இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தணிக்கை முறையாகும். பலவித ஆராய்ச்சிகளாலும் தொழில் நுணுக்க முறை கண்டுபிடிப்பாலும் தொழிற்றுறை வளர்ச்சி பெற்று வருகிறது. இவ்வளர்ச்சி நிலைகளுக்கேற்பப் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் செயற்படுகின்றன. பலவிதமான மின் இயந்திரங்களின் மூலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் எதிர்பார்த்தவாறு செவ்வனே செயற்படுகின்றன. இத்தகைய அமைப்புகளில் இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை (Balance Sheet Audit) இன்றியமையாததாக விளங்குகிறது. இத்தணிக்கை முறையில் தணிக்கை இருப்புநிலைக் குறிப்புடன் தொடங்கிப் பின்னர், முதற் பதிவேடுகள், ஆவணங்கள் முதலியவற்றிற்குத் தொடரும். இருப்பு நிலைக் குறிப்புத் தணிக்கையில் சான்றாய்வு, கூட்டல், சரிபார்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுதலில்லை. எல்லா நடவடிக்கைகளுமே இயந்திரங்கள், மின்சாரக் கருவிகள், கணிப்பொறிகள் (Computers) மூலம் பதிவு செய்யப்படுகின்றன. தணிக்கையர்கள் பொதுவாகப் பிற தணிக்கை முறைகளில் அனைத்து நடவடிக்கைகளையும் சரிபார்ப்பதில்லை. அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் சில ஆய்வுச் சோதனைகளைச் செய்து மனநிறைவு அடைந்துவிடுகின்றனர். பெரிய நிறுவனங்களில் அகச்சீராய்வு (Internal check) முறை பின்பற்றப்படும். இருப்புநிலைக் குறிப்புத் தணிக்கை ஒரு குறைந்த அளவு தணிக்கைச் செயன்முறையைக் கொண்டது. இருப்புநிலைக் குறிப்பில் கண்ட அனைத்துக் கணக்குகளும் சரிபார்க்கப்படுகின்றன. ஆதாய இறப்புக் கணக்குகளுக்கும் இருப்புநிலைக் குறிப்புக்கும் தொடர்புள்ள இனங்கள் மட்டும் தணிக்கை செய்யப்படுகின்றன. அதாவது, தேய்மானம், வாராக்கடன் பாதுகாப்பு (Maintenance) போன்ற சொத்துகளுடன் தொடர்பான இனங்கள் மட்டிலுமே தணிக்கை செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு அகக் கண்காணிப்பு சரிவரச் செய்யப்பட்டு வந்துள்ளதா என்று தணிக்கையர் ஆராய்ந்து பார்ப்பதுண்டு ஆண்டு இறுதியிலுள்ள மாதங்களின் கணக்குகளை நுணுக்கமாகப் பகுத்தாய்வு செய்வது இத்தணிக்கையின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நல்ல சீரான அகக்கட்டுப்பாடு (Internal Control), அகச் சீராய்வு முறை போன்றவற்றை மேற்கொண்டுள்ள நிறுவனங்களில் மட்டிலுமே இந்தத் தணிக்கை சிறப்பாக அமையும். தணிக்கையர் இவ்வாறு கணக்கு விவரங்களைப் பல புதிய முறைகளில் ஆராய்கிறார். சிறப்பாக, அவர் ஆதாய இழப்புக் கணக்கிற்கும் இருப்புநிலைக் குறிப்புக்கும் தொடர்புள்ள இனங்களை ஆராய்கிறார். பலவிதமான விகிதங்கள் (Ratios), பொதுவான வளர்ச்சி (Trend) முதலியவை துல்லியமாக ஆராயப்படுகின்றன. நிறுவனத்தின் முடிவுற்ற ஓராண்டு நிலையுடனோ அந்தத் துறையில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்களுடனோ ஒப்பிடும் வகையில் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இன்னும் எந்த வகையில் தூண்டுகோல் அல்லது கவனம் தேவை என்பதைச் சுட்டிக் காட்ட இந்தத் தணிக்கை உதவுகிறது. பி.இரா. துணை நூல்கள் Tandon, B.N., A Handbook of Practical Auditing, S. Chand & Company, Madras 1970. Kamal Gupta, Contemporary Auditing, Mc Graw-Hill Publishing Company Limited, Revised Edition, New Delhi, 1977.