நூ
nū
நூக்கு
நூக்கு
காண்க: ஈட்டி மரம்
நூல் அளவு
இழைச் சிணுக்கும், முறுக்கும் (திரிப்பும்) அளக்கப் படுதல் நூல் அளவைகளில் (yarn dimensions) முதன்மை பெறுகின்றன.
நீட்டவாக்கு அடர்த்தி அல்லது நூல் எண் (linear density or yarn number). நூலின் இழைச் சிணுக்கு என்பது நூலின் நுண்மையைக் குறிக்கும் எண் மதிப்பாகும். ஒரு கம்பியின் நுண்மையைக் குறிப்பதற்கு இதன் அளவி (gauge) மதிப்புகள் உதவுகின்றன. நியம கம்பி அளவி அட்டவணையின் படி, அளவி எண் 10 கொண்ட கம்பியின் குறுக்களவு 0.128 அங்குலமாகும். மாறாக, குறுக்களவு துல்லியமாக அளந்தறியப்பட்ட கம்பியின் அளவி எண்ணை, அட்டவணையிலிருந்து பெறலாம்; ஆனால், நூலின் குறுக்களவைக் கண்டறிதல் கடினமாகும். நூற்பு நூல்கள் தோராய வட்டமான குறுக்களவைக் கொண்டிருப்பதுடன், தடிமனில் ஒழுங்கற்ற நிலைமை நிலவுகிறது. முறுக்கேற்றம் குறைவாக அமையப் பெற்ற நீளிழை நூல்கள் தட்டை நூல்கள் (Flat yarns) எனப் படுகின்றன. அவை பிற திண்மப் பொருள்களால் அழுத்தப் படுகையில், தட்டையாகி விடுகின்றன.
பெரும்பாலான நூல்கள் மென்மையாகவும், எளிதில் அழுத்தப்பட வல்லவையாகவும் உள்ளமையால், நுண்ணளவை அளவியால் (micrometer) அளக்க இயலாது. இதற்கென ஓர் ஒளியியல் முறை பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஒரு திரையில் நூலின் நிழலுருவம் வீழ்த்தப் படுகிறது. இத்திரை அங்குலத்தில், ஆயிரத்தில் ஒரு பங்கை அடிப்படையாகக் கொண்ட அளவீடு இருக்கும்.
இவ்வாய்வின் நோக்கம் நூலின் சிணுக்கு எண்ணை அறிவதன்று; ஏறத் தாழ 200 அளவைகளின் மொத்த பாதிப்பிலிருந்து, நூலின் ஒழுங்கின்மையின் அளவை அறிவதே நோக்கமாகும். நூலின் குறுக்குப் பரப்பளவை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்ட சிணுக்கு அளவை முறை கயிறு தயாரிக்கும் தொழிலில் கையாளப் படுகிறது. 3 அங்குல சுற்றளவு கொண்ட முப்புரி (3-strand) கயிற்றின் ஒரு புரியைத் தயாரிப்பதற்குத் தேவைப் படும் நூல்களின் எண்ணிக்கை நூலின் சிணுக்கு எண்ணாகக் (Yarn count) கருதப் படுகிறது.
நூலின் சிணுக்கு எண் எனப் படுவது அலகு நீளத்திற்கான நிறை அல்லது அலகு நிறைக்கான நீளம் ஆகும். நீளத்தையும், நிறையையும் குறிப்பிடுவதற்குப் பல்வேறு அலகுகள் வழங்கியிருந்தமையால், சிணுக்கு எண்ணைக் குறிக்கையில், அலகுகள் தெளிவாகக் குறிப்பிடப் பட வேண்டும்.
நூல் எண்ணைக் குறிப்பிடுவதற்கு நேரடி மற்றும் மறைமுக முறைகள். அலகு நீளத்திற்கான எடையைக் கண்டு பிடித்தல் நேரடி முறையாகவும், அலகு எடைக்கு நீளத்தைக் கண்டு பிடித்தல் மறைமுக முறையாகவும் கருதப் படுகின்றன.
எடுத்துக் காட்டாக, 100 மீ. நீளிழையின் நிறை 1.67 கிராம் எனில், அந்நூலின் டெனியர் கீழ்க் காணுமாறு கணக்கிடப் படுகிறது. டெனியர் அமைப்பில், எடையின் அலகு கிராம், நீளத்தின் அலகு 9000 மீ. 9000 மீட்டரின் நிறை டெனியர் ஆகும்.
எனவே, இழைச் சிணுக்கு எண் = \frac{1.67 \times 9000}{100} = 150.3
டெனியர் மறைமுக வழி முறையில், N = \frac {L \times w} {l \times W}
அட்டவணை 1 : நேரடி முறை
மறைமுக முறை
இங்கு w = அளவை அமைப்பின் நிறையலகு. ஏனைய எழுத்துகள் முந்தைய கணக்கீட்டிலுள்ள காரணிகளையே குறிக்கின்றன.
குஞ்சம் (lea) என்னும் அலகு லினனுக்குப் பயன் படுகிறது. 120 கெஜம் நீளமுள்ள குஞ்சம், 25 கி. எடை கொண்டிருந்தால், அதன் சிணுக்கு எண்ணைக் கீழ்க் காணுமாறு கணக்கிடலாம். இங்கு அலகு நீளம் ஒரு சிட்டமாகும் (840 கெஜ பருத்தி நூல்); எடையின் அலகு பவுண்டாகும். 1 பவுண்டு = 7000 மணிகள் (grains). எனவே, L = 120 கெஜம்; l = 840 கெஜம்; W = பவுண்ட், w = 1 பவுண்ட். N = \frac {120 \times 70} {840 \times 25} = 40S S என்னும் குறியீடு ஒரு மரபு வழக்காகும்.
பல்வேறு அளவை அமைப்புகளில் அடிப்படையாகப் பயன் படுத்தப் படும் அலகு நீளங்களும், அலகு எடைகளும் அட்டவணை 1இல் தொகுக்கப் பட்டுள்ளன. இவ்வட்டவணையிலுள்ள சில பெயர்கள் வழக்கத்திற்கு மாறாகத் தெரிகின்றன. இதனால், இவை வட்டார வழக்கு என்பது தெளிவாகிறது. இதற்கு முதன்மையான காரணம் துணித் தொழில் உலகின் பல்வேறு பகுதிகளில், சம காலத்தில் வளர்ந்து வந்ததேயாகும். ஒரு பகுதியில் வளர்ந்த துணித் தொழில் அப்பகுதிக்கே ஏற்றதெனக் கருதப்பட்ட அளவை முறையை உருவாக்கியது. ஓர் அளவை முறைக்கும், மற்றொன்றுக்கும் உள்ள தொடர்பு, காரணிகளும், மாறிலிகளும் கொண்ட சமன்பாடுகளாகும்.
நூல் சிணுக்குச் சீரமைப்பு (Rationalisation). ஓர் அளவை முறையிலிருந்து, மற்றொன்றுக்கு மாற்றுதல் நேரமும், பொருளும் செலவாகும் வழி முறையாகியதால், உலகம் தழுவிய சிணுக்கு அளவை முறையொன்றை உருவாக்கும் முயற்சி பல விவாதங்களுக்கும், மாநாடுகளுக்கும் பிறகு பயனளித்தது. 1956இல் பன்னாட்டுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (International Standards Organisation) கூட்டிய மாநாட்டில், டெக்ஸ் (tex) என்னும் அளவை முறை உருவாக்கப் பட்டது. 1 கி.மீ. நீளமுள்ள நூலின் கிராம் நிறை டெக்ஸ் எனப் படும். இது ஒரு நேரடி அளவை முறையாகும். இவ்வடிப்படை அலகின் விரிவாக்கங்களாக மிக நுண்ணிய நூல்களுக்கும், மறுபுறம் தடித்த முரட்டுக் கயிறுகளுக்கும் இரு வகை அலகுகள் தோற்றுவிக்கப் பட்டன. நுண்ணிய நூல்களுக்கு மில்லி டெக்ஸ் எனவும், முரட்டு நூல்களுக்குக் கிலோ டெக்ஸ் எனவும், அலகுகள் வரையறுக்கப் பட்டுள்ளன.
1 மில்லி டெக்ஸ் = 1 கி.மீ. நூலின் எடை (மி.கிராமில்)
1 கிலோடெக்ஸ் = 1 கி.மீ. நூலின் எடை (மி.கிராமில்)
டெக்ஸ் அலகு முழுமையாக நெசவுத் தொழிலில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. எடுத்துக் காட்டாக, பருத்தி நூலின் முறுக்கு கீழக் காணும் சமன்பாட்டின் படி, குறிப்பிடப் படுகிறது.
முறுக்குக் காரணி =
டெக்ஸ் அமைப்பில் 1 அங்குலத்திற்கான சுற்று என்னும் நிலை, 1 மீட்டருக்கான சுற்று என மாற்றம் பெறும். மேலும், டெக்ஸ் சிணுக்கு எண் என்னும் துணையகின் மதிப்பு, பருத்திச் சிணுக்கு எண் என்னும் துணையலகின் மதிப்பிலிருந்து மாறு படும். எனவே, முறுக்குக் காரணியின் மதிப்பு வேறு படும். மேலும், டெக்ஸ் வழி முறை ஒரு நேரடி வழி முறையாகும்., பருத்திச் சிணுக்கு எண் முறையோ ஒரு மறைமுக வழி முறையாகும். எனவே, அலகு நீளத்தில் சுற்றுகள், முறுக்குக் காரணி, இழைச் சிணுக்கு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புச் சமன்பாட்டின் வடிவமும் மாறு படும்.
1 மீ. இடைவெளியில் உள்ள சுற்று =
ஒரு துணியின் நெசவு நெருக்கத்தைக் குறிப்பிடும் மூடு காரணி (Cover factor) பழைய முறையில்
K =
எனவும் டெக்ஸ் முறையில்,
K = 1 செ.மீ. இடைவெளியில் நூல் எண்ணிக்கை X √டெக்ஸ் சிணுக்கு எண் எனவும் ஆகும்.
டெக்ஸ் =
டெக்ஸ் = டெனியர் X 0.111
சிணுக்கு எண் அளவை முறை. சிணுக்கு எண் எந்த அலகில் குறிப்பிடப் பட்டாலும், நூலின் நீளத்தையும், எடையையும் துல்லியமாக ,அளப்பதற்கு விரிவான வழி முறைகள் தேவைப் படுகின்றன. இம்முறைகள் பெரும்பாலும் ஆய்வுக்காகக் கிட்டும் மாதிரிப் பொருளின் நீளத்தைப் பொறுத்து வகுக்கப் படுகின்றன.
நீள அளவை. சிட்ட வடிவில் நூல் தார்க் குழலிலோ, கூம்புக் கூடுகளிலோ சுற்றப் பட்டிருந்தால், ஒரு போர்த்தும் திருகு வட்டத்தைச் கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நூற்கண்டுகளைச் சுற்றலாம். இதனைச் கையாலோ, விசையாலோ இயக்கலாம். பருத்தி நூல்களுக்கு இத்திருகு வட்டத்தின் சுற்றளவு 54 அங்குலம். எனவே, 80 சுற்றுகள், 120 கெஜம் (அல்லது ஒரு குஞ்சம்) கொண்ட நூற்கண்டைத் தருகின்றன.
ஒவ்வொரு பயன் முறைக்கும் தக்கவாறு திருகு வட்டச் சுற்றளவும், கண்டு நீளமும் தேர்ந்தெடுக்கப் படும். நூல் கண்டு கட்டப் படும் இழு விசையைப் பொறுத்து, நீளம் மாறக் கூடுமாதலால், ஒரு நூற்கண்டு அளவியைக் கொண்டு திருகு வட்டத்தின் இழுவையைத் துல்லியமாக அளத்தல் வேண்டும். நூல் கண்டு 440 கெஜ நீள நூலின் பளுவால், இழுக்கப் படும் போது, நூல் கண்டின் சுற்றளவு திருகு வட்டத்தின் சுற்றளவிலிருந்து 0.5Hக்கு மேற்படாதவாறு வேறு பட்டிருக்க வேண்டும். இவ்வாறிருப்பின், திருகு வட்டத்தின் இழு விசை சரியாக இருப்பது போன்று தோன்றும். சிட்டத்திலிருந்து நூலைப் பிரிக்கும் போது இழு விசை அகற்றப் படுவதால், நூல் சற்றே சுருங்குகிறது. இதனைத் தவிர்ப்பதற்கு நூலைச் சிட்டத்தில் இழுத்துக் கட்டிய பின்பு, ஆய்வுச் சூழ்நிலையில், மூன்று மணிகளுக்குக் குறையாமல் தளரச் செய்து, பின்பு திருகு வட்டத்தில் சுற்ற வேண்டும்.
குட்டையான நூல்கள். துணியிலுள்ள நூல்கள் ஏறக் குறைய ஒரு கெஜத்திற்கு மேல் நீளமுடையனவாக இருப்பதில்லையாதலால், இந்நூல்களுக்கு ஆய்வு முறைகள் சற்றே திருத்தப் படுகின்றன. ஆய்வுச் சூழ்நிலையில், 24 மணி நேரத்திற்குப் பதப் படுத்தப் பட்ட பின்பு, செவ்வக வடிவில் இரு பாவுக் குறுந் துண்டுகளும் (strips), ஐந்து ஊடு வகைக் குறுந் துண்டுகளும் வெட்டி எடுக்கப் படுகின்றன. இத்துண்டுகள் ஒவ்வொன்றும் குறைந்தது 20' நீளமுடையனவாகவும், அகல வாக்கில் குறைந்தது 50 நூல்கள் பிரித்தெடுக்கப் பட வல்லனவாகவும் இருத்தல் வேண்டும். இரு பாவு வகைத் துண்டுகள், ஏறத் தாழ 100 பாவு வகைச் சிட்டங்களைக் குறிப்பிடுவனவாதலால், இயைபிலா மாதிரி (random sample) தயாரிக்கப் பட்டதாகக் கொள்ளலாம். ஆனால், ஐந்து ஊடு குறுந்துண்டுகள் ஐந்து ஊடு வகைச் சிட்டங்களை மட்டுமே பதிலிட இயலும்.
நூல்கள் ஒன்றுக்கொன்று பிணைப்புறுவதால், துணியிலிருந்து அகற்றப்படும் நூலில் அலைவு இருக்கும். அலைவின் அளவு தெரிந்திருந்தாலன்றி, நீட்டப் பட்ட நிலையில் நூல் நீளம் அறியப் பட வாய்ப்பில்லை.
அலைவு விழுக்காடு = X 100
இறுதியாகச் சிணுக்குக் கணக்கீடுகளில் பயன் படுத்தப் படும் நூல் நீளத்தின் மதிப்பு =
ஆகும்.
மிகச் சிறிய துணி மாதிரிகளுக்குச் சிறப்பான ஆசுப் பலகைகள் நூல்களை வெட்டுவதற்கான அமைக்கப் படுகின்றன.
எடை அளவை. நூலின் எடையைக் கண்டறியப் பயன் படும் தராசுகளின் துல்லியம் {[sfrac|1|500க்குக் குறையாதிருத்தல் வேண்டும். நூல் நிறுத்தலில் எதிர் கொள்ளப் படும் பெரும் சிக்கல் ஈர ஏற்பு ஆகும். இதற்கென இரு வழி முறைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
1. என்னும் காரணியினால் அடுப்பில் உலர்த்தப்பட்ட நூலின் எடையைப் பெருக்க வேண்டும்.
2. ஆய்வுச் சூழ்நிலையில் சம நிலை எய்திய பிறகு, அதே சூழ்நிலையில் நிறுத்த வேண்டும்.
இரு வழி முறைகளின் ஆய்வுகளும் சமமாக இருப்பதில்லை; ஏனெனில், நடை முறை ஈர ஏற்பும், செயற்கை நியமச் சூழ்நிலையில் தோன்றும் சம நிலை ஈர ஏற்பும் ஒன்றாக இரா. முதல் முறை, துல்லியமான முடிவுகளைத் தரக் கூடியது என்றாலும், இரண்டாம் முறை அனறாட ஆய்வுக்கு எளிதான முறையாகையால், பெரிதும் விரும்பப் படுகிறது. இவை தவிர, கம்பளித் தொழில் ஆராய்ச்சிக் கழகம் அறிமுகப் படுத்தியுள்ள முறையில், உலர்த்தும் அமைப்பிலேயே அளவைகள் நிகழ்த்தப் படுகின்றன.
சேர்க்கை மற்றும் விலக்கப் பொருள்கள். நூற்புக் கதிருக்கும், முழுமையாக்கப்பட்ட துணிக்கும் இடைப்பட்ட கட்டங்களில், நூல் பல திருத்தங்களுக்குள்ளாகிறது. இவற்றில், துணியின் நிறை மாறுவதற்கு வாய்ப்புண்டு. பாவு நூல் கஞ்சியிடல் போன்ற செயல்கள் துணியின் நிறையைக் கூடுதலாக்குகின்றன; கழுவுதல், நிற நீக்கம் போன்ற முறைகளினால் துணியின் நிறை குறையக் கூடும். இதன் விளைவாக, ஒரு மாதிரிப் பொருளின் ஆய்வுச் சிணுக்கு எண்ணில் திருத்தம் செய்ய வேண்டி வரும்.
இழைச் சிணுக்கு அளவையை, நேரடியாகக் காண்பிக்க நோல்ஸ் தராசு (Knowles balance), கால் வட்ட வடிவத் தராசு ( quadrant balance) போன்றன பயன் படுகின்றன. பீஸ்லி (Beesley) தராசு என்னும் கருவியில், ஆதாரத்தின் ஒரு புறம் ஒரு கொக்கியும், மறு புறம் ஒரு காட்டியும் பொருத்தப் பட்டுள்ளன. ஆதாரக் கம்பியை முதற்கட்டமாக ஒரு தரவுக் கோட்டைக் ( datum line) காட்டி நோக்குமாறு சரி செய்ய வேண்டும். காட்டியின் பக்கத்தில், ஆதாரக் கம்பியிலிருந்து ஒரு காடியிலிருந்து ஒரு நியம எடை தொங்க விடப் படுகிறது. நூலை ஆசுப் பலகையினால், சிறு துண்டுகளாக வெட்டி, இத்துண்டுகளைக் கொக்கியில் மாட்டி, காட்டி தொடக்க நிலையை மீண்டும் தொடுமாறு சரி செய்தல் வேண்டும். இச்சமன் செய்தலுக்குத் தேவைப் படும் நூல் துண்டுகளின் எண்ணிக்கையே நூலின் சிணுக்கு எண்ணாகும்.
இரட்டிப்பாக்கப் பட்ட நூல்கள். இரு நூல்கள் இணைக்கப் பட்டுத் தயாரிக்கப் படும் நூலின் சிணுக்கு எண்ணை அறிவதற்கு, விரிவான வழி முறைகள் உள்ளன. இருமடி பருத்தி நூலொன்றின் சிணுக்கு எண் 145 என்றும், இரட்டிப்பு முறையின் போது, 10% சுருக்கம் நேரும் என்றும் கொள்ளலாம். மறைமுக முறையில் உள்ளுறை நகல்களின் சிணுக்கு எண்களின் தலை கீழ் மதிப்புகளின் கூட்டுத் தொகை இருமடி நூலின் விளைவு, சிணுக்கு எண்ணின் தலை கீழ் மதிப்பாகும்.
\frac{1}{N_1} + \frac{1}{N_2} = \frac{1}{N} = N_2 எனில், \frac{2}{N_1} = \frac{1}{N}, N_1 = 28s
சுருக்கத்தினால் ஒற்றை இழைகள் இரண்டும் சன்னம் குறைந்து விட்டமையால், மேற்கூறிய மதிப்பீட்டின் சன்னத்தை 10% உயர்த்த வேண்டும். அதாவது, 28 X 1.1 = 30.8s. சிலவற்றில், இரட்டிப்புச் செயலினால் உட்கூறு நூல்களின் நீளம் கூடுதலாகி விடும். இங்கு மதிப்பிட்டுத் திருத்தம் எதிர்த் திசையில் செல்லும். இரட்டிப்பாக்கப் பட்ட நூல்களுள் இரண்டினை இணைத்து, மீண்டும் இரட்டிப்பாக்கலாம். இம்முறை டயர் (tyre) தொழில் நுட்பத்தில் முதன்மை பெறுகிறது. இங்கு சிணுக்கு எண்ணை அறிவது எளிதாயினும், துல்லியமான மதிப்புகள் பெறப் படுவதில்லை.
சிணுக்கு எண்ணும் நூல் குறுக்களவும்: நூலின் குறுக்கு வெட்டுத் தோற்றம், வட்டமாக இருப்பதாகக் கொள்ளப் படுகிறது. இதன் அடிப்படையில் பருத்தி வகை நூல்களின் விட்டத்திற்கு வாய்ப்பாடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன:
விட்டம் (அங்குலங்களில்) =
மணிக் கம்பளி வகை நூல்களுக்கு விட்டம் (அங்குலங்களில்) =
பொதுவாக, விட்டம் = 3.75 \times 10^{-3} \sqrt {N} செ.மீ. N = டெக்ஸ் மதிப்பு
முறுக்கு அளவை. நூலின் உட்கூறு இழைகளை ஒருங்கிணைத்து வைப்பதற்குத் தேவைப் படும் சுருள்களின் அளவு முறுக்கு எனப் படுகிறது. நூலின் அச்சுக்கு இணையானதொரு கோட்டை, மையமாகக் கொண்டு நூலைச் சுழற்றும் இயக்கம் முறுக்காகும். முறுக்கேற்றத்தினால், நூலுக்கு வலியும், ஓரியல்பும் (coherence) ஏற்படும்.
முறுக்கின் திசை. ஆங்கில எழுத்துக்களான S மற்றும் Z ஆகியனவற்றைக் கொண்டு எதிரெதிர்த் திசை முறுக்குகளைக் குறிப்பிடலாம் (படம் 1).
முறுக்கின் அளவு =
இவ்வழி முறையின் படி, முறுக்கைக் குறிப்பிடுதல் பெரும்பாலான சூழ்நிலைகளில், நிறைவு தருவதாக இருந்தாலும், நூலின் சிணுக்கு எண்ணுக்குத் தொடர் பற்றுள்ளது. முறுக்குக் காரணி (twist factor) என்னும் துணையலகைக் கொண்டு, சிணுக்கு எண்ணைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலே, முறுக்கு இயல்பை அறியலாம். ஓர் அங்குலத்தின் சம அளவு சுற்றுகளைக் கொண்ட முரட்டு நூலும், சன்ன நூலும் வெவ்வேறு முறுக்கு இயல்புகளைக் கொண்டிருக்கின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நூலின் கருத்தியல் வழிக் கூறு ஒன்று படம்.2 இல் காட்ட ப்பட்டுள்ளது. நூலின் புறப் பரப்பில், ஓர் இழை திருகு பாதையில், நூலின் அச்சை ஒரு சுற்று வருவதைக் காணலாம். திருகு சுற்றின் தொடு கோட்டிற்கும், நூலின் அச்சுக்கும் இடைப் பட்ட கோணம் முறுக்குக் கோணம் (twist angle, θ) எனப் படுகிறது. புறப் பரப்பு அடுக்கைத் தட்டையாகக் கற்பனை செய்கையில், இழை ஒரு செங்கோண முக்கோணத்தின் செம்பக்கம் (hypotenuse) ஆவதைக் காணலாம்.
நூலின் குறுக்களவு d அங்குலம், ஒரு முறுக்கின் நீளம் l எனில், tan \theta = \frac {\pi d}{l} இங்கு 1⁄l ஓர் அங்குலத்திலுள்ள சுற்றுகள்.
\tan \theta \times dx ஓர் அங்குலத்திலுள்ள சுற்றுகள்.
dx ஆதலால், tanθ X , இதனை
1 அங்குலத்தில் சுற்றுகள் = K√சிணுக்கு எண், K = முறுக்குக் காரணி எனும் மாறிலியாகும். இது முறுக்குக் கோணத்தின் தொடு கோட்டுக்கு நேர் விகிதமாகும். முறுக்குக் காரணி சமமாக இருக்கும். ஓரளவுக்கு முறுக்குக் காரணி நூலின் தன்மையையும் சுட்டும். முறுக்குக் காரணி = 3 எனக் கொண்ட பருத்தி நூல் மென்மையுடையதாகவும், முறுக்குக் காரணி = 6 எனக் கொண்ட நூல் கடினத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். பாவு, ஊடு, பின்னல், தையல் எனப் பயன்களைப் பொறுத்தே நூலின் முறுக்குக் காரணி தேர்ந்தெடுக்கப் படும்.
நேரடி நூல் எண் முறை தேர்ந்தெடுக்கப் பட்டால், அலகு நீளத்தில் சுற்றுக்களின் எண்ணிக்கை, முறுக்குக் காரணி, இழைச் சிணுக்கு எண் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு வடிவம் மாறும். இந்நிலையில், நூலின் குறுக்களவு நூல், இழைச் சிணுக்கு எண்ணின் வர்க்க மூலத்திற்கு நேர் விகிதத்தில் அமையும்.
டெக்ஸ் வழி முறை. டெக்ஸ் முறுக்குக் காரணி = ஒரு மீட்டரில் உள்ள சுற்றுகள் 1 \times \sqrt{N} . இக்கணக்கீட்டின்படி தளர் முறுக்கு நூல்களுக்கு முறுக்குக் காரணி ஏறத் தாழ, 2000 ஆகவும், இறுக்கி முறுக்கப் பட்ட நூல்களுக்கு முறுக்கு காரணி ஏறத் தாழ 10000 ஆகவும் இருக்கும். இவ்வெண் மதிப்புகள் சற்றே எளிதில் கையாள முடியாதனவாகத் தோன்றுகின்றன.
நூலின் கட்டமைப்பின் முறுக்கேற்றத்தின் பங்கு. நூலுக்கு வலிமை இணக்கம், ஓரியல்பு ஆகிய பண்புகள் முறுக்கேற்றத்தினால் மட்டுமே கூடுகின்றன. எனினும், ஒரு குறிப்பிட்ட முறுக்கேற்றத்தில் நூலில் வலிமை பெரும நிலையை அடைகின்றது (படம் 3.)
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> முறுக்கேற்றத்தின் அளவையும் திசையையும் கட்டுப் படுத்தி அல்லது மாற்றியமைத்துத் துணியின் தோற்றத்தில் பொலிவை உருவாக்கலாம். போலிக் கோடு (Shadow stripe) என்னும் காட்சி விளைவு இவற்றுள் ஒன்றாகும். S மற்றும் முறுக்குகளை மாற்றியமைத்துப் பாவு நெசவு செய்து பெறப் படும் துணியில் நிழல் வரிகள் தோன்றும். இவ்விரு முறுக்கேற்ற வகை நூல்களிலிருந்தும், ஒளி எதிரொளிப்பு (reflection) மாறுபட்டிருப்பதனால், இவ்விளைவு தோன்றுகிறது. வெட்டப் பட்டு, சமதளமாக்கப் பட்ட புல்வெளியைப் போன்ற தோற்றம் இதில் இருக்கும்.
இரு படை நெசவில் (twill weave) முறுக்கேற்றத் திசையைத் தக்கவாறு அமைத்து, இரு படை வரியை வெளிக் கொணரவோ, மறைக்கவோ இயலும். இந்நெசவில், பாவு நூல் Z வகை முறுக்குக் கொண்டிருப்பின், ஊடு நூல் S வகையாக இருப்பின், இரு படை வரி அழுத்தமாகவும், ஊடு நூல் Z–வகை முறுக்கேற்றத்திலிருப்பின், இரு படை வரி தெளிவாகவும் தோற்றமளிக்கும்.
முறுக்கேற்ற அளவை. பொதுவான பயன்களுக்கான நூல் வகைகளின் முறுக்கேற்ற அளவை முறைகள் பல உள்ளன. முறுக்கேற்ற ஆய்வுக்குத் தேவைப்படும் மாதிரிப் பொருள் தேர்வில் மிகுந்த கவனம் தேவை. நூலின் தடித்த பகுதிகளிலும், மெலிந்த பகுதிகளிலும் முறுக்கேற்றம் மாறுபட்டிருக்கும். எனவே, மாதிரி நூல்களைத் தேர்ந்தெடுக்கும் போது, மொத்த நூலில் ஏறக் குறைய கெஜ இடைவெளியில் மாதிரித் துண்டு நூல்களை வெட்டி எடுக்க வேண்டும். முறுக்கேற்றத்தைக் கண்டறிவதற்குச் செய்ய வேண்டிய ஆய்வுகளின் எண்ணிக்கை அறியப் பட்டுள்ளது. ஆய்வுக்கான நூலைக் கையாளுவதிலும் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில், முறுக்குப் பங்கீடு பாதிக்கப் படும். கை விரல்களால் நூலைத் தொடுதலைத் தவிர்த்தல் நலம். நீட்டப் பட்ட இழை முறை. நூலின் இரு முனைகளையும் ஒன்றுக்கொன்று ஒப்பீடாகச் சுழற்றுவதால், முறுக்கேற்றம் தோன்றுகிறது. எனவே, முறுக்கேற்றத்தை அகற்றி, மீண்டும் நூல்களை ஒன்றுக்கொன்று இணையாக அமைப்பதற்குத் தேவைப்படும் சுற்றுகளை எண்ணினால், முறுக்கின் அளவு தெரிய வரும். ஓர் அங்குல இடைத் தொலைவு கொண்ட இரு பிடிப்பிகளுக்கிடையே நூல் இழுத்துப் பொருத்தப்பட்டு, ஒரு பிடிப்பியைச் சுழற்றி, நூலின் முறுக்கை அகற்ற வேண்டும். இது நிகழ்கையில், இப்பிடிப்பியுடன் இணைக்கப்பட்டுள்ள சுழற்சி அளவியில் சுற்று எண்ணிக்கை பதிவாகும். நிலைத்து நிற்கும் பிடிப்பிக்கு அருகே இழைகளுக்கிடையே ஓர் ஊசியைப் புகுத்தி, சுழலும் பிடிப்பியின் திசையில் நகர்த்த வேண்டும். ஏதேனும், முறுகேற்றம் எஞ்சியிருக்குமாயின், அது சுழலும் பிடிப்பியில் செலுத்தப் பட்டு, சன்ன திருத்தத்தினால் அகற்றப் படுகிறது. 50 ஆய்வுகள் செய்து, இம்முடிவுகளின் சராசரி கணக்கிடப் படுகிறது.
தொடர் முறுக்கு அளவி (Continous twist tester). மாதிரி நூல்களை மொத்தத்திலிருந்து அகற்றாமலேயே, ஆய்வு செய்வதற்கு WIRA ஒரு முறையை உருவாக்கியுள்ளது. நோக்கப்பட்ட இழை முறையின் அடிப்படைக் கொள்கையே இங்கும் பின் பற்றப் படுகிறது. சிட்டத்திலிருந்து நூல் ஒரு வழி படுத்தும் உருளை (guide roller) வழியே சென்று, முதலில் நிலைத்த பிடிப்பி வழியாகவும், இறுதியாக நூல் சுற்றும் உருளைக்கும் செல்கிறது. இரு பிடிப்பிகளுக்கு இடைப் பட்ட நூல் பகுதியில் முறுக்கு அகற்றப் பட்டு, அளவியில் சுற்று எண்ணிக்கை அளக்கப் பட்ட பின்பு, மீண்டும் பழைய நிலைக்கே முறுக்கப் படுகிறது.
முறுக்குச் சுருக்க முறை (Twist Contraction method). ஓர் இழைப் புரியில் முறுக்கேற்றுதல், அதன் நீளத்தைக் குறைக்கும். Z–வழி முறுக்கேற்றம் கொண்ட ஒரு நூலின் நீளம் h ஆகவும், முறுக்கு முழுமையாக அகற்றப் பட்ட பின்பு, (h+c) ஆகவும் இருப்பின், c நீளக் குறைவு ஆகும். அகற்றப்பட்ட சுற்று, எண்ணிக்கைக்குச் சமமாக S–வகை முறுக்கேற்றத்தைத் தோற்றுவித்தால், நூல் மீண்டும் பழைய நீளமான hஐ அடையும். இவ்வழி முறையில், ஓர் ஆய்வை 10 முறை (10 மாதிரி நூல்களில்) நிகழ்த்தினால் போதுமானது.
கம்பளி நூல்களைப் பொறுத்த வரை, சுருக்க முறையின் முடிவுகள் நீட்டப் பட்ட இழை முறை முடிவுகளை விட, ஏறத் தாழ 20% குறைவாக உள்ளன. மணிக் கம்பளி நூலில், இவ்வேறுபாடு 15% கூடுதலாக உள்ளது. துல்லியமான ஆய்வு முடிவுகள் தேவைப் படின், 1 அங்குல நீட்டப்பட்ட இழை முறையே சிறந்த பயன் தரும்.
அறுகும் வரை முறுக்கும் ஆய்வு (Twist-to-break test). நூல் அறுகும் வரை, தொடர்ந்து முறுக்குவதற்குத் தேவைப் படும் சுற்றுகளின் எண்ணிக்கை, (n₁), குறித்துக் கொள்ளப் படுகிறது. பின்பு, எதிர்த் திசையில் சுற்றி, இதே ஆய்வு மீண்டும் நடத்தப் படுகிறது. இப்போது, அறுப்பதற்குத் தேவைப் படும் சுற்றுகளின் எண்ணிக்கை (n₂) எனில், முறுக்கின் அளவு = ½(n₁ - n₂).
நுண்ணோக்கியால் முறுக்கேற்ற அளவை: சுழலும் தளம் கொண்ட நுண்ணோக்கியொன்றில் தளத்தின் விளிம்பில் கோண அளவீடுகள் செய்யப் பட்டால், முறுக்குக் கோணத்தை அளக்கலாம். தளத்தை 0”இல் இருத்தி, தகுந்த பிடிப்பியில் நூலைப் பொருத்திக் கண்ணருகு வில்லை (eye piece) நகரும் மென் கோட்டை நூலின் அச்சுடன் இரண்டறத் தெரியுமாறு, செய்ய வேண்டும். இப்போது சுழலும் தளத்தைச் சுழற்றி, நூலின் முறுக்கேறிய இழைகளிளாலான திருகு சுருளுக்குத் தொடு கோடாக மென் கோட்டைக் கொணர வேண்டும், தளத்தைச் சுழற்றிய கோணம் முறுக்குக் கோணமாகும்.
நூலின் ஒரு சுற்று முறுக்கின் நீளம் (h) = \frac{\pi d}{tan \theta} இங்கு d = நூலின் விட்டம்
ஓர் அங்குலத்தில் சுற்று எண்ணிக்கை = \frac{1}{h} = \frac {\tan \theta}{\pi d}
முறுக்குக் கோணமும், நூல் குறுக்களவும் நூலின் பகுதிக்கு பகுதி மாறுபடுமாதலால், நிறைந்த எண்ணிக்கையில் ஆய்வுகளை நடத்த வேண்டும்.
மடிப்பு நூல்களில் முறுக்கு அளவை. முறுக்கை இரு மடியாக்கும் போது, மடிக்கப்பட்ட நூல்களில் விரிவோ, சுருக்கமோ தோன்றக் கூடும்.
முறுக்கப்பட்ட நிலைக்கும், முறுக்கப்படாத நிலைக்கும் நீள மாற்றம் (take up) = X 100
இதன் அடிப்படையில் கால் வட்ட முறுக்கு அளவி (qudrant twist tester) என்னும் கருவி செயல் படுகிறது.
நூலின் முடித்தோற்றம் (hair ness). தொடர் நீளிழை நூல்களுக்கும், செட்டிழைகளிலிருந்து நூற்கப்பட்ட நூல்களுக்கும் ஒரு முதன்மையான வேறுபாடு, வெட்டிழை நூலின் முடித் தோற்றமாகும். அதாவது, நூலின் பரப்பிலிருந்து, இழை முனைகளும், கண்ணிகளும் நீட்டிக் கொண்டிருக்கும்.
யாப்பு நூல்கள் (textured yarn). வெப்பத்தால் இளக வல்ல நீளிழை நூல்களின் அடிப்படையில், சில சிறப்பு நூல்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. அவை கொள்ளளவு உயர்த்தப் பட்ட நூல்கள் (bulk yarns), நீட்சி நூல்கள் (stretch yarns), திருத்தப் பட்ட நீட்சி நூல்கள் (modified stretch yarns) என்பன. இவ்வகை நூல்களிலிருந்து தயாரிக்கப் படும் துணிகளின் தன்மைகள் அலைவு விறைப்புப் (crimp rigidity) பண்பினால் பாதிக்கப்படுவதால், இந்நூல்களின் நீள வாக்கில் அமுங்கும் தன்மை முதன்மை பெறுகிறது. Hosiery and Alied Trades Research Association (HATRA) எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆய்வில், ஒரு டெனியருக்கு 0.1 கி. என்னும் விகிதத்தில் ஒரு சுமை. நூல் கண்டிலிருந்து தொங்க விடப் பட்டு நீரில் அமிழ்த்தப் படுகிறது. இரண்டு நிமிடங்களுக்குப் பின்பு, அதன் நீளம் அளக்கப் படுகிறது (ட₁) . சுமை ஒரு டெனியருக்கு 0.002 கி. என்னும் அளவுக்குக் குறைக்கப் பட்டு, மீண்டும் நீளம் அளக்கப் படுகிறது(ட₂) .
அலைவு விரைப்பு = \frac {(L_1 - L_2)}{L_1} 100 %
பல்வேறு டெனியருக்குத் தகுந்தாற் போல், பல்வேறு எடைக் கற்கள் தேவைப் படுகின்றன. இந்த ஆய்வு 5 நிமிடங்களில் முடிவு பெறும். ஆய்வு முறை தானியங்கியாக மாற்றப் பட்டால், ஒரு பணியாளர் 60 ஆய்வுகள் வரை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம். அலைவு விறைப்பு சம அளவில் கொண்ட நூல்களை இணைத்துத் தயாரிக்கப் படும் துணிகளில், குறைபாடுகள் தென் படுவதில்லை. —மே. ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். J.E. Booth, Principles of Textile Testing, Third Edition, Newnes–Butterworth, London, 1968.
நூல் இயக்கப் பண்பு
நீளுதல், வளைதல், சுருங்குதல் போன்ற பண்புகளை உடைய நூல் பின் வரும் ஆய்வுகளுக்குப் பின்னர், தரம் பிரிக்கப் படுகிறது. இவ்வகை ஆய்வுகள் வருமாறு: அறுபடும் ஆற்றல் (breaking load), முறுக்கு (twist perinch), ஈரம் ஈர்ப்பு (yarn humidity), முறையான அமைப்பு (yarn regularity), சீரான குறுக்களவு (yarn diameter) .
அறுபடும் ஆற்றல். குறிப்பிட்ட நீளமுள்ள நூல் குறிப்பிட்ட எடையையே தாங்கும். அதன் எடை மிகுந்தால், நூல் அறுந்து விடும். அவ்வாறு, எந்த எடையில் நூல் அறுபடுகிறதோ, அதுவே நூலின் அறுபடும் ஆற்றல் எனப் படுகிறது. ஒற்றை இழையாக நூல் அறுபடும் ஆற்றலைக் கண்டு பிடிக்கும் முறைக்கு, ஒற்றை இழை அறுபடும் ஆற்றல் (single yarn breaking strength) முறை எனப் பெயர். 120 கெஜத்தை சட்டத்தில் சுற்றி, அதன் அறுபடும் ஆற்றலைக் கண்டறியும் முறை லீ அறும் ஆற்றல் (Lea strength) எனப் படும்.
நூலின் முறுக்கு. குறிப்பிட்ட அளவில் நூலின் மையத்தைச் சுற்றியுள்ள முறுக்கு நூல் முறுக்கு எனப் படும். இதில் இரு வகைகள் உள்ளன. அவை ‘Ƶ’ முறுக்கு, ‘S’ முறுக்கு என்பன.
ஈரம் ஈர்ப்பு. ஒவ்வொரு வகையான நூலும், வெவ்வேறு அளவுகளில் ஈரம் ஈர்க்கும் ஆற்றல் உடையதாக இருக்கும். பொதுவாகப் பருத்தி நூல்கள் மிகையளவில் ஈரம் ஈர்க்கும் ஆற்றல் உடையவை.
எனவேதான், பருத்தி ஆடைகள் நனைந்த பிறகு, உலர்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. பாலி எஸ்ட்டர் நூல் ஈரத்தை மிகையளவில் ஈர்க்காது.
சரியான அமைப்பு. நூலின் குறுக்களவு ஒரே அளவாக இருத்தல் வேண்டும். அவ்வாறு உள்ள நூல், சரியான குறுக்களவுள்ள நூல் எனப் படும். மாறாக, குறுக்களவு மாறி, மாறி உள்ள நூல் காண்பதற்குச் சீராக இராமலும், எளிதில் அறுபடும் ஆற்றலைப் பெற்றுமிருக்கும். அதனால் தறியிலோ, பிற பயன்பாட்டின் போதோ நூல் அடிக்கடி அறுந்து விடும்.
1. நூலின் குறுக்களவு (அங்குலத்தில்) =
2. நூலின் குறுக்களவு (மி.மீட்டரில்) = மேலும் நூலின் குறுக்களவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் பண்புகளிலும் மாற்றம் ஏற்படும். —தி.அ. வெங்கடாசலம்
நூல் குறை
நூல் நூற்பவர் நூற்பு எந்திரத்தில் நூல் தயாரிக்கும் போது வரும் குறைபாடுகளாவன: தவறான அல்லது குறைவான அல்லது அதிக முறுக்கமுள்ள நூல், தடித்த அல்லது முதிரா இழை (roving) தவறான இழுவையால் உண்டாகும் நூல், மொத்தமான அல்லது மெல்லிய நூல், உருண்டை வடிவம் அமைதல், அறுந்த கோர்வையான நூல் அழுக்கான அல்லது எண்ணெய்க் கறையான நூல், நூல் முறுக்கம் (twist) என்பன.
நூல் முறுக்கத்தில், கார்க் ஸ்குரு (Cork screw) நூல், ஒற்றை நூல், கனமான நூல், இரண்டிற்கு மேல் ஒட்டிய முறுக்கமான நூல், குறைந்த அல்லது அதிக முறுக்கமான நூல், எண்ணெய்க் கறையான அல்லது அழுக்கான நூல் ஆகிய குறைகள் ஏற்படக் கூடும். —தி.அ. வெங்கடாசலம்
நூல்கோல்
இக்காய்கறியின் தாவரப் பெயர் பிராசிக்கா ஒலிரேசியா வகை காங்கிலோடெஸ் (Brassica oleracea Var gongylodes) <!---- Checked the botanical name with https://en.wikipedia.org/wiki/Kohlrabi----> என்பதாகும். பிராசிக்கா ஒலிரேசியா வகை காலோராபா (Brassica oleracea var. Caulorapa) என்பது இதன் இணை தாவரப் பெயராகும். இச்செடி குரூசிஃபெரே குடும்பத்தைச் சேர்ந்தது.
நூல்கோல் வடக்கு ஐரோப்பியக் கடற்கரையோரப் பகுதிகளையே தாயகமாகக் கொண்டதாகக் கருதப் படுகிறது.
அமைப்பு. இது ஒரு சிறு செடி; தண்டு நேரானது; தண்டு வீங்கி உருண்டையாக, 5–10 செ.மீ. குறுக்களவுள்ளதாக மாறும். இலைகள் பளபளப்பானவை.
இலைக் காம்பு நீண்டிருக்கும். மஞ்சரி ரெசீம் வகையைச் சேர்ந்தது. 10–20 செ.மீ. நீளமுடையது, பூக்காம்புச் செதில், பூவடிச் செதில் அற்றது. மலர்கள் இரு பால் ஆரச் சமச் சீரானவை. புல்லி இதழ்கள் நேரானவை. அல்லி இதழ்கள் 1–1.5 செ.மீ. நீளமானவை.
புல்லி இதழ்களை விட ஏறக் குறைய, இரு மடங்கு நீளமானவை. எலுமிச்சை மஞ்சள் நிறமானவை. ஆறு மகரந்தத் தாள்களும் நேரானவை.
மேல் மட்டச் சூல் பை. கனி நெற்று (pod) வகையைச் சேர்ந்தது. இரண்டு இணைப்புகளினின்றும் கீழிருந்து மேல் நோக்கிக் கனிகள் வெடிக் கின்றன. இவ்வாறு அறைகள் பிரியும் போது, தடுப்புச் சுவரில் இணைத் திசுவின் மூலம் சூல்கள் பொருந்தியுள்ளன.
கனி 5–10 செ.மீ. நீளத்தில் உருண்டையாகவும், நுனி கூரியதாயும் இருக்கும். .கனியின் நுனி விதை அற்றது. ஒவ்வொரு கனியிலும் 8–16 விதைகள் அடங்கியிருக்கும். கனி அடர் சாமபல் பழுப்பு நிறத்தில் 2–4 மி.மீ. குறுக்களவுடன் இருக்கும். விதைகளில் கரு பெரியதாகவும், முழுமையாக விதையை அடைத்துக் கொண்டும் இருக்கும்.
சாகுபடி முறை. இதன் சாகுபடிக்குப் பல வகையான மண் வகைகள் ஏற்றவையாக இருந்த போதிலும், செம்மண் கலந்த இரு மண்பாட்டு நிலம் மிகவும் ஏற்றது.
விதைகள் பெரும்பாலும் ஜுன்–ஜூலை மாதங்களிலும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் விதைக்கப் படுகின்றன. இந்தியாவில், வியன்னா, கருநீல வியன்னா என்னும் வகைகளே சாகுபடியில் உள்ளன. கிங் ஆஃப் நார்த் என்னும் வகையும் தற்போது பயிராகிறது. வெள்ளை வியன்னா 60–80 நாளில் விளையும். தண்டங்கிழங்கு சற்று நீள் சதுரமாகவும், மென்மையாகவும் இளம் பச்சை நிறமாகவும் இருக்கும்.
கரு நீல வியன்னா 80–90 நாளில் விளைகிறது. இதில் கரு நீலமான நடுத்தர பருமனுடைய தண்டங்கிழங்குகள் உண்டாகின்றன.
ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பில் சாகுபடி செய்வதற்கு 1.250 கிலோ விதையைப் பயன் படுத்த வேண்டும். பின்னர், 500 கிராம் 15:15:15 தொழு உரத்தைச் சேர்த்து, மண்ணுடன் கலக்க வேண்டும். 7.5 செ.மீ. இடை வெளியில் கோடுகளை இழுத்து, விதைகளை விதைத்து, மண்ணால் மூடி, நீர் பாய்ச்ச வேண்டும். பெரும்பாலும், 3–4 வார நாற்றுகள் 30–22.5 செ.மீ. இடைவெளியில் பார் முறையில் நடப் படுகின்றன. ஹெக்டேருக்கு 150 கி.கி. தழைச் சத்து, 100 கி.கி. மணிச் சத்து, 125 கி.கி. சாம்பல் சத்து ஆகியவை தேவை. மணிச் சத்து உரமும், சாம்பல் சத்து உரமும் முழுமையாக அடியுரமாக இடப் படுகின்றன. தழைச் சத்தில் பாதியளவு அடியுரமாகவும், பாதியளவு நடவு செய்த நான்கு வாரங்களுக்குப் பின்பும், இடப் படுகிறது. நீர் பாய்ச்சிய பின், நடவு செய்தல் வேண்டும். பின்பு நூல்கோல் தோட்டத்திற்கு 4–6 நாளுக்கு ஒரு முறை நீர் இறைக்க வேண்டும். தண்டின் அடிப் பகுதி 5–7 செ.மீ. குறுக்களவிற்குக் கருத்தவுடன், செடிகள் பிடுங்கப் பட்டுக் கிழங்குகள் அறுவடை செய்யப் படுகின்றன. நாற்று நட்ட 45–60 நாளில் அறுவடை நடை பெறுகிறது.
நோய்கள். இப்பயிரை அசுவுணி, இலைப் பேன், தத்து வண்டு, அரைக் காவடிப் புழு மஞ்சரித் துளைப்பான் போன்றவை தாக்குகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த நாற்றங்காலில் 10 லி. நீருக்குக் குவினால் பாஸ் 20 மி.லி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும். நூல்கோல் உள்ள தோட்டத்தில், நட்ட 2, 4 ஆம் வாரத்தில் மேற்குறிப்பிட்ட மருந்தைத் தெளித்துப் பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். நோய்களுள், பாக்டீரியாக் கருப்பழுகல், இலைக் கருகல், வெள்ளைத் துரு முதலியவை குறிக்கத் தக்கவை. பாக்டீரியக் கருப்பழுகல் நோயைக் கட்டுப் படுத்துவதற்கு 10 லி. நீருக்கு டெட்ராசைக்ளின் ஹைட்ராக்சைடு 100 மி.கி. கரைத்துத் தெளிக்க வேண்டும். ஏனைய நோய்களைக் கட்டுப் படுத்த, 10 லி. நீருக்கு 25 கிராம் என்னும் அளவில் தாமிர ஆக்சி குளோரைடு மருந்தைக் கரைத்துத் தெளிக்க வேண்டும்.
பயன். நூல்கோல் தண்டங்கிழங்கு பச்சை அல்லது நீல நிறத்தில் காணப் படும். அறுவடை செய்த செடிகளிலிருந்து பச்சைத் தழைகளை அரிந்து நீக்கி விட்டுக் கிழங்குகளைச் சிறு, சிறு துண்டுகளாக்கிச் சமைத்து உண்பதுண்டு. —கோ. அர்ச்சுனன். துணை நூல். J.W. Purseglove, Tropical Crops-Dicotyledons, Longman Group Ltd., London, 1974.
நூல் புழு
சில நூல் புழுக்கள் விலங்கினங்களையும், பயிரினங்களையும் தாக்குகின்றன. விலங்கினங்களைத் தாக்குபவை மிக நீளமாக இருக்கும். ஆனால், பயிரினங்களைத் தாக்கும் நூல் புழுக்கள் உருவில் மிக, மிகச் சிறியவையாயும், மெலிந்தும் காணப் படும். தாவர நூல் புழுக்களை உருப் பெருக்கியின் மூலமே காண இயலும்.
விலங்குகளைத் தாக்கும் நூல் புழுக்களில், குடல் உருண்டைபுழு. (Intestinal round worm), கொக்கிப் புழு (hook worm), யானைக் கால் நோய்ப் புழு (Elephantiasis), கினியாப் புழு, இழைப் புழு (thread work), டிரைக்கினாப் புழு, சாட்டைப் புழு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இவை மனித இனத்தில் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
குடல் உருண்டைப் புழு. ஆக்காரிஸ் லும்ரிகாய்டிஸ் (Ascaris lumbricoides). என்பது இதன் விலங்கினப் பெயராகும்.. இப்புழு உலகம் முழுவதும் பரவியுள்ளது. மனிதனின் குடலில், குறிப்பாகக் குழந்தைகளின் குடலில் இது ஒட்டுண்ணியாக வாழ்கிறது. பொதுவாக, ஆண் புழு குட்டையாகவும், அதன் பின் புறம் சற்றுக் கீழ் நோக்கி வளைந்தும் இருக்கும். பெண் புழு நீளமாகவும், அதன் பின் புறம் நேராகவும் இருக்கும்.
இப்புழுக்களின் இனச் சேர்க்கை மனிதனின் குடலில் நிகழ்கிறது. இனச் சேர்க்கைக்குப் பின்பு, பெண் புழு நாளொன்றுக்கு 20,000 முட்டைகள் வீதம் 2,00,000 முட்டைகள் வரை இடும். இம்முட்டைக்குள் மலத்துடன் வெளி வருகின்றன. முட்டைக்குள்ளேயே கரு வளர்கிறது. இது முட்டைக்குள் சுருண்டு கிடக்கும். பின்பு, முட்டைகள் மலத்திலிருந்து ஈயின் மூலமாகவோ, காற்றின் மூலமாகவோ, உணவையோ, குடி நீரையோ உட்கொள்ளும் போது, முட்டை குடலுக்குள் செல்கிறது. அங்கே, முட்டையிலிருந்து இளம் புழு வெளி வருகிறது. இது குடலின் சுவரைத் துளைத்து, அங்குள்ள குருதிக் குழாயினுள் புகும். இங்கிருந்து, முறையே கல்லீரல், இதயம், நுரையீரல், சுவாசக் குழல், தொண்டை, அன்னக் குழல், வயிறு ஆகிய உறுப்புகளின் வழியாகச் சென்று இறுதியில் சிறு குடலை அடையும். இங்கு இளம் புழு முதிர்ந்து, பெரிய புழுவாகிறது. இளவுயிரி சுவாசக் குழாயின் வழியாகத் தொற்றித் தொண்டைக்குச் செல்லும் போது, தொண்டையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும். இது கூட்டமாகச் சுவாசக் குழாயில் செல்வதால், சுவாசக் குழாய் அடைபடலாம். குடலில் புழுக்கள் கூட்டமாக இருந்தால், குடல் அடைபடவும் வாய்ப்புண்டு. இப்புழுத் தாக்குதலைத் தவிர்க்க முட்டை தொற்றியுள்ள உணவு வகைகளையும் குடிநீரையும் தவிர்க்க வேண்டும்.
கொக்கிப் புழு. கொக்கிப் புழுவின் விலங்கினப் பெயர் ஆங்கிலோஸ்டோமா டியோடினேல் (Anchylostoma dyodenale) என்பதாகும் . இப்புழுவை வட சீனா, இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணலாம். கொக்கிப் புழு மனிதச் சிறு குடலின் நடுப் பகுதியில் வாழ்கிறது. இங்கு, புழுக்களுக்குள் இனச் சேர்க்கை நிகழ்கிறது. இதன் பின், பெண் புழு முட்டையிடுகிறது. முட்டைகள் மலத்துடன் வெளி வருகின்றன. பின்பு, முட்டையிலிருந்து இளவுயிரி வெளி வருகிறது. இவ்விளம் புழு மண்ணிலுள்ள பொருள்களை உண்டு வளர்ந்து, இரண்டாம் வளர் புழு நிலையை அடையும். இந்நிலைக்கு, இழை வளர் புழு என்று பெயர். இப்புழு தொடர்ந்து வளரும் போது, இதன் தோல் உரியும். இவ்வாறு தோல் உரிந்த நிலையில், இழை வளர் புழு உண்ணுவதில்லை. இதற்கு உண்ணாத இழை வளர் புழு என்று பெயர். மண்ணில் இப்புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும். இத்தகைய மண்ணில் ஒரு மனிதன் நடந்தால், தோலைத் துளைத்துக் கொண்டு, அவன் குருதிக் குழாயினுள் இழை வளர் புழு புகுந்து விடுகிறது. குருதிக் குழாயின் மூலம் நேராக இப்புழு நுரையீரலுக்குச் செல்லும். பின்பு, அங்கிருந்து முறையே சுவாசக் குழாய், தொண்டை, அன்னக் குழல், வயிறு ஆகிய உறுப்புகள் வழியாகச் சென்று, இறுதியில் சிறு குடலின் நடுப் பகுதிக்கு வந்து சேரும். பின்னர், அங்கு அது வளர்ந்து, பெரிய புழுவாகி விடும்.
பாதத்தில் கொக்கிப் புழுவால் துளைக்கப்பட்ட காயத்தினுள் பாக்டீரியா புகுந்து, பாத அரிப்பு (ground itch) என்னும் கால் நோயை ஏற்படுத்தும். குடலில் இருக்கும் போது, அதன் சுவரைக் கொக்கிப் புழு சேதப் படுத்தி, நஞ்சையும் சுரக்கிறது. இந்நஞ்சு குருதி உறைதலை நிறுத்தும் தன்மை கொண்டது. இதனால், குடல் புண் வழியாகப் பெரும் அளவில் குருதி வெளிப் படும். இவ்வாறு வெளிப்படுவதால், குருதிச் சோகை ஏற்படும். கொக்கிப் புழு பரவாமல் இருக்க, கால்களில் எப்போதும் செருப்பு அணிதல் வேண்டும்.
யானைக் கால் நோய்ப் புழு. யானைக் கால் நோய்ப் புழுவிற்கு ஃபிலேரியா பாங்கராஃப்ட்டி (Filaria bancrofti) என்னும் விலங்கியல் பெயருண்டு. இப்புழு சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் மிகப் பரவலாகக் காணப் படும். இந்தியாவில் ஒரிசா, மேற்கு வங்காளம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணப் படும். தமிழகத்தில் குறிப்பாகத் தஞ்சாவூரில் இப்புழுவின் தாக்குதல் மிகுதி. மனிதனுக்கு உண்டாகும் யானைக் கால் நோயைக் கியூலெக்ஸ் (culex) என்னும் கொசு பரப்புகிறது. இப்புழு தோலுக்கு அடியில் காணப் படும் நிண நீர்க் குழாய்களில் காணப் படுகிறது. இனச் சேர்க்கைக்குப் பின் உண்டாகும் குட்டிப் புழுக்களை, நுண்ணிழைப் புழுக்கள் என்பர். மிகச் சிறிய இவை, நிணநீர்க் குழாயை விட்டுத் தோலின் அடிப் பகுதியிலுள்ள குருதிக் குழாயை அடைகின்றன. இரவு நேரம் நெருங்கும் போது, இப்புழு தோலின் மேற்.பகுதியிலுள்ள குருதிக் குழாய்க்கு இடம் பெயர்கிறது. இது இரவு உணர்தன்மை எனப் படும். இச்சமயத்தில், கியூலெக்ஸ் கொசு ஒட்டுண்ணியால் பாதிக்கப் பட்டவரின் குருதியை உறிஞ்சினால், குருதியுடன் நுண்ணிழைப் புழுவையும் சேர்த்து உட்கொள்கிறது.
கொசுவின் குடலுக்குள் நுண்ணிழைப் புழு தன் தொய்வான உறையை விட்டு வெளி வருகிறது. பின்பு, குடற்சுவரைத் துளைத்துக் கொண்டு, கொசுவின் மார்புத் தசைகளில் தங்குகிறது. அங்கே, இன உறுப்பைத் தவிர, ஏனைய உறுப்புகள் யாவும் வளர்ச்சியுறுகின்றன. இதற்குப் பின், ஒரு வாரத்தில் இதன் வெளித் தோல் உரிந்து வளரும். இறுதியில், வளர்ச்சியுற்ற நுண்ணிழைப் புழு கொசுவின் வாய்ப் பகுதியில் வந்து தங்குகிறது. இச்சமயத்தில், கொசு வேறொருவரின் குருதியை உறிஞ்சினால், அவர் குருதியினுள் அதன் உமிழ் நீருடன் நுண்ணிழைப் புழுவும் செல்கிறது. பின்பு, நேராக நிண நீர்க் குழாயை அடைந்து பெரிய புழுவாக மாறிப் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது.
கினியாப் புழு. <!---- கினிப் புழு என்பதே சரியான உச்சரிப்பு. See : https://en.wikipedia.org/wiki/Dracunculus_medinensis ---> கினியாப் புழுவிற்கு டிராகன்குலஸ் மெடினென்சிஸ் (Dracanculus medinensis), ஃபிலாரியா மெனென்சிஸ் (Filaria medinensis) என்னும் விலங்கினப் பெயர்கள் உண்டு. இப்புழுவை இந்தியா, ஆப்பிரிக்கா, பிஜித் தீவு, அரேபியா, மேற்கிந்தியத் தீவு,தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவலாகக் காணலாம். பெண் புழு ஏறக் குறைய 50 செ.மீ. நீளமிருக்கும். ஆண் புழு ஏறக்குறைய 2 செ.மீ. நீளமிருக்கும். கினியாப் புழுவின் உடல் பால் வெள்ளை நிறமாக இருக்கும். இப்புழு கால், கணுக் கால், பாதம் ஆகிய உறுப்புகளில், தோலுக்குக் கீழுள்ள இணைத் திசுக்களில் (connective tissues) வாழ்கிறது. இங்கே, ஆண், பெண் புழுக்களுக்கிடையே இனச் சேர்க்கை நிகழ்கிறது. இனச் சேர்க்கைக்குப் பின், ஆண் புழு இறந்து விடுகிறது. கருவுற்ற பெண் புழு, தோலைத் துளைத்து ஒரு சிறிய வீக்கத்தைத் தோற்றுவிக்கும். இவ்வீக்கமுற்ற உறுப்பில் நீர் பட நேர்ந்தால், வீக்கம் உடையும். உடைந்த பகுதியின் வழியாகப் புழுவின் கருப்பை வெளிப் படும்.
கருப்பையிலிருந்து எண்ணற்ற வளர் புழுக்கள் நீருக்குள் வெளிப் படும். இவை அதே நீர் நிலையில் வாழ்கின்ற சைக்ளோப்ஸ் என்னும் கணுக் காலியின் உடலினுள் புகுந்து கொள்ளும். பின்பு, வளர் புழு சைக்ளோப்சின் உடற் குழிக்குச் சென்று, இரண்டு முறை தன் தோலை உரிக்கிறது. இந்நிலையில், சைக்ளோப்சைச் சேர்த்து, நீருடன் அருந்தினால், வளர் புழுவும் குடலுக்குள் செல்கிறது. பின்பு, அங்கிருந்து குருதிக் குழாயின் வழியாக நேராகத் தோலுக்கு அடியிலுள்ள இணைத் திசுக்களுக்குச் சென்று, பெரிய புழுவாக வளர்கிறது. இப்புழுவால் உண்டாகும் நோய் பரவாமலிருக்கச் சைக்ளோப்ஸ் கலந்த நீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அல்லது நீரைக் கொதிக்க வைத்து, அருந்த வேண்டும். நீர் நிலைகளிலுள்ள சைக்ளோப்சைச் சுண்ணாம்பு தெளித்து அழிக்கலாம் அல்லது, சைக்ளோப்சைத் தின்று வாழும் மீன்களை நீர் நிலைகளில் விட்டு வளர்க்கலாம். உடலில் இருக்கும் போது, இப்புழு ஒவ்வொரு நாளும், தன் உடலைப் புண்ணின் வழியாக நீட்டி, வளர் புழுக்களை ஈனும். ஒவ்வொரு நாளும் வெளியே நீளுகின்ற இதன் உடல் பகுதியை மெதுவாக ஒரு குச்சியால் இதன் உடல் முழுவதும் வெளி வரும் வரை சுற்ற வேண்டும்.
இழைப் புழு. இப்புழுவிற்கு எண்டிரோலோபஸ் வேர்மிகுலாரிஸ் (Enterolobus vermicularis) என்றும், ஆக்சியூர்ஸ் வெர்மிகுலாரிஸ் (Oxyuirs vermicularis) என்றும், விலங்கினப் பெயர்கள் உண்டு. உலகெங்கும் காணப் படும் இழைப் புழு குழந்தைகளின் மலக் குடலில் வாழ்கிறது. ஆண் புழு ஏறக்குறைய 4 மி.மீ. நீளமிருக்கும். பெண் புழு இதைப் போல் இரண்டு மடங்கு நீளமிருக்கும். இனச் சேர்க்கைக்குப் பின், கருவுற்ற பெண் புழு குழந்தையின் மல வாய் அருகில் வந்து, மல வாயின் வெளிப்புறத் தோல்களின் மீது முட்டைகளை இடும். இச்சமயத்தில், மல வாயைச் சுற்றிலும் அரிப்பு ஏற்படும். அரிப்பை நீக்குவதற்காகக் குழந்தை தன் விரல் நகத்தால் சொரியும் போது, நகத்தினுள் முட்டைகள் சிக்கிக் கொள்ளும். கையைக் கழுவாமல், குழந்தை உணவு உட்கொண்டால், உணவுடன் நகத்திலுள்ள முட்டைகளும் குடலுக்குள் செல்லும். அங்கே முட்டையிலிருந்து வளர் புழுக்கள் வெளி வந்து பெரிய புழுக்களாகின்றன.
நோயுற்ற குழந்தைகளின் ஆடைகளில் முட்டை ஒட்டிக் கொண்டிருக்கும். ஆடையிலிருந்து முட்டைகள் பிறருடைய உணவுக்குச் செல்லலாம். இந்நோய் பிறருக்குப் பரவுதலும் உண்டு. இதனைத் தடுக்க, குழந்தைகளின் உடலைக் குறிப்பாக, விரல்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நகங்களை வளர விடாமல் அடிக்கடி வெட்டிக் கொண்டிருக்க வேண்டும். உண்பதற்கு முன், கையை நன்றாகக் கழுவ வேண்டும்.
தாவர நூற்புழுக்கள். தாவர நூற்புழுக்கள் மிகவும் சிறியவையாக 0.01–1.00 மி.மீ. நீளம் கொண்டிருக்கும். பொதுவாக, இப்புழுக்கள் நீண்டும், மெல்லியவாகவும், வளைந்தும் காணப்படும். வாய்ப் பகுதியில் ஊசி போன்ற அலகினைக் கொண்டிருக்கும். இதனால் தாவரத் திசுவறைகளைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சும். இவை மண்ணில் 4–25 மி.மீ. ஆழத்தில் இருக்கும். மண்ணின் மேற்பரப்பில் இவை காணப்படா. நூல் புழுக்கள் ஓர் இடத்திலிருந்து, ஏனைய இடங்களுக்கு நீர், பண்ணைக் கருவிகள் மூலமாகப் பரவும். ஒரு நாட்டிலிருந்து, ஏனைய நாடுகளுக்கு விதைப் பொருள்களால் பரவும்.
வாழ்க்கைச் சுழற்சி. நூற்புழுக்கள் நூற்றுக் கணக்கான முட்டைகளை மண்ணிலோ, தாவரத் திசுக்களிலோ, தனித் தனியாகவோ, கூட்டமாகவோ இடும். சில புழுக்கள் முட்டைகளைப் பசை போன்ற கசிவால் மூடி விடும். வேறு சில நூற்புழுக்கள் முட்டைகளைக் கடினமாக்கப் பட்ட உடலினுள் அடக்கி மடிந்து விடும். இவற்றினுள் பாதுகாக்கப் படும் முட்டைகள் எவ்விதக் கெடுதலுக்கும் உட்படாமல் இருக்கும். நூற்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சியில் 6 பருவங்கள் உள்ளன. அவை, முட்டைப் பருவம், 4 புழுப் பருவங்கள், வளர்ச்சிப் புழுப் பருவம் என்பன.
புழு, முதல் தோலுரிப்பை முட்டையிலேயே கழித்து விடும். இரண்டாம் பருவ புழுக்கள், முட்டை களிலிருந்து வெளி வந்து, மூன்று முறை தோலுரித்த பின், முழு வளர்ச்சியடையும். வாழ்க்கைப் பருவம் ஏறக் குறைய 30–40 நாள் இருக்கும். சில நூற்புழுக்கள் மண்ணிற்குள்ளும், இலை, தண்டு, விதை முதலியவற்றிலும், பல ஆண்டுகள் உறக்க நிலையில் இருந்து, பிறகு தகுந்த பருவ காலத்தில், பெருக்கமடையும். ஏனைய உயிரினங்களைப் போல், தாவர நூற் புழுக்களிலும், பெண் சேர்க்கையுண்டு. சில வகைகளில் ஆண் புழுக்கள் இல்லை. எனினும், அவை இனப் பெருக்கமடையும் தன்மை கொண்டவை. அனைத்து வகை நூற்புழுக்களும் முட்டையிடுகின்றன.
தாவர நூற்புழுத் தாக்கமும் அறிகுறியும். நூற்புழு தாக்கிய பயிர்கள் வளர்ச்சி குன்றிக் குட்டையாக இருக்கும். மேலும், மஞ்சள் நிறமாகி, இலைகள் வாடி விடும். இளம் பயிர்கள் அழிந்து விடும். வேர் குட்டையாகும். வேர்களில் முடிச்சுகளையோ, கருகலையோ உண்டாக்கி, வேரின் சத்து, நீர் உறிஞ்சும் தன்மையைப் பாதிக்கும். உருளைக் கிழங்கில் உண்டாகும் பொன்னிற நூற்புழுவால் (golden nematode) கிழங்கு பளபளப்புத் தன்மையை இழந்து சொறி போன்ற தோற்றத்தைத் தரும். எலுமிச்சை நூற்புழுத் தாக்குதலால், மரத்தின் வளர்ச்சி குன்றுவதுடன், சிறு சிறு காய்களே உற்பத்தியாகின்றன.
வேர் நூற்புழுக்கள். வேர் நூற்புழுக்கள் (root nematodes) மண்ணில் தோன்றி, அருகிலுள்ள வேர்களைத் தாக்கி அழிக்கின்றன. தக்காளி, பப்பாளி, பருத்தி, கத்தரி, கரும்பு, வாழை, எலுமிச்சை, நெல், திராட்சை, புகையிலை போன்ற பயிர்களில், வேர் முடிச்சு, வேர்க் கருகல், வேர் அழுகல் முதலிய நோய்களை உண்டாக்குகின்றன. இவற்றால், செடிகளின் காய்ப்புத் திறன் குறைவதோடு, காய்களும் சிறியனவாக இருக்கும். இவை வேரின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துவதோடு, வேரின் உணவு, நீர் ஆகியவற்றை உள்ளேற்கும் திறனையும் குறைத்து விடுகின்றன. வேர்ப் புழுக்களால் தாக்கப்பட்ட செடிகள், நாளடைவில் பழுத்துக் காய்ந்து அழிந்து விடுகின்றன. உருளைக் கிழங்கைத் தாக்கும் பொன்னிற நூற்புழு இவ்வகையைச் சேர்ந்தது. இதனால், வேரின் வளர்ச்சி குன்றி, கிழங்குகள் குறைந்த அளவிலும், சிறியனவாகவும், உருமாறியும் உண்டாகின்றன. நாளடைவில் செடிகள் பழுத்து, வாடி, வதங்கி, அழிந்து விடுகின்றன.
இலை நூற்புழுக்கள் (leaf nematodes). இவை பயிர்களின் இலைகளைத் தாக்கி, அழிக்கின்றன. தாக்கப்பட்ட இலைகள், வளர்ச்சி குன்றியும், வெளுத்தும் காணப் படும். இவை இலைகளிலுள்ள பச்சையத்தைத் தாக்குவதால், பயிரின் ஒளிச் சேர்க்கை தடைப் படுகிறது. நெல் இலைகளின் நுனி பழுத்துக் காய்ந்து, காணப் படும். தாக்கப் பட்ட இலைகள் உதிர்ந்து விடுகின்றன. கனகாம்பரச் செடியின் இலைகள் தாக்கப் படுவதால், அக்செடியின் பூக்குந் தன்மை குறைகிறது. இலைக் குருத்துகளும், மொட்டுகளும் பெருமளவில் பாதிக்கப் படுகின்றன. கோதுமை போன்ற பயிர்களிலும், இலைகள் அழிக்கப் படுகின்றன.
தண்டு நூற்புழுக்கள் (Stem nematodes). இவ்வகை நூற்புழுக்களால் தென்னை, பாக்கு போன்ற மர வகைகள் தாக்கப் பட்டுப் பேரழிவடைகின்றன. நூற்புழுக்களால் தாக்கப் பட்ட ஓட்ஸ் பயிர்களின் வளர்ச்சி குன்றி, தானிய மணி உற்பத்தியும் தடைப் படுகிறது.
மலர் மற்றும் தானிய நூற்புழுக்கள் (flower and grain nematodes). இவ்வகைப் புழுக்களால், கனகாம்பரச் செடிகள் தாக்கப் படுகின்றன. தாக்கப் பட்ட செடிகள் உருவில் சிறியனவாகியும், உரு, நிறம் மாறியும் இருக்கும். கோதுமையில், தானியங்கள் அழிக்கப் படுகின்றன. இலைகளின் வளர்ச்சிக்கேற்றவாறு, நூற்புழுக்களும் எடுத்துச் செல்லப் படுகின்றன. தானியங்களுக்குப் பதிலாக, ஆயிரக் கணக்கான நூற்புழுக்கள் அவற்றில் உற்பத்தியாகின்றன. நூற்புழுக்கள் அடங்கிய தானியங்கள் மிளகு உருவத்தில் கறுப்பாக இருக்கும். தாக்கப் பட்ட கோதுமையின் இலைகள் சுருட்டிக் கொண்டும், வளைந்தும் காணப் படும்.
தாவர நோய் நூற்புழுக்கள். வேரில் நூற்புழுக்கள் ஏற்படுத்தும் துளைகளின் மூலம், பாக்டீரியா, பூசணம், நச்சுயிரி போன்ற நோய் நுண்ணுயிரிகள் பரவி, நோய்களை மிக எளிதில் ஏற்படுத்துகின்றன. சில வகை நூற்புழுக்கள் இந்நோய் நுண்ணுயிரிகளை ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்குப் பரப்புகின்றன. நூற்புழுக்கள், பூசணங்கள் கூட்டுறவின் மூலம் பருத்தி, கனகாம்பர வாடல் நோய்களால் ஏற்படும் அழிவு கூடியுள்ளமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மண்ணில் காணப் படும் நச்சுயிரி நோய்கள், நூற்புழுக்களால் பரவுகின்றன. திராட்சை விசிறி இலை என்னும் நோயை உண்டாக்கும் நச்சுயிரியைச் சிஃபினேமா இன்டெக்ஸ் என்னும் நூற்புழு பரப்புவது 1958ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப் பட்டது. சிஃபினேமா (Xiphinema), லான்ஜிடோரஸ் (Longidorus), டிரைகோடாரஸ் (Trichodorus) என்னும் மூன்று பேரினங்களைச் சேர்ந்த நூற்புழுக்கள் நச்சுயிரிகளைப் பரப்புகின்றன. நோயுள்ள செடியிலிருந்து, சாற்றை உறிஞ்சிய நூற்புழுக்கள், பின்பு, நல்ல செடியில் உள்ள வேரிலிருந்து சாற்றை உறிஞ்சும் போது, நச்சுயிரிகள் பரவுகின்றன. நச்சுயிரிகள் நூற்புழுக்களில் முட்டை வழியாகப் பரவுவதில்லை. நூற்புழுக்கள் தோலுரித்த பின்னர், நச்சுயிரியைப் பரப்பும் தன்மையை இழந்து விடுகின்றன. இளம் நூற் புழுக்களும், முதிர் நூற்புழுக்களும் நச்சுயுயிரிகளைப் பரப்புகின்றன. இளம் நூற்புழுக்கள் முதிர் நூற்புழுக்களை விடப் பெருமளவில் நச்சுயுரிகளைப் பரப்புகின்றன.
பயிர்ச் சுழற்சி (Crop rotation). ஒரே வகைப் பயிரையே பயிரிடாமல், பயிர்ச் சுழற்சி முறையை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அப்பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள் நாளடைவில் பெருகி, விளைச்சலைப் பெரிதும் குறைக்கும். நீலகிரி மாவட்டத்தில், உருளைக்கிழங்கை ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்தாற் போல் பயிர் செய்து வந்தமையால், உருளைக் கிழங்கைத் தாக்கும் பொன்னிற நூற் புழுக்களின் எண்ணிக்கை பெருகி, உருளைக் கிழங்கை அந்நிலங்களில் தற்போது சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பு முறைகள்
ஆழ உழுதல். அறுவடை செய்த வயலை, ஆழ உழ வேண்டும். இதனால், மண்ணிலுள்ள நூற்புழுக்களும், நூற்புழுக்கள் உள்ள வேர்களும், தாக்கப்பட்ட பிற தாவர உறுப்புகளும் ஆழப் புதைக்கப் பட்டு விடுகின்றன.
தரிசு போடுதல். நூற்புழுக்கள் ஈரமுள்ள, வெப்பம் குறைந்த மண்ணில் வாழும் தன்மையுடையன. வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மிகுந்தால், அவை இறந்து விடுகின்றன. நீர் விடாமல் தரிசு போட்டு, மூன்று அல்லது நான்கு முறை நிலத்தை உழுதல் வேண்டும். நூற்புழுக்களும், அவற்றின் முட்டைகளும், சூரிய வெப்பத்தால் தாக்கப் பட்டு அழிந்து விடுகின்றன. களைகளையும், அவ்வப்போது களைந்து அழித்து விடுதல் வேண்டும். நிலத்தைத் தரிசாகப் போடுவதால், உணவு கிடைப்பதற்குரிய தாவரங்கள் கிடைக்காமையால், நூற்புழுக்கள் அழிந்து விடுகின்றன.
பண்ணைத் தூய்மை. நூற்புழுக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பாசன நீர், உழு கருவி, விதை, நாற்று வழியாகப் பரவுகின்றன. ஆகையால், நூற்புழுக்கள் தாக்கிய நிலத்தின் வழியாக ஏனைய நிலங்களுக்கு நீர் பாய்ச்சக் கூடாது. நூற்புழுக்கள் உள்ள நிலங்களில், அறுவடைக்குப் பின் வேர், தண்டு, இலை முதலியவற்றை நீக்கி எரித்து விட வேண்டும். நூற்புழுக்கள் தாக்கிய நிலத்திலிருந்து கிடைக்கும் விதைகளையும், நாற்றுகளையும் விதைக்காக, பயன் படுத்தாமை நன்று. தாக்கப்பட்ட நிலங்களில், பயன்படுத்திய கருவிகளைத் தூய்மை செய்த பிறகே, ஏனைய நிலங்களுக்குப் பயன் படுத்த வேண்டும்.
இயற்கை உரமிடுதல். இயற்கை உரங்களாகிய பிண்ணாக்கு, சாணம், குப்பை, எரு போன்றவற்றைப் பயன் படுத்துவதால், பயிர்கள் செழுமையாக வளர்வதற்குரிய சத்துகள் கிடைக்கின்றன. மேலும், இவை நூற்புழுக்களைக் கொல்லக் கூடிய பாக்டீரியா, பூசணம், நன்மை செய்யும் நூற்புழுக்கள் முதலியவற்றையும் உற்பத்தி செய்து, பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களைக் கட்டுப் படுத்துகின்றன.
நூற்புழுக்கள் தாக்காத செடிகள். கடுகு, துளுக்க மல்லிகை, சணப்பை போன்ற பயிர்களின் வேர்களிலிருந்து வெளி வரும் வேதிப் பொருள்கள், நூற்புழுக்களுக்கு நஞ்சாக அமைந்து, அவற்றை அழிக்கின்றன. எனவே, இவ்வகைப் பயிர்களைத் தழையுரமாகவும், மாற்றுப் பயிராகவும் பயிரிடுதல் நல்லது.
நூற்புழுக் கொல்லிகள் (Nematocides). நூற்புழுக்கள் பெரும்பாலும், மண்ணில் தோன்றி, வேர்களைத் தாக்குவதால், மண்ணிற்குள் மருந்தைச் செலுத்தி, அவற்றை அழிக்க வேண்டும். தற்பொழுது டி.டி. (DD), டி.பி.சி.பி. (DBCP) அல்லது நெமகான், வேப்பம், வி.சி 13 (VC 13), டெரசர்மீ (Terracurp), போன்ற நூற்புழுக் கொல்லிகள் பெரும்பாலும் பயன் படுகின்றன. இவற்றில், நெமகான் தவிர ஏனைய மருந்துகள் முளைக்கும் விதைகளுக்கும், பயிர்களுக்கும் தீமை செய்பவை. ஆதலால், அவற்றை விதைப்பதற்கு அல்லது நடுவதற்கு ஒரு மாதம் முன்பே, மண்ணிற்குள் செலுத்தி விடுதல் வேண்டும். —பி. வி. சுப்பாராவ்
நூற்புழு உடல் செயலியல்
வளர்ச்சி, அதனால் ஏற்படும் உயிர் வேதி மாற்றங்கள், சிதைவுகள் அல்லது சேமிப்புகள், உணவு முதலியன நூற்புழுச் செயலியலில் (nematode physiology) அடங்கும். நூற்புழுக்களில், அவ்வப்போதைய செயல் மாற்றங்களும், இயற்கையாகவே உண்டாகும் அல்லது வேதி மருந்துகளால் ஏற்படும். இத்தகைய செயல் மாற்றங்களுக்குக் காரணமறிய அதன் செயலியலைத் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.
நூற்புழுவின் வேதிப் பொருள்கள். ஏனைய உயிரினங்கள் போலவே, நூற்புழுக்களிலும், மாவுப் பொருள்கள், புரதச் சத்து, கொழுப்புச் சத்து, உட்கருப் புரத அமிலங்கள், நுண்ணுயிரிச் சத்து, ஹார்மோன்கள், கரிம உப்புச் சத்துகள் போன்றவை உள்ளன. ஆனால், அவற்றைப் பற்றிய நுட்பமான அளவும், நிலையும் இது வரை சரியாக ஆராய்ந்து அறுதியிடப் படவில்லை. நூற்புழுவில் உள்ள வேதிச் சத்துகள் அவற்றின் வாழ் நாள், வெளி வெப்ப நிலைக்கெதிரான தடுப்பாற்றல், வறட்சி தாங்கும் ஆற்றல், வெளி உப்புச் சத்து முதலியவற்றால் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றை அறிய உதவுகின்றன. சில வகைச் சர்க்கரைச் சத்துகளும், 15 வகைத் தனித்தியங்கும் புரதங்களும், அமினோ அமிலங்களும் ஓரிரு நூல் புழுக்களில் கண்டறியப் பட்டுள்ளன. நூற்புழு புறத் தோல் சவ்வு, புரதம், கொழுப்புச் சத்து, பாலிஃபீனால், உட்கருப் புரத அமிலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நூற்புழுப் புறத் தோல் சவ்வின் புரதம், பூச்சிகளில் உள்ள கொம்புப் பொருளாக (Chitin) இல்லாமல் கெரடின் என்னும் புரதப் பொருளாக உள்ளது. வளர்ச்சி, சிதைவு. நூல் புழுக்களின் உடலில் இரு வகை அமினோ அமிலங்கள் உற்பத்தியாகின்றன. நூற்புழுக்களின் உணவுக் குழாய்ச் சுரப்பி, பலவகையான வேதி நீர்மங்களை உற்பத்தி செய்கிறது. இவை அலகு மூலம் வெளிப்பட்டுத் தாவரங்களின் செல்லினுள் சென்று, மாவு, புரதம், சர்ககரை, நார்ப் பொருள்கள், பெக்டின் ஆகியவற்றைக் கரைத்து விடுகின்றன. இதனால், நீர்மப் பொருள்கள் எளிதாக அலகு மூலம் நூற்புழுவின் உடலுக்குள் உறிஞ்சப் பட்டு விடும்.
சுவாசித்தல். நூல் புழுக்கள் சுவாசிப்பதற்கெனச் சிறப்பான சுவாச உறுப்புகள் இல்லை. எனினும், அவை உயிர் வாழ, ஆக்சிஜன் இன்றியமையாதது. குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள நிலையிலும், நூற்புழுக்கள் செயல் படும் என்றாலும், அவற்றின் வளர்ச்சியும், முட்டை பொரிதலும் பாதிக்கப் படும். முட்டை உற்பத்தி, சட்டை உரிக்கும் நிலை போன்ற செயல்களின் போதுள்ள நூற்புழுக்களும் ஆக்சிஜன் குறைந்த நிலையில் பாதிக்கப் படும்.
வெப்பம். நூல் புழுக்களுக்கு உடலின் தட்ப, வெப்ப நிலையைக் கட்டுப் படுத்த இயலாது. எனவே, இவற்றின் வளர்ச்சி, சிதைவு போன்ற செயல்களும், சூழலில் உள்ள வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. பொதுவாக, 5–30°C வெப்ப நிலை வளர்ச்சிக்கு ஏற்றது. உடல் நீர் மிகக் குறைந்த நிலையிலுள்ள நூல் புழுக்களுகட்குக் குறைந்த அல்லது மிகுதியான வெப்பத்தைத் தாங்கும் தன்மை, ஈரம் மிகுந்த நூல் புழுக்களை விட மிகுதியாக இருக்கிறது. இதற்குக் காரணம், நீர் மிகுந்துள்ள உடலில் உள்ள நொதிகள், வெப்பத்தின் மாறுதல்களால் பாதிக்கப் படுவதேயாகும். மாறாக, நீர்ப் பசை குறைந்த நூற் புழுவின் குடலில் உள்ள நொதிகள், வெப்ப மாறுதல்களைத் தாங்கும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. இதற்கு மையக் காரணமாக ஈரமே அமைகிறது.
ஈரம். நூல் புழுக்கள் வாழ்வதற்கு மிகச் சிறிதளவாவது நீர் தேவைப் படுகிறது. புழுக்கள் நிலத்திலிருந்தாலும், மண் துகள்களைச் சுற்றியுள்ள நீரிலேயே இருக்கின்றன. நூற்புழுவின் உடலிற்கு வேண்டிய சத்துகளும், தாதுக்களும் அவற்றைச் சுற்றியுள்ள நீரில் கரைந்த நிலையிலேயே கிடைக்கின்றன.
தாவரங்களின் திசுக்களிலும், செல்களிலும் நூல் புழுக்களுக்குத் தேவையான நீர்க் கரைசல் மிகுதி. நீரும், அதில் கரைந்துள்ள பொருள்களும், நூற்புழுவின் தோல் சவ்வு மூலம் ஊடுருவி உட்செல்கின்றன. நீர் குறைந்த நிலையில் நூற்புழுக்கள் தங்கள் உடலில் உள்ள நீர்மம் முற்றிலும் வெளியேறி விடா வண்ணம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றன எனக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நிலத்தின் நீர், செடி வாடல் நிலைக்குக் (wilting point) குறைந்தால், அங்குள்ள நூற்புழுக்களின் செயல் பாதிக்கப் பட்டு, அழிந்து விடும்.
பல வகை நூற்புழுக்களும், ஒவ்வாத சூழ்நிலையில் அழிந்து விடாமல் தங்களைக் காத்துக் கொள்ள, தம் செயல்கள் அனைத்தையும் முடக்கிக் கொண்டு, செயல் முடக்க நிலையில் காணப் படுகின்றன. ஏற்ற சூழ்நிலை வரும் போது, மீண்டும் சிறுகச் சிறுக, இவை செயல் படத் தொடங்குகின்றன. செயல் முடக்க நிலை என்பது ஒவ்வொரு நூல் புழுவிற்கும், அதன் வாழ்நாளின் ஒரு பருவத்தில் மட்டுமே காணப் படும். கோதுமையைத் தாக்கும் நூல் புழுவில், இரண்டாம் இள நிலைப் பருவமும், உருளைக் கிழங்கு நூற்புழுவில் முட்டைக் கூட்டினுள் இருக்கும் முட்டையிலுள்ள நூல் புழுவும், நெல் வெண் இலை நூற்புழுவில் முன் முதிர்ச்சிப் பருவமும், செயல் முடக்க நிலையில் அமையும். நூல் புழுக்கள் நன்றாக வாழ்ந்து பல்கிப் பெருக ஏற்ற தாவர உணவு தேவை. இது இராத போது, நூல் புழுக்களின் வாழ்நாள் சுற்றுப் புறச் சூழ்நிலையின் கட்டுப்பாட்டிற்குள் அமைகிறது. தேவையான பயிர் விளைவிக்கப் படும் போது, நூல் புழுக்களின் எண்ணிக்கை மீண்டும் பெருகி மிகுதியாகிறது.
வளர்ச்சியும் பால் மாறுபாடும். மிகுந்த உணவு உள்ள போது, நூற்புழுக்கள் பல வாழ்க்கைப் பருவங்களையும், விரைவாகத் தடையின்றி அடைந்து, வளர்ச்சி பெற்று முதிர்கின்றன. ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும், தோல் சவ்வும் விரிவடைகிறது. அதே போல், ஒவ்வொரு வளர்ச்சியின் முடிவையும் குறைக்க, நூற்புழுவின் மேல் தோல் உரித்து அகற்றப் படுகிறது. மரபைத் தழுவியும், உணவின் அளவைப் பொறுத்தும், நூற்புழுக்களின் ஆண், பெண் இனப் பாகுபாடு அமையும். உணவு குறையும் போது, பெரும்பாலும், ஆண் இனம் மிகுதியாகிறது. ஏற்ற சூழ்நிலையில் உணவு, குறையும் போது, பெரும்பாலும், ஆண் இனம் மிகுதியாகிறது. ஏற்ற சூழ்நிலையில், உணவு, தேவைக்கு மேல் உள்ள போது, பெண் இனம் பெருகவும், முட்டைகள் மிகுந்த இனப் பெருக்கம் நிகழவும் வாய்ப்பாகிறது. நூல் புழு எதிர்ப்புத் திறன் படைத்த பயிரில் உள்ள நூல் புழுக்களிலும், பெரும்பான்மையாக ஆண் இனமே இருக்கும்.
உணவு. தாவர நூல் புழுக்கள் திசுக்களில் உள்ள சாற்றையே உணவாகக் கொள்கின்றன. சில நூல் புழுக்கள் மண்ணில் இருந்து கொண்டு, தம் அலகால் வேரின் திசுக்களைத் துளைத்துச் சாற்றை உறிஞ்சும். சில வகை நூல் புழுக்கள் வேரினுட் சென்று, சாற்றை உறிஞ்சும். அவற்றின் உடல் பகுதி மட்டும் வெளியில் தெரியும். சில வகை நூல் புழுக்கள் வேரினுட் சென்று, சாற்றை உறிஞ்சும். அவற்றின் உடல் பகுதி மட்டும் வெளியில் தெரியும். சில வகை நூல் புழுக்கள், தம் வாழ்நாள் முழுவதையுமே தாவரங்களின் திசுக்களினுள் கழிக்கும்.
நூற்புழுக்கள் திசுக்களைக் குத்திக் கிழித்து, ஊடுருவ அலகு உதவுகிறது. திசுக்களிலுள்ள சாற்றை நன்றாகக் கரையச் செய்ய, உணவுச் சுரப்பிகளின் நொதி ஓரளவு செரிக்கச் செய்து பின்னர், அந்தச் சாற்றை அலகின் நடுவில் உள்ள நுண்ணிய பாதை மூலம் உறிஞ்சி, உணவுக் குழாய் வழியாகக் குடலை அடையும். இதற்கு மூன்று நிலைகள் உள்ளன. முதலில் நூற்புழு மண்ணில் திசை அறியாமல், சரியான தாவரத்தின் வேரை நாடிச் செல்லும். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை நிலத்தில் கழிக்கும் நூல் புழு, உணவிற்கு ஏற்ற தாவர வேரைக் கண்டு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நூல் புழுவில் பெரிதும் வளர்ச்சி பெற்றிருக்கும் நரம்பு மண்டலமும், அதைச் சார்ந்துள்ள உணர்வு, நுகர் உறுப்புகளும், தாவரங்களின் வேர் மண்டலத்திலிருந்து வெளிப் படும் வேதிப்பொருள்களுக்குத் தக்கவாறு செயல் படும். தகுந்த உணவுச் செடியின் வேரில் ஏற்படும் வேதிக் கசிவால் ஈர்க்கப் பட்டு, நூல் புழுக்கள் நிலத்தில் உள்ள நீரின் வழியாக வேரை அடைந்து, பின்னர், ஊடுருவி உட்செல்லும் அல்லது வெளியிலிருந்து கொண்டே தலையை மட்டும் உட்புகுத்தி, உணவுச் சாற்றை உறிஞ்சும். நூற்புழுக்களின் பாதை முதலில் திசை தெரியாமல் செல்லும் (அ, ஆ, இ, ஈ). வேர் மண்டலத்திற்கு அருகில் வந்தவுடன், (ஈ) தனக்கேற்ற தாவரத்தின் வேரில் கசிவு இருந்தால், நுகர் உறுப்புகளின் மூலம், அதனை உணர்ந்து, பின்னர், வேர் மண்டலத்தினூடே சென்று வேரை அடையும். —சிவகாமி வடிவேலு
நூல் புழுக் கட்டுப்பாடு
பயிர்களைத் தாக்கும் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துவது கடினமான செயலாகும். நூல் புழுக்களை அறவே அழிக்க இயலாவிடினும், அவற்றால் விளையும் பேரிழப்பை ஓரளவு குறைக்க இயலும். மண்ணின் ஈரம், வெப்பம், மண்ணின் கூறு, பருவ நிலைகளைப் பொறுத்து, நூல் புழுக்களின் எண்ணிக்கை மாறும். நூற்புழுக்களைக் கீழ்க் காணும் பல முறைகளில் கட்டுப் படுத்தலாம்.
உழவியல் முறை. இம்முறை சிக்கனமும், எளிமையும் கொண்டது. நூல் புழுக் கொல்லிகளை விடக் குறைந்த அளவிலேயே, இம்முறையில் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த இயலும்.
நூல் புழுக் கண்காணிப்பு. மண்ணில் உள்ள நூல் புழுக்களை நன்கறிந்து, மண்ணை மிகுந்த அளவு, மித அளவு, குறைந்த அளவு, நூல் புழுக்கள் கொண்டவை எனப் பிரித்தறிய வேண்டும். உருளைக் கிழங்கின் பொன்னிற நூல் புழுக்கள் மிகக் குறைவாக உள்ள நிலங்களில், உருளைக் கிழங்கைப் பயிர் செய்யலாம்.
கோடையில் 5–7 முறை உழவு செய்தும், வயல்களில் பயிரிடாமலும் தவிர்ப்பதால், வேர் முடிச்சு நூல் புழுக்கள் பெருகா வண்ணம் தடுக்கலாம். வயல்களில் உள்ள களைகள், கட்டைப் பயிர்கள், பயிரிடாப் பருவத்தில் தோன்றும் பயிர்களைக் களைந்து அழித்தல் இன்றியமையாதது. கோடை உழவு செய்வதால், தானியப் பயிர்களில் உற்பத்தியாகும் முட்டை வடிவ நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். கட்டைப் பயிர்களை அழிப்பதால், நெல்லில் தோன்றும் யூஃப்ரா நோயைக் கட்டுப் படுத்தலாம். களைகளை நீக்குவதன் மூலம், வேர் முடிச்சு நூல் புழுக்களான மெலாய்–டோகைன், இன்காகினிட்டா, மெ.ஜவானிக்கா, துளைத்துச் செல்லும் நூல் புழுக்களான ரோடா பெலணுசிமிலிஸ், ரோடிலென்குலஸ் ரெனிபாமிஸ் ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம். பயிர்ச் சுழற்சி. நூல் புழு தாக்காத பொருளாதாரப் பயிர்களைப் பயிரிடுவதால், நூல் புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கலாம். நூல் புழுக்களின் எண்ணிக்கையும், பொருளாதார அழிவிற்குக் கீழே இருக்கும். சான்றாக, மேலை நாடுகளில், உருளைக் கிழங்கை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடுவதால், பொன்னிற நூல் புழுக்களின் தாக்கம் காணப் படுவதில்லை. ஏனைய காலங்களில், உருளைக் கிழங்கைத் தவிர, ஏனைய மாற்றுப் பயிர்களைப் பயிரிடுகின்றனர்.
கோதுமைப் பயிரில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை, நூற்புழுக்கள் மொல்யா நோயை ஏற்படுத்துகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதுமை -பயிரிட்டும், மற்றப் பருவங்களில் பயறு வகை அல்லது தானிய வகை அல்லாத பயிர்களைப் பயிரிட்டும், இந்நூற்புழுக்களின் அழிவைத் தவிர்க்கலாம். வேர் முடிச்சு நூல் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்க, சோளம் போன்ற தானியப் பயிர்களைப் பயிரிடலாம். வேர் முடிச்சு நூல் புழுக்கள் தாக்கும் பயிர்களான காய்கறி, கரும்பு போன்றவற்றை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடலாம். இந்த முறைகளினால், மாற்றுப் பயிர்களைப் பயிரிடும் போது, விவசாயிகள் மிகு வருவாய் பெற இயலாத நிலையும் உள்ளது. பயிர்கள் பயிரிடும் காலத்தைப் பொறுத்து, நூற்புழுக்களின் எண்ணிக்கை உயர்ந்து, விளைச்சல் குறைகிறது. உருளைக் கிழங்கைப் பின் பட்டத்தில் பயிரிடுவதால்,பொன்னிற நூல் புழுக்கள் மிகுவதில்லை.
பொறிப் பயிர்கள். குறைவான வருவாய் தரக் கூடிய, நூல் புழுக்கள் மிகுதியும் தாக்கும் பயிர்களைப் பயிரிடுவதால், முதலில் நூல் புழுக்கள் இப்பயிர்களைத் தாக்கும். நூல் புழுக்களின் வாழ்க்கைப் பருவங்கள் முடியும் முன்பே, அவற்றைத் தொடக்கத்திலேயே அழித்து விடலாம். பொன்னிற நூல் புழுக்கள் தாக்கும் உருளைக் கிழங்கிற்கு இடையே, தக்காளியைப் பயிரிட்டு, பின்னர்த் தக்காளிப் பயிரை அழிப்பதால், நூற்புழுக்களின் உற்பத்தியைத் தவிர்க்கலாம். மேலும், பயிர்களுக்குக் கீழே பசுமையான இலைகளையும், புற்களையும் பரப்புவதால், நூல் புழுக்களின் உற்பத்தியைக் குறைக்கலாம்.
தரிசு நிலம். கோடைக் காலத்தில் உழவு செய்து, கட்டிகளை உடைத்துச் சமன் செய்து தரிசாக வைத்தால், சூரிய ஒளிக் கதிர்கள் பட்டு, பொன்னிற நூல் புழுக்கள், வேர் முடிச்சு நூல் புழுக்களைத் தடுக்கலாம். தாய்கறி, கரும்பு போன்றவற்றைப் பயிரிட்டுப் பின் நெல் பயிரிடுவதால், நீர் தேங்கியிருக்கும். இதன் மூலம், வேர் முடிச்சு நூல் புழுக்களைப் பெருமளவில் குறைக்கலாம்.
பண்ணைத் துப்புரவு. உழவு செய்தவுடன், உழவுக் கருவிகளை மண்ணின்றித் தூய்மை செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு வயலில் உழவு செய்தவுடன், கலப்பையை மண்ணுடன் எடுத்துச் சென்று, வேறு வயலில் உழவு செய்யும் போது, நூல் புழுக்கள் அந்த வயலில் பெருக வாய்ப்புண்டு. எலுமிச்சைப் பயிர் உள்ள வயலின் வழியாகத் திராட்சைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், எலுமிச்சையைத் தாக்கும் நூற்புழுக்கள் நீரில் சென்று, திராட்சையைத் தாக்கக் கூடும். இதனால், ஒவ்வொரு பயிருக்கும் தனித் தனி நீர் மேலாண்மை வேண்டும். வாழைக் கன்றின் மேல் தோலைச் சீவி விட்டு நடுவதால், கன்றைத் துளைத்துச் செல்லும் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். நூல் புழுக்கள் தாக்கிய பூச்செடிகளின் மேற்பகுதியிலுள்ள இலை, தண்டு போன்றவற்றை வெட்டி அழிப்பதால், நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம். மேலும், நூற்புழுக்கள் தாக்காத வளமான நாற்று, விதை, விதைக் கரணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து நடவு செய்வதால், நூல் புழுக்களைத் தவிர்க்கலாம்.
சுடு நீர் முறை. விதை நெல்லைச் சுடு நீரில் 10–20 நிமிடங்கள் நனைப்பதால், நெல்லின் வெள்ளை நுனி இலை நோயைக் கட்டுப் படுத்தலாம். இரண்டு பங்கு நீர், இரண்டு பங்கு கொதி நீர், ஒரு பங்கு விதை என்னும் விகிதத்தில் கலக்க வேண்டும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துவதற்குக் கிழங்குகளை நன்கு மூடப்பட்ட கிடங்குகளில் இட்டு, 50°C அளவில் வெப்பக் காற்றைச் செலுத்த வேண்டும். மேல் மண்ணில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப்படுத்த, காய்ந்த இலை, தண்டுகளை 15 செ.மீ. உயரத்தில் மண்ணின் மேல் பரப்பி, அவற்றை எரிக்க வேண்டும்.
உருளைக் கிழங்கின் மேல் உள்ள பொன்னிற நூல் புழுக்களின் கூட்டுப் புழுக்களைத் தூரிகைகளைக் (brush) கொண்டு நீக்கலாம். சணல் சாக்குகளில், கிழங்குகளைப் போட்டு நன்கு குலுக்குவதால், உருளைக் கிழங்குகளில் ஒட்டியுள்ள கூட்டுப் புழுக்கள் விழுந்து விடும். வயல்களில் வேப்பம் புண்ணாக்கு, நிலக் கடலைப் புண்ணாக்கு, ஆமணக்குப் புண்ணாக்கு போன்றவற்றை இடலாம். இதற்கு மேல், மரத் தூள், பயிர்க் கழிவுகளைப் பரப்பலாம். இதனால், மண்ணில் உருவாகும் பாக்டீரியாக்கள் நூல் புழுக்களை உண்டு, அவற்றின் உற்பத்தியைக் குறைக்கும். மக்கிய காட்டு உரம், எண்ணெய்ப் புண்ணாக்கு வகை, மரத் தூள் ஆகியவற்றை இடுவதால், வேர் முடிச்சு நூல் புழுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இவ்வகை நூற்புழுக்கள் தாக்கும் பயிர்களான மிளகாய், காய்கறி வகை, பூ வகைக்கு இடையே, மஞ்சள் சாமந்தியைப் பயிர் செய்வதால், நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தலாம்.
வேதி முறை. விதைகளை மெத்தில் புரோமைடு மருந்தில் 1 நாள் வைத்திருந்து, நச்சைப் புகைக்கச் செய்து, நூல் புழுக்களைக் கொல்லலாம். பஞ்சு நீக்கம் செய்த பருத்தி விதைகளை, டைபுரோமோ குளோரோ புரோபேன் நூல் புழுக் கொல்லியுடன் கலந்து விதைத்தால், விதைத்த 40 நாள்கள் வரை, நூல் புழுக்களின் தாக்குதலிலிருந்து, பருத்தி பாதுகாக்கப் படுகிறது.
மண்ணில் உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்துதல். மண்ணில் இயற்கையிலேயே உள்ள நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த, நூல் புழுக் கொல்லிகளைப் பயிர் விதைப்பு அல்லது நடவுக்கு முன்போ, பின்போ, நீருடன் கலந்து, மண்ணில் இட வேண்டும். நூல் புழுக் கொல்லியை மண்ணினுள் செலுத்து முன், நிலத்தை நன்றாக உழ வேண்டும். பயிர்களின் கழிவுப் பொருள்களை நீக்கி, மண் மிகுதியும், மென்மையாகும் நிலை வரும் வரை கட்டிகளை உடைத்துச் சமன் செய்ய வேண்டும். மண்ணில் ஈர மிகுதியோ, வறட்சியோ இருக்கக் கூடாது. விதைகள் நன்கு முளைக்கும் அளவுக்கு ஈரம் இருக்க வேண்டும். பயிர் நடுவதற்கு அல்லது விதைகள் நடுவதற்குக் குறைந்தது 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்பே, நூல் புழுக் கொல்லிகளை மண்ணினுள் செலுத்த வேண்டும். இல்லையேல், விதைகளையும், நாற்றுகளையும், செடிகளையும் நூற்புழுக்கள் பாதிக்கும். நூற்புழுக் கொல்லிகளைச் செலுத்திய பின், மண்ணைச் சமன் செய்து, நூற்புழுக் கொல்லி செலுத்திய துளைகளை மூடி, மண்ணைக் கெட்டிப் படுத்த வேண்டும்.
நூல் புழுக் கொல்லிகள். டி.டி. கலவை என்பது குறிப்பிடத் தக்க நூல் புழுக் கொல்லியாகும். இதை, மண்ணில் செலுத்துவதற்கு முன், மண்ணில் நன்றாக நீர் பாய்ச்ச 'வேண்டும். பின்னர், நிலத்தை நன்றாக உழுது, சமன் செய்ய வேண்டும். டி.டி. கலவையை, நூல் புழுக் கொல்லியைச் செலுத்தும் ஊசிக் கருவி மூலம், மண்ணினுள் 30 செ.மீ. இடைவெளியில் செலுத்தலாம். மருந்து செலுத்திய வயலில் பாலித்தீன் உறைகளைப் பரப்பி, நச்சு வெளியே செல்லா வண்ணம் தடுக்க வேண்டும். டி.டி. கலவையிலிருந்து வெளி வரும் வளிமம், மண் துகள்களுக்கு இடையே ஊடுருவிச் சென்று, நூல் புழுக்களைக் கொல்லும். மண்ணின் மேல் குறைந்தது, இரண்டு நாள்களுக்குப் பாலித்தீன் அட்டைகளைப் பரப்பி மூடி வைக்க வேண்டும். இதனால், எஞ்சிய நூல் புழுக் கொல்லி மண்ணிலிருந்து ஆவியாக வெளியேறும். மருந்து செலுத்திய 14 நாள்களுக்குப் பின்னரே, விதைகளை விதைக்கலாம் அல்லது பயிர்களை நடலாம்.
டி.பி.சி.பி. என்பது ஒரு நீர்ம நூல் புழுக் கொல்லியாகும். இதை மண்ணிற்குள் ஊசிக் கருவி மூலம் செலுத்தலாம். அல்லது விதைப்பதற்கு முன்போ, நட்ட பின்போ நீர் பாய்ச்சும் போது, நீருடன் கலந்து விடலாம். இந்த நூற்புழுக் கொல்லியால், பயிர்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது. ஆனால், இதைக் கையாளும் போது, சில தீங்குகள் விளைவதால், இது பெரும்பாலும் பயன் படுத்தப் படுவதில்லை.
ஃபென்சல்ஃபோதியான் என்பது குருணை வடிவான நூல் புழுக் கொல்லியாகும். இது இந்தியா, ஜெர்மனி, நீலகிரி மாவட்டப் பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பொன்னிற நூல் புழுக்களைக் கட்டுப் படுத்த ஜெர்மனி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது. ஆனால், தற்போது இந்தியாவில் இந்நூல் புழுக் கொல்லி விற்பனை செய்யப் படுவதில்லை. ஃபென்னமிஃபாஸ் என்னும் குருணை மருந்து நூல் புழுக் கொல்லி, நெமகூர் என்னும் வணிகப் பெயரில் ஆய்வில் உள்ளது.
ஃயபோரேட் என்பதன் வணிகப் பெயர் திம்மெட் என்பதாகும். இது ஊடுருவிப் பாயும் பூச்சி கொல்லியுமாகும். விதைக்கும் போது, இதை விதையுடன் கலக்கலாம். இதை தொடு நஞ்சாகவும், வளிம நஞ்சாகவும், சிலந்தி நஞ்சாகவும் பயன் படுத்தலாம். இது நீண்ட நாள்கள் மண்ணில் நிலைத்து நிற்காது. இந்நூல் புழுக் கொல்லியால், வேர் முடிச்சு நூல் புழு, பொன்னிற நூல் புழு, வேர் அழுகல் நூல் புழு, திராட்சை நூல் புழு, பூப்பயிர் நூல் புழு போன்றவற்றைக் கட்டுப் படுத்தலாம்.
பொன்தியான் என்பது ஒரு கனிமப் பாஸ்ஃபரஸ் பூச்சி கொல்லியாகும். இது ஊடுருவிப் பாயும் நஞ்சாகவும், தொடு நஞ்சாகவும் பயன் படும். பயிர்களில், இது வேதி மாற்றமடைந்து, சல்பாக்சைடுகளாகவும் சல்ஃபோன் களாகவும் மாற்றப் படுவதால், கொல்லும் தன்மை கூடுதலாகக் காணப் படுகிறது. நட்ட 45ஆம் நாளில் இதை ஹெக்டேருக்கு 500 மி.லி. வீதம் நெல்லில் தெளிப்பதினால், நெல்லின் வெள்ளை நுனி நூல் புழுவின் தாக்குதலைக் கட்டுப் படுத்தலாம்.
கார்பமேட் கொல்லிகள். கார்போஃயூரான், இந்த நூல் புழுக் கொல்லி 3% குருணையாகும். இதன் வணிகப் பெயர் ஃபியூரடான் என்பதாகும். ஊடுருவிச் செல்லும் இந்நச்சுக் கொல்லியைக் கொண்டு, நெல்லின் வெள்ளை நுனி நோய், வேர் நூல் புழு, வேர் முடிச்சு நூல் புழு, நீள் முட்டை வடிவ நூல் புழு, கோதுமை, பார்லிப் பயிர்களில் தோன்றும் தானிய நீள் முட்டை நூல் புழு, வாழையில் துளைத்து உண்ணும் நூல் புழு ஆகியவற்றைக் கட்டுப் படுத்தலாம்.
ஆல்டிகார்ப். இதன் வணிகப் பெயர் டெமிக் என்பதாகும். 10% குருணையாக விற்கப் படும் இதை, ஊடுருவிப் பாயும் நூல் புழுக் கொல்லியாகவும் பயன் படுத்தலாம். இந்நூல் புழுக் கொல்லியில் உள்ள கந்தக அணுக்கள், ஆக்சிஜனுடன் இணைந்து, வேதி மாற்றம் அடைந்து, சல்ஃபாக்சைடுகளாகவும், சல்ஃபோன்களாகவும் மாற்றப் படுகின்றன. ஆல்டிகார்ப் குருணைகளை, ஹெக்டேருக்கு 1 கி.கி. வீரிய மருந்து என்னும் அளவில் இடலாம்.
ஆக்சாமில். இந்த நூல் புழுக் கொல்லி, 24% நீர்மமாகவும், 10% குருணையாகவும் உள்ளது. இது பரந்த அளவில் நூல் புழுக்களைக் கட்டுப் படுத்தும் தன்மை உடையது. இதன் வணிகப் பெயர் வைடேட் என்பதாகும். ஊடுருவிச் செல்லும் இந்நச்சுக் கொல்லி, பயிர்களின் மேல் தெளிக்கும் போது, ஊடுருவிச் சென்று, வேர்களில் உள் நூல் புழுக்களைக் கொல்லும் திறன் பெற்றுள்ளது. —குரு. பாலசுப்ரமணியன் துணை நூல். B. Vasantharaj David and T. Kumaraswamy, Elements of Economic Entomology, Popular Book Depot, Madras, 1975.
நூல் புழுச் சூழலியல்
நூல் புழுக்கள் மெல்லியவாகவும்,மிக நுண்ணியவாகவும், நூலிழை போல இரு நுனிப் பகுதிகள் குறுகியும் காணப் படும். நூல் என்பதைக் குறிக்கும் நீமா (nema) என்னும் கிரேக்க சொல்லைத் தழுவியே, நூற்புழுக்கள் (nematodes) என்று பெயர் ஏற்பட்டது. பாம்பு போல நெளிந்து செல்லும் இவை செயல்படவும், உயிர் வாழவும் நூற்புழுக்களுக்குச் சிறிதளவாவது நீர் இருக்க வேண்டும். நூல் புழுக்கள், உப்பு நீர்க் கடலில் இருக்கக் கூடியவை, மனிதரையும், விலங்குகளையும் பாதிக்கக் கூடியவை, தாவரங்களைப் பாதிக்கக் கூடியவை, முக்கிய தாவரங்களில் உயிர் வாழ்பவை எனப் பிரித்தறியலாம்.
தாவர நூல் புழுக்கள் மிக நுண்ணியவை; இவை செடிகளின் வேரின் திசுக்களிலும், வேர் மண்டலத்திலும் உள்ளமையால், இந்தச் சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்கள் இந்நூல் புழுக்களைப் பாதிக்கும். நூல் புழுக்களுக்கும், அவற்றிற்கு உணவாக அமையும் தாவரங்களுக்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது. தாவரங்களை அவை விளையும் நிலத்தின் தன்மை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலை ஆகியவை பாதிக்கின்றன. தாவர நூல் புழுக்களைப் பொறுத்த வரை, அவை தங்கி வாழும் செடி, அதன் சுற்றுப் புறம், அதில் ஏற்படும் மாறுதல்கள், அதனால் இந்நூல் புழுக்களுக்கு உண்டாகும் பாதிப்பு முதலியவற்றை விளக்குவதே அதன் சூழலியல் (ecology) ஆகும்.
சூழலியல், மண்ணின் வகை, அதன் தன்மை, வெப்பம், ஈரம், காற்று, மண்துகள்களுக்கு இடையேயுள்ள இடைவெளி, அவற்றிலுள்ள கரிமப் பொருள்களின் அளவு, காற்றின் ஈரப் பசை, மழை முதலியன அடங்கும். மண், சிறிய மண் துகள்களில் ஆயிரக் கணக்கான நூல் புழுக்கள் இருக்கும். எனினும், நூற்புழுக்களின் எண்ணிக்கையும், வகையும், மண்ணின் மாதிரியையும், தன்மையையும் பொறுத்தே இருக்கும். மணற் பாங்கானது, சதுப்பு, வயல் மண், சிறிதளவு மணல் கலந்தது, படுகை மண் என நிலத்தைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். இந்த மண் கண்டங்களில், மண் துகள்களின் அளவு பெரியதாகவோ, சிறியதாகவோ, நுண்ணியதாகவோ இருக்கும். இதைப் பொறுத்து, அந்நிலத்தில் மண் துகள்களின் இடைவெளியும், அதில் தேங்கக் கூடிய நீரின் அளவும் இருக்கும்.மண் துகள்களைச் சுற்றியுள்ள நீர் மண்ணின் தன்மையைப் பொறுத்தது. பருமனான தன்மையுள்ள மண்ணில், மணல் மிகுந்திருக்கும். பருமன் மிகுந்த மண்ணில், இடைவெளி கூடியிருக்கும். அதில் நீர் தேங்காமல், வடிந்து விடும். இத்தகைய மண்ணில் வேர் முடிச்சு, நூற்புழு முதலியன மிகுந்திருக்கும். நுண்ணிய மண் துகள்கள் மிகுந்துள்ள மண்ணில், மணல் மிகக் குறைவாக இருக்கும். இடைவெளியும் குறுகியிருக்கும். நீர் களிமண்ணால் ஈர்க்கப் பட்டிருக்கும். உடனடியாக வடியாமல் நீர் தேங்கி நிற்கும். இதில் வேர் அழுகல் நோயுண்டாக்கும் மிக நுண்ணிய உரு அமைப்புக் கொண்ட நூற்புழுக்கள் மிகுந்திருக்கும். எலுமிச்சை நூற்புழு போன்றவை இரு வகை மண்ணிலும் இருக்கும்.
தட்ப வெப்ப நிலை. மழை, வெப்பம் ஆகியவை தாவர வளர்ச்சிக்கும், நூல்புழுக்களுக்கும் இன்றியமையாதவை. குறிப்பாக இலை, தண்டு, பூ முதலியவற்றைத் தாக்கும் நூற்புழுக்களின் எண்ணிக்கை, தட்ப வெப்ப நிலைக்கேற்றவாறு மாறு படும். காற்றின் ஈரப் பசை மிகுந்தால், இலையைப் பாதிக்கும் நெல்லின் வெண் இலை நுனி நூல் புழு நன்கு செயல் பட்டுப் பரவும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மண்ணின் வெப்பம். ஈரப் பசையைப் போலவே, மண்ணின் வெப்ப நிலையும் நூற்புழுக்களின் எண்ணிக்கை, செயல், இனப் பெருக்கம், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் தன்மை, வாழ்நாள் முதலியவற்றை அறுதியிடும் இன்றியமையாக் கூறாகிறது. குறைந்த, மிகு வெப்ப நிலைகளான முறையே 5–15°C, 30–40°C ஆகியன நூல் புழுக்களுக்கு ஏற்றவையல்ல. மேலும், அவை இவ்வெப்ப நிலையில் செயலிழக்கின்றன. இவ்விரு வெப்ப நிலை வரம்பிற்கும் அப்பாற்பட்ட வெப்பம் நூற்புழுக்களுக்கு அழிவு விளைவிக்கும். மித வெப்ப நிலையான 15–30°C நூல் புழுக்களுக்கு ஏற்றவாறுள்ளது.
மண்ணின் ஈரம். மழையாலோ, நீர்ப் பாசனத்தாலோ, மண்ணில் அவ்வப்போது ஈரப் பதம் மாறு படும். இது நூல் புழுக்களின் எண்ணிக்கையைப் பெரிதும் பாதிக்கும் காரணியாகிறது. மண்ணின் வறட்சி, நூல் புழுவின் செயல்களை மட்டுப் படுத்துகிறது. ஆனால், முட்டைகள் மிகுதியாகப் பாதிக்கப் படுவதில்லை. வயல்களில் விளைவிக்கும் தாவரங்களான நெல், வாழை முதலியவற்றைத் தாக்கும் நெல்லின் வேர் அழுகல் நூல் புழு, வாழையின் வேர் அழுகல் நூல் புழு போன்றவை மட்டும் இந்நிலையில் வாழ இயலும். ஏறத்தாழ 40–60% ஈரப் பசை உள்ள மண்ணில் நூல் புழுக்கள் நன்கு செயல் படும்.
உணவு. நூல் புழு உறிஞ்சியுண்ணக் கூடிய சாறு, அது தங்கியிருக்கும் செடியின் வேர், தண்டு, இலை முதலிய பகுதிகளிலிருந்தே கிடைக்கிறது. மண்ணிலுள்ள நூல் புழு, வேரின் நுனிப் பகுதியைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சுகிறது. இப்பகுதியில் செல் சுவர்கள் (Cell walls) மென்மையாக இருக்கும். செல்களிலும், வேதிப் பொருள்கள் செறிந்திருக்கும். செடியின் திசுக்கள், அவற்றின் உள்ளிருக்கும் நூல் புழுக்களுக்குப் பாதுகாப்பாக அமைகின்றன. மேலும், செடியின் சாற்றின் தன்மையும், அளவும் நூல் புழுவின் வளர்ச்சிக்கும், இனப் பெருக்கத்திற்கும் வரையறையாகும்.
நூல் புழுக்களுக்கு ஏற்ற தாவர இனத்தில், அவை நன்கு வளர்ந்து, பல்கிப் பெருகும். வேண்டப் படாத வேறு தாவர இனமாயிருந்தால், நூல் புழுக்கள் துளைக்க இயலாமல், வேர்ச் செல்லின் சுவர்கள் வேதி மாற்றமடையும் அல்லது துளைத்தாலும் அவை முழு வளர்ச்சியடையாமல் போகலாம். சில சமயம் வளர்ச்சி நிலையடைந்தாலும், சரி வர முட்டைகள் இடாமல் போகும். வேர் முடிச்சு, முட்டைக் கூடு, எலுமிச்சை நூல் புழுக்கள் உறிஞ்ச, சிறப்புச் செல்கள் ஏற்படும். இவை திசுக்களிலிருந்து நூல் புழுக்களுக்குச் செல்லும் சாற்றையும், அவற்றின் இணைப்பையும் சம நிலையில் வைத்திருக்கும்.
வேர் மண்டலம். வேரின் சாறு, நூல் புழுக்களுக்கு உணவாகிறது. இது மேலும் வேரின் சுற்றுப்புறத்தின் வேதிப் பொருள்களையும், ஈரத்தையும் குறைக்கும். ஆக்சிஜனைக் குறைத்துக் கார்பன் டைஆக்சைடை மிகுதியாக்கும். வேரிலிருந்து வரும் வேதிப் பொருள்கள் அடங்கிய கசிவும், சுற்றுப் புறத்தின் தன்மையை மாற்றும். உருளைக் கிழங்கு முட்டைக் கூடு நூல் புழுக்களின் முட்டைகளை, உருளைக் கிழங்கு வேரிலிருந்து வெளி வரும் கசிவு பொரியச் செய்யும். இக்கசிவு, முட்டையிலிருந்து பொரிந்து வெளி வந்த புழுக்கள், வேரின் இடமறிந்து செல்லவும் உதவும். நூல் புழுக்களுக்கு வேண்டாத தாவர வகைகளின் வேர்க் கசிவு, அவற்றின் முட்டைகள் பொரியாமல் இருக்கச் செய்யும்.
நில நீர்க் கரைசல். கார அமிலத் தன்மை, கரிமப் பொருள், உரம், பூச்சி, பூச்சி கொல்லி, ஏனைய நச்சுத் தன்மை பொருந்திய பொருள்கள் ஆகியவை அடங்கியதே நில நீர்க் கரைசல். இதில் கரைந்திருக்கும் வேதிப் பொருள்கள் நூல் புழுக்களுக்கு ஏற்றவாறோ, எதிர்ப்பாகவோ அமைகின்றன. ஏனெனில், இதிலிருந்தே தனக்கு வேண்டிய சில வகை உணவை நூல் புழு எடுத்துக் கொள்கிறது. நூல் புழுக்களின் முட்டை பொரிதல், அவற்றின் இளவுயிரிப் பருவம் வாழுதல் முதலியனவும் இக்கரைசலின் தன்மையைப் பொறுத்து அமையும். சில வகைச் செடிகளின் வேரிலிருந்து கசியும் வேதிப் பொருள்கள் பெரிதும் வேர் மண்டலத்தைச் சூழ்ந்திருக்கும். இந்தக் கசிவு, நீர்க் கரைசலில் சேர்வதால், வேர் மண்டலத்தில் இருக்கும் கசிவின் தன்மைக்கேற்ப நூல் புழு பாதிக்கப் படும் அல்லது நன்கு செயல் படும்.
கரிம உரங்கள். பொதுவாகக் கரிம உரங்கள், செடிகளுக்குத் தழைச் சத்தை மிகுதியாகக் கிடைக்கச் செய்து, செழிப்பாக வளர வழி வகுக்கும். இந்த உரங்கள் மட்கும் போது வெளிப் படும் சில வேதிப் பொருள்களும், கரிம அமிலங்களும் நூல் புழுக்களை ஓரளவிற்குப் பாதிக்கின்றன. இந்த உரங்களின் ஊட்டத்தால், முன்னரே நிலத்தில் உள்ள நூல் புழுக்களைப் பாதித்து அழிக்கும் பூசணங்கள், ஏனைய நுண்ணுயிரிகள், எதிரி நூல் புழுக்கள் முதலியன பெருகி, தாவர நூல் புழுக்களை ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்கின்றன.
நூல் புழுக்களின் சூழலியல் அவற்றின் இனத்திற்குத் தக்கவாறு மாறு பட்டிருக்கும். அவற்றின் செயலையும், வாழ்க்கையும் அறியச் சூழலியல் இன்றியமையாதது. தாவர நூல் புழுக்கள், சராசரியாக 10% அழிவை ஏற்படுத்தும். சில வகை முக்கிய நூல் புழுக்கள் விளைச்சலை முற்றிலும் பாதித்து விடுகின்றன. —சிவகாமி வடிவேல் துணை நூல். J.F. Southey, Plant Nematology, HMS Publication, London, 1978.
நூல் புழு நோய்கள்
வட்டப் புழுக்கள் அல்லது விலாங்குப் புழுக்கள் என்றும் நூல் புழுக்களைக் கூறலாம். நூல் புழுக்கள், பயிரிடப் படும் மண்ணில் 20–25 செ.மீ. ஆழம் வரை இருக்கும். பயிர்களைத் தாக்கும் நூல் புழுக்களுக்கு முட்டைப் பருவம், புழுப் பருவம், முதிர் வளர்ச்சிப் பருவம் ஆகியன உள்ளன. முட்டைக்குள்ளேயே புழு வெளி வந்தவுடன், தன் முதல் நிலைப் புழுப் பருவத்தை முடித்துக் கொண்டு, இரண்டாம் நிலைப் புழுவாக வெளி வரும். இரண்டாம் நிலையிலிருந்து, ஐந்தாம் நிலை வரை புழுக்கள் செடிகளின் வேர், தண்டு, மொக்கு, இலை, பூ, விதைகளின் திசுக்களில் உள்ள செல் சாற்றை உறிஞ்சி வாழும். சாற்றை உறிஞ்சுவதால், செடிகளின் ஊட்டச் சத்துக் குறைந்து விடும். அத்துடன், செல்களின் உள்ளே, நூல் புழுக்கள் உமிழ் நீரைச் செலுத்துவதால், செல்லின் உட்பொருள்கள் செரிக்கப் படும். இதனால், செல்கள் காய்ந்து, பயிர்களின் வெளித் தோற்றத்தில் மஞ்சள் நிறத்துடன் காணப் படும்.
பயிர்களில், நேரிடையாகச் செல்களின் சாற்றை உறிஞ்சியும், செல்களின் உட்பொருள்களைக் கரைத்துச் செல்களை இறக்கச் செய்தும், ஊட்டச் சத்துகளை உள் நோக்கிச் செலுத்தும் சல்லடைக் குழாய்த் திசு (Phloem), கட்டைத் திசு (xylem) ஆகியவற்றைத் தாக்கி ஊட்டச் சத்துகள் மேலே செல்லா வண்ணம் செய்து, பயிர் விளைச்சலைத் குறைக்கின்றன. பயிர்களில் நோய் உண்டாக்கும் பூசணம், பாக்டீரியாக்களுடன் இணைந்து, நோயின் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
எலுமிச்சைச் செடியில் எலுமிச்சை நூல் புழுவின் (Tylenchulus semipenetrans) தாக்கம் 80% வரை ஏற்படுகிறது. இந்நூல் புழுவால், எலுமிச்சையின் குறைவான வீழ்ச்சி நோயும் (Slow decline disease), பின் இறப்பு நோயும் (Die-Back disease) ஏற்படுகின்றன. உருளைக் கிழங்கின் முட்டை வடிவ நூல் புழு, (Verticillium dahliae) வெர்டிசிலியம் டாலியே என்னும் பூசணத்துடன் இணைந்து, வாடல் நோயை மிகுதிப் படுத்தும்.
புகையிலையில், கறுப்புத் தண்டு நோயை ஏற்படுத்தும் பைடோப்தோரா பேரசைடிகா (Phytopthora parasitica) என்னும் பூசணத்தின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் வகைகள் உள்ளன. ஆனால், வேர் முடிச்சு நூல் புழு, பூசணத்துடன் சேரும் போது, எதிர்ப்பாற்றல் வகைகளிலும் கருந்தண்டு நோய் மிகும். புகையிலையில் வேர் முடிச்சு நூற்புழுவும், ஃபியூசோரியம் பூசணமும் சேர்ந்து, பழுப்புப் புள்ளி நோயை மிகுவிக்கும். பருத்தியில் பியூசோரியம் என்னும் பூசணத்தால் ஏற்படும் வாடல் நோய். ஆனால், ரோடிலென்சூலஸ் ரெனிஃ பார்மிஸ் (Rotylenchylus reniformis) என்னும் நூல் புழு தாக்கினால், 80% வரை வாடல் நோய் ஏற்படுகிறது.
வெள்ளரி வகை. டிரிக்ஸ், N.Z. வெள்ளரி வகைகளில், ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் லைக்கோபெர்சிகை என்னும் பூசணத்தால் வாடல் நோய் ஏற்படுவதில்லை. ஆனால், வேர் முடிச்சு நூல் புழுவான மெலாய்டோகைன் இன்காகினிட்டா பூசணத்துடன் சேரும் போது, வாடல் நோய் ஏற்படுகிறது. இதைப் போன்றே தக்காளியில் ஃபியூசேரியம் ஆக்சிஸ்போராம் குக்குமிரியம் என்னும் பூசணமும், மேற்கூறிய நூற்புழுவும் சேரும் போது, பூசணத் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றல் கொண்ட வகை, எதிர்ப்புத் திறனை இழந்து விடுகிறது. மேலும், வாடல் நோய் ஏற்படவும் நூற்புழு காரணமாகிறது. நூற்புழு தாக்கிய செடிகளில், பூசண வித்துகள் (conidia) பெருகக் காரணமாக உள்ளது. தக்காளியில் ஃபியூசேரியம் பூசணத்துடன், நூல் புழு மெலாய்டோகைன் இன்காகினிட்டா சேரும் போது, வாடல் நோய் ஏற்படும். பட்டாணியில் ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் பைசாவுடன், மெ.இன்கானிட்டா, மெ. அக்ரிட்டா சேரும் போது, வாடல் நோய் ஏற்படுகிறது. உருளைக் கிழங்கில், ஹெட்டிரோடெரா கிலைசன்ஸ் நூல் புழுவும், ஃபியூசேரியம் பூசணமும் இணையும் போது, வாடல் நோய் மிகும்.
மிளகுப் பயிரில் பிராட்டிலின்கஸ் மைனஸ் நூல் புழுவும், செர்டிசிலியம் எலாலிலே பூசணமும் இணைந்து தாக்கும் போது, வாடல் நோய் மிகும். வேர் முடிச்சு நூல் புழுவான மெ. இன்காகினிட்டாவும், பித்தியம் அஃபானிடேர்மேட்டாவும், சாமந்திப் பயிரில் இணைந்து தாக்கும் போது, வேர்களின் வளர்ச்சி குன்றி விடுகிறது.
புகையிலையில், மெ.இன்காகினிட்டா, பூசணங்களான ரைசக்டோனியா சொலானி, பித்தியம் அல்டிமத்துடன் இணைந்து தாக்கும் போது, இலைகள் காய்ந்து செடிகளை மடியச் செய்கின்றன. புகையிலையில், மெ.இன்காகினிட்டா தாக்கிய நான்கு வாரங்களுக்குள் குர்குலேரியா டிரையோனியை, போட்ரிடஸ் சினரியா, ஆஸ்பர்ஜிலஸ் அக்ரேசியஸ், பெனிசிலியம் மார்டென்சி ஆகிய பூசணங்கள் வேர்களைத் தாக்கி, அழுகச் செய்கின்றன. இவ்வேர் முடிச்சு நூல் புழுவின் தாக்குதலால் இலைப் புள்ளி நோயும் மிகும்.
பிராட்டிலிங்கஸ் மைனஸ் நூல் புழுவும், ரை. சோலானி பூசணமும் இணைந்து, கோதுமைப் பயிரைத் தாக்கும் போது, வேர்கள் அழுகி விடுகின்றன. ஆல்ஃபால்ஃபா என்னும் பயிரில், பி.பெனிட்ரன்சும், டிரைகோடெர்மா விரிடியமும் இணைந்து தாக்கி, தண்டு மற்றும் வேர்களின் வளர்ச்சியைக் குறைக்கின்றன. பிராட்டடிலிங்கஸ் ஜியா நூல் புழுவும், பித்தியம் கிராமினிகோலா பூசணமும் இணைந்து தாக்கி, கரும்பின் நுனித் தண்டு வளர்ச்சியைப் பாதிக்கின்றன. டைலன்கஸ் அக்ரிபோலா நூல் புழுவும் எஃப். ரோசியம் பூசணமும் இணைந்து, மக்காச் சோளத்தில் வேர் அழுகல் நோயை மிகுதிப் படுத்துகின்றன. தென்னையில் ரொடாபெலஸ் சிமிலிஸ் என்னும் நூல் புழு சிவப்பு மோதிர நோயை ஏற்படுத்துகிறது. ரோ. சிமிலிஸ் நூல் புழுவும், ஃபியூ. மொனிலிபார்மி என்யென்சி பூசணமும் இணைந்து, வாழையில் வாடல் நோயைப் பெருக்குகின்றன. ஹெலிகோடைலின்கஸ் மல்டிசின்க்டஸ் நூல் புழு வாழையில் வேர்ச் சிதைவு, பின் இறப்பு நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. —குரு. பாலசுப்ரமணியன் துணை நூல். Mathews, Plant Virology, Academic Press, New York, 1970.
நூல் புழு வகையியல்
நூல் புழுக்கள் நிமெட்டோடா என்னும் விலங்கியல் வகையைச் சேர்ந்தவை. வகையிலும், எண்ணிக்கையிலும், பல விதமான சூழ்நிலைக்கேற்பப் பரவிக் காணப் படும் தன்மையிலும், இவை ஏறத்தாழ பூச்சி வகைகளை ஒத்தவை. நூல் புழுக்களின் வகைகளைச் சார்பாகக் கொண்டு, அவற்றின் உடற்கூறு, இருப்பிடம், உணவு வகை, வாழ்க்கை நிலை, வளர்ச்சி, இனப் பெருக்கம், சூழ்நிலை முதலியவற்றை ஆராய்ந்தறிய முடியும். அவ்வப்போது மேற்கொள்ளப் படும் ஆராய்ச்சியின் பயனாக, முன்னரே ஏற்படுத்தியுள்ள வகைகளில் மாற்றங்கள் ஏற்படும் அல்லது புதியன புகுத்தப் படும். நூல் புழுக்களின் பெயர்களும், பொருத்தமான காரணங்களால் மாற்றத்திற்குள்ளாவதும் உண்டு. ஆனால், விலங்கியலில் பலராலும் ஏற்கப்படும் பெயரிடும் மரபிற்குட்பட்டே (International code of Zoological nomenclature) பெயர் வைப்பதும், மாற்றமும் செய்யப் படும்.
நூல் புழுக்களின் பெயர் இரு பிரிவாக இருக்கும். முதற்பகுதி அது சார்ந்துள்ள தொடர்பை அல்லது இனத்தைக் குறிப்பதாகவும், இரண்டாம் பகுதி அந்த நூல் புழுவுக்கு மட்டுமே குறிப்பிட்ட பெயராகவும் அமையும். எ–டு: மிலாய்டொகைனி இன்காகினிடா (Meloidogune incognita).
நூல் புழுவின் உடற்கூறு. ஏனைய இனங்களிலிருந்து பிரித்துக் கண்டறிய, நூல் புழுவின் உடல் கூற்றில் பல வேறுபாடுகள் உள்ளன. நூல் புழு மெலிந்து, நீண்டு புழுப் போல நுனியில் குறுகியிருக்கும். இதன் தோல் மேல் சவ்வில் நுண்ணிய வளைவுகள் காணப் படும். இந்தச் சவ்வு மூன்று அடுக்காக இருக்கும். உடலில் வாய்ப் பகுதியில், கடினமான குத்தூசி போன்ற அலகு இருக்கும். இதனைத் தொடர்ந்து அன்னக் குழாயும், அதன் ஏனைய பகுதிகளும், குடலும் அமைந்திருக்கும். கரு உறுப்புகளான முட்டைச் சுரப்பி (ovary), விந்துச் சுரப்பி (testis) ஆகியவை இருக்கும். பெண் கரு உறுப்பின் வழி சவ்வில் அமைந்திருக்கும். ஆசன வாய் குடலின் வெளிப் புறம் வழியாக வால் சவ்வில் இருக்கும்.
ஆண் நூல் புழுவில் விந்துச் சுரப்பியின் வழி, ஆசன வாயுடன் கூடி இருக்கும். விந்துச் சுரப்பியுடன், ஆண் குறி இணைந்து இருக்கும். சில ஆண் நூல் புழுக்களின் ஆசன வாயைப் பாதுகாக்க, விசிறி போன்ற சவ்வு (bursa) படர்ந்திருக்கும். முட்டைச் சுரப்பிகள் இரண்டு அல்லது ஒன்றாக இருக்கும். விந்துச் சுரப்பியும் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும். பல நூல் புழு வகைகளில் ஆண், பெண் இரண்டுமே புழு வடிவில் காணப் படும். ஆனால், சிலவற்றில் பெண் நூற்புழுக்கள் பெருத்துத் தடித்த உருண்டை போன்ற பல்வேறு அமைப்புக் கொண்டவையாய் இருக்கும். இவையே ஒட்டுண்ணி வாழ்க்கையை மேற்கொண்டுமிருக்கும்.
வகைப்படுத்துதல். நூல் புழுக்களை வகைப்படுத்தலில் அவற்றின் உடற்கூறு இன்றியமையாதது. இதில் உடலமைப்பு, தோல் சவ்வின் மேலுள்ள வளைவு அமைப்பு, அதன் அளவு, அலகின் நீளம், வடிவமைப்பு, அன்னக் குழாயின் உருவமைப்பு, உணவுக் குழல் சுரப்பி (oesophageal gland), அது குடலின் மேல் பக்கத்தில் அமைந்துள்ள விதம் போன்றவை பொது உடற் கூறுகளாகும். பெண் கரு உறுப்பு அமைந்துள்ள இடம், முட்டைச் சுரப்பிகளின் பகுதிகள், எண்ணிக்கை, முட்டை வெளியில் தனித் தனியாக இடப் படுகிறதா, முட்டைச் சவ்வில் (egg matrix) இடப் படுகிறதா, முட்டைக் கூட்டினுள்ளேயே இருக்கிறதா போன்ற விவரங்கள், பெண் நூற்புழுவை இனம் காண <!--- Line repeated ---> உதவும். இதே போல், ஆண் நூற்புழுக்களின் வகையறிய, விந்துச் சுரப்பியின் எண்ணிக்கை, ஆண் குறியின் அமைப்பு, ஆசன வாயை மூடியுள்ள விசிறி போன்ற சவ்வின் நீளம், அமைப்புப் போன்றவை பயனாகும். சில நூற்புழு வகைகளில் முட்டை, பெண் புழுவின் கருப்பையின் உள்ளேயே பொரிந்து, பின்னர், புழு துளைத்துக் கொண்டு வருவதும் உண்டு.
நூற் புழுவின் வகைப்பாடு
ஹெட்டிரோடிராய்டியா கிரிகோனிமெடாய்டிமா ஏடைலென்காய்டியா
ஸ்டிராங்கைலிடா அஸ்காரிடா
டிரைகோடிராய்டியா
மோனோஹிஸ்டிரிடா எனோபிளிடா டிக்டோபைமாட்டிடா
c' = = X 100
X 100
St = அலகின் நீளம்.
Spicule - ஆண் உறுப்பு நீளம்
h = வாலின் நுனியிலிருந்து நிறமற்ற பகுதி வரை உள்ள நீளம்
V%R = உடல் முழுவதுமுள்ள வளைவுகளின் எண்ணிக்கை
T% RB = ஒரு வளைவில் பருமன்
Ran = வால் நுனியிலிருந்து ஆசன வாய் வரை உள்ள வளைவுகள்.
Rvan = பெண் கரு உறுப்பு வாயிற்கும், ஆசன வாயிற்கும் இடையே வளைவுகள்
* வளைவுகள் பெரியவையாகவும், துல்லியமாய் அறியக் கூடியவையாகவும் உள்ள சில மாறுபட்ட வகை உடற்புழுக்களுக்கு இது பயன் படும்.குறிப்பு: டைலென்சினாவின் (1) கீழுள்ள அனைத்து நூற்புழுக்களும், டோரிலெய்மிடாவின் (2) கீழுள்ள சில நூற்புழுக்களும் தாவரங்களைப் பாதிக்கக் கூடியவை. —சிவகாமி வடிவேலு
நூல் முறுக்கு
வெட்டிழை நூற்பு வகை நூல்களில், நூல் வலிவேற்ற இழைகளுக்கிடையே பிணைப்பைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன், முறுக்கேற்றம் மேற்கொள்ளப் படுகிறது. முறுக்கேற்றமிராவிடில், நூலிலுள்ள இழைகள் ஒன்றிலிருந்து ஒன்று பிறழ்ந்து விடக் கூடும். முறுக்கேற்றமடையாத நூல் நெசவுத் தொழிலுக்குத் தகுதியற்றதாகும். நீளிழை வகை நூல்களில், ஒவ்வொரு நீளிழையும் அது இடம் பெறும் நூலின் நீளத்தைக் கொண்டிருக்கும். எனவே, நூலிழை வகை நூல்களில் முறுக்கு, ஒரு துணை நிலை விளைவையே நூலில் தோற்றுவிக்கிறது.
முறுக்கு, துணியின் உறுதியையும், பயனுறு கால அளவையும் வரையறுக்கிறது. முரட்டு நூல்களை விடச் சன்னமான நூல்களுக்கு, முறுக்கேற்றம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. நெய்யப் படும் துணிகளில், நீள வாக்கில் இடம் பெறும் பிரிவு நூல்கள், நிரப்பு நூல்களை விட மிகுதியாக முறுக்கேற்றப் படுகின்றன. முறுக்கேற்றத்தை நிலை நிறுத்துவதற்கும், இழை பிரிதலைத் தடுப்பதற்கும், இழையின் தன்மையைப் பொறுத்து, வெப்பத்தினாலோ, ஈரத்தினாலோ, இறுக்கத்தைத் தோற்றுவிக்கலாம்.
மென்பரப்பைக் கொண்ட துணிகளுக்கு, தளர்ந்த முறுக்கேற்றமும், வழவழப்பான துணிகளுக்கு, நூலில் நிறைய முறுக்குகளும், கூழாங்கல் தோற்றமுள்ள துணிகளின் நூல்களுக்கு, மிக உயர் நிலை முறுக்கும் அளிக்கப் படும். நூலைச் செங்குத்தாகப் பிடித்தால், முறுக்கின் திசையைக் கண்டறியலாம். S என்னும் எழுத்தின் நடுப்பகுதியில் சுழற் சுருள் அமைந்திருந்தால், அந்நூல் S முறுக்கைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடுவர்; மாறாக, Z என்னும் எழுத்தின் சாய்வை ஒத்திருந்தால், Z முறுக்கு என்பர்.
பெரு முறுக்கேற்றம் கொண்ட நூல்களைக் கொண்டு, சிஃபான், ஜார்ஜெட், காண்டன், ஃப்ரெஞ்சு க்ரீப் (crepe) ஆகிய துணி அமைப்புகள் உருவாக்கப் படுகின்றன. நன்கு முறுக்கப் பட்ட நூல்கள் மாற்றி மாற்றிப் பாவுத் திசையிலோ, நிரப்புத் திசையிலோ அமைக்கப் படுகின்றன. துணியைச் சலவை செய்யும் போதோ, சாயமேற்றும் போதோ, இந்நூல்கள் பல்வேறு திசைகளிலும் இடை முறுக்கு (Kink), சுருங்கிய வடிவத் (crinkled) தோற்றத்தைத் தருகின்றன.
மரபு வழி வளைய நூற்பு நூல்களில், முறுக்கேற்றத்தை அறிய இரு வழி முறைகள் வழக்கிலுள்ளன. ASTMD–1422, ASTMD–1423 ஆகிய இரு குறிப்புகளிலும் முறையே, முறுக்கைப் பிரித்து மறு முறுக்கேற்றம் செய்தல் (untwist and retwist), நேரடி எண்ணுதல் முறை (direct counting method) ஆகியன விவரிக்கப் பட்டுள்ளன. முதல் முறையில், முறுக்கப் பட்ட நூல், முறுக்கேற்றம் செய்யப் படுகிறது; இவ்வாறு நீளக் கூடிய நூல் மீண்டும் எதிர்த் திசையில் முறுக்கப் படுகிறது. தொடக்க நீளத்தை எட்டுவதற்குத் தேவைப் படும் சுற்றுக்களை இரண்டால் வகுத்து முறுக்கேற்ற மட்டத்தை அறியலாம். இரண்டாம் ஆய்வு முறையில் நூலின் ஒவ்வொரு செ.மீட்டரிலும் அடங்கியுள்ள திருகு சுருள்கள் (convolutions) எண்ணப் படுகின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> திறந்த முனை நூற்பில் தயாராகும் நூல்களில், ஒளிக் கருவிகளைக் கொண்டு எண்ணும் முறை பயன் மிக்க தாகக் கருதப் படுகிறது. .நூலின் புறப் பரப்பு இயல்புகளை அறிவதற்கு மட்டுமன்றி, நூலின் வலிவைக் கண்டறிவதற்கும், முறுக்கேற்றத்தின் சார்பலனாகப் படம் 1இல் காட்டப் பட்டுள்ளது. முறுக்கு உயரும் போது, இழைகளை ஒன்றிணைக்கும் உராய்வு விசைகளும் கூடுகின்றன. ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் உராய்வு விசை உயரும் போது, தனி இழைகளில் திருகு கோண (helixangle) உயர்வினால், நூல் அச்சிலிருந்து இழைகள் தாறுமாறாக நீட்டிக் கொண்டிருக்கும் நிலை தோன்றும். இழைகள் யாவுமே ஒருங்கிணைந்த திசையில் அமைந்திருந்தால்தான், நூல் உயர் தகைவுகளும் ஈடு கொடுக்க முடியும். எனவே, இடைப்பட்ட ஏற்ற முறுக்கு நிலை விரும்பப் படுகிறது.
ஒரு செ.மீட்டருக்கு எவ்வளவு சுற்றுகள் இருப்பினும், இந்த அளவு திரிப்பு ஒரு தடிமான நூலில், மெல்லிய நூலிலுள்ளதை விடக் கூடுதலான திருகல் கோணத்தைத் தோற்றுவிக்கிறது. முறுக்கேற்ற நிலையை முறுக்குப் பெருக்கி (twist multiplier) என்னும் அளவையிலோ, முறுக்குக் காரணி (twist factor) என்னும் அளவையிலோ குறிப்பிடலாம்.
முறுக்குப் பெருக்கி =
முறுக்குக் காரணி =
மேற்காணும் வரை படத்தில் இவ்வலகுகளில் ஒன்றினைக் கிடைமட்ட அச்சாகக் கொண்டால், பெரும நூல் வலிவுக்கு ஏற்ற முறுக்கு நிலைகளை எவ்வகை நூலுக்கும் கண்டறியலாம். —மே.ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். B.P. Corbman, Textiles: Fiber to Fabric, Sixth Edition, MCGraw–Hill Kogakusha, Ltd, Singapore, 1985.
நூல் மூலப் பொருள்கள்
பல வகை இழைகள் மூலப் பொருள்களாக, நெசவுத் தொழிலில் பயன் படுத்தப் படுகின்றன. இவற்றுள், சில மனித நாகரீகத்தின் தொடக்க காலத்திலிருந்து பயன் பட்டு வருகின்றன. ஏனையவை அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப் பட்டவை. இவ்விழைகளின் வளர்ச்சியும், பயன்களும், அவற்றின் நூற்புத் திறன், தேவையான அளவில் கிடைத்தல், தயாரிப்புச் செலவும், சிக்கனமும், நுகர்வோருக்கு அவ்விழைகளின் இயல்பினால் தோன்றும் நிறைவு ஆகிய காரணிகளால் வரையறுக்கப் படுகின்றன.
புதுப் புது இழைகள் தோன்றும் போது, நெசவுத் தொழிலில் இழைகளுக்குப் பெயரிடுதல், கண்டறிதல், வகையீடு செய்தல் ஆகிய பணிகள் சிக்கலாயின. தாங்கள் தயாரிக்கும் இழைகளுக்குத் தனிப் பெயர் அல்லது வணிகக் குறியீடு இட வேண்டும் என்னும் தனி நபர் விருப்பினால், இச்சிக்கல் உருவெடுத்தது. இப்பெயர்கள் நுகர்வோரைக் குழப்பத்திலாழ்த்தி, தாம் வாங்கும் துணியில் அடங்கியுள்ள இழைகளின் தன்மைகளோ, தனித்துவமோ தெரியாத நிலை உருவாகியது. இக்குழப்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, எத்துணியாயினும், அதில் இடம் பெற்றுள்ள (5%க்கு மேலாக) இழைகளின் ஏற்கப்பட்ட பெயர்களைத் தயாரிப்பாளர் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆணை பிறப்பித்தது. இதனால், இழைகளை வகை, பெயர், தோற்றுவாய், இயைபு ஆகியவற்றின் அடிப்படையில் வகையீடு செய்தல் எளிதாயிற்று (அட்டவணை).
பருத்தி. பருத்திக் காயில் உருவாகும் இழை பஞ்சாகும். ஒவ்வோர் இழையும், உள்ளீடற்ற முறுக்கப் பட்ட, தட்டையான ஒற்றைச் செல்லாகும். இவ்விழையால் 90% செல்லுலோசும், 6% ஈரமும், 4% இயல்பான மாசுப் பொருள்களும் உள்ளன. இழைகளின் வெளிப் பரப்பில், மெழுகு போன்ற பூச்சு பஞ்சுக்கு ஒட்டும் தன்மையை அளிக்கிறது. இவ்வியல்பும், இயல்பான முறுக்கும் நூலாக நூற்பதற்கு ஏற்ற இழையாகப் பருத்தியை விளங்கச் செய்கின்றன.
அட்டவணை
இவ்விழையில் 70% செல்லுலோசும், ஈரமும், மரத் திசுக்களும் உள்ளன. லினன் மென்மையான, பளபளப்பான நேரிழையாகும். இது பருத்தியை விட எளிதில் உடையக் கூடிய இழையாதலால், நூற்பதற்கு எளிதன்று.
கம்பளி. ஆட்டின் தோலிலிருந்து வளரும் கரடு முரடான இந்த இழை கரோட்டின் என்னும் புரதத்தினாலானது. அலைவு மிக்க, செதில்களுடைய இழையான கம்பளியில் இரு வகை உள்ளன. இது ஆட்டின் இனத்திற்குத் தகுந்தாற் போல் அலைவு கூடுதலாகவும், சிறு நுண்ணிய செதில்கள் கொண்டதாகவும்; அலைவு குறைந்தும், பெரு செதில்கள் கொண்டதாகவும் அமையலாம். பெரிய எண்ணிக்கையிலான நுண் செதில்களினால், கம்பளியின் கதகதப்பு கூடுகிறது. இக்கம்பளியின் தோற்றம் மங்கலானது. செதில்களுக்கு அடியில் நிறப் பொருளின் இருப்பிடமான செல்கள், இழைக்கு வலிமையையும், நீட்சியையும் அளிக்கின்றன. இழையின் மையப் பகுதியில், காற்றால் நிரப்பப் பட்ட கழற் சுருள் வடிவிலான செல்கள் (மென்மையம் = Medulla) உள்ளன. இவற்றில், கொழுப்புப் பொருள் மிகுந்துள்ளமையால், சாய நாட்டம் (dye affinity) குறைவாக உள்ளது. மென்மையமற்ற, நுண்மையான கம்பளிகளுக்குச் சாய நாட்டம் கூடுதலாகும். வெப்பத்தால் பாதிக்கப் படும் தன்மையும், பின்னல் தன்மையும் (felting) கம்பளியின் இரு சிறப்பியல்புகளாகும்.
பட்டு. இது பட்டுப் பூச்சி எனும் ஒரு வகைக் கம்பளிப் புழுவின் கூட்டிலிருந்து பிரித்தெடுக்கப் படும் சன்னமான நீளிழை. புரத வகை இழையான பட்டு பெரும்பாலும் முசுக்கட்டைச் செடிப் பண்ணைகளில் பட்டுப் பூச்சிகள் கட்டுப் படுத்தப் பட்ட சூழ்நிலைகளில் வளர்க்கப் பட்டுத் தயாரிக்கப் படுகின்றது. காட்டுச் சிற்றினமாகத் தோன்றும் டஸ்ஸா (Tussah) எனும் பட்டு கடினமானதாகும். பளபளப்பு, மென்மை, எடைகுறைவு, வளமை, நீட்சி ஆகிய இயல்புகள் கூடுதலாக அமையப் பெற்றமையால், பட்டு வனப்பு மிக்க இழையாக விளங்குகிறது. பெரிதும் விரும்பப் படும் இழையாகையால், செயற்கை முறையிலும் பட்டை ஒத்த இழைகளைத் தயாரிக்கும் முயற்சிகள், வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்டுள்ளன.
கல் நார். இது பாறைகளில் கால்சியம் சிலிக்கேட்டையும், மக்னீசியம் சிலிக்கேட்டையும் உள்ளடக்கியதாகக் கிடைக்கும் நார்ப் பொருள். அமிலம், தீச்சுடர் ஆகியவற்றினால் பாதிப்புறாத இவ்விழை துருப் பிடிக்காது. எனினும், கல் நார் தூள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றில் கலந்தால், நுரையீரலை அடைந்து, புற்று நோயைத் தோற்றுவிக்கக் கூடுமாதலால், பெரிதும் பயன் படுத்தப் படுவதில்லை.
ரேயான். இது பருத்தி விதைப் பிசிரிழைகளிலிருந்தோ, சில வகை மரங்களிலிருந்தோ செல்லுலோசைப் பிரித்து, தக்க கரைப்பானில் கரைத்து, மீண்டும் இழை வடிவாக்கிப் பெறப் படுகிறது. தயாரிப்பு முறைகளுக்குத் தகுந்தாற் போல், விசுகோஸ் ரேயான், குப்ரமோனியம் ரேயான், அசெட்டேட் ரேயான் என வகையிடப் படுகின்றன. இவை யாவுமே செயற்கைப் பட்டு என்னும் பொதுப் பெயரில் குறிப்பிடப் பட்டாலும், அசெட்டேட் ரேயான் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் வடிவமைக்கத் தக்கது.
நைலான். இது டைகார்பாசிலிக் அமிலங்களையும், டைஅமீன்களையும் குறுக்க வினைக்குட் படுத்திப் பெறப் படும் இழை. பாலிஅமைடுகளான இவ்விழைகள் அமிலப் பகுதியிலுள்ள கார்பன் அணு எண்ணிக்கையும் அமீன் பகுதியிலுள்ள கார்பன் அணு எண்ணிக்கையும் பொறுத்து வகையிடப் படுகின்றன. நைலான் 4.6; 6.6; 6,10; 6,12; 8,10; 8,10;11 நைலான் 6.6 என்றால் அமிலம், அமீன் இரு தொகுதிகளும் ஒரே எண்ணிக்கையில், அதாவது 6 கார்பன் அணுக்கள் உள்ளன என்று பொருள். நைலான் 6.10 என்றால் அமிலப் பகுதியில் 6, அமீன் பகுதியில் 10 கார்பன் அணுக்களாகும். நைலான் 6 என ஒற்றை எண்ணாக இருந்தால், ஒரே தொகுதியில் தலைப் பகுதியில் அமிலமும், வால் பகுதியில் அமீனும் (அல்லது தலை கீழாக) உள்ள அமினோ அமிலத்தின் தன் குறுக்கு வினை விளை பொருளாகும். ஒரு நைலானில் 85%க்கும் கூடுதலான அளவில் அமைடு தொகுதிகள் அரோமாட்டிக் வளையங்களுக்கிடையே அமைந்திருந்தால், அதனை அரமிடு என்பர். நைலான் ஒரு வலிமை மிக்க, நீட்சித் தன்மை கொண்ட இழையாகும்.
பாலி எஸ்டர். இங்கு இழைப் பொருளில் குறைந்தது 85% எடை டெரிப்தாலிக் அல்லது அதன் தொடர்புடைய அரோமாட்டிக் அமிலத்தின் எஸ்ட்டர் இடம் பெறுகிறது. பல்வேறு தயாரிப்பாளர்கள், வெவ்வேறு வணிகப் பெயர்களுடன் பாலி எஸ்டரைத் தயாரிக்கின்றனர். வெப்ப நிகழ்வும், வலிவும் பொருந்திய இவ்விழை நீரை எளிதில் உறிஞ்சுவதில்லை.
அக்ரிலிக். குறைந்தது 85% அக்ரிலோநைட்ரைல் தொகுதிகளை உள்ளடக்கிய இவ்விழை, கம்பளியை ஒத்த துணிகளைத் தயாரிக்க ஏற்றது. அக்ரிலிக் இழையில், அக்ரிலோநைட்ரைல் தொகுதிகள் 35–85% இருக்கக் கூடுமானால், அதற்கு மோடாக்ரிலிக் எனப் பெயர். அக்ரிலோ நைட்ரைலுடன், வினைல் குளோரைடு, வினிலிடீன் குளோரைடு, வினைலிடீன் டைசயனைடு ஆகியவற்றை இணைப்பல்லுறுப்பாக்கம் செய்து, தயாரிக்கப் படும் மோடக்ரிலிக் இழைகள் தீ எதிர்ப்புத் தன்மை மிக்கவை.
ஸ்பாண்டக்ஸ். குறைந்தது 85% பாலியூரித்தேன் தொகுதிகளைக் கொண்ட ஸ்பாண்டக்ஸ் இழை நீட்சி மிக்கது. நீச்சல் உடை, பனியன் போன்ற ஆண் உள்ளுடைத் தயாரிப்பில் இவ்விழை பயன் படுகிறது.
பாலி ஒலிஃபீன். கார்பன், ஹைட்ரஜன் ஆகிய இரு தனிம அணுக்களை மட்டுமே கொண்ட இவ்வகையில் பாலிபுரோப்பிலீன் பயன் மிக்கதாகும்.
வின்யான். குறைந்தது 85% எடை வினைல் குளோரைடு தொகுதிகளைக் கொண்ட தொகுப்பு நீளிழையான இதன் உருகு நிலை குறைவாக இருப்பதால், இது பயன் குன்றியதாகும்.
சரண். 85%க்கு மேல் வினைலிடீன் தொகுதிகளைக் கொண்ட நீண்ட சங்கிலித் தொகுப்பு பல்லுறுப்பு சரண் என்னும் வணிகப் பெயரில் பயன் படுகிறது. இது உடைத் தயாரிப்புக்கு ஏற்றதன்று.
நோவோலாய்டு. 85%க்கு மேலாகக் குறுக்குப் பிணைப்புக் கொண்ட நோவோலக் எனும் ஃபீனால் ஃபார்மால்டிஹைடு வகை ரெசினைக் கொண்ட இவ்விழை சீருடைத் தயாரிப்புக்கும், தொழிலகத் துணித் தயாரிப்புக்கும் பயன் படுகிறது.
பாலிகார்போனேட். பாலிபென்சிமிடசோல், அல்கினேட், டெஃப்லான் ஆகியன ஆடையில்லாத பயன்களில் ஈடுபடுத்தப் படும் இழைகளுள் சிலவாகும்.
தள இழைகள். இரு வேறு வேதி வகை இழைகளை, ஒன்றாகப் பிழிந்து வார்த்தலால், இவை (எடுத்துக் காட்டாகக் கார்டிலான் எனும் 50% வின்யான், 50% வினால் இழைக் கலப்பு) புது நயத் துணிகள் தயாரிக்க ஏற்றவை. இரு வேறு பல்லுறுப்புச் சங்கிலிகளை ஒட்டாக (graft) ஒரு சங்கிலி முதன்மை பெற்றதாகவும், மற்றொன்று கிளைச் சங்கிலியாகவும் அமைந்த, ஒட்டு இழை (graft fibre) தள இழையிலிருந்து குறிப்பிடத் தக்க வகையில் மாறு படுகிறது. தள இழையின் உட்கூறுகளைப் பிரிப்பது போன்று, ஒட்டு இழையின் உட்கூறுகளை எளிதாகப் பிரிக்க முடியாது. புரத இழை, ரப்பர் இழை, உலோக இழை, கண்ணாடி இழை ஆகியனவும், சில தனி வகைத் துணிகளைத் தயாரிக்க உதவுகின்றன. —மே.ரா.பாலசுப்பிரமணியன் துணை நூல். B.P.Corbman, Textiles–Fiber to Fabric, Sixth Edition, Mcgraw–hill Kogakusha, Ltd, Singapore, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 121)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7as4adpy/
தமிழ்“நூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7as4adpy/APA
Oliyon Research. (2026). நூ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7as4adpy/MLA
"நூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/7as4adpy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment