சிவனும் உமையும் அமர்ந்த நிலையிலுள்ள இறைவுருவம். உமாமகேசுவரரின் உருவ அமைப்பு விட்டுணுதருமோத்தரம் (Vishnudharmottaram), உரூபமந்தனம் (Rupamandanam) ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளது. விட்டுணு தருமோத்தரத்தில் சிவன் இரண்டு கைகளை உடையவராகவும் சடை மகுடத்தையும் சடையில் பிறை நிலவையும் கொண்டு, இடக்கையால் உமையின் இடத்தோளை அணைத்தவாறு இருவரும் அமர்ந்த நிலையில் இருப்பர் எனக் கூறப்பட்டுள்ளது. தம் வலக்கையில் ‘நீலோத்பல’ மலரை வைத்திருப்பார். உமையின் வலக்கை சிவனின் வலத் தோளை அணைத்தவாறு இருக்கும். இடக்கையில் ஆடி ஒன்றை வைத்திருப்பார். உரூபமந்தனம் என்னும் நூல் நான்கு கைகளுடைய உமாமகேசுவரரைக் குறிப்பிடுகிறது. சிவன் தம் வலக்கைகளுள் ஒன்றில் சூலமும் மற்றொன்றில் மாதுளையையும் வைத்திருப்பார். இடக்கைகளுள் ஒன்று உமையின் தோளைத் தழுவியவாறு இருக்கும். பிறிதொன்று பாம்பு ஒன்றைப் பிடித்திருக்கும். உமாமகேசுவரரைச் சுற்றி தந்தி, கணேசர், முருகன், ஆடிய நிலையில் உள்ள பிருங்கி முனிவர் ஆகியோர் காணப்படுவர். சிறப்புமிக்க உமாமகேசுவரர் சிற்பங்கள் அய்கொளே, அவேரி, திருவனந்தபுரம், பகாலி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.