நீரில் வாழும் மீன்களும், நீரிலும், நிலத்திலும் வாழும் இரு வாழ்விகளும், சூழ்நிலைக்கு ஏற்பப் பல்வேறு தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. நிலத்தில் வாழ்பவை புற இனப் பெருக்க உறுப்புகள், அகக் கருவுறுதல் அமைப்பு, ஓடுள்ள முட்டை தோன்றுதல், தோலில் சுரப்பிகள் இல்லாமல், செதில்கள் மட்டும் காணப் படுதல். உமிழ் நீர்ச் சுரப்பிகள் நச்சுச் சுரப்பிகளாக மாற்றமடைதல்,கழிவுப் பொருளை யூரிக் அமில முறையில் வெளியேற்றுதல், நீரை மீண்டும் உறிஞ்சி, உடலிலும் சேர்த்து வைக்க உதவும் சிறுநீரகங்கள் (metanephric kidney) போன்ற சிறப்பமைப்புகளைக் கொண்டுள்ளன. ஊர்வன வகையைச் சேர்ந்த ஆமை, எதிரிகளிடமிருந்து தப்பிக்க, கெட்டியான ஓடுகளைக் கொண்டுள்ளது. நீரிலும், நிலத்திலும் வாழ்வதற்கேற்ப முதலை சிறந்த சுவாச, இனப் பெருக்க தகவமைப்புகளைக் கொண்டுள்ளது. இது நீரினுள், பெரிய விலங்குகளை இழுத்துக் கொன்று விடும் அளவிற்கு ஆற்றலைக் கொண்டுள்ளது. பச்சோந்தி பழைய உலகப் பல்லி எனப் படுகிறது. இது செடிகள், மரங்கள், புதர்களில் மறைந்து வாழும். ஊர்வன வகுப்பிலும், கெமிலியோனிடே குடும்பத்தைச் சார்ந்த இது, மரத்தில் மறைந்து வாழும் பல்லி வகைகளிலேயே சிறந்த தகவமைப்புகளைக் கொண்டுள்ளது. இது அகமிடே வகை மூதாதையார் விலங்கிலிருந்து தோன்றியுள்ளது. புதை வடிவச் சான்று (fossils) மூலம் இது கிரட்டேசியக் காலத்திற்கு முன்பு வாழ்ந்ததாகக் கணக்கிடப் பட்டுள்ளது. பச்சோந்தி பொதுவாக, மரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப் படுகிறது. சில சமயங்களில், ஒரு பச்சோந்தி, ஒரு மரத்தில் மட்டும் நீண்ட நேரமாகத் தனித்துக் காணப் படுகிறது. மரத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அப்பகுதிகளில் மட்டும் ஓய்வு எடுக்கிறது. விடியலில் இப்பகுதியிலிருந்து வெளியே வந்து சூரிய ஒளியை நோக்கி நேராக, உடலைக் குறிப்பிட்ட நிலையில் வைத்து, வெப்பத்தைப் பெற்று, உடலிலும் சேர்த்து வைத்துக் கொள்கிறது. இச்செயலுக்குப் பிறகு, பச்சோந்தி உணவைத் தேடிச் செல்கிறது. பொதுவாக, பச்சோந்தி மரக் கிளைகளில் மறைந்து புறச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைந்து, வாழ்வதற்காகச் சுருண்ட வாலையும், மரக் கிளைகளைப் பற்றிக் கொள்வதற்காகக் கால்களையும் பெற்றுள்ளது. வேகமாக உடலின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் திறமையையும், நாக்கை நீட்டிக் தொலைவிலுள்ள பூச்சியைப் பிடித்துண்ணுதல், மற்றும் கண் ஒவ்வொன்றையும் அனைத்துத் திசைகளுக்கும் திருப்பிப் பூச்சிகளைப் பார்த்தறியும் திறமையையும் கொண்டுள்ளது. இது, தன்னைச் சார்ந்த விலங்குகளையும், ஏனைய விலங்குகளையும் எதிர்த்துத் தாக்குகிறது. இக்குடும்பத்தில் 85 சிறப்பினங்கள் காணப் படுகின்றன. ஆசியா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் பச்சோந்தி மிகுந்து காணப் படுகிறது. உடல். பல்லி வகைகளில் உடல் மேலும், கீழும் தட்டையாகவும், ஆனால், பச்சோந்திகளுக்கென்றே உரிய வகையில், மரக் கிளைகளுக்கும், இலைகளுக்கிடையே எளிதாகச் செல்வதற்கு ஏற்ப, இதன் உடல் உயர்ந்து, செங்குத்தாகவும், பக்க வாட்டத்திலும் தட்டையாக ஒடுங்கியுள்ளது. இதன் முதுகின் நடுவில் கெட்டியான, பக்க வாட்டத்தில் தட்டையான கூர்மையான செதில்கள் ரம்பம் போன்று வரிசையாக வால் பகுதியை நோக்கி அமைந்துள்ளன. தலையின் பக்க வாட்டுத் தோற்றமும், மேல் தோற்றமும், முக்கோண வடிவத்திலுள்ளன. உடலைப் போன்று, பின் பகுதியின் உச்சிப் பகுதி கொண்டை போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. தலையின் மேற்புறத்தில், நீண்ட பெரிய தலைக் கவசம் ஒன்று, தலையிலிருந்து கழுத்து வரை அமைந்துள்ளது. இக்கவசப் பகுதியில், தோல் மடிப்புகளும் காணப் படுகின்றன. இனப் பெருக்கத்திற்குப் பிறகு, பெண் பச்சோந்தி நிலத்தில் வளை தோண்ட இக்கவசம் உதவுகிறது. லேயன்டிரியா (Leandria perarmeta) போன்ற சிறப்பினத்தில், இக்கவசம் சிறப்பாக அமைந்துள்ளமையால், இவ்விலங்கு சிறந்த பச்சோந்தி எனப் படுகிறது. தற்போது இச்சிறப்பினம், மடகாஸ்கர் பகுதியில் மிகுந்து காணப் படுகிறது. இதன் கண்களுக்குக் கீழ், கத்தி போன்ற விளிம்புப் பகுதிகளுள்ளன. இச்சிறப்பு இனத்தில், முதுகின் மேல் ரம்பம் போன்ற கூர்மையான செதில்கள், முள்கள் போன்றுள்ளன. மேலும், உடலின் பக்க வாட்டத்தில், நெடுக்காக ரோஜா மொட்டு போன்று, முள்கள் காணப் படுகின்றன. சில பச்சோந்திகளின் தலை அல்லது மூக்கின் மேல் ஒன்று அல்லது பல கொம்பு போன்ற மொட்டுப் பகுதிகள் உள்ளன. தலையின் பக்க வாட்டத்தில், காதுத் தகடு (tympanun) காணப் படுவதில்லை. தாடைகளில் அக்ரோடோன்ட் (acrodont) வகைப் பற்கள் காணப் படுகின்றன. கண்கள். கண்கள் பெரியவையாகத் தலையின் உச்சிப் பகுதியில், பக்கவாட்டத்தில் அமைந்துள்ளன. ஆந்தைக்கு உள்ளவாறு, பச்சோந்தியின் கண்கள் மரத்தில் மறைந்து வாழ்வதற்கு ஏற்ப, மிகச் சிறப்பாக, கூர்மையான பார்வையைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு கண்ணும் அமைப்பில் கோபுரம் போன்று உயர்ந்தும், தனித்தும் ஏறத் தாழ 1800° வரை 8ல் பக்க வாட்டத்தில் அனைத்துத் திசைகளுக்கும் எளிதாகத் திரும்பிப் பார்க்க உதவுகிறது. ஒவ்வொரு கண்ணும், தனியாகப் பொருளின் பிம்பத்தைத் தோற்றுவிக்கிறது. இருப்பினும், இச்செயலை மூளை கட்டுப் படுத்துகிறது. ஒவ்வொரு கண்ணையும், மிகவும் சிறப்படைந்து வளர்ச்சி பெற்றுள்ள மேல் மற்றும் கீழ் கண் மூடிகள் சூழ்ந்துள்ளன. கண் மூடிகளின் மேல் செதில்களும், வண்ணத் துகள்களும் மிகுந்து காணப் படும். ஒவ்வொரு கண்ணிலுமுள்ள இரு கண் மூடிகளும் ஒன்றாக இணைந்து, நடுவில் கண்மணி போன்று சுருங்கி விரியும் ஒரு சிறிய வட்டமாக துளையை உண்டாக்கும். இத்துளையும், மணியும் (pupil) ஒன்றுக்கொன்று அருகிலும், சம அளவு விட்டத்துடனும் ஒரே நேர் கோட்டிலும் அமைந்திருக்கின்றன. இத்துளையை அனைத்துத் திசைகளுக்கும் திருப்பி, இதன் வழியாகப் பொருள்களைப் பச்சோந்தி பார்க்கிறது. இத்துளைகளின் வழியாகப் பெரிய கண்கள் வெளிப்புறமாகப் பிதுங்கித் தலையின் பக்க வாட்டத்தில் காணப் படுகின்றன. பறக்கும் பூச்சிகளைத் துல்லியமாகப் பார்த்தவுடன், பச்சோந்தி தனித்தனியான இரண்டு கண்களும், கண்களிலுள்ள நுண் துளைகளின் முன்புறமாகத் தலையின் முன் பகுதிக்கு ஒன்றுக்கொன்று அருகில் வந்து சேர்கின்றன. இதனால், இரு கண் காட்சிப் பார்வையை (binocular vision) ஏற்படுத்திப் பூச்சியைத் துல்லியமாகப் பார்க்கிறது. சில சமயங்களில், கண்ணிலுள்ள துளையிலிருந்து நீக்க, ஒரு சிறு குழல் போன்று அமைத்து, அக்குழலின் வழியாகப் பூச்சியைப் பார்க்கிறது. தொலைவிலுள்ள பூச்சியைக் குறி வைத்துப் பிடிப்பதற்குப் பச்சோந்தியிலுள்ள சிறப்படைந்த மாற்றமடைந்துள்ள கண் மூடி, பெரிதும் உதவுகின்றது. நாக்கு. கண்களைப் போன்று, நாக்குப் பகுதியும், பச்சோந்தியில் காணப் படும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். நீளமான நாக்கு உருண்டு, குழல் போன்று நீண்டு சுருங்கும் உறுப்பாகும். பல்லி வகைகளில், மொட்டுப் போன்ற நாக்கு நுனிப் பகுதி பிளவு பட்டுள்ளது. இம்மொட்டுப் பகுதி ஒட்டும் தன்மையுள்ளது. இப்பகுதியில் கோழைச் சுரப்பிச் செல்களுள்ளன. இச்செல்கள் கோழை நீரைச் சுரந்து, பூச்சிகளைப் பிடித்துண்ண உதவுகின்றன.தவளையிலுள்ளது போல், பச்சோந்தியின் நாக்கு கீழ்த்தாடையின் நுனியிலுள்ள ஹையாய்டு எலும்புடன் இணைந்து மடிந்துள்ளது. அனைத்துப் பச்சோந்திகளிலும், நாக்குடன் இணைந்துள்ள எலும்புகள் அனைத்தும் நன்கு வளர்ச்சி பெற்றுக் காணப் படுகின்றன. நாக்கு நன்கு செயல் பட, இவ்வெலும்புகள் உதவுகின்றன. பச்சோந்தி ஓய்வாக இருக்கும் போது, தசையாலான நாக்கு கடிகாரச் சுருள் போன்று, சுருண்டு வாய்க் குழியின் உள்புறத்தில், ஹையாய்ட்டு எலும்பிற்கு அடியில் காணப் படுகிறது. படிமலர்ச்சி பெற்றுள்ள மனிதனின் கையிலுள்ள இரு தலை (biceps), முத்தலைத் (triceps), தசைகளில் ஒன்று மட்டும் ஒரு நேரத்தில், மற்றொன்றிற்கு எதிராகச் செயல் படுகிறது. பச்சோந்தியின் நாக்கில், ஒரே நேரத்தில் எதிர்த்து அல்லது மாறுபட்டுச் செயல் படும் இரண்டு தசைகளுள்ளன. பச்சோந்தியின் நாக்கின் வெளிப் புறத்தில், வட்டத் தசையும், உட்புறத்தில் நெடுக்குத் தசைகளுமுள்ளன. நாக்கை வெளியே நீட்டுவதற்கு முன்பு, நாக்கின் பின் நுனியிலுள்ள வட்டத் தசை திடீரென்று வேகமாகச் சுருங்குவதால், மின்னல் வேகத்தில், நாக்கு வாயிலிருந்து வெளியே வருகிறது. இதே போல், நாக்கின் நடுவிலுள்ள நெடுக்குத் தசை சுருங்குவதால், வெளியே நீட்டிய நாக்கு மீண்டும் வாயினுள் இழுக்கப் படுகிறது. வாடர் என்பாரின் ஆய்வின் படி, பச்சோந்தியின் மூளையில் நடைபெறும் ஒரு செயல், ஒரு வித உணர்ச்சியை இரு விதத் தசைகளுக்கும் அனுப்புகிறது. மேலும், இச்செயல் மின்னல் வேகத்தில், ஒரு தசை மட்டும் நீளத் தொடங்கு முன்பே, மற்றொரு தசையைச் சுருங்கும் படி தூண்டுகிறது. மேலும், இரண்டு பெரிய குருதிக் குழாய்களும், நாக்கின் அடிப் பகுதியிலிருந்து நுனி வரை செல்கின்றன. இந்தக் குருதித் குழாய்களில் குருதி மிகுதியாகச் சேர்த்து வைக்கப்படுகிறது. திடீரென்று, இந்தக் குருதி நாக்கின் வழியாக வேகமாய்ப் பாய்வதால், நாக்கிலுள்ள தசை நார்க் கற்றைகளும் வேகமாக நீள்கின்றன. இச்செயல் ஒரு வித அழுத்த ஆற்றலால் ஏற்படுகிறது. ஏறக் குறைய 30 செ.மீ. நீளமுள்ள ஒரு பச்சோந்தி, தன் நாக்கை வேகமாக நீட்டி, 20 செ.மீட்டருக்கு அப்பாலுள்ள ஒரு பூச்சியைப் பிடிக்க முயலும். சில பச்சோந்திகள், உடலின் நீளத்திற்கு இணையாக அல்லது மேலாக நாக்கை, மிக வேகமாகவும், எவ்வித ஒலியுமின்றியும் நீட்டிப் பறக்கும் பூச்சியைத் துல்லியமாகப் பிடித்து விடும். நாக்கை நீட்டும் நீளம், பூச்சி பச்சோந்தியிலிருந்து இருக்கும் தொலைவைப் பொறுத்துள்ளது. பச்சோந்தி பூச்சிகளைப் பிடித்துண்ணுவதற்காகவே, மரத்தில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று, குறிப்பிட்ட உடலமைப்புடன், பல மணி நேரம் காத்திருக்கும். பூச்சி ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு வந்தவுடன், நாக்கை மின்னல் வேகத்தில் வெளியே நீட்டிப் பிடித்துண்ணுகிறது. பச்சோந்தி பல்வேறு வகைக் கணுக்காலிகளைக் குறிப்பாக, அனைத்து வகை வெட்டுக் கிளி, குச்சிப் பூச்சி ஆகியவற்றை விரும்பிப் பிடித்துண்ணுகிறது. அடைத்து வைக்கப் பட்டுள்ள பச்சோந்தி மண் புழு, நத்தை, குளவி, எட்டுக் கால் பூச்சி போன்றவற்றை உண்கிறது. இது, நச்சுப் பூச்சியின் தலைப் பகுதியைப் பிடித்துக் கொன்று, பிறகு, உண்கிறது. இந்நிலையில், நச்சுக் கொடுக்குள்ள பகுதி, வாய்க்கு வெளிப் புறத்திலுள்ளது. அடைத்து வைத்துள்ள பச்சோந்தி நாக்கை மெதுவாக வெளியே நீட்டிக் கிண்ணத்திலுள்ள நீரிலும் செலுத்திக் குடிக்கிறது. சிறியதிலிருந்து, நடுத்தரப் பருமனுள்ள பச்சோந்தி அனைத்துச் சிறிய பூச்சிகளையும் பிடித்துண்ணுகின்றன. ஆனால், மிகப் பெரிய பச்சோந்தி, பூச்சியைப் பிடித்துண்ணுவதுடன், பருமனுள்ள பல்லியையும் உண்கிறது. மெல்லோஸ் கெமலியான் (Mellov's chameleon) என்னும் பச்சோந்தி வகை, சிறிய பறவைகளைப் பிடித்து உண்கிறது. பச்சோந்தியின் பருமனுக்கு ஏற்பப் பிடிக்கும் பூச்சியின் பருமனும் அமைகிறது. கால். மரக் கிளைகளை வளைத்துப் பிடித்துக் கொள்வதற்கு ஏற்பக் கால்கள் நீண்டு, மெலிந்து மாற்றமடைந்துள்ளன. இக்கால்கள் உடலைச் சற்று உயர்த்தி நடக்கவே பயன் படுகின்றன. ஒவ்வொரு காலிலும், ஆறு விரல்களுள்ளன. இவ்வைந்து விரல்களும் இரண்டு