அரசின் தோற்றம்
araciṉ tōṟṟam
அரசு இவ்வாறுதான் தோன்றியது என்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை.
அரசு இவ்வாறுதான் தோன்றியது என்று யாராலும் தெளிவாகக் கூற முடியவில்லை. ஆனால் அரசு இவ்வாறுதான் தோன்றியிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் பலரும் பல்வேறுபட்ட கருத்தைக் கூறுகிறார்கள். அதிலும் அறிஞர்களால் ஒருமித்த கருத்துக்கு வரமுடியவில்லை. அரசின் தோற்றம் (Origin of State) பற்றிய கோட்பாடுகளுள் முதன்மையானவை பின் வருவன: சமூக ஒப்பந்தக் கோட்பாடு, இறைவழித் தோற்றக் கோட்பாடு, வன்மைக் கோட்பாடு, தந்தை வழிக்கோட்பாடு, தாய் வழிக்கோட்பாடு, வரலாற்றுக்கோட்பாடு அல்லது வளர்ச்சிக்கோட்பாடு.
அரசின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளிலே மிக்க முதன்மையானதாகக் கருதப்படுவது சமூக ஒப்பந்தக் கோட்பாடாகும். இந்தக் கோட்பாட்டை ஆதரிக்கும் அறிஞர்களுள் முதன்மையானவர்களாகக் கருதப்படுபவர்கள். ஆப்சு (Hobbes), இலாக் (Locke), உருசோ (Rousseau) ஆகியோராவார்.
ஆப்சு கருத்துப்படி மனிதனுடைய இயற்கை வாழ்க்கை, சமூகநிலை அரசியல் நிலை ஆகிய இரண்டிற்கும் முந்தியதாக இருந்தது. மனிதன் தன்னிச்சையாகத் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தான். இந்தச் சுய நலமான வாழ்க்கை அறிவின் வழி வந்ததன்று. பசி, நீர்வேட்கை, உணர்ச்சி ஆகிய இவைகளுக்கு மனிதன் ஆட்பட்டிருந்ததால் ஓயாத சண்டைக்கும் ஒழியாத அல்லல்களுக்கும் ஆளானான். அவ்வாழ்க்கையில் சரியானது, தவறானது, நீதி, அநீதி என்ற பாகுபாடுகள் இல்லை. இம்மிருகத்தனமான வாழ்க்கையில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு யாது? எனவே மனிதன் ஒரு சமூக அமைப்புக்குள் வருகிறான். இச்சமூக வாழ்க்கை ஓர் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்திற்குள் வருகிற யாவரும் பொது நலன் கருதித் தாங்கள் இயற்கையில் பெற்றிருந்த எல்லா அதிகாரத்தையும் ஒருவரிடமோ அல்லது ஒரு மன்றத்திடமோ ஒப்படைக்கிறார்கள். அவ்வாறு ஒப்படைத்தபின் அவ்வதிகாரத்தைத் திரும்பிப்பெற அம்மக்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. ஏனெனில் அந்த அதிகாரத்தைப் பெறுகிற ஒருவர் இந்தச் சமூக ஒப்பந்தத்திற்குட்பட்டவர் அல்லர். முழு அதிகாரத்தையும் ஒப்படைக்கும் பொழுது கட்டுப்பாடுகளை விதித்தால், கட்டுப்பாடுகளின் பேரில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுச் சமூகம் சின்ன பின்னமாகி, மீண்டும் பழைய நிலையை மக்கள் அடைந்துவிடுவார்கள் என ஆப்சு கருதுகிறார். மக்கள் ஒப்படைக்கிற அதிகாரத்திற்கு ஆப்சு, ‘பேரரக்கன்’ (Leviathan) எனப் பெயரிடுகிறார். இதுவே எல்லா வல்லமையும் பொருந்திய இறைமை ஆகும். இது பிரிக்கவோ பிடிக்கவோ தகர்க்கவோ முடியாதது. ஆப்சின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டில் தெளிவாகப் பார்க்க வேண்டிய பகுதிகள் இயற்கை நிலை (State_of Nature), சமூக ஒப்பந்தம், இறைமை (Sovereignty) விமரிசனம் ஆகியவையாம்.
இலாக் கூறும் இயற்கை நிலை, ஆப்சின் இயற்கை நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மனிதன் அரசியல் நிலைக்கு முற்பட்டிருந்தான். ஆனால் சமூக நிலைக்கன்று. மனிதன் இயற்கை நியதியில் (Law of Nature) வாழ்ந்தான்; பகுத்தறிவோடும் பண்போடும் பழகிப் பல்லுயிர் ஒம்பினான்; இயற்கை நியதியில் இயற்கை உரிமைகளான உயிர், உரிமை, உடைமை ஆகிய இவைகளைப் பேணினான்; தன்னைப் போல் பிறரையும் எண்ணும் தன்மை பெற்றிருந்தான்; சுருங்கக்கூறின் சமூக நிலையில் சுமுகமான – அமைதியான – வாழ்வில் திளைத்திருந்தான்.
இப்படிப்பட்ட இயற்கை நிலையிலும் மூன்று வித சங்கடங்கள் இருந்தன. முதலாவதாக இயற்கை நியதி என்றால் என்ன என்பது தெளிவாக்கப்படாமை. அடுத்ததாக இயற்கை நியதியை மீறுகிறவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள் என்ற கேள்வியாகும். இறுதியாக அவ்வாறு தண்டனை கொடுக்கப்பட்டால் யார் அதை நிறைவேற்றுவது? என்ற வினா. இவ்வாறான கேள்விகளுக்கு விடை அளிப்பதற்கென்றே சமூக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இவ்வொப்பந்தத்தின் காரணமாக ஒப்பந்தச் சமூகம் தோன்றுகிறது. இயற்கை நிலையில் தனி மனிதன் பெற்றுவந்த உரிமைகள் யாவும் சமூகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. எல்லா உரிமைகளையும் பெற்றிருக்கிற தகுதி அடிப்படையில் இச்சமூகம் மற்றும் ஓர் ஒப்பந்தத்திற்கு வருகிறது. இந்த ஒப்பந்தமே அரசாங்கத்தை ஏற்படுத்துகிறது. பொதுநலன் கருதிச் சட்டம் இயற்றுவதற்கும், சட்டத்தின் வாயிலாகத் தகராறுகளுக்குச் சரியான நீதி வழங்குவதற்கும் ஒரு குறிப்பிட்ட மனிதருக்குச் சமுதாயம் அதிகாரமளிக்- கிறது. இரண்டாவது ஒப்பந்தமாகிய அரசாங்க ஒப்பந்தத்தில் ஆட்சி செய்கின்றவருக்கும் பங்கு இருக்கிறது. அவரும் இந்த ஒப்பந்தத்திற்கு உட்பட்டவரே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து மீறும்பொழுது ஆட்சியாளரை நீக்குவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதாவது, ஆளுவோர், ஆளப்படுவோர் யாவரும் ஒப்பந்தத்தின் பங்குதாரர்களே. ஆளப்படுவோர் இயற்கையில் அனுபவித்து வந்த சில உரிமைகளை ஆளுவோரிடம் ஒப்படைக்கத்தான் செய்கிறார்களேயல்லாமல் உரிமைப்படுத்தவில்லை என இலாக் கூறுகிறார். இது ஆப்சின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.
அரசு தோன்றியமை பற்றிய இலாக் கருத்தின் முக்கியக் கூறுகள் இயற்கை நியதி, சமூக ஒப்பந்தம், அரசாங்க ஒப்பந்தம், சட்டமியற்றலின் உயர்வு, அதிகாரப் பிரிவினை, உயிர், உரிமை, உடைமை ஆகியவை, மனிதனின் மாற்ற முடியாத அடிப்படைப் பிறப்புரிமைகள் என்பனவாகும்.
உரூசோவின் கருத்துப்படி மனிதன் இயற்கை நிலையில் எளிய நிலையில் வாழ்ந்தான். எளிய இனிமை நிறைந்த சுதந்திரமான மனித வாழ்க்கை அது. மற்றவர்களுக்கு இடுக்கண் செய்ய வேண்டிய இன்றியமையாமை இல்லாதிருந்தது. இது சரி, இது தவறு, இது தாய்மை, இது தூய்மையற்றது என்று இனம் பிரித்து வாழத் தெரியாத ஒரு புனிதமான நிலை அது. இந்நிலை நீண்ட காலங்களுக்கு நீடிக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது மக்கள் தொகைப் பெருக்கம்; இரண்டாவது பகுத்தறிவின் தோற்றம். மக்கள் தொகைப் பெருக்கத்தால் மனிதன் தனித்தனியாக வீடுகள் அமைத்துக்கொண்டான்; நான் எனது என்று சிந்திக்கத் தொடங்கினான்; இயற்கை நிலையின் புனிதம் பாழ்பட்டது; சிந்தித்தான், சீரழிந்தான் என்பது உரூசோவின் கருத்தாகும்.
இவ்வேளையில் இயற்கை நிலையில் இருந்த மகிழ்வும் மன நிறைவும் சமத்துவமும் மறைந்து போயின. போட்டியும் பொறாமையும் தலை தூக்கின. கொள்ளைகளும் கொலைகளும் அன்றாட வாழ்க்கையாயின. இந்தப் பதற்ற நிலையிலிருந்து விடுபடுவதற்குச் சமூக ஒப்பந்தம் தேவைப்பட்டது. இந்தச் சமூக ஒப்பந்தப்படி யாவரும் தங்களிடமிருந்த அதிகாரங்களை ஒன்று கூட்டி ஒரு பொது அதிகாரத்தை நிறுவினர். இதற்குப் பொதுச் சார்பு (General Will) அல்லது பொதுநல விருப்பம் என உரூசோ பெயரிடுகிறார். இந்தப் பொதுச் சார்பில் யாவகும் தங்களிடமிருந்த அதிகாரங்களை ஒப்படைப்பதுடன் தாங்களும் அதில் ஓர் உறுப்பினராகிறார்கள். பொதுச்சார்பு பிரிக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதது. இது மக்களின் ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும். பொதுச்சார்பு மக்களின் முழுமைபெற்ற மிகச் சிறந்த திண்ணிய எண்ணமாகும். எனவே அது இறைமை படைத்தது. அந்த இறைமைக்கு மீறி யாரும் நடக்க முடியாது. அரசு, மக்களின் ஒருமித்த அமைப்பாகும். பொதுச் சார்பை அது பெற்றிருக்கிறது. அதுவே தலைமை படைத்தது. அரசாங்கம் அரசின் பிரதிநிதியாகும். அரசிடமிருந்து அது அதிகாரங்களைப் பெறுகிறது. அரசாங்கங்களுக்கென்று தனி அதிகாரங்கள் கிடையா.
பொதுச் சார்பைக் கீழ்க்கண்டவாறு விளக்கலாம். அ,ஆ,இ,ஈ,உ என்பவர்கள் தனிமனிதர்கள் என்றால் அ ஆ இ ஈ உ என்று இணைந்து பொதுச் சார்பாக்கப்படுகிறார்கள். பொதுச் சார்பில் அங்கம் வகிப்பதுடன் அ,ஆ,இ,ஈ,உ என்ற தனி மனிதர்களாகவும் அவர்கள் இயங்குகிறார்கள். தங்களுடைய முழு அதிகாரத்தையும் பொதுச் சார்பில் ஒப்படைத்து விட்டதால், சமத்துவத்தையும் உரிமையையும் யாவரும் அதிலிருந்து பெறுகிறார்கள். பொதுச் சார்பைக் கூர்ந்து நோக்கும் பொழுது இரண்டு குணநலன்கள் நன்கு புலப்படும். ஒன்று, பொதுச் சார்பில் அங்கம் வகிக்கும் தன்மை, இரண்டு, அதற்கு உட்பட்டு வாழும் மனிதப்பண்பு, பொதுச்சார்பில் யாவரும் அங்கம் வகிப்பதால், தனி மனிதத்தன்மை அதில் அடங்கிப் போகவேண்டும் என்பதே உரூசோவின் கருத்தாகும். அவ்வாறு போகாதவர்களைப் பொதுச்சார்பு அடி பணிய வைக்கும் பொதுச்சார்பு யாவரின் நலனுக்கும் பாடுபடுவதால் அது ஒரு போதும் தீங்கிழைக்காது.
உரூசோ காட்டும் ஒப்பந்தத்தின் நிறை, மக்களின் இறைமை பொதுச் சார்பில் தெளிவாக்கப்பட்டுள்ளமையும், குறை அரசு சமூகம் ஆகிய இரண்டிற்கும் வேறுபாடு காணமுடியாமையும் ஆகும்.
ஆப்சு, இலாக், உரூசோ ஆகியோர் காட்டிய சமூக ஒப்பந்தத்தில் காணப்படும் பெரிய குறைபாடு, வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காமையாகும். எனவே இது ஓர் அனுமானத் கொள்கையாகவே நிலைத்திருக்கிறது. எனினும், இவற்றில் காணப்படும் அரசு தோன்றுவதற்கு மக்களின் இணக்கமே அடிப்படையாக அமைந்தது என்ற கருத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை.
இறைவழிக் கோட்பாடு, சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்கு முந்தியதாகும். அரசு என்பது, மனிதனின் விருப்பத்தால் தோற்றுவிக்கப்பட்டதன்று; இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. அரசர் இறைவனின் சார்பாளராவர்; இறைவனாலேயே நியமிக்கப்படுகிறார்; இறைவனுடைய பேராளராக இருப்பதால் எந்த மானிடருக்கும் அவர் மறுமொழி சொல்லக் கடமைப்பட்டவரல்லர். அரசர் தவறாக ஆட்சி செய்தால், மக்களுக்கு அவரை நீக்குவதற்கு உரிமை கிடையாது. ஏனெனில் அவர் கடவுளின் பேராளர். அரசர் மோசமாக ஆட்சி செய்தால் அது மக்களின் வினைப்பயனாகும் என்பதுதான் இறைவழிக் கோட்பாட்டின் கருத்தாகும். இக்கோட்பாட்டின் முதன்மையான கூறு இறையுணர்வு. இக்கோட்பாடு எல்லா வல்லமையும் பெற்ற ஓர் அரசனைத் தோற்றுவிப்பதால் கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கிறது என்பது இதன் குறைபாடாகும். மக்கள் நலன் பேணாக் கொடுங்கோன்மை நீடித்திருந்ததாக வரலாறு கிடையாது.
பழங்காலச் சமூகத்தில் பலமுள்ளவன், பலமற்றவர்களை அடக்கியாண்டான். பலமுள்ளவன் தனக்கு வேண்டிய சில அடியாட்களை வைத்துக்கொண்டு மக்கள் கூட்டத்தையே அடக்கி ஆள வேண்டிய நிலை நீடித்தது. இந்த நிலை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழத் தலைப்பட்ட பின்பும் கூடத் தொடர்ந்தது. இவ்வாறாகப் பழங்குடியில் இருந்த வாழ்க்கை பேரரசாக மலர்ந்தது. பேரரசாக நிலைப்பதற்கும் வன்மையைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருந்தது. வன்மை நிலை பெற்றதற்கு வெளி நாட்டின் வலிந்து கைப்பற்றுதலைத் தடுப்பதும் உள்நாட்டின் குழப்பங்களை அடக்குவதும் காரணங்களாக அமைந்தன. சுருங்கக் கூறின், அரசு தோன்றுவதற்கும் தொடர்வதற்கும் வன்மைதான் காரணமாக இருந்தது. வன்மைக்கோட்பாடு பல்வேறு காலங்களில் வரலாற்று நிகழ்ச்சிகளில் இடம் பெற்றிருக்கிறது. அரசுக்கு எதிராக இக்கோட்பாட்டைச் சமயகுருமார்கள் பயன்படுத்தினார்கள். அரசு வன்மையால் தோன்றியது; எனவே அதற்கு அடிபணியக்கூடாது என்றும் தேவாலயங்கள் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டன; எனவே மக்கள் தேவாலயங்கட்கு உட்பட்டு வாழ வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். பொதுவுடைமைவாதிகள் இக்கோட்பாட்டை அரசுக்கு எதிராகத் கையாண்டுள்ளார்கள். அவர்கள் கருத்து, வன்மையால் தான் அரசு நிலைத்திருக்கிறது; இவ்வன்மை பொருந்திய அரசு, இருப்போன், இல்லாதவனைச் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது; அப்படிப்பட்ட அரசை மாற்றி அமைக்க வேண்டும் என்பதாகும். அரசு வன்மையால்தான் நிலைத்திருக்கிறது என்பதை முழுமையாக நம்பியவர்கள், இட்லர், முசோலினி ஆகியோராவார்கள். அரசு வன்மையால்தான் நிலைத்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் வன்மையால் மட்டுமே நிலைத்திருக்கிறது என்பது உண்மையாகாது.
குடும்ப அமைப்புத்தான் சமூக அமைப்பின் முதற்படி. அதிலிருந்தே அரசு தோன்றியது. குடும்பத்தில் தந்தையே தலைவனாக இருந்தான். அவனுடைய சொற்கேட்டு அக்குடும்பம் நடந்தது. தந்தை, தாய், குழந்தைகள் குடும்பத்திற்குள் அடங்குவர். குழந்தைகள் பெரியவர்களானாலும், அவ்வழியில் வந்த மூத்த பெரியவரையே தலைவராகவும் வழிகாட்டியாகவும் கருதினர். அவ்வாறே அதிகாரம் தோன்றியது. ஒரு குடும்பம் பல்வேறு குடும்பமாகப் பல்கிய நிலையிலும் பெரியவரையே தலைவராக அக்குடும்ப மக்கள் மதித்தனர். அவருடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடந்தனர். குடும்பம் குலமாகவும், குலம் இனமாகவும் இனம் அரசாகவும் தழைத்தோங்கியது. தந்தையின் அதிகார உறவோடு அரசு மலர்ந்தது என்பதை விளக்குவதே தந்தை வழிக்கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை எடுத்துப் பேசுவோரில் முதன்மையானவர் சர் என்றி மெயின் (Sir Henry Maine) என்பவராவர். குடும்பத்திலிருந்துதான் அரசு தோன்றியிருக்க வேண்டும் என்று அரிசுடாட்டிலும் கருதுகிறார். சமூகம் என்பது குடும்பங்கள் யாவும் ஒன்றுபட்டு ஒரே இடத்தில் வாழ்வது என்றும், அவ்வாறே சிற்றூர் வாழ்க்கை தொடங்கியது என்றும், சிற்றூர் என்பது ஒரு குடும்பத்தில் தோன்றிப் பல்கிப் பெருகிய பரிணாம வளர்ச்சி என்றும் அரிசுடாட்டில் கருதினார். மேலுமவர், ஒவ்வொரு குடும்பமும் தலைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பது போலவே, ஒவ்வொரு சிற்றூரும், அந்த வழியில் வந்த மூத்த ஒருவனை நாட்டாண்மையாளனாகக் கொண்டு அவன் சொற்கேட்டு நடந்தது என்றும், அதனால் பல சிற்றூர்கள் சேர்ந்து அரசாக மாறியது என்றும், அவ்வாறு அரசாக மலர்ந்தபோது ஆண்வழியில் வந்த மூத்த தலைவனே அரசனாக முடிசூட்டிக் கொண்டான் என்றும் விளக்கியுள்ளார்.
ஆனால், மெக்லினன் (Maclenan) போன்ற ஆசிரியர்கள், தந்தைவழிக் கோட்பாட்டைத் தெளிவாக மறுக்கிறார்கள். அவர்கள் தாய்வழி உறவு முறையே எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருந்தது என்றும், திருமணம் என்னும் வரன்முறை வந்தபின்னர்த்தான், ஆடவனுக்கு அதிகாரங்கள் சென்றன என்றும் கூறுகின்றனர். திருமணம் என்னும் உறவு வாழ்க்கை மிகப் பிந்திய வளர்ச்சி என்றும், பழங்காலச் சமுதாயம் திருமணம் என்ற கட்டுப்பாடான வாழ்க்கை இல்லாமலேயே வாழ்ந்திருக்கிறது என்றும், அத்தகு வாழ்க்கையில் உறவு முறையை ஆயும்பொழுது அது தாய்வழி வந்ததாகவே இருக்கிறது என்றும் மெக்லினன் போன்ற ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மேற்கூறப்பட்டவற்றால் இனமுறை வாழ்க்கைக்குப் பிந்தியதே குடும்ப வாழ்க்கை என்பதும், குடும்ப வாழ்க்கைக்கு முன்பாகப் பல கணவர் வாழ்க்கை முறை அமைந்திருந்தது என்பதும் புலனாகின்றன.
உறவின் முறைகள் தாய் வழி வந்ததே என்னும் அடிப்படையில் உருவானதுதான், தாய் வழிக்கோட்- பாடு. இக்கோட்பாட்டு ஆதரவாளர்களின் கருத்துப்படி, முதன்முதலாக இருந்தது பல கணவர் முறையாகும். தந்தை, தாய் குழந்தைகள் அடங்கிய குடும்ப அமைப்புத் தோன்றாத காலம் அது. குழந்தைகளை ஈன்றெடுத்த தாயே அவர்களின் உறவுகளுக்கு அடிப்படையாக இருந்தாள். தாயே சொத்துரிமைகளுக்கும் அடிப்படையாக இருந்தாள். குடும்பம், குலம், இனம் என்ற பரிணாம வளர்ச்சி என்பது செயற்கையானது. கட்டுப்பாடற்ற வாழ்க்கையில் முதலில் இனமாகத் தான் வாழ்ந்தனர். பின்பு குலம் உண்டாக்கியும் நீண்ட காலங்களுக்குப் பின்னரே குடும்பம் என்ற வரம்புக்குள் மனிதர்கள் வாழ முற்பட்டனர் என்பது தாய்வழிக் கோட்பாட்டு ஆதரவாளர்களின் கருத்து.
தாய்தான் உறவின் அடிப்படையாக இருந்தாள் என்பதில் ஐயப்பாடில்லை. ஆனால் அதிகாரப் பின்னணியில் தோன்றிய அரகக்கு அடிப்படையாகத் தாய் இருந்தாள் என்பதில் ஐயப்பாடுகள் பல தோன்றுகின்றன. மனித இனத்தில் பெண் ஒரு வலிமைகுறைந்த உறுப்பாகவே இருந்திருக்கிறான். தாய் வழிவாழ்க்கை எல்லா இடங்களிலும் நிலையாக இருந்தது என்பதற்குச் சான்றுகள் இல்லை. குடும்ப வாழ்க்கையிலும் ஆண்தான் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறான். தாய்வழிக் கோட்பாடும் தந்தை வழிக் கோட்பாடும் குடும்பத்திலிருந்துதான் அரசு தோன்றியது என்பதனை வலியுறுத்துகின்றன. ஆனால் குடும்ப வாழ்க்கைக்கும் அரசின் நடைமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. குடும்பத்தின் வளர்ச்சியே அரசு என்று சொல்வதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், குடும்பம் அரசு தோன்றுவதற்கு ஆணிவேராக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
அரசு என்பது இயற்கையான வளர்ச்சியில் பரிணமிக்கிறது என்பதே வரலாற்றுக் கோட்பாடு அல்லது பரிணாமக் கோட்பாடு எனப்படுவதாகும். இந்த வளர்ச்சி சீராக ஏற்பட்டதன்று. அரசு ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்டதும் அன்று. அரசு தோன்றுவதற்கு உறவுமுறை, மதம், தற்பாதுகாப்பு, உடைமை, வன்மை ஆகியன அடிப்படைக் காரணிகளாக இருந்துள்ளன.
அவற்றுள் உறவுமுறை குருதித் தொடர்பால் ஏற்பட்டது. இதுவே ஒற்றுமைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. உறவு முறைக்கு அடிப்படையாக இருப்பது குடும்பம். குடும்ப அமைப்பு முறை என்பது ஒரு கட்டுப்பாட்டு வாழ்க்கை முறையாகும். கட்டுப்பாட்டு வாழ்க்கை முறையின் வெளிப்பாடே ஒழுக்கம். ஒழுக்கமும் கட்டுப்பாடும் அரசு தோன்றுவதற்குப் பெரிதும் உதவின. சிறிய குடும்பம், பல குடும்பங்களாகிப் பின்னர்க் குலம், இனம் என்று பல்கிப் பெருகின. தந்தை வழிக் கோட்பாடு கூறுவது போலவே மூத்த தலைமுறையில் உள்ள வயது முதிர்ந்த ஆடவனே இந்த இனம் முழுவதற்கும் தலைவனாக இருந்திருக்கிறான். அக்கூட்டத்தினரை அடக்கி ஆளும் ஆட்சி அதிகாரம் மட்டுமன்றி, இராணுவம் நீதி செலுத்துதல், சமய ஒழுங்கு போன்ற அதிகாரங்களையும் அத்தலைவன் பெற்றிருக்கிறான். வரலாற்று முறையில் பார்க்கும் பொழுது பழங்காலப் பேரரசர்கள் மேற்கூறிய அதிகாரங்கள் எல்லாவற்றையும் தாங்கள் ஒருவரே நிருவகித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்காலச் சமூகங்களில் சமயம் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. ஒரு கடவுளை வணங்குகிற யாவரும் ஒன்றாக, ஒரே சமூகமாக வாழ்ந்தார்கள். மூதாதையர் வழிபாடும் அன்றைய சமுதாயத்தில் தலைமையான இடம் பெற்றிருந்தது. மூதாதையர் வழிபாடு ஓர் இனத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்தியது. மேலும் உறவு முறையின் நிலைக்களனாகவும் அமைந்திருந்தது. இறந்தவர்களை வழிபடும் தன்மை பழங்குடியினரிடம் மிகுந்து காணப்படுகிறது. இயற்கை, மனிதனை மீறிய ஆற்றலாகும் என்று உணர்ந்த மனிதன், இயற்கையைப் பத்தியுடன் வழிபட்டான். இயற்கையின் சீற்றங்களைப் புரிந்துகொள்ள முடியாதது போலவே இறப்பும், மனிதனால் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாய் இருந்தது. மழலையில் தொடங்கிய பருவப் பயணம் கிழவனில் முடிந்து, தளர்ந்து, மெலிந்து, மாய்ந்து போனது பெரிய வியப்பாக இல்லாது போயினும் திடீர்ச் சாவுகள் அன்றைய மனிதனைப் பெரிதும் அச்சுறுத்தின. எனவே திடும் என ஒருவன் இறந்துவிட்டால், இறந்தவனுக்குப் பலிபீடம் சுட்டி, உயிரினங்களைப் பலி கொடுத்து வணங்கினான். சிறிது சிறிதாக மூட நம்பிக்கைகள் வளரத் தொடங்கின. பேய், பிசாசுகள் என்று கருதும் அளவுக்கு மீறிய பேதைமைகள் மலிந்தன. மந்திரவாதிகளில் ஆதிக்கம் தலைதூக்கிற்று. மந்திரவாதிகள் யாவரும் மண்டை ஓட்டை வைத்துக்கொண்டு மயானத்தில் அலைபவர்கள் அல்லர். மந்திரங்கள் சுற்றவர்கள், சமய குருமார்களாகவும் இருந்தார்கள். இந்தச் சமய குருமார்களுக்கு மக்கள் கட்டுப்பட்டு வாழ்ந்திருந்தார்கள் என்பதில் வியப்பில்லை. இவ்வாறான சமய குருமார்களே அரசர்களாக ஆகும் பொழுது எல்லா அதிகாரத்துடனும் திகழ்ந்திருத்தனர்.
சமயம் சமுதாய ஒற்றுமையை நிலைநிறுத்திய தோடல்லாமல் அரசற்ற நிலையில், பயமற்ற, பயனற்ற, பண்பாடற்ற, நிலையற்ற நிலையை நீக்கிப் பயம் கலந்த பக்தியோடு, பண்பட்ட வாழ்க்கைக்குப் படிக்கல்லாய் அமைந்தது என்று கூறலாம். மத உணர்வுகள் எவ்வாறாயினும், அதன் அடிப்படையில் அமைந்த அரசுகள் இன்றும் சில நாடுகளில் உள்ளன.
உறவினரோடு ஒன்றுபட்டு வாழ்ந்ததற்கும், சமய அடிப்படையில் மனமொன்றி வாழ்ந்ததற்கும், மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியதே மறுக்கமுடியாத உள்நோக்கமாகும்.
தனது பாதுகாப்பிற்கு அடுத்ததாக வருவது உடைமை, தன்னைப் பாதுகாப்பதுடன் தன் வாழ்விற்கு மிகத் தேவையானவற்றைப் பாதுகாப்பதிலும், மனிதன் முனைந்தான். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பளிக்கும் எந்த அமைப்பு முறையையும் அவன் ஏற்க ஆயத்தமாக இருந்தான். இந்த அமைப்பு முறை எல்லா இடங்களிலும் ஒரே தன்மையாக அமைந்தது என்று சொல்வதற்கில்லை. இது அந்தந்தச் சூழ்நிலைக்குத் தக்கவாறு, மக்கள் வாழும் முறை, பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. இந்த அமைப்பு முறை, அரசு வடிவம் பெற்றதாக இருந்தது. அரசமைப்பற்ற ஒரு சமூகம் படை எடுப்புகளைத் தாங்கும் வலிமையற்றது. “வாழ்க்கையின் இன்றியமையாத தேவைக்காகவே அரசு தோன்றியது; அது தொடர்ந்து பாடுபடுவது நல்வாழ்விற்காகவே” என்று அரிசுடாட்டில் கூறுகிறார்.
அரசு தோன்றிய தொடக்கக் காலங்களில், அரசியல் விழிப்புணர்ச்சி வெளிப்படையாகத் தெரியவில்லை. மக்கள் தொகைப் பெருக்கமும் உடைமைகளின் வளர்ச்சியும், சண்டை சச்சரவுகள் வலுப்பெறக் காரணமாயின. சட்ட ஒழுங்கையும் அமைதியையும் காப்பது, அரசின் தலைசிறந்த கடமைகளாயின. வெளிநாட்டுப் படையெடுப்பின் விளைவாக, அரசியல் விழிப்புணர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. இதன் காரணமாக அரசியல் தலைமை இன்றிமையாது வேண்டும் என்பது உணரப்பட்டது. மக்கள் தங்களைப் பாதுகாக்கும் தலைவனுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார்கள். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைத் தங்கள் வாழும் பகுதியாகக்கொண்டு பிறர் படையெடுப்பிலிருந்து அதைக் காத்தனர். அதுவே அரசின் எல்லைப் பரப்பாகும். பின்னர் இந்த எல்லைப் பகுதிக்குள் வாழும் மாந்தர் யாவரும், சமயம், இனம், மொழி இவற்றிற்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டவர் என்னும் உணர்வை அடைந்தனர். இதுவே தேசியமாக மலர்ந்தது. ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் வாழும் உணர்வு தோன்றியபொழுது, குருதித் தொடர்பின் காரணமாக அரசியல் தலைமைத் தன்மை குறைந்து போயிற்று. வெளிநாட்டுப் படையெடுப்பைத் தடுப்பதற்கும் உள்நாட்டுக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கும் வன்மை தேவையாயிற்று.
மேற்கூறப்பட்ட சாரணிகள் யாவும் அரசு தோன்றுவதற்கு உதவியாயிருந்தன. ஒவ்வொரு காலக் கட்டத்திலும், ஒவ்வொரு காரணியின் தலைமைத் தன்மை மேலோங்கியிருக்கலாம். எனவே, உறவின் முறை வழியாலோ சமயவழியாலோ அல்லது வன்மை வழியாலோதான் அரசு தோன்றியது எனக் கூறமுடியாது.
அரசு தோன்றியதை வரலாற்று முறைப்படி கூறவேண்டுமானால், மேற்சொன்னவாறே கூறமுடியும். எவ்வாறு ஆயினும், குடும்பம் என்ற ஒரு நிலையான அமைப்பு, அரசின் ஒரு சிறிய எடுத்துக்காட்டு என்பதனைத் துணிந்து கூறலாம். சமூகத்திலுள்ள பழக்க வழக்கங்களும் ஒழுக்கங்களும் அரசு தோன்றும் பொழுது எழுத்து வடிவமாக்கப்பட்டுச் சட்டங்களாயின. மக்களின் தேவைகளுக்கேற்ப அரசின் பணிகளும் பெருகின.
அரசுத்தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் வரலாற்றுக் கோட்பாடு, மற்றக் கோட்பாடுகளைவிட நம்பத் தக்கதாக இருக்கிறதென அரசியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.ஆர்.ச.
துணை நூல்கள்
Appadorai, A., “The Substance of Politics”, Oxford University Press, 1972.
Sabine, George, A., “History of Political Theory”, Ed. 3, Oxford, 1971.
Dunning, W.A, “A History of Political Theories”, Vol. II, 1905.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 729)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6x3z5yfn/
தமிழ்“அரசின் தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6x3z5yfn/APA
Oliyon Research. (2026). அரசின் தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6x3z5yfn/MLA
"அரசின் தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6x3z5yfn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment