அரபு மொழி
arapu moḻi
அரபு நாட்டில் தோன்றி, மேற்கு ஆசியப் பகுதியிலுள்ள பல நாடுகளின் மக்களுக்குத் தாய் மொழியாகவும் பிறவிடங்களிலுள்ள இசுலாமிய மக்களுக்குச் சமய மொழியாவும் விளங்குவதாகும்.
அரபு நாட்டில் தோன்றி, மேற்கு ஆசியப் பகுதியிலுள்ள பல நாடுகளின் மக்களுக்குத் தாய் மொழியாகவும் பிறவிடங்களிலுள்ள இசுலாமிய மக்களுக்குச் சமய மொழியாவும் விளங்குவதாகும். இது செமிட்டிக் மொழிகளின் தென்பிரிவுக் குழுவைச் சார்ந்த மொழிகளுள் ஒன்று; அக்குழுவிலுள்ள தன்னொடு தொடர்புடைய ஏனைய மொழிகளைப் போலவே, செமிட்டிக் மொழியியல்புகளைக் கொண்டுள்ளது. இம்மொழி, மூன்று மெய் எழுத்துகள் கொண்டு அமையும் அடிச் சொற்கள் (Triconsonantal Roots), உட்பிணைப்பு விகுதிகள் (Inflectional endings), வினைப்பொருள், காலம் ஆகியவற்றில் சுருக்கமுடைமை போல்வனவற்றைக் கொண்டிருந்தாலும், சொற்களை ஒலிக்கு முறை வேறுபாடுகளாலும், முன்னொட்டுப் பின்னொட்டு முதலிய ஒட்டுகளைச் சேர்த்தலாலும், பொருள் வேறுபாடுகளை நுட்பமாக உணர்த்தவல்ல ஆற்றலும் சொல்வளமும் பெற்றுள்ளது.
அரபு மொழியின் கிளை மொழிகள் மூன்று வகைப்படும். முதாலாவது அரபு மொழியின் நேரான கிளை மொழிகள், இவை மற்றக் கிளை மொழிகளை விடத் தொன்மை வாய்ந்தன. இரண்டாம் வகையில் ஈராக்கு, சிரியா, எகிப்து முதலிய பகுதிகளைச் சார்ந்த கிழக்குப் பகுதிக் கிளை மொழிகள் அடங்கும். இலிபியாவுக்கு மேற்குப் பகுதியிலமைந்த மேற்குப் பகுதிக் கிளை மொழிகள் மூன்றாம் வகையைச் சார்ந்தன. மால்டாவில் பேசப்படும் கிளை மொழியும் இவற்றில் அடங்கும். இக்கிளை மொழி இத்தாலிய, சிசிலிய மொழியிலிருந்து சொற்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. இந்த அரபுக் கிளை மொழி மட்டும் இலக்கிய மொழியாக வளர்ந்து இலத்தீன் எழுத்து வடிவத்தை ஏற்றுள்ளது.
எழுத்து வடிவிலான அரபு இலக்கியம், செமிட்டிக் மொழிகளின் இலக்கியங்களில் காலத்தால் பிற்பட்டுத் தோன்றியதாகும். எனினும், பழமைபேணும் பாங்கு, சொற்றொகுதிப் பெருக்கம், தொடரமைப்புத் தனித் தன்மை, வினைவடிவங்களின் விரிவு ஆகியவற்றால் அமையும் சிறப்பில், பிற செமிட்டிக் மொழிகளினும் விஞ்சி நிற்கிறது.
அரபு மொழி, செமிட்டிக் மொழிகளுள் மிக்க வளர்ச்சியடைந்ததும், மிகுதியான மக்களால் பேசப்படுவதுமாகும். இம்மொழியினை வட அரபு மொழி, தென் அரபு மொழி என இருவகைப்படுத்துவர். தென் அரபு மொழி, ஏமன் என்னும் தென் அரபு நாட்டின் பழமையான பேச்சுமொழியாகக் கி.பி. 600–ஆம் ஆண்டு வரை விளங்கியது. அப்பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சில ஆயிரம் கல்வெட்டுகளால் இன்றும் அம்மொழி இருந்து வருகிறது. அக்கல்வெட்டுகளில் சில கி.மு. 7–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழமையுடையனவாகும். வட அரபு மொழியில் இசுலாமியப் புனித மறை நூலான குர்ஆன் இயற்றப்பட்டது. இசுலாமிய சமயம், தான் வெற்றி கொண்ட, வேறுமொழிகள் பேசும் பிற நாடுகளில் செய்தது போல, அராபியத் தீபகற்பத்தின் தென் பகுதியிலிருந்த அரபு மொழிக்கு மாற்றாக வட அரபு மொழியினைப் புகுத்தியது. இதனால் இசுலாமிய சமயமொழியாகவும் குர்–ஆன் மொழியாகவும் அமைந்து, வட அரபு மொழி ஒப்பற்று உயர்ந்து விளங்கும் நிலை எய்தியது.
இம்மொழி இலக்கண ஆசிரியர்கள், இச்சொற்களைப் பெயர், வினை, இடை என்னும் மூவகையுள் அடக்குவர். பெயர் உரி, வினை உரி ஆகிய சொற்கள் பெயர்ச் சொற்களில் அடங்கின. பெயராக, வினையாக ஆக்கப்பெற்ற சொற்கள் எல்லாம், மூன்று மெய்ம் மயங்கும் வேர்ச் சொற்கலிலிருந்து உருவாயின. அவ்வேர்ச்சொல் படர்க்கை ஆண்பால் ஒருமைச் சொற்களாகும். குறிப்பிட்ட அமைப்பில் வேர்ச் சொற்களைப் பயன்படுத்துவதன் வாயிலாக, அச்சொற்களின் மூலப்பொருளோடு மாறுபடாத பொருள் மாற்றங்களைச் செய்யலாம். முன்னொட்டு, பின்னொட்டு முதலியவற்றைச் சேர்ப்பதனால் ஒவ்வொரு சொல்லினின்றும் ஏறத்தாழ எழுபது சொற்களை உருவாக்கக்கூடும்.