பெரும் கற்றைகளாகப் பாதத்தின் நடுப் பகுதியிலிருந்து, நெடுக்காகத் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு கற்றை விரல்களைச் சுற்றிலும், வெளிப் புறத்தில் உறை போன்று தோல் சூழ்ந்துள்ளது. முன் காலில் உள் கற்றையில் மூன்று விரல்களும் உள்ளன. இடுக்கிலுள்ள ஒவ்வொரு கைப்பகுதியும், மற்றொரு கைப்பகுதியை நோக்கி, எதிர்த்துச் செயல் படுவது போல், பச்சோந்தியின் காலிலுள்ள இவ்விரண்டு கற்றைகளும் ஒன்றையொன்று எதிர்த்துச் செயல் பட்டுப் பொருள்களைப் பற்றிக் கொள்கின்றன. இவ்வமைப்பு, பாலூட்டிகளிலுள்ள பிரை மேட்டுகளின் வகைகளின் பெருவிரல் மற்ற விரல்களை நோக்கிச் செயல் படுவது போன்றுள்ளது. மரக் கிளைகளில் நடக்கும் போது, கால்கள் மரக் கிளைகளை எளிதாகவும், இறுக்கமாகவும் பிடித்துக் கொள்ள உதவுகின்றன. இலைகளுக்கிடையே மறைந்து வாழ்வதற்குப் பற்றிக் கொள்ளும் கால்களும், சுருண்டு கொள்ளும் வாலும் உதவுகின்றன. ஒவ்வொரு விரலிலும் கூர் நகமுள்ளது. பாதப் பகுதியில், விரல்களுக்கடியில் பெருத்த மெத்தைப் பகுதிகள் காணப் படுகின்றன. இம்மெத்தைப் பகுதிகள் ஒவ்வொன்றிலும், மிகுதியான குறுக்கு மடிப்புகள் காணப் படுகின்றன. இம்மடிப்புகள், மரத்தில் வேகமாக ஏறிச் செல்வதற்குரிய ஆற்றலைத் தருகின்றன. பச்சோந்தி ஓய்வாக இருக்கும் போது, வால் நாக்குப் பகுதிகளைப் போன்று, கால்களும் சுருண்டும் காணப் படுகின்றன. இவை மரக் கிளைகளின் மேலும், நிலத்தின் மேலும் மெதுவாகவும், கனமாகவும் நடக்கின்றன. ஆனால், பூச்சிகளைப் பிடிக்கும் போது வேகமாகச் செயல் படுகின்றன. சில சமயங்களில், பச்சோந்தி பல மணி நேரம் மரக் கிளையில் அசையாது காணப் படுகிறது. வால். மரக் கிளை அல்லது இலைகளுக்கிடையே மறைந்தும், சுற்றியும் வாழ்வதற்கேற்பப் பச்சோந்தி உருண்டையாக, நீண்ட நுனியில் கூர்மையான வாலைக் கொண்டுள்ளது. ஓய்வாக இருக்கும் போது, கடல் குதிரை போன்று, தன் வால் பகுதியினை அழகாகக் கீழ்ப் புறமாகவும், உட்புறமாகவும், கடிகார முள் சுற்றுத் திசையில் சுருள் போன்று சுற்றி வைத்து கொள்கிறது. மரக் கிளைகளில் நடக்கும் போதும், குச்சி களைப் பிடிக்கும் போதும், வால் ஆதாரமாகக் கிளைகளைச் சுற்றி வளைத்து, இறுகப் பிடித்துக் கொள்ள உதவுகிறது. புரூக்கீசியர் என்னும் வகைப் பச்சோந்தியின் வால் பெரியதாகத் தடித்துள்ளமையால், மரக் கிளைகளைச் சுற்றி இறுகப் பிடித்துக் கொள்ளப் பயனற்றது. பச்சோந்தி, பூச்சியைப் பிடிக்கும் போது, இதன் வால் ஒரு வித உச்ச விசையையும், வலிமையும் கொடுக்கிறது. நீண்ட வால், விலங்குகளுக்குச் சம நிலை உறுப்பாகவும் உடலின் எடையைத் தாங்கும் உறுப்பாகவும் செயல் படுகிறது. வால், மரத்தில் மறைந்து வாழ்வதற்கேற்ற அடிப்படைத் தகவமைப்புகளில் ஒன்றாகும். பல்லி வகைகளில், வால் ஒடிந்து போனால் இழப்பு மீட்டல் பெறுகிறது. ஆனால், பச்சோந்தியில் வால் ஒடிந்து போனதும், இழப்பு மீட்டலும் தோன்றுவதில்லை. நுரையீரல். பச்சோந்தியின் நுரையீரல்களின் பக்க வாட்டத்தில் பையைப் போன்ற பகுதிகள் வெளியில் இணைந்துள்ளன. இப்பைகள், உடலின் பின் முனை வரை நீண்டு வளர்ந்து காணப் படுகின்றன. பைகள் காற்றை உள்ளே மிகுதியாகச் சேர்த்து வைத்து, உடலைப் பெரியதாக மாற்றுகிறது. இச்செயல், ஒரு பெண்ணும், ஒரு பெண்ணும் சண்டையிடும் போது, ஏனைய விலங்குகளைப் புதியதாகச் சந்திக்கும் போது ஏற்படுகிறது.பச்சோந்தியைப் பிடிக்கும் போதும், எதிரிகளைத் தாக்கும் போதும், இது வாயைத் திறந்து, உடலைப் பக்க வாட்டத்தில் ஒடுக்கியும், உயர்த்தியும் காட்டுகிறது. இந்நிலையில், நுரையீரல்களிலும் காற்றுப் பைகளிலும் சேர்த்து, வைத்துள்ள காற்றை வெளியேற்றி, “ஹஸ்” என்னும் உரத்த ஒலியை எழுப்பி, எதிரிகளைத் தாக்குவது போல் ஏமாற்றி, அவ்விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்கிறது. சில சமயங்களில், முன் கால்களை உயர்த்திக் கொண்டே “ஹஸ்” ஒலியை எழுப்புகிறது. இச்செயலின் உதவியால், மனிதனையும் அச்சுறுத்துகிறது. ஊர்வனவற்றில் உடல் வண்ணம் மாற்றமடைதல், எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவா என்பது பற்றிய கருத்தைத் தெளிவாக அறிய முடியவில்லை. முதுகெலும்புள்ள விலங்குகளிலேயே பச்சோந்தி மட்டுமே, உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் அமைப்பைச் சிறப்பாகக் கொண்டுள்ளது. பச்சோந்தி புறச் சூழ்நிலைக்கேற்ப. உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் போதிலும், உடல் வண்ணம் மிகத் துல்லியமாகப் புறச் சூழ்நிலைக்கு ஒப்பாக அமைவதில்லை. மொட்டுகள் மிகுந்த இதன் தோலின் மேலடுக்கு, ஒளி ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. சில விலங்குகளின் கண் போன்ற பகுதிகள், உடல் வண்ண மாற்றத்தைக் கட்டுப் படுத்துகின்றன. ஆனால், பச்சோந்தியில், உடல் வண்ண மாற்றத்திற்குத் தோலின் மேலடுக்- கிற்குக் கீழ்ப் புறத்தில் மறைந்துள்ள சில பகுதிகளும், இப்பகுதியில் நடைபெறும் சில செயல்களும் காரணமாகவுள்ளன. அதாவது, தோலின் மேலடுக்கிற்குக் கீழேயுள்ள பகுதியில் கறுப்பு, மஞ்சள், சிவப்பு வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் செறிந்து காணப் படுகின்றன. ஒவ்வொரு செல்லிலும், மிகுதியான வண்ண நுண் துகள்களுள்ளன. இத்துகள்கள், இடத்திற்கு இடம் நகரும் தன்மை பெற்றவை. வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் (lanophores) நட்சத்திர அமைப்பைக் கொண்டுள்ளன. உடல் மாற்றம் இளஞ் சாம்பல் நிறத்தில் தொடங்கி, இலைப் பச்சை வண்ணமாக மாறுகிறது. இவ்வண்ண மாற்றம், ஒரு சில நொடிகளில் விரைவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு வகைச் சிறப்பினைத்தைச் சார்ந்த பச்சோந்தியும், ஒரு குறிப்பிட்ட வண்ணத்தையே வெளிப் படுத்துகிறது. சில பச்சோந்திகள், பச்சை வண்ணத்தை வெளிப் படுத்தும். சில பச்சோந்திகள் பச்சை வண்ணத்தை வெளிப் படுத்துவதில்லை. கெமலியோ ஐட்டுரியன்சிஸ் என்னும் பச்சோந்தி பச்சை வண்ணத்திலிருந்து, மர வண்ணம் அல்லது கறுப்பு வண்ணமாக மாறுகிறது. இதே போல், காங்கோ காடுகளில் வாழும் கெமலியோ ஓவ்னி (Chameleo oweni) என்பது தலையில், மூன்று கொம்புகளைக் கொண்டுள்ள பச்சோந்தியாகவும், இதன் உடல் வண்ணம் மாற்றமடையும் போது, வெள்ளை, மஞ்சள், சிவப்பு வண்ணங்கள் தோன்றுவதாகவும் உள்ளது. பச்சோந்தி சினமடைவதாலும், அஞ்சுவதாலும், கறுப்பு வண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஏனைய விலங்குகள் துன்புறுத்த முற்படும் போதும், ஏனைய விலங்குகளுடன் போட்டியிடும் போதும், வேறு பட்ட வண்ணத்தை இது வெளிப் படுத்துகிறது. பெண் பச்சோந்தி கருவுற்ற முட்டைகளை இடும் போது, குறிப்பிட்ட வண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. இரண்டு வேறு பட்ட பச்சோந்திகளை தொலைவில் இருத்தி, ஆய்ந்த போது ஒவ்வொன்றும் பல்வேறு வண்ணத்தை வெளிப் படுத்தின. குறிப்பிட்ட அமைப்பின் உடலை வைத்து, முன்னும், பின்னுமாக அல்லது பக்கவாட்டத்தில் அசைந்து, வாயை அகன்று திறந்து, ஹிஸ் ஒலியை எழுப்பி, ஏனைய விலங்குகளை அச்சுறுத்தின. பச்சோந்தி பகலில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்ப, தன் உடல் வண்ணத்தை மாற்றி வெளிப் படுத்துகிறது. மேலும் பகல் நேரத்திற்கு, மரம் அல்லது இலைகளுக்கிடையே மறைந்து, மறைந்து வாழ்வதற்கேற்ப அடர்ந்த பச்சை வண்ணத்தையும், இரவு நேரத்தில் வெளுத்த வண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. வெப்பமும், இருட்டுமுள்ள பகுதியில் வாழும் பச்சோந்தியின் தோல் பச்சை வண்ணத்தையும், குறைந்த வெப்பமும், இருட்டுமுள்ள பகுதியில் வாழும் பச்சோந்தியின் தோல் இளமஞ்சள் வண்ணத்தையும் பெறுகின்றன. கறுப்பு வண்ணப் பச்சோந்தியில் தோல் கூடுதலாகச் சூரிய வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், வெளுத்த வண்ணத்தைக் கொண்டுள்ள பச்சோந்தி, குறைந்தளவு வெப்பத்தையே எடுத்துக் கொள்கின்றது. பாலைவனத்திலுள்ள பச்சோந்தி, ஒளியை எதிர்பலிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும், கார்மேகங்களுள்ள நேரத்தில், பச்சோந்தி இளம் பச்சை வண்ணத்தையும், மழை பெய்யும் போது, கறுப்பு வண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. பச்சோந்தியை மேலும், மேலும் துன்புறுத்தினால், இவ்விலங்கிலுள்ள அனிச்சை செயல் நரம்பு மண்டலம் (sympathetic nervous system) தோலிலுள்ள வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்களுக்கு, இச்செய்தியை அனுப்புகிறது. இதனால், வண்ண நுண் துகள்களும் செல்களை அரைகுறையாக அல்லது முழுமையாகச் சுருங்கி, விரிவடையச் செய்து வண்ணத்தைக் கொடுக்கும். வண்ண மாற்றத்தின் போது, வண்ண நுண் துகள் செல்கள் பல கிளைகளாகப் பிரிந்து, பெரிய செல்களாக மாறுகின்றன. இந்நிலையில், வண்ண நுண் துகள்கள் சீராகப் பரவி, வண்ணத்தைக் கொடுக்கின்றன. பச்சோந்தி பெரியதாக மாறும் போது, கறுப்பு, சிவப்பு தோல் மஞ்சள் வண்ணத்தைப் பெறுகிறது. இதே போல், சிவப்பு, மஞ்சள் வண்ண நுண் ஆரஞ்சுப் பழ வண்ணத்தை அடைகிறது. வெள்ளை வண்ண நுண் துகள்களைக் கொண்டுள்ள செல்கள் ஒளிரும் தன்மை பெற்றன. வண்ணம், நுண் துகள்களுள்ள செல்கள் சுருங்குவதால், அவற்றிலுள்ள இடைவெளி குறைந்து, வண்ண துகள்களை நெருக்கமாகக் கொண்டு காணப் படுகின்றன. இதனால், தோலின் வண்ணம் கறுப்பாக மாறுகிறது. ஆகையால், செல்கள் சுருங்குவதாலும், பச்சோந்தியின் தோலில் வண்ண மாற்றம் நிகழ்கிறது. வண்ண நுண் துகள்களுள்ள செல்கள் சுருங்கி விரியவும், அவற்றின் வண்ண மாற்றத்திற்கும் குரிய வெளிச்சம், வெப்பம், தீவிர உணர்ச்சி, செயலியல் போன்றவை முதன்மையாக உள்ளன. வண்ண நுண் துகள் மாற்றத்திற்குப் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின் பகுதியிலிருந்து வரும் ஹார்மோன்கள் அடிப்படையாகச் செயல் படுகின்றன. உடல் வண்ணத்தை மாற்றி, ஏனைய விலங்குகள் அறியாதவாறு தன் உடலை நீண்ட நேரம் அசையாது, மரக் கிளைகளில் மறைந்திருந்து, விலங்குகளைப் பிடித்துண்ணக் காத்திருக்கிறது. இது புறச் சூழ்நிலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்வதால், இவ்வமைப்பு ஏனைய விலங்குகளை ஏமாற்றவும், தாக்கவும், தப்பித்துக் கொள்ளவும், இனப் பெருக்கம் செய்யவும் உதவி புரிகிறது. வண்ண மாற்றம் உடலில் நடைபெறும் ஒரு குறிப்பிட்ட உடற்செயலினை எடுத்துக் காட்டும் வகையில் அமைகிறது. வண்ண மாற்றமும், பல அறிகுறிகளும், பச்சோந்தி ஏனைய விலங்குகளுடன் சண்டை போடப் போவதை எடுத்துக் காட்டுகின்றன. இனப் பெருக்கம். இனப் பெருக்கக் காலத்தில், ஆண் உயிரிகள், பெண் உயிரிகளை விட, அழகிய வண்ணத்தைக் கொண்டுள்ளன. ஆண் உயிரிகளின் பின் கால்களில் தடித்த முள்களுள்ளன. ஆண் உயிரிகளுக்கிடையே சண்டை தோன்றுகிறது. இதில் வெற்றி பெற்ற ஆண் உயிரி, பெண் உயிரியுடன் இனப் பெருக்கம் செய்கிறது. இந்நிலையில், ஆண் உயிரி, பெண் உயிரியின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது. இதன் இனப் பெருக்கக் காலம், இடத்திற்கு இடம் ஏற்ப வேறுபடுகிறது. இனப் பெருக்கக் காலம், பருவக் காலத்தின் நடுவில் தொடங்கி அடுத்து வரும் பருவக் காலத்தின் தொடக்கத்தில் முடிகிறது. இனப் பெருக்கம் முடிந்த பிறகு, சில பச்சோந்திகள் கருவுற்ற சில முட்டைகளை நிலத்தில் இடுகின்றன. அதாவது, முட்டையிடும் பச்சோந்தி மரத்தில் மறைந்து வாழும் பழக்கத்தை விட்டு விட்டு, நிலத்திற்கு வருகிறது. பெண் பச்சோந்தி இலையுதிர் காலத்தில், முன் கால்களாலும் கொண்டைப் பகுதியின் உதவியாலும், நிலத்தில் ஏறத் தாழ 20 செ.மீ. ஆழமும் 10 செ.மீ. விட்டமும் கொண்ட வளையைத் தோண்டுகிறது. தோண்டிய மண்ணைப் பின் கால்களால் வெளியே தள்ளுகிறது. இவ்வாறு முன்பே தோண்டிய வளையில், பெண் பச்சோந்தி கருவுற்ற முட்டைகளையிட்டு, மண்ணைக் கொண்டு மறைத்த பிறகு, மீண்டும் மறைந்து வாழ மரத்திற்கு வருகிறது. பெண் பச்சோந்தி முட்டைகளையிட்ட பிறகு, நீண்ட நாள்களுக்கு வாழ்வதில்லை. சில பெண் பச்சோந்திகள் இட்ட அனைத்து முட்டைகளையும் பாதுகாக்கின்றன. இந்தியப் பச்சோந்தி 30–40 கருவுற்ற முட்டைகளை, ஓர் இனப் பெருக்கக் காலத்தில் தொடர்ந்து இடுகிறது. ஒவ்வொரு முட்டையும் 20 மி.மீ. நீளமும், 10 மி.மீ. விட்டமும் பெற்றிருக்கும். முட்டையின் இரு முனைகளும் ஒரே அளவு விட்டத்தைக் கொண்டுள்ளன. இம்முட்டை தோல் போன்று, ஒளி ஊடுருவிச் செல்லும் ஓட்டைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு முட்டையும், ஒரு கிராமிற்குச் சற்றுக் கூடுதலான எடையைக் கொண்டுள்ளது. வெப்ப நிலைக்கு ஏற்ப, முட்டையை அடை காக்கும் காலமும் 4–10 மாதங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. சில பெண் பச்சோந்திகள் [(எ.டு) கெமலியோ பைட்டே நியாட்டஸ், கெ.ஹொனிலி, கெ.இல்லியோட்டி] கருவுற்ற முட்டைகளை நிலத்தில் இடுவதற்குப் பதிலாக, உடலிலும் கருப்பையில் நிறுத்தி வைக்கின்றன. பச்சோந்தியின் வளர் கரு ஒவ்வொன்றையும் சுற்றி, மென்மையான கருப்புறச்சவ்வுகள் உள்ளன. முழு வளர்ச்சியடைந்த பிறகு, இவ்வளர் கரு பக்க வாட்டத்தில் திரும்பி அசைவதால், கருப்புறச் சவ்வுகள் கிழிந்து விடுகின்றன. இதனால், முழு வளர்ச்சியடைந்த வளர் கருதான் உயிரியிலிருந்து உயிருடன் தனித்து வெளியே வருகிறது. கெ.ஹோனில் என்னும் பச்சோந்தி 8–11 குட்டிகளையும், கே.பைட்டே நியாட்டஸ் என்னும் பச்சோந்தி 25 குட்டிகளையும் ஈன்றெடுக்கின்றன. இளம் உயிரிகள் தாய் உயிரியிலிருந்தும், கருப் புறச் சவ்வுகளிலிருந்தும் வெளியே வந்தவுடன், முட்டை ஓட்டில் சிறிதளவு கருவூண் மட்டும் தங்கியுள்ளது. வெளியே வந்த ஒவ்வோர் இளம் உயிரியும், 4 செ.மீ. நீளத்தைக் கொண்டுள்ளது. முட்டையிலிருந்து அல்லது தாய் உயிரியின் இனப் பெருக்க உறுப்பிலிருந்து வெளியே வந்த இளம் உயிரி, ஒவ்வொன்றும் பெற்றோர் உயிரிகளைப் போன்றும், தாய் உயிரியின் உதவியின்றியும், வேகமாகவும், தனித்தும் மரக் கிளைகளுக்கும், புதர்களுக்கும் சென்று, சிறு பூச்சிகளைப் பிடித்துண்டு, உயிர் வாழத் தொடங்கும். இக்குட்டி, ஆங்காங்கே அலைந்து திரிவதால், பல பகுதிகளுக்கும் பிரிந்து செல்கிறது. இது, நிலம் அல்லது மரக் கிளைகளில் நடக்கும் போது, ஊசல் ஆடுவது போன்று, முன்னும் பின்னுமாக அசைகிறது. பெற்றோர் உயிரிகளின் பெரும்பாலான இயல்புகள், பிறந்த இளம் குட்டிகளில் காணப் படுகின்றன. இருப்பினும், இளம் உயிரிகளுக்குரிய வண்ணமும், அடையாளமும் காணப் படுகின்றன. இளம் உயிரி விரைவாக வளர்ந்து, முதலாம் ஆண்டு முடிவதற்குள், பாலின முதிர்ச்சி (Sexual maturity) அடைகிறது. பச்சோந்தியின் வாழ்நாள் இது வரை துல்லியமாக அறிந்து கூறப் படவில்லை. இருப்பினும், இதன் வாழ்நாள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக இருக்கலாம். வகை. பச்சோந்திக் குடும்பத்தில், இரண்டு இனங்களும் 85–90 சிறப்பினங்களும் உள்ளன. பெரும்பாலான சிறப்பினங்கள் மடகாஸ்கர் தீவு, ஆப்பிரிக்கா, இந்தியக் காடுகளில் மிகுந்து காணப் படுகின்றன. மடகாஸ்கர் தீவில் வாழும் பச்சோந்தி, பல வகைகளில் சிறப்படைந்து காணப் படுகிறது. கெமலியோ என்னும் இனம் மிகப் பெரிய உருவத்தைக் கொண்டுள்ளது. இது 70 சிறப்பினங்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாட்டுப் பச்சோந்தியைக் கெமலியோ கெமலியான் (Chameleo chameleon) என்பர். இதன் உடல் நீளம் 25–28 செ.மீ. வரையுள்ளது. வாலின் நீளம் 12 செ.மீ. ஆகும். இது ஆப்பிரிக்காவின் வட பகுதியில் நிலத்தில் வாழ்கிறது. மேலும், பாலைவனச் சோலைப் பகுதியின் ஓரத்திலுள்ள வளைகளிலும், தாவரங்களில்லாத மணல் மேடுகளிலும் வாழும். பச்சை வண்ணத்திற்குப் பதிலாக, மஞ்சள் வண்ணம் கலந்த மர வண்ணத்தை இது கொண்டுள்ளது. வெட்டுக் கிளியை விரும்பிப் பிடித்துண்ணும். இது முன்னும், பின்னுமாக அசைந்து மெதுவாக நடக்கும். ஆண், பெண் பச்சோந்திகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாகும். இனப் பெருக்கக் காலத்தில், பல ஆண்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது. இனப் பெருக்கம் செய்யும் நேரத்தில், ஆண் பச்சோந்தியின் வண்ணம் கறுப்பாக மாறுகிறது. சில சமயங்களில், இனப் பெருக்கம் செய்து கொண்டிருக்கும் போது, ஆண், பெண் பச்சோந்திகள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொள்கின்றன. கருவுற்ற பெண் பச்சோந்தி, முட்டைகளை நிலத்தில் இட்டுப் புதைத்து வைக்கிறது. ஆப்பிரிக்கப் பச்சோந்தியைக் கெமலியோ ஆப்பிரிக்கன்ஸ் (Chameleo Africans) என்பர். இது 37 செ.மீ. நீளமுள்ளது. இதன் வால் 20 செ.மீ. நீளமுள்ளது. இதன் முதுகுப் பகுதி உயர்ந்து காணப் படுகிறது. ஆண் உயிரியின் பின் கால்களில் தடித்த முள்களுள்ளன. எக்கர்ஸ் என்பாரின் கூற்றுப்படி, இப்பெண் பச்சோந்தி, அக்டோபர் மாதத்தில் 35 கருவுற்ற முட்டைகளை இடுகின்றது. இப்பச்சோந்தி அடுத்து வரும் ஆண்டில், ஜுன் முதல் முட்டைகளிடுவதில்லை. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இளம் உயிரிகள் முட்டையிலிருந்து வெளியே வருகின்றன. இவ்விளம் உயிரிகளில் ஆண் பச்சோந்தி 16 மாதங்களில் 8–31 செ.மீ. நீளம் வளர்கிறது. தொடர்ந்து, அதே இலையுதிர் காலத்தில் முதிர்ச்சியடைந்த பெண் பச்சோந்தி, ஏறத் தாழ ஏழு கருவுற்ற முட்டைகளை இடுகிறது. இதே பெண் பச்சோந்தி, அடுத்து வரும் ஆண்டில், கூடுதலான கருவுற்ற முட்டைகளை இடுகிறது. ஆனால், இம்முட்டைகளிலிருந்து எவ்வித இளம் உயிரிகளும் வருவதில்லை. முட்டையிலிருந்து வெளியே வந்த புதிய, முதிர்ச்சியடைந்த இளம் உயிரிகள் 14–15 மாதங்களுக்குப் பிறகே, இனப் பெருக்கம் செய்கின்றன. ஆகஸ்ட்டு மாத இறுதியில், கருவுறுதல் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, பெண் பச்சோந்தி அதிக வண்ணத்தையும், உடலில் அதிகக் கொழுப்புப் பொருளையும் சேர்த்து வைக்கிறது. பிறகு, இப்பெண் பச்சோந்தி, அக்டோபர் மாத நடுவில் 53 கருவுற்ற முட்டைகளை வளையில் இட்டு, மண்ணால் மூடி மறைக்கிறது. ஒவ்வொரு முட்டையும் 13 மி.மீ. விட்டமும், 18 மி.மீ. நீளமும் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆண்டின் ஜுன் மாதத்தில் ஒரு சில முட்டைகளிலிருந்து 6 செ.மீ. நீளமுள்ள இளம் உயிரிகள் வெளியே வருகின்றன. அடுத்த ஜுலைக்குள் அனைத்து முட்டைகளிலிருந்தும், இளம் உயிரிகள் வெளியே வருகின்றன. அனைத்து இளம் உயிரிகளும், அடுத்து வரும் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை வாழ்கின்றன. இவை டிசம்பர் மாதம் வரை தூங்கிய நிலையிலுள்ளன. மேலும், இவற்றின் பெற்றோர் ஜனவரி மாதம் வரை உறக்க நிலையிலுள்ளன. இவ்வகைப் பச்சோந்திகள், ஆப்பிரிக்காவிலிருந்து எத்தியோப்பியா வரை பரவிக் காணப் படுகின்றன. கெமலியோ டில்லிப்பிஸ் (Chamaleo dilepis) வகைப் பச்சோந்தி, ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் மிகுந்து காணப் படுகிறது. இது, கெமலியோ ஆப்பிரிக்கானஸ் என்னும் பச்சோந்தியைப் போன்று, தோற்ற ஒப்புமையைக் கொண்டு உள்ளது. கெ.டில்லிப்பிஸ் பச்சோந்தியின் தலையின் மேல், தசை மடிப்புகள் காணப் படுகின்றன. அடுத்த உயிரியைத் கண்டவுடன், இது தசை மடிப்புகளை உயர்த்தி, விரித்துக் காட்டுகிறது.இது இடர் ஏற்படும் போது, கரும் பச்சையுடன், மஞ்சள், வெள்ளை வண்ணப் புள்ளிகளைத் தோற்றுவிக்கிறது. இப்பச்சோந்தி இலைகளுக்கிடையில், பச்சை வண்ணத்தையும், மரப் பட்டையிலும், கிளைகளின் மேலும் இருக்கும் போது, மர வண்ணத்தையும் கொண்டுள்ளது. பெரும்பாலும், இது சிறிய மரத்திலும், புதர்களிலும் வாழ்கிறது. புதிய புதருக்குச் செல்ல அல்லது நிலத்தில் வளை தோண்ட, இது புதரிலிருந்து நிலத்திற்கு இறங்கி வருகிறது. ஆறு மாதம் தோண்டிய வளையில் 30–40 முட்டைகளை இடுகிறது. எதிரிகளைச் சந்திக்கும் போது, பாம்பை போன்று உடலை விரித்து, உயர்த்தி வரிகளை ஏற்படுத்தி ‘ஹிஸ்’ என்னும் ஒலியை உண்டாக்குகிறது. கெமலியான் வல்காரிஸ் (Chameleon valgaris) என்னும் சிறப்பினம் வட ஆப்பிரிக்கா, சிரியா, ஆசியா ஐரோப்பாவின் தென் பகுதியில் காணப் படுகிறது. கெமலியோ கிரிஸ்ட்டாட்டஸ் (Chamelio cristatus) என்னும் வகைப் பச்சோந்தி, ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் வாழ்கிறது. இதன் முதுகுப் புறத்தில், நெடுக்காக முள் போன்ற செதில்கள் பின் புறம் நோக்கிக் காணப் படுகின்றன. இப்பச்சோந்தி, மகரதப் பச்சை வண்ணத்தைக் கொண்டுள்ளது. இவ்வண்ணம், மடகாஸ்கர் தீவுப் பகுதியில், வறண்ட நிலத்தில் வாழ்வதற்கு ஏற்றதாகும். இது பெரும்பாலும், பெரிய வெட்டுக் கிளிகளைப் பிடித்துண்ணுகின்றது. மேலும், சிறிய பல்லி, பறவையின் குஞ்சு, சிறிய பாலூட்டி ஆகியவற்றையும் உண்கிறது. கெமலியோ வெருக்கோசன் (Chameleo verrucosus) என்னும் சிறப்பினம், தன் உடல் வண்ணத்தை மாற்றும் தன்மையை இழந்துள்ளது. இது வறண்ட காட்டிலும், பாலைவனத்திலும் உயர் வெப்ப நிலையில் வாழ்கிறது. இது கருவுற்ற முட்டைகளை நிலத்திலுள்ள வளைகளிலிட்டு, மண்ணால் மூடி மறைக்கிறது. கெமலியோ பார்டாலிஸ் (Chameleo pardalis) என்னும் பச்சோந்தியைப் பேந்தர் கெமலியாஸ் என்பர். இது மொரிசியஸ் தீவுகளில் மிகுந்து காணப் படுகிறது. இதன் உடலில், நெடுக்காக ஒரு பச்சை வண்ணக் கோடும், கறுப்பு சிவப்புக் கலந்த பல குறுக்குக் கோடுகளும் காணப் படுகின்றன. கண்ணாடியில், தன் உருவத்தைப் பார்த்தவுடன், இது தன் உடல் வண்ணத்தை மங்கலாக மாற்றிக் கொள்கிறது.வாயின் விளிம்புப் பகுதி, மஞ்சள் வண்ணமாகக் காணப் படுகிறது. இப்பச்சோந்தி, பகலில் குறிப்பிட்ட நேரத்தில் சுறுசுறுப்பாகச் செயல் படுகிறது.தூங்குவதற்கும், வெளிச்சத்தில் காய்வதற்கும், மரத்தில் குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுக்கிறது. இடர் ஏற்பட்டால், உணவு உண்ணாது, உடலைப் பெருக்கச் செய்து, இருட்டுப் பகுதிக்குச் செல்கிறது. வெட்டுக் கிளி, வண்ணத்துப் பூச்சி புழுக்களை விரும்பி உண்ணுகிறது. கெமலியோ பார்சோனி (Chameleo parsoni) என்னும் பச்சோந்தியைப் பார்சன் கெமலியான் என்பர். இதன் மேல் தாடை நுனியின் வெளிப் புறத்தில் மேல் புறமாகத் திரும்பியுள்ள இரண்டு கொம்பு போன்ற மொட்டுப் பகுதிகளுள்ளன. தலையின் உச்சியில், கவசம் போன்ற நீண்ட பின் புறம் உள்ளது. இச்சிறப்பினத்தைப் பற்றி ஆய்வுக் கருத்துக்கள் உள்ளன. இது வாழும் பகுதியாகிய, ஐரோப்பாவிலிருந்து கிடைக்கப் பெறவில்லை. கெமலியோ பிரிவிக்கார்நிஸ் (Chameleo brevicornis) என்னும் மடகாஸ்கர் தீவில் வாழும் சிறப்பினங்கள், குட்டையான கொம்புகளைக் கொண்டுள்ளன. இவற்றின் உடலின் நீளம் 25–34 செ.மீ. வாலின் நீளம் 13.5–20 செ.மீ. ஆண் உயிரியின் மேல் தாடை நுனியில் மட்டும், ஒரு மொட்டுப் போன்ற பகுதியுள்ளது. இம்மொட்டின் மேல் பகுதியில், மிகுதியான பெரிய செதில்களுள்ளன. ஆண், பெண் உயிரினங்கள் தலையில் பின் புறத்தின் உச்சியில், ஒரு பெரிய தோல் மடிப்பை, யானையின் காது போன்று விரித்து உயர்த்தி அச்சுறுத்தும். பச்சை–சிவப்பு வண்ணங்களில் இது அமைகிறது. பெண் பச்சோந்தியிலுள்ள குட்டையான கொம்புகள், நிலத்தில் வளை தோண்ட உதவுகின்றன. இப்பச்சோந்தி ஏறத் தாழ, 40 முட்டைகளை இடுகிறது. ஒவ்வொரு முட்டையும் 1 செ.மீ நீளமுள்ளது. மென்மையான ஒளி ஊடுருவிச் செல்லும் தோல் போன்ற முட்டைஓட்டைக் கொண்டுள்ளது.முட்டைகளை, மண்ணால் மூடி வைக்கிறது. அடுத்த நாளில், பெண் பச்சோந்தி வெட்டுக் கிளியை மிகுதியாகப் பிடித்துண்ணுகிறது. மேலும், வண்ணத்துப் பூச்சியில், புழுக்களையும், சுண்டெலியின் குட்டிகளையும் உண்கிறது. முட்டைகள் வயிற்றில் இருக்கும் போது, சீரான மர வண்ணத்தைக் கொண்டுள்ளன. கெமலியோ ஒவ்னி (Chameleo oweni) என்னும் பச்சோந்தியை, ஒன் மெகலியான் என்பர். இதன் மூக்கின் மேல் 14–15 செ.மீ. நீளமுள்ள மூன்று கொம்புகளுள்ளன. இதனால், இப்பச்சோந்தி தோற்றத்தில் கிரிட்டேசியன் காலத்தில் வாழ்ந்த டிரிசெரட்டோப்ஸ் என்னும் ராட்சசப் பல்லிக்கு ஒப்பாகவுள்ளது. இப்பச்சோந்தி, சுறுசுறுப்பாகச் செயல் படக் கூடியது. மனிதர்களை நோக்கி அஞ்சாது, நெருங்கி வாழக் கூடியது. கெமலியோ மெல்லெரி (Chamaeleo mellari) என்னும் பச்சோந்தி மில்லர் மெகலியான் எனப் படுகிறது. 54–58 செ.மீ. நீளமுள்ள வாலைக் கொண்டுள்ளது. இது மடகாஸ்கர் தீவிற்கு வெளிப் பகுதியில் காணப் படும் பச்சோந்திகளில் மிகப் பெரியதாகும். இதன் மூக்கின் மேல், சிறிய கொம்புகள் காணப் படுகின்றன. இக்கொம்புகள் ஆண், பெண் இரண்டிற்கும் காணப் படுகின்றன. இதன் உடலில், இளம் பச்சை வண்ணத்தையும், மஞ்சள் வண்ணப் பட்டைக் கோடுகளையும், பக்க வாட்டத்தில், பெரிய கறுப்பு வண்ணப் புள்ளிகளையும் காணலாம். ஆண் பச்சோந்தி தலையைத் தொடர்ந்து, அடிக்கடி அசைக்கிறது. இதற்கு மாறாகப் பெண் பச்சோந்தி, உடலை முன்னும் பின்னுமாக அசைக்கிறது. இவ்வகைப் பச்சோந்தி நிலத்தில் முட்டையிடுகிறது. கெமலியோ ஃபர்சிஃபர் (Chameleo furcifer) என்னும் சிறப்பினம், மடகாஸ்கர் தீவுப் பகுதியில் வாழ்கிறது. இது 13.5 செ.மீ. உடல் நீளத்தையும், 6.5 செ.மீ. வால் நீளத்தையும் கொண்டுள்ளது. மூக்கின் மேல் சில மொட்டுகளுள்ளன. கெமலியோ ஃபிரிச்சேரி (Chameleo fischeri) என்னும் பச்சோந்தியின் மூக்கின் மேல் கொம்பு போன்ற பகுதிகள் காணப் படுகின்றன. இது ஆப்பிக்காவில் மிகுந்து காணப் படுகிறது. இவ்வகைப் பச்சோந்தியை, ஃபிரிச்சேரி கெமலியான் என்பர். ஆண் பச்சோந்தி எதிரிகளைக் கொம்புகளின் உதவியால் தாக்குகிறது. இது, ஏனைய சிறிய பல்லி வகைகளுடன் பின் தொடர்ந்து செல்கிறது. புதிய சூழ்நிலைக்கு வரும் போது, நீண்ட நேரம் தன் நாக்கின் உதவியால், மரக் கிளைகளை நக்கி உணர்ந்த பிறகே, மரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்கிறது. கெமலியோ லேட்டிராலிஸ் (Chameleon lateralis) என்பது நீலம், மஞ்சள், கறுப்பு வண்ணம் கலந்த உடலைக் கொண்டுள்ளது. ஓய்வாக இருக்கும் போது, கரும் பச்சை வண்ணத்தையும் உடலின் நெடுக்கு வாட்டத்தில், ஒரு கோட்டையும் பெற்றுள்ளது. வாலில், பல குறுக்குக் கறுப்புக் கோடுகளுள்ளன. உடலின் பக்க வாட்டத்தில், பல வளையக் கோடுகளுள்ளன. இவ்வகைப் பச்சோந்தி மடகாஸ்கர் தீவில் பல பகுதிகளில் காணப் படுகிறது. இது உயர்ந்த நிலப் பகுதியில் மிகுந்துள்ளது. சூரியன் தோன்றிய பிறகு, இதைப் பிடிக்க முடிவதில்லை. மரக் கிளையின் நுனி வரை சென்று, சூரிய வெளிச்சத்திற்கு நேர் செங்குத்தாக இது அமர்கிறது. உடலின் தேவையான வெப்பத்தைப் பெற்ற பிறகு, இது நிழல் பகுதியை நோக்கிச் சென்று, பச்சை வண்ணத்தைப் பெற்றுக் காணப் படுகிறது. கெமலியோ மோன்ட்டியம் (Chameleo montium) என்னும் பச்சோந்தியை மவுன்டன் கெமண்டால் என்பர். இதற்கு நீண்ட கண்டங்களாலான இரண்டு கொம்புகளுள்ளன. முதுகுப் புறத்தில், நெடுக்காகத் துடுப்புப் போன்ற தோல் மடிப்புக் காணப் படுகிறது. இத்தோல் மடிப்பு, வாலின் தொடக்கம் வரை காணப் படுகிறது. பகலில் இதைப் பார்ப்பது அரிது. மாலையில் அல்லது இரவில், புதர்களின் மேல் ஒளியைச் செலுத்தினால், இது நடந்து செல்வதை அறியலாம். இது பொதுவாக, மரத்தின் வெளிப் புறத்திலுள்ள கிளைகளில் இளம் பச்சை வண்ணத்துடன் ஓய்வு எடுக்கிறது. பச்சோந்தி அழகிய வண்ணத்துடன் காணப் படுகிறது. உடல் இலைப் பச்சை வண்ணத்தைக் கொண்டுள்ளது. ஆங்காங்கே நீல நிறப் புள்ளிகளும், மஞ்சள் வண்ணத்தில் மின்னும் புள்ளிகளும் உள்ளன. மரத்தில் மறைந்திருக்கும் போது, இதைக் கண்டு பிடிப்பது கடினம். மனிதர்களைக் கண்டவுடன், இது பறந்து செல்கிறது. இவ்வுயிரியிலுள்ள கொம்புகள், இனப் பெருக்கக் காலத்தில் இடர் தரும் உயிரிகளைத் தாக்க உதவுகின்றன. கெமலியோ ஜாக்சோனி (Chameleo jacksoni) என்னும் பச்சோந்தியின் மூக்கின் மேல், மூன்று கொம்புகள் உள்ளன. பெண் பச்சோந்தியில், நடுவிலுள்ள கொம்பு மட்டும் சிறியதாகக் காணப் படுகிறது. கண்களின் மேல் சிறிய மொட்டுப் போன்ற கொம்புப் பகுதிகள், இளம் பச்சை வண்ணத்தைக் கொண்டுள்ளன. விடியற்காலையில், இது உடலைச் செங்குத்தாகவும், தட்டையாகவும், சூரியனை நோக்கி வைத்துக் கொள்கிறது. சூரிய வெப்பத்தை உடலினுள் எடுத்து, மஞ்சள் வண்ணமாக மாறுகிறது. இது முட்டையிட்டுக் குட்டிப் போடுகிறது. முட்டைகள் மென்மையான தோல் போன்ற ஓட்டைக் கொண்டுள்ளன. இப்பச்சோந்தி 36–40 முட்டைகளை இட்டுக் குட்டிகளைப் பெற்றெடுக்கிறது. இளம் குட்டி பிறந்தவுடன் 52–55 மி.மீ. நீளமுள்ளது. வால் 23–25 மி.மீ. நீளமுள்ளது. ஒவ்வொரு பிறந்த குட்டியின் மூக்கின் மேலும், தெளிவான சிறிய கொம்புப் பகுதி காணப் படுகிறது. இக்கொம்புப் பகுதியின் மேல், கூம்பு வடிவச் செதில் காணப் படுகிறது. கண்ணிற்கு முன் புறத்தில் இரண்டு குட்டையான கொம்புகள் இணைந்து, காணப் படுகின்றன. இவை பச்சை, கறுப்பு, வெள்ளை வண்ணங்களைக் கொண்டுள்ளன. இளம் குட்டிகள் சாம்பல் வண்ணத்துடன் கறுப்பு வண்ணக் கோடுகளைப் பெற்றுள்ளன. கூரிய முனையின் கீழ் நோக்கி முக்கோண வடிவ 3–4 வெள்ளை வண்ணப் புள்ளிகள் காணப் படுகின்றன. இக்குட்டிகள் பிறந்த நாளில் விடியற்காலையிலேயே, உணவு உண்ணத் தொடங்குகின்றன. குட்டி பெற்றோர்களைப் போன்று, உடலின் நீளத்தை விட, மிகுந்த நீளமான நாக்கினை மின்னல் வேகத்தில் வேகமாக நீட்டிச் சிறு பூச்சிகளைப் பிடித்துண்ணுகிறது. இக்குட்டி அச்சமின்றித் தாய்ப் பச்சோந்தியுடன் காணப் படுகிறது. உடலைப் பக்க வாட்டத்தில் ஒட்டினாற் போல், தட்டையாக மாற்றிக் கறுப்பு வண்ணத்தைப் பெற்றுக் காணப் படுகிறது. குட்டையான கால்களின் உதவியால், உடலை முன்னும், பின்னுமாக அசைக்கிறது. மேலும் அடிக்கடி வாயை அகன்று திறக்கிறது. கெமலியோ பையிட்டேனியேட்டஸ் (Chameleo pitaniatus). இப்பச்சோந்தியை ஆப்பிரிக்க இரண்டு கோடுகளுள்ள பச்சோந்தி என்பர். இது, ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் வாழ்கிறது. இது கரு முட்டைகளை வயிற்றினுள் வைத்துக் குட்டிகளை ஈன்றெடுக்கும் வகையைச் சார்ந்தது. இதில் பச்சை வண்ணம் தோன்றுவதில்லை. ஆண் உயிரியில், வெளுத்த மர வண்ணமும், உடலின் பக்க வாட்டத்தில் பல கோடுகளும் காணப் படும். பெண் உயிரியில், வெள்ளை வண்ணமுள்ள சில புள்ளிகள் மர வண்ணமுள்ள புள்ளிகளின் மேல் காணப் படுகின்றன. பெண் பச்சோந்தி மிகக் குறைந்த கறுப்பு வண்ணத்தைக் கொண்டுள்ளது. ஆனால், ஏனைய உயிரி தாக்க வரும் போது, இது சுறுசுறுப்பாக வாயைத் திறந்து ‘ஹிஸ்’ என ஒலி எழுப்புகிறது. ஒரு பருவத்தில் மட்டும் 10–25 இளம் குட்டிகளை ஈன்றெடுக்கிறது. 4 செ.மீ. நீளமுள்ள இளம் குட்டி ஓராண்டு வரை வளர்கிறது. கெமலியோ ஹோனிலி (Chamaeleo hoehneli) என்னும் பச்சோந்தி கரு முட்டைகளை வயிற்றில் நிறுத்தி, முழு வளர்ச்சியடைந்த குட்டிகளை ஈன்றெடுக்கும் சிறப்பினமாகும். இது, ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலுள்ள உயர்ந்த காடுகளில் மிகுதியாக வாழ்கிறது. மெலியோ பைபிட்டே னியட்டஸ் என்னும் சிறப்பினத்துடன், இனத் தொடர்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், தனிச் சிறப்பினமாகக் கருதப் படுகிறது. இது, தன் மர வண்ணம் அல்லது கறுப்பு வண்ணத்தைப் பல்வேறு வகைப் பச்சை வண்ணங்களாக மாற்றுகிறது. ஆண் உயிரியின் தலையின் மேலும், முதுகுப் பகுதியிலும் மஞ்சள் வண்ணம் காணப் படுகிறது. இளம் குட்டிகள் பச்சை வண்ணத்தைக் காட்டுவதில்லை. ஆண் பச்சோந்திகளுக்கிடையே சண்டை ஏற்படுகிறது. தோற்ற உயிரி கறுப்பு வண்ணத்தைப் பெறுகிறது. பெண் பச்சோந்தி, பத்து இளம் குட்டிகளை ஈன்றெடுக்கிறது. இவ்விளம் குட்டி பிறந்த இடத்திலிருந்து முதல் நாளிலேயே வேகமாக நீண்ட தொலைவு செல்கிறது. இக்குட்டிகள் தாவரங்களில் இருக்கும் போது, சூரிய ஒளி படும் பகுதியை நோக்கி, விருப்பமாகச் செல்கிறது. இந்நிலையில், ஏனைய உயிரிகள் அருகில் சென்றால், வாயைத் திறந்து அச்சுறுத்துகிறது. பத்து மாத வயதுள்ள பெண் பச்சோந்தி 5 இளம் குட்டிகளை ஈன்றெடுக்கிறது. கெமலியோ பூமிலஸ் (Chamaeleo pumilus) என்னும் பச்சோந்தியை, டுவார்ஃப் கெமலியான் என்பர். இது குட்டி போடும் (Ovovivoparous) வகையைச் சார்ந்தது. தென் ஆப்பிரிக்காவில், குளிர்ந்த மலைப் பகுதிகளில், இது பெரும்பான்மையாகக் காணப் படுகிறது. இதன் முதுகுப் பகுதியில், தலையிலிருந்து வாலின் இறுதி வரை, நெடுக்காகவும், வரிசையாகவும் செதில்கள் முள் போன்று நீண்டு காணப் படுகிறது. ஒரு பெண் பச்சோந்தி 3 செ.மீ. நீளமுள்ள, குறைந்தது 17 இளம் குட்டிகளை ஈன்றெடுக்கிறது. பிறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இவ்விளம் குட்டி நாக்கை வெளியே நீட்டிப் பழ ஈக்களைப் பிடித்துண்ணுகிறது. நாக்கை அடிக்கடி வெளியே நீட்டும் இக்குட்டி, முதலில் வாயையும், கண்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பயன் படுத்தத் தெரிந்து கொள்கின்றது. பிறந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, இக்குட்டி முதன் முதலாகத் தோலை உரிக்கின்றது. ஒரு மாதத்திற்கு பிறகு, இக்குட்டி பச்சை அல்லது மஞ்சள் வண்ணமாக மாறுகிறது. முதிர்ச்சியடைந்த பச்சோந்தி, பச்சை வண்ணத்துடன், நீல வண்ணப் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு காணப் படுகிறது. மேலும், செயல் நிலையையும், காலத்தையும்; வெப்ப நிலையையும் பொறுத்துப் பச்சோந்தியின் வண்ணம் மஞ்சளிலிருந்து கறுப்பாக மாறுகிறது. இது குனிந்த நிலையில், வாலை நீட்டிக் கொண்டு ஓடுகிறது. ஏனைய உயிரிகளைத் தன்னை நோக்கி அழைக்கவும், அச்சுறுத்தவும் தன் கழுத்தை விரித்து, வாயைத் திறந்து, உடலைப் பக்க வாட்டத்திலும், தலையை முன்னும், பின்னுமாகவும் அசைக்கும். தலையை முன்னும், பின்னுமாக அசைத்தல் இனப் பெருக்கச் செயல் தொடங்குவதற்கு முன்பே நடைபெறுகிறது. புரூக்கேசியா என்னும் இனத்தில், நான்கு துணை இனங்கள் காணப் படுகின்றன. இவை மேற்கு–கிழக்கு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் தீவுப் பகுதிகளில் காணப் படுகின்றன. இவ்வகைப் பச்சோந்தி குட்டையாக, தடித்த சுருளாத நீண்ட வாலைக் கொண்டுள்ளது. வால் உடலின் நீளத்தை விடக் குட்டையாகவுள்ளது. வால் சுழன்று, கிளைகளைப் பிடித்துக் கொள்ளும் ஆற்றலை இழந்து விட்டது. இருப்பினும், இவ்வுயிரி அரிதாக வாலின் உதவியால், மரக் கிளைகளைச்சுழற்றிப் பிடித்துக் கொள்கிறது. இவ்விலங்கால் துல்லியமாக உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. இது மர வண்ணத்தைக் கொண்டுள்ளது. இவ்வண்ணம், காய்ந்து உதிர்ந்த இலைகளின் வண்ணத்திற்கு ஒப்பாக உள்ளது. மரத்தில் வாழ்வதற்குப் பதிலாகப் பாலைவனத்தில் நிலம் மற்றும் உதிர்ந்த இலைகளுக்கிடையே தங்கி வாழ்கிறது. இதன் கால்கள் மெலிந்து, பூச்சிகளின் கால்களுக்கு ஒப்பாகக் காணப் படுகின்றன. இப்பச்சோந்தி மிகவும் மெதுவாக நடந்து செல்கிறது. இது அடிக்கடி ஒரே இடத்தில் அசையாது, பல மணி நேரமாகக் காணப் படுகிறது.எனவே, இதை எளிதாகப் பார்க்க முடிகிறது. —உ. கருப்பணன்