உபசார வழக்கு என்பது சொற்றொடர் பொருள் உணர்த்தும் வகைகளுள் ஒன்றினைக் குறிக்கும் இலக்கணக் குறியீடாகும். வினைமுதலும் கருவியும் எனவும், கருவியும் பயனும் எனவும், காரணமும் காரியமும் எனவும் இயைபுடையனவற்றைச் சொல்லுமிடத்து, இவற்றுள் ஒன்றைக் குறிப்பிடுவதற்காக மற்றொன்றை எடுத்துக் கூறுவது உபசார வழக்கு எனப்படும். ‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ், செம்பொருள் காண்பது அறிவு’ என்னும் குறள் விளக்கத்தில் பரிமேலழகர், ‘பிறப்பென்னும் பேதைமை யெனவும், சிறப்பென்னும் செம்பொருள் எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். பேதைமை என்பது அவிச்சை (அறியாமை). அதனால் உண்டாவது பிறப்பாகும். இதில் பேதைமை காரணம்; பிறப்பு காரியம். இக்குறளில், பேதைமை என்னும் காரணத்தால் உண்டாகிய பிறப்பு என்று கூறாமல் பேதைமையே பிறப்பு என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே, செம்பொருட் காட்சியால் உண்டாவது சிறப்பு. இதில் செம்பொருள் காரணம்; சிறப்பு காரியம். செம்பொருளால் உண்டாகிய சிறப்பு என்று கூறாமல் சிறப்பே செம்பொருளாகக் கூறப்பட்டுள்ளது. இக்குறளின் இவ்விரு இடங்களிலும் காரியம் (பிறப்பு, சிறப்பு) காரணமாகக் (பேதைமை, செம்பொருள்) கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்படுவது உபசார வழக்கு எனப்படும். காரியத்தைக் காரணமாகக் கூறுவது போலக் காரணத்தைக் காரியமாகக் கூறுவதும் உண்டு. உபசார வழக்கினை ஒரு வகையில் இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடும் இலக்கணை என்பதனோடு ஒப்பிடலாம். இலக்கணையை விளக்குங்கால் ‘இலக்கண உரையாசிரியர்கள், இலக்கணை என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருட்குத் தந்து உரைப்பது’ என்றும், ‘அது விட்ட இலக்கணை விடாத இலக்கணை, விட்டும் விடாத இலக்கணை என மூவகைப்படும்’ என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர் (நன். 269, சிவஞானமுனிவர் விருத்தி). புளித் தின்றான் என்னும்போது புளிப்புடைய பழத்தைத் தின்றான் என்பது பொருளாகும். இங்குப் புளி என்னும் சுவைப்பெயர் அதனைக் கொண்ட ஒரு பழத்தினைக் குறிக்கிறது. புளிப்புடைய பழத்தைத் தின்றான் என்னும் பொருளில் புளித்தின்றான் எனக் கூறப்படும் இந்த இலக்கணை, ஒருவகையில் உபசார வழக்கினோடு ஒத்துக் காணப்படுகிறது.