கலவைகளின் செறிவு (concentration) மிக முக்கிய பண்பாகும். கரைசல்களின் செறிவை, அதில் கரைந்திருக்கும் கரை பொருளின் (solute) அளவைக் கொண்டு, பருமனளவிலோ, எடையளவிலோ குறிப்பிடலாம். ஒவ்வொரு செறிவு அளவுகளும், ஆய்வகங்களிலும், தொழிலகங்களிலும் பயன் படுகின்றன. சதவீத முறை. செறிவு அளவகளில் மிக எளியது சதவீத முறையாகும். எனவே, மருந்துப் பொருள் தயாரிப்புகளிலும், வீட்டில் பயன் படத் தயாரிக்கப் படும் கரைசல்களிலும், இச்செறிவு முறை பயன் படுகிறது. நிறை சதவீதம் என்பது, நூறு பகுதி கரைசலில் எவ்வளவு நிறை கரை பொருள் பகுதி கரைந்துள்ளது என்பதைக் குறிப்பிடுவதாகும். சான்றாக. 10% உப்புக் கரைசலில், 10 கிராம் உப்பு, 90 கிராம் நீரில் கரைக்கப் படுவதால், அதன் மொத்த எடை 100 கிராமாக உள்ளது. வளிமங்களை எடையிடுவதில், மிகு சிக்கல் உள்ளமையால், அவை பருமன் சதவீதமாகக் குறிப்பிடப் படுகின்றன. காட்டாக, காற்றில் 78% நைட்ரஜன் வளிமம் பருமளைவில் உள்ளதாகக் குறிக்கப் படுகிறது. நீரில் ஆல்கஹால் கரைந்துள்ளதைப் போன்றே, நீர்மங்களில் கரைந்துள்ள கரைசல்களையும் பருமன் சதவீதத்தால் குறிப்பிடலாம். மோலாரிட்டி. வேதியிலார், எவ்வளவு மோல் கரை பொருள் கரைந்துள்ளது என்பதையே கருதுவர்; எவ்வளவு கிராம் கரை பொருள் கரைந்துள்ளது என்பது முக்கியமன்று. மோலாரிட்டி (molarity) சுருக்கமாக M என்று குறிப்பிடப்படுகிறது. மோலாரிட்டி என்பது, எவ்வளவு மோல் கரை பொருள் ஒரு லிட்டர் கரைசலில் உள்ளது என்பதாகும். சான்றாக, 12M HCl கரைசல் என்பது 12 HCl மூலக் கூறு எடை, அதாவது, 438 கிராம் HCl ஒரு லிட்டர் நீரில் கரைந்திருக்கிறது என்று பொருள். மேலும், 0.5 லிட்டர் கரைசலும், 12 M கரைசலேயாகும். இங்கே குறிப்பிட்டதைப் போல, மோல் என்பது, கிராமில் பொருளின் எடை அதன் மூலக் கூறு எடைக்குச் சமமானதாகும் வேதிப் பொறியாளர் சில நேரங்களில், மோல் என்பதைப் பவுண்ட்-மூலக் கூறு எடையில் குறிப்பிடுகின்றனர். மோலாலிட்டி. உப்பைச் சேர்ப்பதால், நீரின் உறை நிலை குறைகிறது. இத்தகைய கரைசல்களின் செறிவுகளை எவ்வளவு மோல் கரை பொருள் ஒரு லிட்டர் கரைசலில் கரைத்திருக்கிறது என்பதை விட, எவ்வளவு எடையுடைய கரைப்பானில் கரைந்துள்ளது என்பதே தேவையாகிறது. எனவே, இவ்வகைச் செறிவுகளை மோலாலிட்டியில் (molality) குறிப்பிடுதல் பொருத்தமாகும். மோலாலிட்டி m என்ற குறியீட்டால் குறிக்கப் படுகிறது. மோலாலிட்டி என்பது எவ்வளவு மோல் கரை பொருள் 1000 கிராம் கரைப்பானில் கரைந்துள்ளது என்பதாகும். சான்றாக, 31.2 கிராம் சுக்ரோஸ் (C₁₂H₂₂O₁₁) மூலக் கூறு எடை 342) 200 கிராம் நீரில் கரைக்கப் பட்டால், (அதாவது 0.5 மோல் சுக்ரோஸ் / 100 கி. நீர்) அக்கரைசலின் செறிவு 0.5m ஆகும், நீர்த்த நீரிய கரைசல்களில் (dilute aqueous solutions) மோலாரிட்டிச் செறிவும், மோலாலிட்டிச் செறிவும் ஏறக் குறைய சமமாக இருக்கும். ஒன்றிற்கு மேற்பட்ட அடர்த்தியுடைய இரு வேறு கரைசல்களில், மோலாலிட்டியும், மோலாரிட்டியும் வேறு படுகின்றன. மோலாலிட்டியை, மோலாரிட்டியுடன் பின் வரும் சமன்பாட்டால் தொடர்பு படுத்தலாம். நார்மாலிட்டி. மோலாரிட்டி என்கிற செறிவு ஒரு மூலக் கூறில் ஒன்றிற்கும் மேற்பட்ட வினைப் படு உறுப்புகளைக் கொண்ட கரைசல்களின் வினைத் திறனை விளக்குவதில்லை. சான்றாக, சல்ஃப்யூரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலத்தைப் போல் இரண்டு மடங்கு ஹைட்ரஜன் அயனிகளை வழங்குவதால், O.IM சல்ஃப்யூரிக் அமிலம், O.IM ஹைட்ரோ குளோரிக் அமிலம் நடுநிலையாக்கும் காரத்தைப் போல் இரு மடங்களவு காரத்தை நடு நிலையாக்குகிறது. பருமனறி பகுப்பாய்வு போன்று, வினைப் பொருள்களின் வினைத் திறன்களைக் கணக்கிடும் இடங்களில் நார்மாலிட்டி (normality) எனும் செறிவு அலகு பயன் படுகிறது. இதன் குறியீடு N. மோலாரிட்டியை வினைப் பொருளில் இருக்கும் வினை திறன் மிக்க உறுப்புகளின் எண்ணிக்கையால் பெருக்கினால், நார்மாலிட்டி கிடைக்கிறது. இரட்டைச் சிதைவு (double decomposition) வினைகளில், நார்மாலிட்டி என்னும் செறிவு குறிப்பிட்ட வினைகளுக்கு உரியதாக இல்லா விட்டால், ஏற்ற செறிவன்று. சான்றாக, பாஸ்ஃபோரிக் அமிலம் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரிந்து, NaH₂PO₄, Na₂HPO₄ அல்லது Na₃PO₄ ஆகியவற்றை உண்டாக்கலாம். எனவே, பாஸ்போரிக் அமிலத்திற்கு, மூன்று நார்மாலிட்டிகள் இருக்கும். அது வெளியேற்றும் ஹைட்ரஜன் அயனிகளைப் பொறுத்து, நார்மாலிட்டி மாறுபடுகிறது. ஆச்சிஜனேற்ற இறக்க வினைகளில் இணை திறன் மாறுபாடு நிகழ்கிறது. எனவே, ஆக்சிஜனேற்ற எண் மாறுபாட்டிலிருந்தே, நார்மாலிட்டியைக் கணக்கிட வேண்டும். இரு கரைசல்கள் ஒன்றையொன்று முறித்தல் வினையில் ஈடு படும் போது, பயன் படுத்தப் பட்ட கரைசல்களின் நார்மாலிட்டி பெருக்குத் தொகை சமமாக இருக்கும். சான்றாக V₁ பருமனளவு கரைசலை முறித்தல் வினையில் ஈடுபடச் செய்கையில், N₂ நார்மாலிட்டி கரைசல் V₂ பருமனளவு கரைசலை முறிக்கிறது. எனவே, V₁ கரைசலின் நார்மாலிட்டி, \begin{align}N_1 & = \frac {V_2 N_2}{V_1} \\ \therefore V_1 N_1 & = V_2 N_2\end{align} கரைசலின் பருமனளவு மில்லி லிட்டரில் குறிப்பிடப்படும் போது, பருமனளவு, நார்மாலிட்டி பெருக்குத் தொகை மில்லி சமமாகவும் (milli equivalents) லிட்டரில் இருந்தால், சமான அளவிலும் (equivalents) இருக்கும். ஃபார்மாலிட்டி. தற்காலத்தில், மோலார் செறிவை விட, ஃபார்மாலிட்டி (formality) என்ற அலகை வேதியியலார் பயன் படுத்துகின்றனர். ஏனெனில், மின் பகுளி கரை பொருள் அயனிகளாக இல்லாமல், மூலக் கூறுகளாகவே இருக்கும். இதன் குறியீடு F. ஃபார்மாலிட்டி என்பது மூலக் கூறு எடை லிட்டர் ஆகும். அயனியாகாத கரை பொருள்களின் மோலாரிட்டியும், ஃபார்மாலிட்டியும் சமமாக இருக்கும். மோல் சதவீதம் (மோல் பின்னம்). கரைசல்களின் பல பண்புகள் காட்டாக, ஒன்றின் ஆவியழுத்தம் எவ்வளவு மோல்கள், கரை பொருள் எவ்வளவு மோல்- கள் கரைப்பானில் கரைந்துள்ளது என்பது பற்றிய விகிதம் முக்கியமேயன்றி, பருமன் அல்லது எடை விகிதம் முக்கியமன்று. மோல் பின்னம் என்பது கரை பொருளுக்கு (எவ்வளவு மோல்கள்), கரைசலிலிருக்கும் மொத்த உறுப்புகளின் (மொத்த மோல்கள்) விகிதமாகும். இதன் குறியீடு NA அல்லது XA (A பொருளுக்கு). சான்றாக, 16 கிராம் மெத்தனால் (0.5 மோல்) 18 கிராம் நீரில் (ஒரு மோல்) கரைந்தால், மெத்தனாலின் மோல் பின்னம் = 0.5/1.5 அல்லது 1/3; மோல் சதவீதம் 33.3. வளிமங்களுக்கு மோல் சதவீதமும், பருமன் சதவீதமும் ஒன்றே ஆகும். —த. தெய்வீகன்