அண்டையம் என்பது மனிதர்கள் குறிப்பிட்ட சில பழக்கங்களிலும் வரன் முறைகளிலும் ஒரே தன்மையுடையவர்களாகி நெருங்கிய இடையுறவுகள் கொண்டு வாழும் ஒரு நிலப்பரப்பைக் குறிக்கும். அண்டையத்தை (Neighbourhood) வட்டாரக் குழுமம் (Local Community) என்றும் கூறலாம். சமூகவியலார் அண்டையத்தை இடக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றனர். ஊரகங்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் ஒருவரோடு ஒருவர் இடையுறவும் இடைச் சார்பும் கொண்டு வாழும் குறுகிய நிலப்பரப்புகளைப் பெர்டினண்டு தானிசு (Ferdinand Tonnies) என்னும் செருமானியச் சமூகவியலறிஞர், குழுமம் (Gemeinshaft) என்னும் நகர்ப்புறங்களில் மக்கள் நெருங்கி வாழும் இடங்களைச் சமூகங்கள் (Geselshaft) என்றும் குறிப்பிடுகிறார், ஊரகக் குழுமங்களில் ஒருவரை மற்றவர் நன்கு அறிந்திருக்கின்றனர். ஒருவரின் இன்பதுன்பங்களில் அண்டை அயலார் பங்கு கொள்கின்றனர். ஊரகத் தலைமை ஒருவரிடம் (பண்ணையார்) அமைந்துள்ளது. தலைவரும் குழுமத்தினரும் அண்டையராக வாழ்கின்றனர். நகர்ப்புறங்களில் ஊரகங்களைப்போல் அண்டையத்தை எளிதில் அடையாளங் கண்டுகொள்வது இயலாது. நகரங்களில் வாழும் குடும்பத்தினர் அடுத்திருக்கும் குடும்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் மிக்க ஆர்வம் கொள்வதில்லை. தம் குடும்பம், தம் தொழில், தம் முன்னேற்றம் என்னும் நினைவுடன் மட்டுமே செயல்படுகின்றனர். தமக்கு வேண்டிய தேவைகளைத் தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளப்பல வாய்ப்புகள் நகரங்களில் இருப்பதால் அண்டையில் வாழ்பவர்களை அவர்கள் பெரும்பாலும் சார்ந்திருப்பதில்லை. இதனால், அவர்களுக்குன் நெருங்கிய உறவு ஏற்படுவதில்லை. தொழில், வாழ்க்கை வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்து செல்வதும் இதற்குக் காரணமாக அமைகிறது. அண்டையத்தில் வாழும் குடும்பங்களுக்கிடையில் நிலவும் உறவு தனிப்பட்டதாக, நெருக்கமானதாக நேருக்கு நேரானதாக இருந்த போதிலும், அது ஓர் ஒருங்கிணைக்கப்படாத அமைப்பாகும் என்று சாண்டர்சன் குறிப்பிடுகிறார். ஆயினும், அக்குடும்பங்கள் ஒன்றுக்கொன்று தனித் தன்மையுடன் பழகிக் கொள்வதை அறியலாம். இதனால், அண்டைய உணர்வு என்பது சுற்றுச் சூழல் நல்லுறவை வளர்ப்பதோடு, குடும்பங்கள் தனித்தன்மையுடன் விளங்குவதற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பல காரணங்களை முன்னிட்டு ஒரே நிலப் பரப்பில் வாழ்கின்றனர். ஊரக அண்டையத்தினரிடையே ஏற்படும் இடையுறவுகள், அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்க உதவி செய்கின்றன. இத்தகைய இடையுறவுகளும் இடைச்சார்புகளும் (Interdependence) இயல்பான சமூக நிகழ்வுகளாக அமைகின்றன. இத்தகைய சமூக நிகழ்வை ஒமன்சு (Homang) என்னும் சமூகவியலார் ‘சமூக உபரி’ (Social Surplus) என்று குறிப்பிடுகின்றார். அண்டையங்கள் முதனிலைக் குழுக்கள் எனப்படுகின்றன. இவை ஒரே இடத்தில் நிலைத்து வாழ்கின்றன. அண்டையத்தில் இருப்பவரிடையே மனப்பான்மைகளும், பிரச்சினை – அணுகு முறைகளும் ஒரே விதமாக இருக்கின்றன. இவ்வாறு முதனிலைக் குழுக்களின் தலைசிறந்த இயல்புகளே, அண்டையத்தின் இயல்புகளாக அமைகின்றன என்று ஒமன்சு குறிப்பிடுகின்றார். 20–ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் தொழில், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அண்டையத்தினரின் சிறப்புத் தகுதிகளைப் பெரிதும் குறைத்துவிட்டது, தொழில் மயமாதலின் விளைவாக ஊரக மக்கள் பெருமளவில் நகர்ப் புறங்களில் சென்று குடியேறியுள்ளர். ஊரக அண்டையத்தினரின் மீது ஊரகத் தலைவர் கொண்டிருந்த தனி அதிகாரம் மறைந்து விட்டது. நகர்ப் புறங்களில் மக்கள் குறுகிய, அண்டையத்தின் பகுதியினராக இருப்பதைக் காட்டிலும் விரிந்த தேசிய அளவிலான அண்டையத்தின் உறுப்பினராக இருப்பதை வெறுக்கின்றனர். அண்டையங்களின் தனிப்பட்ட வரன்முறைகளும் குழுமங்களும் (Archetypal Community) ஏற்படுகின்றன. சில நகர்ப்புற அண்டையங்களில் ஒரு மனிதன் தன் வீட்டிற்குச் செல்லும் பாதை அல்லது தெரு மட்டுமே அவனுக்குத் தன் அண்டையத்தை உணர்த்துவதாக இருக்கலாம். ஆயினும் நெருக்கமான நகர்ப்புற மையப் பகுதிகளின் அண்டைய அமைப்புக்கும் நகர எல்லைப் புறங்களில் இருக்கும் அண்டைய அமைப்புக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. முன்னர்க் கூறிய அண்டையம் மிகக் குறைந்த இடைச் சார்பு கொண்டதாக அமைந்துள்ளது. பின்னர்க் குறிப்பிட்டது இதனைக் காட்டிலும் நெருங்கிய இடைச் சார்பும் இடை உறவும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.கோ.க. துணை நூல்கள் Chitambar, J.B., “Introductory Rural Sociology; A Synopsis of Concepts and Principles,” Wiley Eastern Ltd., New Delhi, 1976. Gore, M.S., “Immigrants and Neighbourhoods”, Tata Institute of Social Sciences, Bombay, 1970. Maclver, R.M. and C.H. Page, “Society, Holt Rinehart and Winston”, New York, 1961.