இந்தியாவின் தலைசிறந்த அரசியல் அறிஞர்; கல்வியாளர்; வழக்கறிஞர்; சொல் வேந்தர். இவர் வடார்க்காடு மாவட்டம் வந்தவாசியில் சி.ஆர். பட்டாபிராம அய்யருக்கும் சீதாலட்சுமி அம்மாளுக்கும் ஒரே மகனாக 12—11—1879–இல் பிறந்தார். இவர் சென்னை வெசிலி கல்லூரிப் பள்ளியில் பயின்றபோது, ‘பீட்டர் கேட்டர்’ (Peter Cater) விருதும், மாநிலக் கல்லூரியில் பயின்றபோது தங்கப் பதக்கமும் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று, வழக்குரைஞராகப் (1903–இல்) பதிவு செய்தார். இராமசாமி அய்யர் தொடக்கத்திலேயே பல பெயர் பெற்ற வழக்குகளை ஏற்று நடத்திப் புகழ் பெற்றார். பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் சார்பாக வாதாடி அவர்களுக்கு ஊக்கமளித்தார். ஆசு (Ashe) துரை கொலை வழக்கில் வாஞ்சிநாதனின் சார்பாக இவர் வழக்குரைத்தமை அவற்றுள் ஒன்று. இராமசாமி அய்யர், சி.பி. இராமசாமி அய்யர் இந்திய சுதந்திர இயக்கங்களில் பங்கேற்றுத் தொண்டாற்றினார். அனைத்திந்தியத் தன்னாட்சிக் குழுவிலும் (All India Home) Rule League) இந்தியத் தேசிய காங்கிரசிலும் செயலராகப் பணியாற்றினார். இவர் பல்வேறு துறைப் பதவிகளை ஏற்று அருஞ்செயல்கள் பலவற்றைச் செய்துள்ளார். சென்னை மாநகராட்சி, சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு (1918), சட்டமன்ற மேலவை (1920), இந்திய நாடாளுமன்றம், இந்திய மாநிலங்களவை போன்றவற்றின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய மாநிலங்களவையின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். சென்னை மாநில அரசு வழக்கறிஞர் தலைவராகப் (Advocate–General) பணிபுரிந்த காலத்தில் (1921–23), இவர் மாநகராட்சிச் சட்டம், சென்னை தல ஆட்சிக் குழுக்களின் சட்டம் போன்றவை குறித்து நுணுக்கமான கருத்துகளைக் கூறி, அவை நிறைவேற வழி செய்தார். இவர் மாணவர் சாரணர் இயக்கத்தின் மாநில ஆணையராகப் பதவியேற்று, அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தார். இவர் சென்னை அரசின் நிருவாகக் குழுவில் சட்ட உறுப்பினராகப் பொறுப்பேற்று (1923–1928), சட்டம், காவல், நீர்ப்பாசனம், துறைமுகங்கள், மின்சக்தி போன்ற துறைகளைக் கவனித்தார். அப்போது மேட்டூர், பைக்காரா, பவானி நீர்த்தேக்கங்களும், கொச்சி, தூத்துக்குடி, விசாகப்பட்டினம் போன்ற துறைமுகத் திட்டங்களும் தொடங்கப்பட்டன. கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளைக் காவிரியுடன் இணைக்கும் திட்டத்தினை வகுத்து இந்திய அரசிடம் ஒப்படைத்தார். இதனால் இவர் தென்னிந்தியாவின் ‘நீர்மின் திட்டத் தந்தை’ என்று அழைக்கப்பட்டார். இவர் இந்திய அரசின் சட்ட உறுப்பினராகவும், வாணிகம், தொழில், இருப்புப்பாதை ஆகிய துறைகளின் பொறுப்பாளராகவும் (1932) பணியாற்றினார். காசுமீரத்திற்கு அரசியல் அமைப்புத் திட்டத்தை இவர் 1934–இல் தொகுத்துக் கொடுத்தார். முதல் உலகப் போருக்குப்பின் செனிவாவில் நடைபெற்ற அனைத்து நாட்டுச் சங்கக் கூட்டத்திற்கு இந்திய உறுப்பினராகச் சென்ற இவர், முதலாம் (1931), மூன்றாம் (1932) வட்டமேசை மாநாடுகளில் உறுப்பினராகக் கலந்து கொண்டார். மேலும், இவர் இந்திய அரசின் அரசப் பேராளரின் ஆட்சிக் குழுவில் உறுப்பினராகி, செய்தி-வானொலித் துறையின் பொறுப்பினை 1942–இல் ஏற்றார். ஆனால், சிறையில் மகாத்மா காந்தியடிகளுக்குச் செய்தித்தாள்களை வழங்கக் கூடாது என்னும் அரசு ஆணையை எதிர்க்கும் வகையில் இவர் பொறுப்பேற்ற 17–ஆம் நாளில் அப்பதவியினின்று விலகினார். இராமசாமி அய்யரின் பணிகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கன இவர் திருவாங்கூர் மாநிலத்தில் ஆற்றியவையாகும். இவர் திருவாங்கூர்த் திவானாகப் பணிபுரிந்த காலத்தில் (1936–1947) பல ஆக்கப் பணிகளையும் சமுதாய முன்னேற்றத் திட்டங்களையும் வகுத்துள்ளார். இவர் பேச்சிப்பாறை நீர்மின் திட்டம், பெரியாறு வனவிலங்கு சரணாலயம். பல தொழிற்சாலைகள் அமைய வழி செய்தார். திருவாங்கூர்ப் பல்கலைக் கழகம் இவரது ஆட்சிக் காலத்தில் (1939) தொடங்கப்பட்டது. இவர் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கச் செய்தார்; இந்தியாவிலேயே முதன் முதல் சாலைப் போக்குவரத்தை நாட்டுடைமையாக்கினார்; தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவுச் சட்டம் இயற்றித் தீண்டாமை ஒழிய வகை செய்தார். முதன் முதலாகத் தூக்குத் தண்டனை ஒழித்தவரும் திருவாங்கூர் அரசில் பெண்ணொருத்தியை (அன்னா சாண்டி) மாவட்ட நீதிபதியாக அமர்த்தியவரும் இவரே. இராமசாமி அய்யரே திருவாங்கூர்ப் பல்கலைக் கழகத்தின் முதல் (1939–1947) துணைவேந்தர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும், காசி இந்துப் பல்கலைக்கழகத்திற்கும் துணை வேந்தராக ஒரே வேளையில் (1935) இந்தியாவிலேயே முதன் முறையாக அமர்த்தப்பட்ட பெருமை இவரையே சாரும். இராமசாமி அய்யர் பல சமூக நல அமைப்புகளையும் கல்வி நிறுவனங்களையும் நிறுவி அவற்றின் வளர்ச்சியில் ஈடுபட்டார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையிலும், மயிலாப்பூர்ச் சமசுகிருதக் கல்வி அறக்கட்டளையிலும் அறங்காவலராகப் பணியாற்றினார். இவர் சென்னை இளைஞர் சங்கம் (YMIA), சென்னை இசைக் கழகம் (Madras Music Academy) போன்ற சங்கங்கள் தோன்றுவதற்கு உறுதுணையாக இருந்தார். காஞ்சிபுரம் சோமசுந்தர கன்னியா வித்தியாலய மகளிர் உயர்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி போன்றவை இவர்தம் சீரிய முயற்சியால் தோன்றியவை. மேலும், இவர் இந்தியன் வங்கியை (Indian Bank) நிறுவி அதன் இயக்குநருள் ஒருவராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தாம் தொடர்பு கொண்டுள்ள நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் பொருளுதவி செய்தார். காஞ்சிபுரம் சாமதேவ பாடசாலை அறக்கட்டளை (உரூ. 5 இலட்சம்), திருவாங்கூர்ப் பல்கலைக்கழகம் (உரூ. 50 ஆயிரம்), சென்னைப் பல்கலைக் கழகம் (உரூ. 25 ஆயிரம்), இந்தியவியல் ஆய்வு (உரூ. 25 ஆயிரம்) ஆகியன அவற்றுள் குறிப்பிடத்தக்கன. இராமசாமி அய்யர் உலக நாடுகளின் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் பேரவைக் கூட்டங்களிலும் பங்கேற்று, இந்துத் தத்துவம், இந்தியப் பண்பாடு பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றிப் பல பாராட்டுகள் பெற்றுள்ளார். இவரது திறமையைப் பாராட்டி இவருக்குத் திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகம் எல்.எல்.டி. பட்டத்தையும், அண்ணாமலை, காசி இந்து, சென்னை, மைசூர்ப் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களையும் வழங்கியுள்ளன. நுண்மாண் நுழைபுலமும் அருஞ்செயலாற்றலும் நிறைந்த இராமசாமி அய்யர், ஆக்சுபோர்டு, இலண்டன் போன்ற இடங்களில் உரையாற்றச் சென்றிருந்த போது, இலண்டன் தேசிய முற்போக்குச் சங்கத்தில் (National Liberal Club) 26.9.1966-இல் உயிர் துறந்தார்.