இறந்தவர் வரிச் சட்டம்
iṟantavar varic caṭṭam
இயற்கை எய்திய ஒருவர் சொத்துகளில் ஒரு பகுதியை வரியாக வசூலிப்பது, மேல்நாடுகளில் நடைமுறையில் இருந்து வரும் வழக்கமாகும்.
இயற்கை எய்திய ஒருவர் சொத்துகளில் ஒரு பகுதியை வரியாக வசூலிப்பது, மேல்நாடுகளில் நடைமுறையில் இருந்து வரும் வழக்கமாகும். இந்தியாவில் இறந்தவர் சொத்து வரிச்சட்டம் (Estate Duty Act) 6.10.1953–ஆம் நாள்முதல் நடைமுறையில் உள்ளது. பெரிய அளவில் உள்ள நிலச் சொத்துகளின் மதிப்பைக் குறைப்பதன் மூலம், அரசாங்கம் வருவாயைப் பெருக்கி சமூகப் பொது உடைமைப் பாணியை நடைமுறையில் கொண்டு வருவதே இதன் நோக்கமெனக் கூறலாம். இச்சட்டம், 15.10.1953க்குப் பிறகு இயற்கை எய்திய அனைவருக்கும் ஏற்புடையதாகும்.
இறந்த நாளன்று ஒருவர் வைத்திருந்த சொத்துகளின் அடிப்படையில் இறப்பு வரி விதிக்கப்படுகிறது. இதை மத்திய அரசு விதிக்கிறது. பொதுவாக இந்தியாவில் குடியிருந்து இயற்கை எய்திய ஒருவருடைய அனைத்துச் சொத்துகளின் (வெளிநாட்டிலுள்ள அசையாச் சொத்துகள் நீங்கலாக) மீதும், வெளிநாட்டில் குடியிருந்து இயற்கை எய்திய ஒருவருக்கு இந்தியாவிலுள்ள அனைத்துச் சொத்துகளின் மீதும் இறந்தவர் சொத்துவரி-இறப்புவரி விதிக்கப்படுகிறது. வெளிநாட்டிலுள்ள அசையாச் சொத்துகளைப் பொறுத்த வரையில் இந்தியாவில் இவ்வரி விதிக்கப்பட மாட்டாது. சொத்து என்பது இறக்கும் தறுவாயில் அவர் பெயரில் உள்ள சொத்துகளுடன் அவர் தம் வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை பெற்ற பொறுப்பாட்சிச் (Trust) சொத்துகளையும், இறப்பதற்கு முன் இரண்டு ஆண்டுகளுக்குள் கொடுக்கப்பட்ட நன்கொடைச் சொத்துகளையும் மற்றும் சில இனங்களையும் குறிக்கும். இறப்பை எதிர்பார்த்து இவ்வரியைத் தவிர்க்கும் நோக்கத்துடன் சொத்துகள் மாற்றப்படுவதைத் தவிர்க்க இத்தகைய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இச்சட்டத்தில் ‘சொத்து’ என்பதற்குரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள போதும், அதன் தன்மையைத் தெளிவாகக் கூற இயலாது. பொதுவாகக் கீழ்க்காணும் இனங்களை இறப்புவரிச் சட்டத்தைப் பொறுத்த மட்டில் சொத்துகளாகக் கருதலாம்.
1. சாதாரணமாக அனைவராலும் உணரப்படும் அசையும், அசையாச் சொத்துகள், நிலம், கட்டடம், வாணிகப் பொருள்கள், நல்லெண்ணம் (Good Will), பிற வாணிகப் பொருள்கள், கையில் உள்ள தொகை, வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைகள், நிறுவனப் பங்குத் தொகைகள், அரசாங்கப் பத்திரங்கள், தளவாடங்கள், நகைகள் போன்றவை. 2. அசையா, அசையும் சொத்துகளின் மீது ஒருவருக்குரிய உரிமை: எடுத்துக்காட்டாக, பெந்தகக் கடன், இந்துக் குடும்பத்தின் சொத்தில் அக்குடும்பத்தில் ஒருவருக்குள்ள பங்கு உரிமை ஆகியவற்றைக் கூறலாம். 3. மேலே கூறிய உரிமையை விற்பதால் கிடைக்கும் தொகை, அத்தொகை ஈடுபடுத்தப்படும் வைப்புத் தொகைகள் போன்றவை. 4. ஓர் உருவத்திலிருந்து மற்றோர் உருவத்திற்கு மாற்றப்படும் சொத்துகள்: எடுத்துக்காட்டாக வீட்டினை விற்றுப் போடப்படும் வங்கி வைப்புத் தொகைகள். 5. இறக்கும் தறுவாயில் ஒருவருக்கு வரவேண்டிய கடன் தொகைகளின் மதிப்பு. 6. காப்பீட்டுத் தொகை, ஆண்டுக் காப்பீட்டுத் தொகை. 7. உடனடிப்பணமாக மதிப்பிடக்கூடிய இதர அனைத்து விதமான உரிமைகள்.
மேலே கூறப்பட்ட விளக்கங்கள் ‘சொத்து’ என்ற சொல்லின் தன்மையை விளக்குவதற்காகக் கூறப்பட்டனவே தவிர இவற்றை முழுமையான விளக்கமாக எண்ணக் கூடாது. மேலும், மேலே கூறப்பட்டது போன்று அமைந்துள்ள பிற பொருள்களையும் சொத்துகளாகக் கருத வேண்டும்.
மேலே கூறப்பட்டது போல், ஒருவருக்கு உரிமையான சொத்துகளைத் தவிர வேறு சில சொத்துகளும் மரணவரிச் சட்டத்தைப் பொறுத்தமட்டில் அவருடைய சொத்தாகக் கருதப்பட்டு (அச்சொத்து அவருக்கு உரிமை உடையதாக இல்லாத போதிலும்) அதன் மீது இவ்வரி விதிக்கப்படும். இறப்பை எதிர்பார்த்துச் சொத்துகள் பிரிக்கப்பட்டு மரணவரி குறைக்கப்படுவதைத் தவிர்க்க இத்தகைய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய பிரிவுகளைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம். 1. இறந்தவர், மாற்றும் உரிமை பெற்ற சொத்துகள். 2. இறக்கும் வரை இறந்தவர் உரிமை பெற்ற சொத்துகள். 3. இறப்பை எதிர்பார்த்து மாற்றப்படும் சொத்துகள். 4.இறந்த நாளுக்கு முன்னால் ஆறுமாதங்களுக்குட்பட்டு அறச்செயல்களுக்காகக் கொடுக்கப்பட்ட நன்கொடை. 5. இறந்த தேதிக்கு முன்னால் இரண்டு ஆண்டுகளுக்குட்பட்டு வழங்கப்பட்ட பிற நன்கொடைகள். 6. உண்மையாக இல்லாமல் சில உரிமைகளைத் தம் பொறுப்பில் வைத்துக் கொண்டு வழங்கப்படும் நன்கொடை (இத்தகைய நன்கொடைகளுக்கு மேற்கூறிய காலவரையறை பொருந்தாது). 7. இறக்கும் வரை இறந்தவர் உரிமை பெற்ற சொத்துகள். மேலே கூறப்பட்ட 4,5,6 விதிகளின் கீழ் நன்கொடையாக வழங்கப்படும்போது சொத்தின் மதிப்பு. 8. இருவர் மீது உள்ள சொத்து: ஒருவர் மரணமடைந்ததன் காரணமாசு மற்றொருவருக்கு ‘எச்ச உரிமை’ முறையில் வந்தடையும்போது அத்தகைய சொத்தின் மதிப்பு. 9. தமக்காகவோ மற்றவர்களுக்காகவோ எடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகைக்காகச் செலுத்தப்பட்ட தொகை. 10. தாமாகவோ மற்றவர் மூலமாகவோ வாங்கப்பட்ட பணத்தின் (Annuity) உரிமை மதிப்பு. 11. தம் நிருவாகத்தின் கீழ் உள்ள நிறுவனத்துக்குச் சொத்து மாற்றப்பட்டால் அந்த நிறுவனத்தின் சொத்துகளில் அவருக்குரிய பங்கு.
மேலே கூறப்பட்ட பல்வேறு பிரிவுகளில் 4,5,6 பிரிவுகளே பெரும்பாலும் பயன்படுபவையாகும்.
நீக்கம் செய்யக் கூடிய பரிமாற்றங்கள் (நன்கொடை, உடன்படிக்கைகள் போன்றவை) மூலமாக ஒருவருக்குள்ள உரிமையும் இறப்புவரிச் சட்டத்தின் கீழ்ச் சொத்தாகக் கருதப்படும். அந்த உரிமையை அவர் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் இவ்விதி பொருந்தும். மேலும், ஓர் இந்துக் குடும்பத்தில் அதன் உறுப்பினருக்குள்ள பங்கின் மதிப்பு, இறப்பினால் ஒருவருக்கு மாறக் கூடிய பொருளின் மதிப்பு, குறிப்பிட்ட கால வரம்புக்குள் வழங்கப்பட்ட நன்கொடையின் மதிப்புப் போன்றவையும் இச்சட்டத்தின் கீழ் வரிக்குட்பட்டவையாகும். பொதுவாக, ஒருவருடைய இறப்பின் பொருட்டுச் சொத்துகளில் ஏற்படும் அனைத்து உரிமை மாற்றங்களுக்கும் இவ்வரி உண்டு. இறந்தவருக்கு ஒரு சொத்தின் மீது முழு உரிமையில்லாமல் சீவனாம்ச பாத்தியம் மட்டும் இருந்தாலும், அந்தச் சீவனாம்ச பாத்தியமும் சொத்தாகக் கருதப்பட்டு, அச்சொத்தின் மதிப்பிற்கு வரி விதிக்கப்படும்.
இச்சட்டத்தில் விற்பனைக்கில்லாத புத்தகங்கள், கலைப்பொருள்கள் ஓவியங்கள் முதலிய சொத்துகள் இவ்வரி விலக்கிற்கு உரிய சொத்துகளாகும். பிறவற்றிற்கு வரிவிகிதத்தை உறுதி செய்துள்ளனர்.
இவ்வரி செலுத்த நேரிடுபவர், இறந்தவர் தொடர்பாக. அடக்கம் செய்தல், ஈமச் சடங்கு, சொத்துகள் தொடர்பான கடன்கள் போன்றவற்றிற்குரிய செலவுகள் ஆகியவற்றை வரிக்குட்படும் சொத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
இப்போது நடைமுறையிறுள்ள இறப்புவரியின் விகிதங்கள் வருமாறு:
சில சமயங்களில் குடும்பங்களில் அடுத்தடுத்து ஏற்படும் மரணம் காரணமாக ஒரே சொத்துக்கு உடனுக்குடன் இறப்பு வரிசெலுத்த நேரிடும். இதைக் தவிர்ப்பதற்காக, இரண்டு இறப்புக்களுக்கிடையே உள்ள காலத்தையொட்டி இறப்பு வரியில் சலுகை அளிக்கப்படுகிறது.
இறப்புவரி அலுவலரின் வரிவிதிப்பு முறையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காகத் தனிப்பட்ட விதிமுறைகள் இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன.
இறப்பை எதிர்பார்த்துச் செலுத்த நேரிடும் இறப்பு வரியை அரசாங்க வைப்புக் கணக்கில் வைத்துக் கொள்ள வசதியுண்டு. மேலும், இதற்காகத் தனிப்பட்ட காப்பீட்டுப் பாலிசியும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு இறப்புவரியும் (குறிப்பிட்ட விதிமுறை- களுக்குட்பட்டு) கிடையாது. இறப்பு வரியினைத் தவணை முறையிலும் செலுத்தலாம்.
இச்சட்டத்தின் கீழ், உரிய விண்ணப்பத்தை அனுப்பத் தவறுதல், சொத்துகள் தொடர்பான அல்லது வரி விதிப்புக்குத் தப்பிவிட்ட சொத்துகள் தொடர்பான விவரங்களைக் கொடுக்கத் தவறுதல், அறிவிப்புக்குப் பதிலளிக்கத் தவறுதல், சொத்துகள் தொடர்பான விவரங்களை மறைத்தல் அல்லது தவறான விவரங்களைக் கொடுத்தல், இறப்பு வரியைச் செலுத்தத் தவறுதல் போன்ற குற்றங்களுக்கு ஒறுப்புக் கட்டணம் தண்டனையாக விதிக்கப்படுகிறது.
இந்த மரண வரியானது 1985–ஆம் ஆண்டில் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 510)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/838mrvu4/
தமிழ்“இறந்தவர் வரிச் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/838mrvu4/APA
Oliyon Research. (2026). இறந்தவர் வரிச் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/838mrvu4/MLA
"இறந்தவர் வரிச் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/838mrvu4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment