படியாக அதிகரிப்பதால், அதன் சுழற்சி அதிர்வெண் படிப்படியாகக் குறையும். இதனால், துகள் ரேடியோ அதிர்வெண்ணுக்கு ஒத்து வாராமல், பின் தங்கும். அது D இடைவெளியில் வரும் போது, மின்னழுத்த வேறுபாடு திசை மாறி, அதன் வேகத்தைக் குறைத்து விடும். அதன் பிறகு, துகள் அடுத்தடுத்து D இடைவெளிகளுக்கு வரும் போதெல்லாம், அதன் வேகம் குறைக்கப் பட்டுக் கொண்டேயிருக்கும். இவ்வாறு நிறையில் ஏற்படும் அதிகரிப்பு, முடுக்கத்திற்கு ஓர் உயர் வரம்பை ஏற்படுத்தி விடுகிறது,
காந்தப் புலத்தாலும், ஒரு சிக்கல் ஏற்படுகிறது. இது வரை துகள்கள் காந்தப் புலத்திற்குச் செங்குத்தான தளத்தில் ஓடுவனவாக இருந்தன. ஆனால், துகள்கள் அந்தத் தளத்திலிருந்து விலகிச் சென்று விடாமல் தடுப்பதற்காக, அவற்றைத் தளத்திற்குள் தள்ளுகிற ஒரு மீள் விசை தேவைப்படுகிறது. இதற்கு அச்சுத் திசைக் குவியப்படுத்தல் என்று பெயர். இவ்வாறு மீண்டு வரும் விசையை உண்டாக்குவதற்காகக் காந்தப்புலத்தைப் படம் 2இல் காட்டியவாறு வளைவாக அமைக்க வேண்டியுள்ளது. புலக்கோடுகளுக்குச் செங்குத்தாகச் செயல்படும் காந்த விசை, துகள் ஓடும் தளத்திற்கு மேல்புறத்தில் கீழ் நோக்கிய சரிவு உள்ளதாகவும், துகள் ஓடும் தளத்திற்குக் கீழ்ப்புறத்தில் மேல் நோக்கிய சரிவு உள்ளதாகவும் அமையும். இதன் காரணமாகத் தளத்தை விட்டு விலகி வரும் துகள்களின் மேல், அவற்றை மீண்டும் தளத்தை நோக்கியே தள்ளி விடும் வகையில், ஒரு விசை செயல்படுகிறது. இதை நிலை நிறுத்த, காந்தப் புலக் கோடுகள் துகளின் சுழல் அச்சின் பக்கமாக வளைந்திருக்க வேண்டும். ஆனால், மாக்ஸ்வெல் சமன்பாடுகள், சில குறிப்பிட்ட வகையில் அமைந்த காந்தப் புலங்களையே அனுமதிக்கின்றன. அதன் படி, விசைக் கோடுகள் அச்சை நோக்கி வளையும் போது, துகள் இயங்கும் தளத்திற்குச் செங்குத்தான புலச் செறிவு, ஆரம் அதிகரிக்கும் போது, குறைய வேண்டும் எனத் தெரிய வருகிறது. இதனால் துகளின் திசை வேகம் குறையும், —கே. என். ராமச்சந்திரன் நூலோதி. J.B. Rajam, Atomic Physics, S. Chand & Co. Ltd., New Delhi, 1983.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 556)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8fqngd55/
தமிழ்“சுழல் முடுக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8fqngd55/APA
Oliyon Research. (2026). சுழல் முடுக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8fqngd55/MLA
"சுழல் முடுக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8fqngd55/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment