அர்மீனிய மொழி
armīṉiya moḻi
இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பங்களிலிருந்து பிரிந்து விளங்கும் ஒரு தனிமொழியாகும்.
இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பங்களிலிருந்து பிரிந்து விளங்கும் ஒரு தனிமொழியாகும். இம்மொழி பேசும் மக்களுள் பெரும்பாண்மையோர் சோவியத்துக் குடியரசு நாட்டில் வாழ்கின்றனர். சோவியத்துக் குடியரசு நாட்டின் மற்றப் பகுதிகளில் – குறிப்பாக அசேர்பான், சியார்சியன் ஆகிய இடங்களில் வாழும் ஏறத்தாழ 17 இலட்சம் மக்கள் இம்மொழியினைப் பேசுகிறார்கள். மேலும் போலந்து, சிரியா, எகிப்து, இலெபனான், அமெரிக்கா, ஈரான், ஈராக், துருக்கி போன்ற இடங்களிலும் இம்மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இட்டைட்டுப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலத்துப் பிரிசியார்கள் (Phrgians), திசலி (Thessaly), திரேசு (Thrace) போன்ற இடங்களிலிருந்து பிரிந்து வந்த மக்களே அர்மீனியர் என்று குறிக்கப்படுகின்றனர். ஆசியா மைனரில் வாழ்ந்து வந்த அர்மீனிய மக்கள் பல்வேறு ஆட்சியாளர்களின் ஆட்சிக்குட்பட்டனர். கி.மு. 6–ஆம் நூற்றாண்டுவரை மெட்சு ஆதிக்கத்தின் கீழும், கி.மு. 5–ஆம் நூற்றாண்டுவரை பெர்சியரின் கீழும் வாழ்ந்து வந்தனர். இதன் பின்னர் அராபியர்களின் செல்வாக்கு முதல் உலகப்போர் வரையிலும் நீடித்தது. பள்னெடுங்காலமாகப் பல்வேறு வேற்று அரசின் கீழ் வாழ்ந்த இம்மக்கள் தம் மொழியையும் தங்கள் சமயத்தினையும் பாதுகாத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அர்மீனிய மொழியில் (Armenian Language) பார்தியன் மொழிச் சொற்களும், பெர்சியன் மொழிச் சொற்களும் மிகுதியாகக் கலந்துள்ளன. மேலும் இதன் சொற்களஞ்சியத்தில் இரானிய மொழியின் கிளைமொழிச் சொற்களும் கலந்துள்ளன. துருக்கியச் சொற்கள் பெரும்பாலும் அர்மீனிய வட்டார மொழியில் காணப்படுகின்றன. இதனை இந்தோ இரானிய மொழிகளுள் ஒன்றாகவே பலர் கருதினர். எனினும் இரசுக்கு, சுப்சுமென் போன்ற அறிஞர்கள், இதனை இந்தோ–ஐரோப்பிய மொழியுடன் தொடர்புடையது என்று கூறுகின்றனர்.
கி.பி. 5–ஆம் நூற்றாண்டிலிருந்தே இம்மொழியில் இலக்கியங்கள் உருவாகியுள்ளன. பெரும்பாலும் இவ்விலக்கியங்கள் சிரியாக்கு அல்லது கிரேக்க மொழியிலுள்ள மொழிபெயர்ப்புகளாகவே உள்ளன. மெசுராப் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட எழுத்து முறையில் எழுதப்பட்டுள்ள இம்மொழி இலக்கியங்கள், தொடர்ச்சியாக அதே எழுத்து முறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் காணப்படுகின்றன. பழைய இலக்கியங்கள் கி.பி. 5–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தனவாக இருப்பினும், பழைய வடிவங்கள் பதினைந்தாம் நூற்றாண்டு வரை பாதுகாக்கப்பட்டுள்ளன.
இம்மொழியில் கிழக்கு, மேற்கு என்ற இரு கிளைமொழிகள் உள்ளன. கிழக்குக் கிளைமொழியே இலக்கிய மொழியோடு மிகுந்த தொடர்புடையதாக உள்ளது.
இலக்கிய மொழியும், இக்கால மொழியும் ஒரே எழுத்து முறையினைக் கொண்டுள்ளன. தொடக்கத்தில் இம்மொழியில் 36 எழுத்துகள் இருந்தன. இப்போது அவை 38 ஆக மிக்குள்ளன. இம்மொழியின் நெடுங்கணக்கு முறை பெரும்பாலும் கிரேக்க மொழியின் தாக்கத்தால் ஏற்பட்டதாகும். கிரேக்க மொழியின் தாக்கம் உயிரெழுத்துகளில் காணப்படுகின்றது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 612)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/78v2h2s9/
தமிழ்“அர்மீனிய மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/78v2h2s9/APA
Oliyon Research. (2026). அர்மீனிய மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/78v2h2s9/MLA
"அர்மீனிய மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/78v2h2s9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment