அமெரிக்கப் புரட்சியின் போது நிகழ்ந்தது. இதனை முதலாம் உசாந்துப் போர் என்பர். இப்போர் 6–2–1778–இல் நடைபெற்றது. சாரடோக்காவில் (Saratoga) அமெரிக்கர்கள் வெற்றி பெற்றபோது, பிரான்சும் பிரிட்டனும் மோதிக் கொண்டன. இப்போர் உசாந்து கடற்கரையில் நிகழ்ந்தது. பிரான்சின் பிரட்டனித் தீபகற்பத்தில் உள்ள உசாந்து என்னுமிடத்தில் இப்போர் மூண்டதால் இதனை உசாந்துப்போர் என்று கூறுவர். இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் சார்சு (Georg III) கப்பற்படைத் தலைவர் அகசுடசு கெப்பல் (Augustus Keppel) என்பாரின் தலைமையில் 30 கப்பல்களைப் போர்ட்சுமத்து நகரத்திலிருந்து உசாந்துப் போரில் பங்கு கொள்ள அனுப்பினார். பிரான்சு நாட்டினரும் ஏறத்தாழ அதே அளவு கப்பல்களுடன் காம்டி டீ ஆர்விலியர்சு (Comte d’ Orvilliers) என்பாரின் தலைமையில் பங்கேற்றனர். இரு நாட்டுக் கப்பற்படையினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போதிலும் அவர்கள் வேறு அழிவில் ஈடுபடவில்லை. கப்பல்கள் மூழ்கடிக்கப்படவில்லை. கெப்பல் போர்ட்சுமத்திற்குத் திரும்பினார். காம்டி டீ ஆர்விலியர்சு, பிரசுட்டு (Brest) என்னும் ஊருக்குத் திரும்பினார். பிரெஞ்சுப் புரட்சியின்போது கி.பி. 1794–இல் நிகழ்ந்த இரண்டாம் உசாந்துப் போரில் பிரிட்டனும் பிரான்சும் மோதிக் கொண்டன. இதில் பிரிட்டன் வெற்றி பெற்ற ஆறு பிரெஞ்சுக் கப்பல்களைப் கைப்பற்றிக் கொண்டது. ஒரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. எனினும், பிரெஞ்சுக்காரர்கள் தப்பியோடிவிட்டனர். இங்கிலாந்து வரலாற்றில் இதனைப் ‘புகழ்மிக்க சூன் மாத முதல் நாள்’ (Glorious First of June) என்று பெருமையாகப் பேசுவர். இரா.அ.