கண்ணில் உள்ள விழியாடி (lens) வெண்மையடைந்து, ஒளி புகாமல் பார்வை இழப்பதற்கு, கண் புரை (cataract) என்று பெயர். விழியாடியின் வளர் சிதை மாற்றத்தைப் பாதிக்கும் கண் நோய்களால், கண் புரை உண்டாகும். தாங்கும் மேலணி இல்லாத பின்புற உறையின் அடியில், முதலில் ஒளிபுகா வெள்ளை விழுகிறது. உறை மிகவும் மெல்லியதாக இருக்கும். படிப்படியாகப் பரவி, விழியாடி முழுமையும் பாதிக்கிறது. இத்தகைய சிக்கலான கண் புரையில், பல வண்ணப் பளபளப்பில் சாம்பல் நிற எதிர்பலிப்பு, பின்புற விழியாடிப் பரப்பிலிருந்து தோன்றுவதற்குப் பதிலாக, ஒளிர் வானவில் போன்ற பளபளப்புக் காணப்படுகிறது. வெளிப்பக்கத்துக்குப் புரை பரவி ஒரே சீராகச் சுற்றி வரும். மிகையான அண்மைப் பார்வை, நாட்பட்ட அழற்சி, விழித் திரை அழற்சி ஆகியவை உள்கண்ணில் அறுவை, புற்று ஆகியவற்றின் விளைவாக ஏற்படலாம். விழித் திரை நிறமி, நோயியத்தில் அடர்த்தியாகக் காணப்பட்டு, பார்வைத் தளம் குறுகி விடுவதால், கண்ணுக்குச் சேதம் மிகுதியாக இருக்கும். ஆகவே உடனடியாக அறுவை தேவைப்படுகிறது. பிற நோய்களில் கண் புள்ளிப் (macula) பார்வை நரம்பின் தன்மையைக் கணக்கிட்டு, அறுவை செய்ய வேண்டும். ஊவிய அழற்சி விளைவாக ஏற்படும் சிக்கலான புரையில் அறுவை முறை கடினமாக இருக்கும். முழுமையான நல்ல பார்வையும் கிடைக்காது. எனினும், இரண்டு கண்களும் பாதிக்கப் பட்டுள்ளமையால், அறுவை செய்ய வேண்டியிருக்கும். —மு. ப. கிருஷ்ணன் நூலோதி. Trevor Roper, The Eye and Its Disorders, Second Edition, Blackwell and Scientific Publication, Oxford, 1984.