தொண்டை நாட்டைச் சேர்ந்த இராச நல்லூரில் பிறந்தவர்; சென்னையை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர். இவர் இராசு மரபினர்; சைவ சமயத்தைச் சார்ந்தவர். இவர் அக்காலத்துச் ‘சென்னைக் கல்விச் சங்கத்தில்’ ஓர் உறுப்பினராக விளங்கினார். எனவே, அச்சங்கத்தின் உறுப்பினரும் சென்னை மாநிலத்தின் ஆட்சியாளருமான எல்லீசு துரையுடன் நெருங்கிப் பழகினார். இராமச்சந்திரக் கவிராயர் சிறந்த கவிஞராகத் திகழ்ந்ததால் மக்கள் இவரைக் கவிச்சக்கரவர்த்தி, கவிராயர் எனப் பாராட்டலாயினர். இவர் பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் இருபத்தேழு பாடல்கள் ‘தனிச் செய்யுட் சிந்தாமணி’ என்ற நூலில் காணப்படுகின்றன. நடுவெழுத்தலங்காரம், சத்தபங்கி, நவபங்கி முதலிய சித்திரக் கவிகள் பாடுவதில் இவர் மிக வல்லவராயிருந்தார். எல்லோருக்கும் விளங்கக்கூடிய எளிய சொற்களில் நகைச்சுவை பொருத்தப்பாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். இவர் சிறந்த நாடகாசிரியருமாவார். இவர் சகுந்தலை விலாசம், தாருக விலாசம், இரணிய வாசகப்பா, இரங்கூன் சண்டை நாடகம், ரூரவச் சக்கரவர்த்தி நாடகம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் கி.பி. 19–ஆம் நூற்றாண்டு, இவர் சதுரகராதியைப் பதிப்பித்தார்.