நபேத்திய எழுத்து வடிவிலிருந்து உருவாகிய அரபு மொழி எழுத்தின் வரிவடிவம் அழகுமிக்கது. அது இரண்டு வகையாக அமைந்துள்ளது. ஒன்று, எழுத்துகளை ஒன்றோடொன்று இணைத்து எழுதும் நாசுகி (Naskhi) என்னும் அரபு மொழி வடிவம். இது தகவல் தொடர்பான கடிதம் முதலியன எழுதுதல், நூல் எழுதுதல் போன்றவற்றிற்குப் பயன்பட்டது. மற்றொன்று, அல்குபாவில் உருவாகிய குபிக் (Kufic) என்னும் கோணவடிவில் எழுதப்படும் அழகுமிக்க அரபு மொழி வடிவமாகும். இது முற்காலத்தில் குர்–ஆனின் விலையுயர்ந்த படிகளை உருவாக்குங்கால் பயன்படுத்தப்பட்டது; இசுலாமியக் கட்டிடக்கலை அமைப்பில் அலங்கார எழுத்துகளைப் பொறிப்பதற்குப் பயன்படுகிறது.
28 எழுத்துகளைக் கொண்ட இம்மொழி வலப் பக்கத்திலிருந்து இடப் பக்கமாக எழுதப்படுகிறது. இம்மொழியிலுள்ள எழுத்துகள் அனைத்தும் மெய்யெழுத்துகளே. அவற்றின் மேலும் கீழும் சிறிய குறியீடுகளை அமைத்து உயிரெழுத்து உருவாக்கப்படுகிறது. உயர்தனிச் செம்மைநிலையடைந்த (Classical) அரபு மொழியின் எழுத்து வழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் நிரம்ப வேறுபாடுண்டு.
குர்–ஆன் அரபு மொழியில் தோன்றிய முதல் படைப்பாகும். அம்மொழியில் பின்னர்த் தோன்றிய இலக்கியங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இது திகழ்கிறது. அல்லா என்னும் சொல்லைப் போலவே திருமறையாகிய குர்–ஆனும் இசுலாமிய மக்களுக்குப் புனிதம் மிக்கதாக அமைந்துள்ளது. குர்–ஆனின் சந்த இனிமை மிக்க அழகிய உரைநடை, அரபு மொழியில் ஓர் உயர்ந்த தரத்தை அமைத்துள்ளது. பழமை பேணும் அரபு எழுத்தாளர்கள் இன்றும் அதனைப் பின்பற்றி எழுத முற்படுகின்றனர். அரபு மொழி பேசும் மக்களிடையே வழங்கும் கிளை மொழிகள் பலவும் தனித்தனி மொழியாக மாறிவிடாமல் இந்நூல் காத்துவருகிறது.
மொராக்கோ நாட்டில் பேசும் அரபு மொழியினை ஈராக்கு நாட்டினர் முற்றிலுமாகப் பொருளுணர இயலாது. ஆனால் அங்கெல்லாம் குர்–ஆன் அடிப்படையிலான செவ்விய எழுத்து மொழியினைக் கையாளுவதால் எழுத்து மொழியினை இருநாட்டவரும் எளிதாகப் படித்துணர முடியும்.
எல்லா இசுலாமிய நாடுகளிலும், அங்குள்ள மக்களின் தாய்மொழி எதுவாயினும், சமயமொழியாக அரபு மொழி விளங்குகிறது. சமய மொழியாக அமையுங்கால் அது பெரும்பாலும் கல்வியறிவு மிக்கவர்களின் மொழியாகவே உள்ளது.
தொடக்கக் காலத்தில் அராபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் பேசப் பெற்ற ஓர் எளிய கிளைமொழியாக இருந்த அரபு மொழி, இன்று அராபியத்தீபகற்பம் முழுவதுமேயன்றிச் சோர்டான், இலெபனாள், சிரியா, ஈராக்கு, எகிப்து, இலிபியா, துனீசியா அல்சீரியா, மொராக்கோ, சூடானின் சில பகுதிகள், நைசர் நதிப் பகுதிகள், செனகல், மாரிடானா ஆகிய நாடுகளிலும் பிறநாட்டுப் பகுதிகளிலும் 10 கோடிக்கும் மிகுதியான மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது. இம்மொழியின் வியக்கத்தக்க வளர்ச்சிக்கு, இசுலாமிய சமயத்தின் வெற்றிகள் அடிப்படையாக அமைந்தன. இப்பொழுது இசுலாமிய நாடுகளில் பரவி வரும் மேலைநாட்டுப் பண்பாடும், அவ்வந்நாடுகளின் தேசிய உணர்வும், அரபு மொழி பரவுவதற்கு ஓரளவு தடையாக உள்ளன என்பது கூறப்படுகிறது. ஒரு இசுலாமியர் அல்லாவை அணுகுவதற்குரிய ஒரே மொழியாக அரபு மொழி உள்ளது என்பது அச்சமய மக்களின் அழுத்தமான எண்ணமாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 759)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8dued9fj/
தமிழ்“அரபு மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8dued9fj/APA
Oliyon Research. (2026). அரபு மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8dued9fj/MLA
"அரபு மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8dued9fj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment