உடலொறுப்புத் தண்டனை
uṭaloṟupput taṇṭaṉai
ஒரே தன்மையான செய்கையைப் புரிந்த குற்றவாளிக்குத் தண்டனை வழங்குவதில் நாட்டுக்கு நாடு வேறுபாடு காணப்படுகிறது.
ஒரே தன்மையான செய்கையைப் புரிந்த குற்றவாளிக்குத் தண்டனை வழங்குவதில் நாட்டுக்கு நாடு வேறுபாடு காணப்படுகிறது. அதுபோலவே காலத்துக்குக் காலம் வேறுபாடும் ஏற்படுகிறது. வழங்கப்படும் தண்டனைகளுள் ஒன்னு உடலொறுப்புத் தண்டனை (Corporal Punishment) என்பதாகும். உடலைத் துன்புறுத்துவது அல்லது சித்திரவதை செய்வது என்று இத்தண்டனையைக் கூறலாம்.
மரண தண்டனை பல வகைகளில் நிறைவேற்றப்படுகிறது. விலங்குகள் மூலம் இறப்பு ஏற்படுத்துவது, நஞ்சினை யூட்டிச் சாகடிப்பது, சிலுவையில் அறைவது, தூக்கிலிடுவது, கழுத்தை வெட்டுவது, கல்லால் அடிப்பது போன்ற முறைகளால் முற்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இக்காலத்தில் சுடுவது, மின்சாரம் செலுத்துவது, தூக்கிலிடுவது போன்ற வகைகளால் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இக்காலத்திலும் சில நாடுகளில் கல்லால் அடித்துக் கொல்லும் வழக்கம் உள்ளது. மரண தண்டனை நிறைவேற்றுவதிலும் உடல் துன்பம் ஏற்படுத்தப்படுகிறது என்றாலும், குற்றவாளியைச் சாகடிக்காமலேயே உடலைத் துன்புறுத்துவதைத்தான் உடலொறுப்புத் தண்டனை என்ற வகையில் சேர்க்கலாம்.
குற்றவாளிக்குச் சூடுபோடுதல், விதையடித்தல், ஏதாவது ஓர் உறுப்பை வெட்டிவிடுதல், கசையடி கொடுத்தல் ஆகியவை உடலொறுப்புத் தண்டனைகளுள் சிவவாகும். இங்கிலாந்து நாட்டைக் கான்யூட்டு (Canute) என்ற மன்னன் ஆண்டு வந்த காலத்தில் கற்பிழந்த பெண்ணின் மூக்கையும் காதுகளையும் அறுத்து விடுவது வழக்கமாக இருந்தது. உயர் சாதியினர் எனப்படும் பிராமணர்களுக்கு அவர்களின் கடமைகள் பற்றிக் கீழ்ச் சாதியினர் எனப்படும் சூத்திரன் நினைவூட்டுவது ஆணவமான செயல் என்றும், அக்குற்றத்திற்கு அச்சூத்திரன் வாயிலும் காதுகளிலும் கொதிக்கும் எண்ணையை ஊற்ற வேண்டும் என்னும் மனு சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மற்றவருக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் காட்டிலும், குற்றவாளியைப் பழி வாங்கும் எண்ணத்துடன் தான் உடலொறுப்புத் தண்டனை வழங்கப்பட்டு வந்துள்ளது.
காலப்போக்கில் குற்றவியல்துறையில் புதிய கருத்துகள் தோன்றத் தொடங்கின. உடலொறுப்புத் தண்டனை வழங்கப்படுவது நாகரிகமற்ற செயல் என்ற எண்ணம் வளரத் தொடங்கியது. எனவே, பல நாடுகளில் உடலொறுப்புத் தண்டனை வழங்குவது இப்போது ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், இக்காலத்திலும் சில இசுலாமிய நாடுகளில் கசையடி கொடுப்பது, கல்லால் அடிப்பது, கை கால்களை வெட்டுவது போன்ற உடலொறுப்புத் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உடலொறுப்புத் தண்டனைகள் வழங்குவதால், குற்றங்கள் குறைவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தூக்கிலிட வகை செய்யப்பட்டுள்ளது. இத்தண்டனை உடலொறுப்புத் தண்டனை என்ற வகையில் சேராது. முன்னர், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் படி கசையடி கொடுக்கும் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இந்தியா விடுதலையடைந்த பின்னர் இத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. அன்றும் இன்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி கடும் சிறைத் தண்டனை விதிக்கப்படுபவர் சிறையில் கடினமான வேலை செய்யவேண்டும். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் கடும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலை வீரர்கள் சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்டார்கள். கடும் சிறைத் தண்டனையை உடலொறுப்புத் தண்டனையாகக் கருதினால், இத்தண்டனை ஒன்றுதான் இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் உடலொறுப்புத் தண்டனையாகும்.
துணை நூல்
Majumdar, R.C., The Age of Imperial Unity, Bharatiya Vidya Bhavan, Bombay, 1980.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 799)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vdj94ew/
தமிழ்“உடலொறுப்புத் தண்டனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7vdj94ew/APA
Oliyon Research. (2026). உடலொறுப்புத் தண்டனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7vdj94ew/MLA
"உடலொறுப்புத் தண்டனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7vdj94ew/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment