படிகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க பண்பு அவற்றின் அணிக் கோவை அமைப்பாகும். ஆனால், நடைமுறையில் எந்த ஒரு படிகத்தின் அணிக் கோவை அமைப்பும் முற்றிலும் நிறைவாக அமைவதில்லை, நிறைவான அணிக் கோவை அமைப்பிலிருந்து நடைமுறையில் படிகங்களில் காணப்படும் பிறழ்ச்சி , படிகக் குறை அல்லது அணிக் கோவைக் குறை எனப் படும். படிகத்தின் விரவல் தன்மை, நிறப் பண்பு, மின் தடை, படிக வலிமை, மின் கடவாத் தேக்குத் திறன், வெப்ப ஏற்புத் திறன், மீட்சியியல் பண்பு போன்றவை படிகக் குறைகளில் செறிவைச் சார்ந்துள்ளன. படிகக் குறைகளைப் புள்ளிக் குறைகள், வரிக் குறைகள், பரப்புக் குறைகள், பருமக் குறைகள் என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். புள்ளிக் குறைகள். ஒரு புள்ளியிலிருந்து, மூன்று பரிமாணங்களிலும் மிக மிகக் குறைந்த அளவு பரவக் கூடிய குறைகள், புள்ளிக் குறைகள் ஆகும். புள்ளிக் குறைகளின் அளவு சில அணு விட்டங்களே இருக்கும். அவை சந்து மாசு, காலியிடம், மாசு அணு என மூவகைப் படும். படிக அணிக் கோவையின், அணுக்களுக்கிடையே சந்துகள் இருக்கின்றன. இச்சந்துகளில் அமரும் அணு சந்து மாசு ஆகும். சந்து மாசு, அணிக் கோவையில் பங்கு பெறும் அணுவாகவோ, புது அணுவாகவோ இருக்கலாம். சந்து வெளியில், சந்து மாசு அமர வேண்டுமானால், மாசின் அளவு படிக அணுவின் அளவை விடச் சிறியதாக அமைய வேண்டும். ஆனால், சந்து மாசின் அளவு, சந்து வெளியின் அளவை விடப் பெரியதாக இருந்தால், அது படிகக் கட்டமைப்பில் ஒரு திரிபை ஏற்படுத்தும். இத்திரிபே சந்து மாசுக் குறை ஆகும். அணிக் கோவையில், அணு இருக்க வேண்டிய புள்ளியில், ஒன்றும் இல்லாமல் இருப்பது காலியிடம் எனப்படும். இது பீரெங்கல் குறை, ஷாட்க் குறை என இரு வகைப் படும். அயனிப் படிகத்தில், அணிக் கோவைப் புள்ளியிலுள்ள ஓர் அயனி இடம் பெயர்ந்து, ஓர் சந்திற்குள் சென்று விடுவதால், ஏற்படும் காலியிடம், ஃபிரெங்கல் குறைபாடு எனப் படும். வழக்கமாக, அளவில் சிறிதான நேர் அயனிகளே பெரும்பாலும் சந்து இடங்களுக்குச் செல்லும். எதிர் அயனிகள் பொதுவாக, அளவில் பெரியவையாக உள்ளமையால், சந்து இடங்கள் இவற்றிற்குப் போதாமல் போய் விடும். ஆகையால், இவை இடம் பெயர்ந்து, சந்து இடங்களுக்குப் போவது அரிது. ஃபிரெங்கல் குறைபாடு நிகழும் போது சந்து மாசு, காலியிடம் ஆகிய இரு வகைக் குறைகளும், ஒரே நேரத்தில் திகழ்கின்றன. அயனிப் படிகத்திலிருந்து ஒரு நேர் அயனி, ஓர் எதிர் அயனி ஆகிய இரண்டு சேர்ந்து வெளியேறி விட்டால், இரு காலியிடங்கள் ஏற்படுகின்றன. இது ஷாட்ஜீ குறைபாடு ஆகும். சீரான அணிக் கோவையில் ஓர் அணு இருக்க வேண்டிய இடத்தில், பிறிதொரு வெளி அணு இருக்குமாயின், அது மாசு அணு என்னும் புள்ளிக் குறைபாடு ஆகும். பித்தளையில், நாக அணுக்கள் செம்பு அணுக் கோவையில் இருப்பது மாசு அணு குறைபாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். வரிக் குறைகள். ஒரு படிகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைப் பொறுத்து நழுவுவதால் அல்லது நகர்வதால் ஏற்படும் இடப் பெயர்ச்சி, படிகத்திற்குள் முழுமையாகப் பரவாமல், குறிப்பிட்ட பகுதியை மட்டும் பாதிப்பதாக இருந்தால், அது வரிக் குறை அல்லது குலைவு எனப் பெயர் பெறும். விளிம்புக் குலைவு, திருகியல் குலைவு எனக் குலைவு இரு வகைப் படும். ஒரு தளத்தை நுழைத்தால், விளிம்புக் குழைவு ஏற்படுகிறது. இவை நெருங்கி இறுக்க நிலையில் உள்ளன. கீழ்ப் பகுதி அணுக்கள் விலகி, ஓர் இழு விசைக்கு உட்பட்டவை போலக் காணப் படும். இத்திரிபுகள், அரைத் தளத்தின் விளிம்புக் கோட்டைச் சுற்றியுள்ள பகுதியிலேயே ஏற்படுகின்றன. எனவேதான், இது விளிம்புக் குலைவு எனப் படுகிறது. திருகியல் குலைவினைப் பின் வருமாறு விவரிக்கலாம். ஒரு நிறைவான தடிமனற்ற கூரிய கத்தியால் வெட்டிப் படிகத்தில் ஒரு பிளவினை ஏற்படுத்துவதாகக் கொண்டால், வெட்டிய இடத்தில் ஒரு நழுவு தளம் ஏற்படுகிறது. இத்தளத்திற்கு மேலேயுள்ள அணுக்கள் ஓர் அணுவிடைத் திரிபு ஏற்பட்டுள்ள பகுதியில், இயல்பான படிகத் தளம் குலைவுக் கோட்டைச் சுற்றி, ஒரு திருகு வடிவில் அமைவதால், இக்குலைவு இப்பெயர் பெற்றது. திருகியல் குலைவின் அளவு கர்கர் வெக்டரால் அளக்கப் படுகிறது. பரப்புக் குறைகள். பரப்புக் குறை இரு பரிமாணங்களில் அடங்கும். ஒரு படிகத்தின் பரப்பில் ஒரு குறிப்பிட்ட அணுவைச் சுற்றியுள்ள அணுக்களின் எண்ணிக்கை அதன் உட்பகுதியை விடக் குறைவாக இருப்பதே பரப்புக் குறை எனப் படும். இத்தகைய குறைவினால், மெல்லேடுகள், நார்கள் முதலியவற்றின் குணங்களில் மாறுபாடு ஏற்படும். மேலும் குறை, மணி எல்லைகள் ஆகியவையும் பரப்புக் குறைகளாகும். குவியல் குறைகளைப் பின் வருமாறு விவரிக்கலாம். அணுத் தளங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப் பட்டும் படிகங்கள் உருவாகின்றன. அணுத் தளங்கள் இவ்வாறு அடுக்கப் படும் போது ஏற்படும் தவறுகள் குவியல் குறைகள் ஆகும். படிகங்களில் ஏற்படும் மற்றொரு குறைபாடு மணி எல்லை எனப் படுகிறது. பல படிகங்கள், வெவ்வேறு திசைகளில் அமைந்து, ஒன்றோடொன்று பிணைந்து, சிறிய படிகங்கள் அல்லது மணிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் எவையேனும் இரண்டு அடுத்தடுத்துள்ள மணிகள் அல்லது படிகங்களைப் பிரிக்கும் பரப்பு இவ்விரு வகைகளின் அமைப்புக் கூறுகளையும் திசைப் பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும். இப்பரப்பே, மணி எல்லை எனப் படுகிறது. இது எந்தவோர் அணிக் கோவை ஒழுங்கிற்கும் உட்படாமல் தனித்து நிற்பதால், ஓர் அணிக் கோவைக் குறை எனப் படுகிறது. பருமக் குறை. வேற்றுப் பொருள்கள் திட்டு திட்டாகச் சேர்தல், பெரிய குழிவுகள் (காலியிடங்கள்) ஏற்படுதல் போன்றவை பருமக் குறைகளாகும். —பி.ஏ.ஏஞ்சல் மேரி <!---- Name spelt wrong. See: https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_14/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ----> துணை நூல். Wert and Thomson, Physics of Solids, McGraw-Hill Kaga Ksha Ltd, Second Edition, Tokyo, 1970.