அரிஅரரும் புக்கரும்
ariararum pukkarum
விசயநகரப் பேரரசுக்கு அடிகோலிய அண்ணனும் தம்பியுமாவர், இவர்கள் கி.பி.
விசயநகரப் பேரரசுக்கு அடிகோலிய அண்ணனும் தம்பியுமாவர், இவர்கள் கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசோச்சியவர்கள், இவர்கள் குருபா சாதியினராவார்கள். இருவரும் ஆழ்ந்த இந்து சமயப் பற்றுக் கொண்டவர்கள். தொடக்கத்தில் இவர்கள் வாரங்கல் அரசனின் நிதித்துறை அலுவலர்களாகப் பணியாற்றியவர்கள். தில்லி சுல்தானின் படைத் தளபதியான மாலிக்காபூர் வாரங்கலின் மீது படையெடுத்துச் சூறையாடி அதனை அழித்தார். பதவியிழந்த அரிஅரரும் புக்கரும் ஆனைகுண்டி எனப்படும் கம்பிலி நகரையாண்ட பிட்டிதேவராயரின் ஊழியர்களாகச் சேர்ந்தனர். முசுலிம்கள் கொள்ளைக் கூட்டத்தாரைப் போன்று செயற்பட்டதால் வெறுப்புற்ற இவர்கள், தம் தாய்நாட்டையும் சமயத்தையும் காக்கும் காவலராயினர். ஆனைகுண்டி வீழ்ச்சியுற்றபோது இவர்கள் தில்லிச்சுல்தானின் சிறைக் கைதிகளாகத் தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இவர்கள் முசுலிம்களாக மதம் மாற்றப் பெற்றனர். அதன் விளைவாக இருவரும் சுல்தானின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உகந்தவர்களாயினர். கம்பிலியின் ஆளுநராயிருந்தவரால் அப்பகுதியில் வாழ்ந்த இந்துக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரிஅரரும் புக்கரும் அவர்களைக் கட்டுப்படுத்த, தக்காணத்திற்கு அனுப்பப் பெற்றனர். அங்கு இவர்கள் இந்துக்களின் கலகத்தை அடக்கி நிலையான ஆட்சிக்கு வகை செய்தார்கள். பின்னர்த் தில்லிச்சுல்தான் ஒய்சல அரசரான மூன்றாம் வீரவல்லாளர் மீது போர் தொடுத்தார். இந்துவாயிருந்து மதம் மாறியதால் வீரவல்லாளரைத் தோற்கடிக்க இயலவில்லை என்பதை உணர்ந்த அரிஅரரும் புக்கரும் இசுலாம் சமயத்தை விட்டொழித்து மீண்டும் இந்துக்கள் ஆயினர். முகலிம் வரலாற்றசிரியர்களின் கருத்தும், இந்து மரபு வழிச் செய்திகளும் இக்கூற்றை ஏற்றுக்கொள்கின்றன.
இந்து சமயம் வந்த அரிஅரரும் புக்கரும் தில்லிச் சுல்தானிடம் அடிமையாகப் பணிபுரிவதையும் துறந்துவிட்டுத் தனியானதொரு சுதந்தர இந்து அரசை நிலை நாட்டமுயன்றனர். அவ்வாறு இவர்கள் நிலை நாட்டிய அரசே விசயநகரப் பேரரசாக உருமாறியது.
இப்பகுதியில் நிலவிய இசுலாம் சமயத்திற்கெதிரான இயக்கம் இம்முயற்சிக்கு உறுதுணையாயிற்று. மேலும், மாதவ வித்தியாரணியர் என்னும் ஆசாரியார் இவர்களைச் சமயம் மாற்றி இத்துக்களாக்கினார். சமயம் மாறி வந்தவுடன் அரிஅரரும் புக்கரும் ஆனை குண்டிக்கு எதிர்ப்புறத்தில், துங்கபத்திரை ஆற்றின் வலக்கரையில் புதியதொரு நகரத்தை அமைத்தனர். அதனையே ‘வெற்றித் திருநகர்’ என்று பொருள்படும் விசயநகரம் என்றழைத்தனர். தமக்கு நல்வழி காட்டிய வித்தியாரணியரின் நினைவாக அந்நகர் வித்தியாரணியநகர் என்று பெயர் சூட்டப்பட்டு, காலப் போக்கில் அப்பெயரே மருவி ‘விசயநகரம்’ என ஆயிற்று என்றும் கூறுவர்.
அரிஅரர் கி.பி. 1336–ஆம் ஆண்டு ஏப்பிரல் 18–ஆம் நாள் இங்கு எழுந்தருளியிருக்கும் விருபாட்சர் முன்னிலையில், முடிசூட்டிக் கொண்டார். இவரை முதலாம் அரிஅரர் என்று அழைப்பர். (விருபாட்சர் கோயில் விசய நகரின் முதன்மையான சிவத்தலமாகும். இன்றும் இக்கோயிலைக் காணலாம்). கிருட்டிணா ஆற்றிற்குத் தென்பாலிருந்த அனைத்து நிலப் பகுதிகளும் விருபாட்சருக்குச் சொந்தமானதே என்று அரிஅரர் கூறினார். அரிஅரர்–புக்கரின் தந்தையார் சங்கமர் எனப்பட்டதால் இவர்களால் நிலைநாட்டப் பெற்ற மரபினைச் ‘சங்கமர் மரபு’ என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
விசயநகரப் பேரரசின் முதல் அரசர் முதலாம் அரிஅரரே யாவார். இவர் கி.பி. 1336 முதல் கி.பி. 1357 வரை அரசாண்டார்.
அரிஅரர் பேரரசை நிறுவியதோடன்றி நல்லாட்சிக்கான நிருவாக அமைப்பையும் திருத்தி அமைத்தார். பேரரசு தலம், நாடு, சீமை என்ற பிரிவுகளாகப் பகுக்கப்பட்டது. காடுகளாயிருந்த கொடை மாவட்டங்கள் உழுநிலங்களாயின. ஆனைக்குண்டி, பாதாமி, உதயகிரி, குத்தி போன்ற ஊர்களிலிருந்த கோட்டைகளை இவர் வலுவாக்கினார்.
அரிஅரசின் ஆட்சிக் காலத்தில் இவர் தம்பியான புக்கர் ஒய்சல நாட்டின் அரசரான மூன்றாம் வீரவல்லாளனைக் கி.பி. 1340–இல் தோற்கடித்துப் பெனு கொண்டாவைக் கைப்பற்றினார். அரிஅரரின் மற்றொரு தம்பியான மாரப்பர் வனவாசியை ஆண்ட கதம்ப அரசரைத் தோற்கடித்து அவருடைய நாட்டையும் விசயநகரத்துடன் இணைத்தார். அரிஅரர் தொண்டை மண்டலத்தை ஆண்ட சம்புவராயரை மாபார் சுல்தானிடமிருந்து மீட்டு அவரை மீண்டும் அரசராக்கினார்.
இவருக்குப் பின்னர் விசயநகரத்தின் அரசராக இவருடைய தம்பி புக்கர் முடிசூட்டிக் கொண்டார். இவரை வரவாற்றில் முதலாம் புக்கர் என்பர். இவர் கி.பி. 1357 முதல் கி.பி. 1377 வரை அரசாண்டார். இவர் சம்புவராயர் மீது படையெடுத்து அவரை வென்று விசயநகரப் பேரரசின் பரப்பைத் தென் பெண்ணை, கொள்ளிடம் ஆறுகள் வரை விரிவாக்கினார்.
புக்கர் பாமினி சுல்தானுடன் மூன்று போர்கள் செய்தார். மூன்றிலும் தோற்றுப்போனார். கிருட்டிணா ஆறு விசயநகர, பாமினி அரசுகளின் எல்லையாயிற்று, இரெட்டி அரசு மீது படைபெடுத்து இவர் இராசகொண்டா, கொண்டவீடு போன்ற பகுதிகளை விசயநகரத்துடன் இணைத்துக் கொண்டார்.
புக்கர் ஒரிசாவையும் வெற்றி கண்டார். பின்னர் மகாராசாதிராசர் என்றும், இராசபரமேசுவரர் என்றும் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டார். வேதங்களைக் கற்றுத் தருமத்தை ஆதரித்ததால் இவரை ‘வேதமார்க்கப் பிரதிட்டாபகர்’ என்று அழைத்தனர். தலைநகரை வலுவாக்கி விரிவாக்கினார். தெலுங்கு மொழிக் கவிஞர்களைக் காத்தார். சீன நாட்டிற்குத் தூதுக் குழுவொன்றையும் அனுப்பிய புக்கர், வெளிநாட்டு உறவிலும் ஆர்வம் காட்டினார்.
கோவாத் துறைமுகம், பெல்காம் கோட்டை, துளுவர் நாடு போன்றவை விசயநகருக்குக் கட்டுப்பட்டிருந்தன. முசுலிம் வரலாற்று வல்லுநர்கள் இவருடைய ஆட்சியைப் பெரிதும் பாராட்டினர்.
தென்னகத்தில் இந்து சமயத்தை இசுலாம் சமயத் தாக்குதல்களிலிருந்து காத்துப் பெயரும் புகழும் பெற்றவர்கள் அரிஅரரும் புக்கரும் ஆவர் என்றால் அது மிகையாகாது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 766)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8d9cuyc8/
தமிழ்“அரிஅரரும் புக்கரும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8d9cuyc8/APA
Oliyon Research. (2026). அரிஅரரும் புக்கரும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8d9cuyc8/MLA
"அரிஅரரும் புக்கரும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8d9cuyc8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment