அல்மேடா
almēṭā
என்பார் போர்ச்சுகீசிய இந்தியாவின் முதல் வைசிராயாக இருந்தவர்.
என்பார் போர்ச்சுகீசிய இந்தியாவின் முதல் வைசிராயாக இருந்தவர். 15–ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இரண்டாம் கவுண்ட்டு அப்பராண்டசு என்பவருக்கு இளைய மகனாகப் பிறந்தார். அல்மேடா (Almeida) போர்ச்சுகலில் புகழ்பெற்ற குடும்பத்தில் தோன்றியவர். இளமைப் பருவத்தில் ஆரகானைச் சேர்ந்த பெர்டினான்டு என்பாரின் கீழ் ஐரோப்பிய முசுலிம்களான மூர்களுக்கு எதிரான போரில் (கி.பி. 1485–1495) கலந்துகொண்டார். பிறகு இந்தியாவில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிக்கு மார்ச்சு மாதம் முதல் நாள் அன்று இம்மானுவேலால் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பெற்றுப் பெரியதொரு கப்பற்படையுடன் சூலை மாதம் குயிலான் (சில்வா) வந்தடைந்தார். மொம்பாசாவைச் சேர்ந்த மூர்கள் இவரை மிகவும் கடுமையாக எதிர்த்து நின்றனர். இருப்பினும் அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, அவர்கள் செல்வங்களைக் கவர்ந்து, தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டார். அஞ்சுடிவர் தீவுகள் மற்றும் கண்ணனூர் போன்ற இடங்களில் போர்ச்சுகீசியச் செல்வாக்கினை வளர்க்கக் கோட்டைகளை நிறுவினார். இந்தியாவிற்கு வருகை தந்தபோது, கொச்சியில் தங்கினார். அங்கே கி.பி. 1503–இல் அல்பான்சோ–டி-ஆல்புகர்க்கு போர்ச்சுகீசியக் கோட்டை ஒன்றைக் கட்டினார். மலாக்காவுடன் இவர் செய்துகொண்ட வாணிக உடன்படிக்கையும், இவர் மகன் இலோரன்சோவின் கண்டுபிடிப்புகளும் இவரது ஆட்சிக்காலத்தில் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிகளாகும். இவருடைய படைத் தலைவரான இலோரன்சோ (Lorenso) இலங்கைக்குச் சென்று குடியிருப்பை நிறுவிய முதல் போர்ச்சுகீசியராகக் கருதப்படுகிறார். அவ்வாறே பெர்னாண்டோவும் மடகாசுகரைக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். இந்தியப் பெருங்கடலின் பகுதியில் வளர்ந்துவரும் போர்ச்சுகீசிய செல்வாக்கினை அழிக்க நினைத்த எகிப்தியர்களின் கப்பற்படையால், கி.பி. 1508-இல் பெர்னாண்டோ, தாபுல் என்ற இடத்தில் கொல்லப்பட்டார். மகனின் இறப்பால் வஞ்சம் தீர்த்துக் கொள்ள நினைத்த அல்மேடா, தமக்குப் பதிலாக அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட ஆல்புகர்க்கைச் சிறையில் அடைத்து வைத்தார். பிறகு அரேபியர்களின்மீதும், அவர்களின் எகிப்தியக் கூட்டணியின் மீதும் போர் தொடுத்து, கோவா மற்றும் தாபுல் போன்ற இடங்களிலிருந்த கோட்டைகளைக் கொள்ளையடித்துத் தீயிட்டு அழித்தார். இறுதியாக, கி.பி. 1509 பிப்பிரவரியில் தியூ என்ற இடத்தில் எதிரிகளின் கூட்டுப் படையை அழித்தார். உடனே கொச்சிக்குத் திரும்பிய இவர், ஆல்புகர்க்கின் அரசாளும் உரிமையை எதிர்த்து நின்றார். ஆதலால் கி.பி. 1509–ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் ஆல்புகர்க்கிற்கு இணங்கிடும்படி வலியுறுத்தப்பட்டார். மூன்று கப்பல்களின் துணை கொண்டு 1509 திசம்பர் மாதம் முதல் நாள் ஐரோப்பாவிற்குப் பயணமானார். அப்போது சல்தான்ன விரிகுடா என்று அழைக்கப்பட்ட டேபிள் விரிகுடாவில் நீர் நிரப்ப இவருடைய கப்பல்கள் நின்றன. இங்கே கி.பி. 1510 மார்ச்சு மாதம் முதல் நாள் ஆட்டன்டாட்டுக் குடியினரால் தாக்கப்பட்டு இவர் கொலையுண்டார். இந்தத் தாக்குதலில் இவர்தம் முழுவீரத்தையும் வெளிக்காட்டினார். கேப்டவுன் என்ற இடத்தில் நடந்த இத்தாக்குதலில் கொல்லப்பட்ட 65 போர்ச்சுகீசியர்களுள் 12 பேர் தலைவர்கள். மறுநாள் அல்மேடாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இவருடைய உடல் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டது.ஈ.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 851)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zh3mw7y/
தமிழ்“அல்மேடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6zh3mw7y/APA
Oliyon Research. (2026). அல்மேடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6zh3mw7y/MLA
"அல்மேடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6zh3mw7y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment