அய்யப்புழல்
ayyappuḻal
தென்னிந்தியாவில் இடைக் காலத்தில் பணியாற்றிய வாணிகக் குழுக்களுள் ஒன்று.
தென்னிந்தியாவில் இடைக் காலத்தில் பணியாற்றிய வாணிகக் குழுக்களுள் ஒன்று. அக்காலத்தில் வாணிகத் தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளை நிருவகிக்கப் பல வாணிகக் குழுக்கள் இருந்தன. இவை உற்பத்தியை முறைப்படுத்தவும் விற்பனையை ஊக்குவிக்கவும் செயற்பட்டன. வேளாண்மைப் பொருள் உற்பத்தியைக் கண்காணிக்கவும் கைவினைப்பொருள் உற்பத்தியைச் சீரமைக்கவும் தனித்தனியான குழுக்கள் இருந்தன. இக்குழு ஒவ்வொன்றும் தனக்கென ஒரு நிருவாக அமைப்பைக் கொண்டிருந்தது. இவ்வாணிகக் குழுக்களுள் அய்யப்புழல் என்னும் குழு, சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அய்கொளே (Aihole) என்னும் ஊர்ப் பெயரின் அடிப்படையில் ‘அய்யப்புழல்’ என்னும் வாணிகக் குழுவின் பெயர் தோன்றியது. அய்கொளே, கருநாடக மாநிலத்தில் பிசப்பூர் மாவட்டத்தில் பாதாமி வட்டத்தில் உள்ளது. இவ்வூரே இக்குழுவின் தலைமை இடமாகும், அய்கொளே என்னும் ஊரோடு தொடர்புடைய வாணிகக் கூட்டத்தார் இவர் என்ற பொருளிலேயே அய்யப்புழல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாணிகக் கூட்டத்தினர் தங்களை ‘அய்வோலுபுரத்தின் ஐநூற்றுவர்’ என்று விளித்துக்கொண்டனர். இப்பெயருக்கு, ஐநூற்றுவர் கொண்ட ஆட்சிக் குழுவினைப் பெற்ற வாணிகக்குழு என்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. பல அரசர்களிடமிருந்து பல காலங்களில் பெற்ற 500 உரிமைச் சாசனங்களின் சான்றுகளில் தங்கள் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் இப்பெயரைப் பெற்றனர் எனவும் குறிப்பர்.
தோற்றமும் வளர்ச்சியும்
இக்குழுவின் தோற்றத்தைப் பற்றிச் சரியாக அறிய முடியவில்லை. இக்குழு சற்றேறக்குறைய 8 ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம். இக்கூட்டத்தாரைப் பற்றிய செய்திகளைத் தரும் தொடக்கக்காலக் கல்வெட்டுகள் இக்காலத்தைச் சார்ந்தன என்பதைக் கொண்டு இவ்வாறு கணிக்கலாம். கருநாடகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகள்தாம் முதன்முதலில் இவர்களைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. பிற்காலக் கல்வெட்டுகள், இவர்களது தோற்றத்தைப் பற்றிய மரபுவழிச் செய்திகள் சிலவற்றைத் தருகின்றன. அவை இக்கூட்டத்தாரின் முன்தோன்றல்கள் என்று பலதேவர், வாசுதேவர், கண்டளி, மூலபத்திரர் ஆகியோரைக் குறிக்கின்றன. இவர்கள் நான்கு சமயங்களையும், ஆறு தரிசனங்களையும் அறிந்திருந்தனர். ஏறத்தாழக் கி.பி. 9, 10–ஆம் நூற்றாண்டுகளில் இக்கூட்டத்தார் தமிழகத்திலும் ஆந்திரப் பகுதிகளோடும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இக்காலத்தில் ஏற்பட்ட நிலையான ஆட்சிகள் இவர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன. இக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில், அய்யப்புழல் கூட்டத்தார் ஐநூற்றுவர் நானா தேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் என்பாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். ஐநூற்றவர் என்னும் பெயர் ஒப்புமையைக் கொண்டு அய்யப்புழல் கூட்டத்தாரும் ஐநூற்றுவரும் ஒருவரே எனக் கொள்ளலாம். திசையாயிரத்து ஐநூற்றுவர், எல்லாத் திசைகளிலும் சென்று வாணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வீரவளஞ்சியர் என்னும் மற்றுமோர் வணிகக் கூட்டத்தாருடனும் அய்யப்புழல் கூட்டத்தார் தொடர்பு கொண்டிருக்கலாம். எட்டு நாடுகளைச் சார்ந்த 16 செட்டிகள் இக்குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். கவேரர், காத்திரிகள், செட்டிகள், செட்டிகுத்தர், அங்காரர், வீரர், வீரவணிகர், கண்டிகர், கவுண்ட சுவாமி ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்கள் என்று கருநாடகச் செப்பேடு உரைக்கும். இக்கூட்டத்தில் வாணிகர்கள் தவிர வீரர்களும் இருந்தனர்.
அய்யப்புழல் நிருவாகத்தில், ஏறக்குறைய 12–ஆம் நூற்றாண்டளவில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. அய்யப்புழல் வாணிகர்களின் இருப்பிடங்களான சில ஊர்களில் இவர்களுக்கிருந்த சில உரிமைகள் மாற்றியமைக்கப்பட்டன. இதனால் எறிவீரபட்டண வணிகங்கள் அதிக சலுகைகளைப் பெற்றனர். இச்சலுகை மாற்றத்தின் காரணங்கள் தெளிவாகத் தெரிந்தில. பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் இவ்வணிகக் குழுவின் செயற்பாடுகளில் ஒருவகைத் தேக்கம் காணப்படுகிறது. சில இடங்களில் இவ்வணிகக் கூட்டத்தாரின் சிறப்புரிமைகள் பாதிக்கப்பட்டன. கி.பி. 13–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பொதுவான ஆட்சிச் சீர்கேடுகளினால் நிலையற்றதன்மை தோன்றியது. இதன் விளைவாக இவ்வணிகக் குழுவின் சிறப்புச் சலுகைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். விசயநகரப் பேரரசுக் காலத்தில் இவ்வணிகக் குழுவின் நடவடிக்கைகள் பற்றிச் சில செய்திகளே தெரியவந்துள்ளன எனினும் முன்போல இவ்வணிகக் குழு தன் பரந்துபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலவில்லை. ஆயினும் கி.பி. 17–ஆம் நூற்றாண்டு வரை இவ்வணிகக் குழு ஓரளவு செல்வாக்குடன் செயற்பட்டது.
சிறப்புத் தன்மைகள்
சிறப்புச் சலுகைகள் பலவற்றைப் பல்வேறு மன்னர்களிடமிருந்து உரிமைச் சாசனங்கள் மூலம் பெற்றிருந்தனர். குற்றவாளிகளை விசாரணை செய்து தண்டிக்கவும் வீரச்செயலை மதித்து வீரர்களுக்கு விருதுகளை வழங்கவும் உரிமை பெற்றிருந்தனர். தங்களுக்கு என்று தனியான முத்திரை, கொடி போன்றவற்றையும் இவர்கள் பெற்றிருந்தனர். இவர்களின் சிறப்பான பணி வாணிகம் செய்தலாகும். இதனையே இவர்கள் கல்வெட்டுகள் வீரபனஞ்ச தருமத்தை மேற்கொண்டவர்கள் என்று குறிக்கும். இத்தருமக் கோட்பாடுகள் 500 வீரசாசனங்களில் எழுதப்பட்டுள்ளன என்பர். இவர்கள் சேர சோழ பாண்டிய, மலைய, மகத, கோசல, செளராட்டிர, இலாட நாடுகளில் வாணிகம் மேற்கொண்டனர்; மேலும், பாரசீகம், காம்போசம், நேபாளம் ஆகிய தொலைதூர நாடுகளுடனும் வாணிகம் செய்தனர்.
இவர்கள் வடக்கே சோலாப்பூரிலிருந்து தெற்கே குமரிவரை பல வணிகமையங்களை அமைத்திருந்தனர்; முப்பத்தாறு மையங்களைச் சிறப்பாகக் குறிக்கின்றனர். அவற்றுள் காவிரிக்குத் தென்கரையில் பதினெட்டும், வடகரையில் பதினெட்டும் அமைந்துள்ளன. தமிழகத்தில் கோயமுத்தூர், திருநெல்வேலி, கருநாடகத்தில் பீசப்பூர், பெங்களூர், சித்தல்துருகம், மைசூர், சிமோகா, ஆசன், ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கர்நூல், பெல்லாரி, அனந்தப்பூர் ஆகிய மாவட்டப் பகுதிகளில் இக்குழுவின் பணிகள் சிறப்பாக நடைபெற்றன. சிறப்பாகக் கருநாடகத்தில் இவர்களின் வாணிக நடவடிக்கைகள் பெருமளவு இருந்தன. சிறப்பான வாணிகமையங்களை ‘அய்யவோலு’ ‘அய்யப்புழல்’ என்று அழைத்தனர். மராட்டிய மாநிலத்தில் மிராசு, கருநாடக மாநிலத்தில் கொள்ளேகால், அரிசிக்கரை, நிட்டூர், அல்லூர், தமிழகத்தில் திருமுருகன் பூண்டி, ஆந்திராவில் குண்டூர் ஆகியவை சிறப்பான மையங்களாகும். உயர்ந்த நவரத்தினக் கற்கள், முத்துகள், பவளம், கோமேதகம், கெம்பு, வைடூரியம் போன்றவை சிறப்பான வாணிகப் பொருள்களாகும். நறுமணப் பொருள்கள், மருந்துகள், மருந்துப் பொருள்கள் ஆகியவற்றிலும் இவர்கள் வாணிகம் செய்தனர். யானை குதிரை ஆகியவையும் இவர்கள்தம் வாணிகப் பொருள்களாகும். நிலவழியாகவும் கடல் வழியாகவும் வாணிகத்தை மேற்கொண்டனர். கழுதைகள், எருமைகள் ஆகியவற்றைச் சுமை தூக்கவும் போக்குவரத்துக்கும் பயன்படுத்தினர். சில சமயம் தலைமீதும் பொருள்களைச் சுமந்து சென்று விற்றனர்.
இவர்கள் பலநாட்டுப் பகுதிகளில் பரவிக்கிடந்த காரணத்தால், பல்வேறு சமயக்கொள்கைகளைப் பின்பற்றினர். திருமாலை வழிபடுவோர் எனக் கல்வெட்டுகள் குறிக்கும். சிவனையும் வழிபட்டனர் இவர்கள். காளிகாதேவி, பரமேசுவரி ஆகியதேவிகளின் அருளைப் பெற்றவர்கள் என்றும், பகவதிதேவியின் மக்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர். எனவே இவர்கள் இந்துக்கள் எனக் குறிக்கப்படுவர். சமண சமய இயக்கிகளில் ஒருவரான பத்மாவதி தேவியின் அருள் பெற்றவர்கள் எனத் தம்மைக் கூறிக் கொள்வதால் இவர்களில் ஒரு சாரார், சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்றும் கருதலாம்.ப.ச.
துணை நூல்கள்
Nilakanta Sastri, K.A., “A History of South India”, Oxford, 1983.
Appadorai, A., “Economic Conditions in Southern India”, (1000–1500 A.D.)
Gururajachar, S., “Some Aspects of Economic and Social life in Karnataka”. University Mysore, Mysore, 1974.
Mahalingam, T.V., “South Indian Polity”, University of Madras, Madras, 1967.
Kenneth R. Hali., “Trade and Statecraft in the Age of Cholas”, Abhinar, New Delhi, 1980.
Nagaraja Rao (Editor), M. S., “The Chalukyas of Badami”, Bangalore, 1978.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 547)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7pg3fpdj/
தமிழ்“அய்யப்புழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7pg3fpdj/APA
Oliyon Research. (2026). அய்யப்புழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7pg3fpdj/MLA
"அய்யப்புழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7pg3fpdj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment