அஞ்ஞவதைப்பரணி
aññavataipparaṇi
ஆயிரம் யானைகளை அமரிடை வென்ற வீரன்மீது பாடப்படுவது பரணி என்னும் இலக்கியமாகும்.
ஆயிரம் யானைகளை அமரிடை வென்ற வீரன்மீது பாடப்படுவது பரணி என்னும் இலக்கியமாகும். மோகம், அஞ்ஞானம் முதலியவற்றை யானையாக உருவகப்படுத்தி, அவற்றை அழித்து ஆன்ம வெற்றிகொண்ட பெருவீரர்மீது பாடப்படுவதாகவும் இப்பரணி இலக்கியம் வளர்ச்சியுற்றது. இவ்வகையிலமைந்த பரணிகளுள் ஒன்று அஞ்ஞவதைப்பரணி.
அஞ்ஞவதைப்பரணி வேதாந்தக் கருத்துகள் நிறைந்தது. இந்நுல் நடுநாட்டில் உள்ள வீரமாநகரில் பிறந்த தத்துவராய சுவாமிகள் என்பவரால் இயற்றப்பட்டது. தம்முடைய அஞ்ஞானத்தை அழித்தருளிய குருவின் மீது பாடப்பட்டது இப்பரணி. இந்நூலாசிரியர் காலம் 15–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அஞ்ஞானத்தை அரசனாகவும், அகங்காரம் முதலியவற்றை அவன் சேனைகளாகவும், ஞானத்தை இறைவனாகவும் உருவகஞ்செய்து, ஞானமாகிய இறைவன் அஞ்ஞானமாகிய அரசனை அழித்தமை பற்றிப் பாடப்பட்டதே அஞ்ஞவதைப் பரணி, இப்பரணிக்கு ஞானப்பரணி என்ற பெயரும் உண்டு. இது தத்துவக் காட்சி என்றும் சொல்லப்படும். இப்பரணி 493 தாழிசைகளைக் கொண்டது; வீறுமிக்க நடையினை உடையது.
கனவுலகிலுள்ள மாயாபுரியின் அரசன் அஞ்ஞன்; நன்றி மறந்த குருடன்; பிறர் குற்றம் காண்பதில் வல்லவன்; அழியும் உடல், மயக்கந்தரும் மகளிர் சொற்கள் ஆகியவற்றை மெய்யென்று நம்பி, ஞானிகளின் உரைகளைப் பொய் என்பான்; இளமை வளமைகளைப் பெரிதாக மதிப்பான். துன்மதி என்பவன் இவனுக்கு அமைச்சன். உலக மக்கள் துன்பங் கண்டு இரங்கி, இறைவன், பேரருளே வடிவாக மண்ணில் தோன்றி மெய்யடியார் சூழ வீற்றிருந்தான். ஒற்றர் இறைவன் வந்திருப்பதை அஞ்ஞனுக்கு அறிவுறுத்தினர், அது கேட்ட அஞ்ஞன் இறைவன் பிறந்துள்ளாய் என்று சொன்னவர், கேட்டவர். அனைவரையும் சிறையில் அடைத்தான். காமன், கோபன், ஆசை, அகங்காரன் என்னும் படைத்தலைவர் வீரம் பேசி இறைவனை அழிப்போம் என்றனர். முனிவர்கள் இறைவனிடம் இதனைக் கூற, இறைவன் ஒரு வினோதரை அனுப்பி அஞ்ஞனை அழித்தான் என்பது இந்நூற் கருத்தாகும். வீ.பா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 202)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8849c6zk/
தமிழ்“அஞ்ஞவதைப்பரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8849c6zk/APA
Oliyon Research. (2026). அஞ்ஞவதைப்பரணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8849c6zk/MLA
"அஞ்ஞவதைப்பரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/8849c6zk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment