இராம சாத்திரி பிரபுனே
irāma cāttiri pirapuṉē
மராட்டியத் தலைமை நீதிபதி; ஒரு பக்கச் சார்பின்றி நீதி வழங்குவதில் வல்லவர்; பீசுவா நாராயணராவ் ஆட்சிக்காலத்தில் நீதித்துறைக்கும் பெருமை சேர்த்தவர்.
மராட்டியத் தலைமை நீதிபதி; ஒரு பக்கச் சார்பின்றி நீதி வழங்குவதில் வல்லவர்; பீசுவா நாராயணராவ் ஆட்சிக்காலத்தில் நீதித்துறைக்கும் பெருமை சேர்த்தவர். இவர் கி.பி. 1761 முதல் தம்மைப் பாவ் சாகிபு என்று சில மராட்டிய அதிகாரிகள் நம்பும்படி நடித்துக் கொண்டிருந்த சுக்லால் என்பாரை, கி.பி. 1765 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15–ஆம் நாள் விசாரித்து, அவரிடம் உண்மையை வரவழைத்து, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினார். பீசுவா நாராயணராவ் கி.பி. 1773 ஆம் ஆண்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்டபோது, இராம சாத்திரி ஆறு வாரங்கள் நீதி விசாரணை நடத்தினார். இக்கொலைக்கு மூல காரணம் இரகுநாதராவே என்றும். இதில் 50 பேர் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் இவர் கண்டறிந்தார்.
நீதி தவறாத இராமசாத்திரி புதிய பீசுவாவாகப் பதவியேற்ற இரகுநாதராவே இக்கொலைத் தொடர்பான முதல் குற்றவாளி என்பதனை அவரிடமே எடுத்துக்கூறி, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று வாதாடினார். இதனைக் கேட்டு வெகுண்ட பீசுவா இரகுநாதராவ் இராம சாத்திரியைப் பதவி நீக்கம் செய்தார். இதன் விளைவாக இவர் தமது சொந்த ஊருக்கு சென்று அமைதியாக வாழ்ந்து வந்தார். ஓராண்டு சென்ற பின் தலைமை நீதிபதிப் பதவி மீண்டும் இவரைத் தேடி வந்தது. தாம் இப்பதவியில் அமர வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டபோது, நீதித்துறையில் அரசு தலையீடு இராது என்றும் கூறப்பட்ட தீர்ப்புகள் நிறைவேற்றப்படும் என்றும் எழுத்து மூலம் எழுதி வாங்கிக் கொண்டபின்னரே இவர் மீண்டும் பதவியில் அமர்ந்தார். நீதியின் காவலராக விளங்கிய சாத்திரி கி.பி. 1790–இல் காலமானார். இவருக்குப் பின் அய்ய சாத்திரி தலைமை நீதிபதியாக அமர்த்தப்பட்டார்.
இவர் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் குற்றச்சாட்டுகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டன. குற்றவாளிகள் விருப்பு வெறுப்பின்றித் தண்டிக்கப்பட்டனர். மாதவராவின் ஆட்சிக் காலத்தின் நீதி நிருவாகம் சிறப்புற நடைபெற இவர் பெரிதும் உதவினார். இவரை இராம்சாத்திரி பிரபுனே என்றும் கூறுவர். ம.சு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 104)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vpq9u3d/
தமிழ்“இராம சாத்திரி பிரபுனே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7vpq9u3d/APA
Oliyon Research. (2026). இராம சாத்திரி பிரபுனே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7vpq9u3d/MLA
"இராம சாத்திரி பிரபுனே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7vpq9u3d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment