சங்ககாலப் புவவர்களுள் ஒருவர். தேவன் என்பது இவர் இயற்பெயர், தேவனார் எனப் பெயரிய பிற புலவர்களின் வேறறிய இவர் இளந்தேவனார் எனப்பட்டார் போலும். இளந்தேவன் என்பதே இவர்தம் இயற்பெயராக அமைந்திருத்தலும் கூடும். நற்றிணை 41–ஆம் பாடல் இப்பெயரில் அமைந்துள்ளது. அகநானூற்றிலுள்ள மூன்று பாடல்களின் (அகம். 58, 298, 328) ஆசிரியர் பெயர் மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் என்று காணப்படுகிறது. இந்நான்கு பாடல்களையும் இளந்தேவனார் பெயரிலேயே பேராசிரியர் எசு. வையாபுரிப்பிள்ளை பதிப்பித்துள்ளார். உரையாளராகிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இவ்விரு பெயரும் ஒரு புலவரையே குறிக்கும் எனக் கொண்டு புலவர் வரலாறெழுதியுள்ளார். இவற்றால் இளந்தேவனார் மதுரையைச் சேர்ந்த புலவர் என்பதும், வணிகமரபில் தோன்றியவர் என்பதும், பண்ட (பலசரக்கு) வணிகத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தவர் என்பதும் புலனாகின்றன. இவர்தம் பாடல்களுள் அகநானூற்றுப் பாடல்கள் மூன்றும் குறிஞ்சித் திணையில் தலைவி கூற்றாகவும், நற்றிணைப்பாடல் (41) பாலைத்திணையில் தோழி கூற்றாகவும் அமைந்துள்ளன.