அரசுடைமையாக்கம்
aracuṭaimaiyākkam
அரசுடைமையாக்கம் என்பது தனியார் உடைமையின்கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் தொழில்கள், தொழிற்கழகங்கள் (Companies) ஆகியவற்றை அரசு, அதன் உடைமையின் கீழ்க் கொண்டு வந்து இயக்குவதைக் குறிக்கும்.
அரசுடைமையாக்கம் என்பது தனியார் உடைமையின்கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் தொழில்கள், தொழிற்கழகங்கள் (Companies) ஆகியவற்றை அரசு, அதன் உடைமையின் கீழ்க் கொண்டு வந்து இயக்குவதைக் குறிக்கும். மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில்கூட எண்ணற்ற அரசுகள் தபால் தந்தி முறையை அரசுடைமையாக்கியுள்ளன. இருப்புப் பாதைகள் (Railways) போன்ற போக்குவரத்துச் சாதனங்களை வேறுபல அரசுகளும் அதன் உடைமையின் கீழ்க் கொண்டு வந்து இயக்குகின்றன.
நாட்டின் இயற்கை வளங்கள், உற்பத்திக் கருவிகள், நிலம் ஆகியவற்றை அரசுடைமையாக்க வேண்டுமென்பது சமதரும (Socialist) பொதுவுடைமைக் (Communist) கோட்பாடுகளின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையை 1917–ஆம் ஆண்டு உருசியாவில் நிறுவப்பட்ட பொதுவுடைமை அரசாங்கமும், அதன்பின் தோன்றிய மற்ற எல்லாப்பொதுவுடைமை அரசுகளும் முழுமையாகச் செயற்படுத்தியுள்ளன. இங்கிலாந்தில் 1945–ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தொழிற் கட்சி (Labour Party) அரசு நிலக்கரி, மின் உற்பத்தி, இரும்பு, எஃகு உற்பத்தி, போக்குவரத்துச் சாதனங்கள் போன்ற பல முக்கியமான தொழில்களை அரசுடைமையாக்கியது. அதே போன்று பிரான்சும் 1945–ஆம் ஆண்டிற்குப் பிறகு பல தொழில்களை அரசுடைமையாக்கியது.
அரசுடைமையாக்கம் (Nationalization) என்ற கொள்கை 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதான் மிகுதியாகப் பரவி வலுப்பெற்றது. மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கையில் அரசு தலையிடக்கூடாது என்ற ‘தலையிடாக் கொள்கை’ (Laissez faire), ‘போட்டிப் பொருளாதாரம்’ (Competitive economy), தனியார் சொத்துரிமையை மதிக்கக்கூடிய தனியுரிமைக் கோட்பாடு (Individualism) ஆகிய கருத்துகள் 19–ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்றுத் திகழ்ந்தன. அதன் காரணமாக அரசுடைமையாக்கம் என்ற கொள்கைக்கு 19–ஆம் நூற்றாண்டில் ஆதரவு ஏற்படவில்லை. ஆனால் 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சமதரும, பொதுவுடைமைக் கோட்பாடுகள் பரவத் தொடங்கியபொழுது மக்களின் மேம்பாட்டிற்காக அவர்களுடைய சமூக, பொருளாதார வாழ்க்கையில் அரசு தீவிரமாகத் தலையிட வேண்டுமென்ற கருத்து வேகமாகப் பரவி வளர்ந்தது. இக்கருத்து வளர்ந்த பொழுது அரசுடைமையாக்கம் என்ற கொள்கைக்கும் ஆதரவு பெருகியது. இதன் விளைவாக இன்று பொதுவுடைமை நாடுகள் மட்டுமன்றி, ஏராளமான மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் வங்கிகள், பெரும் தொழிற்சாலைகள், காப்புறுதிக் கழகங்கள் (Insurance Companies), படைத் தொடர்பான தொழில்கள் ஆகியவற்றை அரசுடைமையாக்கியுள்ளன.
அரசுடைமையாக்கக் கொள்கைக்கு ஆதரவாகச் சமதரும, பொதுவுடைமை வாதிகள் பல காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். முதலாவதாக முதலாளித்துவ முறை (Capitalism)யில் காணக்கூடிய தனியார் சொத்துரிமை, உற்பத்திக் கருவிகளின் மீது தனியாருக்குள்ள முழு உடைமை ஆகியவை சமூகத்தில் உள்ள சிறுபான்மையினரை – முதலாளிகளை வலியவர்களாகவும், பெரும்பான்மையினரை – பாட்டாளி வருக்கத்தை வறியவர்களாகவும் மாற்றுகின்றன. நாட்டின் செல்வம் ஒரு சிலரிடம் சென்று குவிந்து கொண்டிருக்கும் இந்த நிலையைத் தவிர்க்கத் தனியார் உடைமையிலுள்ள உற்பத்திக் கருவிகள், தொழில்கள் ஆகியவற்றை அரசுடைமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை.
இரண்டாவதாக, நாட்டிலுள்ள இயற்கை வளங்களைச் சமூக நலனைக் கருதி நன்முறையில் பயன்படுத்த அரசுடைமையாக்கம் இன்றியமையாததொன்றாகும். முதலாளித்துவ முறையில் முதலாளிகள் பொருளை உற்பத்தி செய்வது இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பதால் நாட்டின் இயற்கைவளங்கள் அதிக இலாபம் கிடைக்கக்கூடிய பொருள்களை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு விரயப்படுத்தப்படுகின்றன. மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பயன்படும் பொருள்களின் உற்பத்தி புறக்கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக எளிய மக்களின் நலன் பாதிக்கப்படுகிறது. இந்நிலையைத் தவிர்த்து இலாப நோக்கின்றிச் சமூகத் தேவை நோக்கோடு பொருள் உற்பத்தி செய்ய அரசுடைமையாக்கம் வழி வகுக்கிறது.
மூன்றாவதாக, முதலாளித்துவ முறையில் தொழிலாளி சுரண்டப்படுகிறான். குறைந்த ஊதியம், நீண்ட நேர வேலை, வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதாரமற்ற வாழ்க்கை, பிணி ஆகிய தீமைகளை முதலாளித்துவ முறையில் தவிர்க்க முடியாது. அந்த அல்லல் நிலையிலிருந்து தொழிலாளியைக் காப்பாற்ற அவன் உற்பத்தி செய்த பொருளின் மதிப்பிற்கேற்ப ஊதியம் பெற, ஒரு குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்தை அவனுக்கு உறுதிப்படுத்தத் தனியார் உடைமையிலிருக்கும் தொழில்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்.
நான்காவதாக, திட்டமிட்ட பொருளாதாரம் {Planned Economy) எனும் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடுகள் அரசுடைமையாக்கத்தைத் தவிர்க்க முடியாது. பொருளாதாரத் திட்டத்தில் திட்டத் தொடர்பான எல்லா இறுதித் தீர்மானங்களையும் ஒரு மையம்தான் செய்யவேண்டும். அத்தீர்மானங்களுக்கேற்பப் பொருளாதார முறை செயற்பட்டுத் திட்ட இலக்குகளை (Targets) அடைய முயலுகிறது. இதற்கு நாட்டின் உற்பத்தி வளங்கள், உற்பத்திக் கருவிகள் ஆகியவைகள் அரசின் உடைமையிலோ அல்லது கட்டுப்பாட்டிலோ இருக்கவேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். மாறாக, இவை தனியார் உடைமையில் இருப்பின் அவ்வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தனி நபர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் ஒன்றுக்கொன்று முரணாக மாறித் திட்டத்தின் குறிக்கோளையே தோல்வியுறச் செய்துவிடக்கூடும்.
மேலும், நாட்டுப் பாதுகாப்பின் பொருட்டும் அரசுடைமையாக்கம் வலியுறுத்தப்படுகிறது. போர்க் கருவிகளின் உற்பத்தியைத் தனியார் துறையிடம் ஒப்படைப்பது நாட்டின் பாதுகாப்பிற்குத் தீங்காக அமைய வாய்ப்புண்டு. ஏனெனில் படை, பாதுகாப்புத் தொடர்பான இரகசியங்கள் தனியார் துறையினால் போதிய அளவு பாதுகாக்க முடியாமற் போகலாம். இதைத்தவிர படைக்கலக் கருவிகளைத் தயாரிக்கும தொழிற்சாலைகள் அமைக்கப் பெரும் முதலீடு தேவைப்படுகிறது. அந்த அளவு முதலீடு செய்வதற்குத் தனியார் துறைக்குப் பண வலிமை இல்லை. எனவே, அப்படிப்பட்ட தொழிற்சாலைகளை அரசே மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மேற்கூறிய காரணங்களைத் தவிர, இன்னொரு குறிக்கோளை அடையும் பொருட்டும் பல அரசுகள் அரசுடைமையாக்கத்தை மேற்கொண்டுள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார, அரசியல் துறைகளின் மீது வெளிநாட்டிற்கு இருக்கக் கூடிய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவும், சில நாடுகள் அந்நாடுகளிலுள்ள வெளிநாட்டு மூலதனம், தொழில்கள், தொழிற் கழகங்கள் ஆகியவற்றை அரசுடைமையாக்கியுள்ளன. சான்றாக, 1951–ஆம் ஆண்டு ஈரான் இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த எண்ணெய்த் தொழிற் கழகத்தையும், 1956–ஆம் ஆண்டு எகிப்து சூயெசுக் கால்வாயையும், 1960–ஆம் ஆண்டு கியூபா (Cuba) நாடு வெளிநாட்டுத் தொழில்களையும் அரசுடைமையாக்கியமை எடுத்துக்காட்டாகும்.
தொழில்கள், தொழிற் கழகங்கள் ஆகியவை இருமுறைகளில் அரசுடைமையாக்கப்படுகின்றன. முதலாவதாக, அரசுடைமையாக்கப்படும் தொழிற் கழகங்களின் சொத்து முழுவதும் அரசின் உடைமைக்கு மாற்றப்பட்டு, அத்தொழிற் கழகங்கள் முழுக்க முழுக்க அரசினது கட்டுப்பாட்டின்கீழ் இயக்கப்படுகின்றன. இரண்டாவதாக, ஒரு தொழிற் கழகத்தின் பங்கு மூலதனத்தை மட்டும் அரசின் உடைமைக்கு மாற்றிவிட்டுப் பழையபடி அத்தொழிற் கழகம் செயற்பட அனுமதிக்கப்படலாம்.
தனியார் துறையிலிருக்கக்கூடிய ஒரு தொழிற் கழகத்தை அரசுடைமையாக்கும்பொழுது அதன் உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. நட்ட ஈடு வழங்காமல் தனியார் சொத்தை அரசு மேற்கொள்ளக்கூடாது என அமெரிக்க அரசியலமைப்பு, தனியார் சொத்துக்கு உறுதியளிக்கிறது. ஆனால், பொதுவுடைமை நாடுகள் தனியார் சொத்தை அரசுடைமையாக்கிய பொழுது எவ்வித நட்ட ஈடும் வழங்கவில்லை. சில ஆசிய, தென் அமெரிக்க நாடுகள் அரசுடைமையாக்கத்திற்கு மிகக்குறைவான நட்ட ஈடுகளையே வழங்கின.
பன்னாட்டு அரசியலில் அரசுடைமையாக்கம் பல சிக்கலைக் கொண்டுள்ளது. ஒரு நாடு வெளிநாட்டுத் தொழில்கள் அல்லது தொழிற் கழகங்களை அரசுடைமையாக்கும்பொழுது அவற்றிற்கு நியாயமான நட்ட ஈடு வழங்க வேண்டுமென மேற்கத்திய நாடுகள் வற்புறுத்துகின்றன. எனவேதான், சோவியத் உரூசியாவும், வளர்ந்து வரும் சில நாடுகளும் நட்ட ஈடின்றி வெளிநாட்டுத் தொழிற் கழகங்களையும், மூலதனத்தையும் அரசுடைமையாக்கியபொழுது மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. மெக்சிகோ நாடு 1920–இல் அமெரிக்கத் தொழிற் கழகங்களின் கட்டுப்பாட்டிலிருந்த எண்ணெய்த் தொழிற்சாலைகளை அரசுடைமையாக்கியபொழுது அமெரிக்கா அதை வலுவாகக் கண்டித்தது. ஈரான், 1950–ஆம் ஆண்டு ஆங்கிலோ ஈரானிய எண்ணெய்க் கழக (Anglo Iranian Oil Company)த்தை அரசுடைமையாக்கியதை இங்கிலாந்தும், 1958–ஆம் ஆண்டு இந்தோனேசியா வெளிநாட்டுத் தொழில்களை அரசுடைமையாக்கியதை நெதர்லாந்தும் எதிர்த்தன. எகிப்து 1956-ஆம் ஆண்டு சூயெசுக் கால்வாயை அரசுடைமையாக்கியதை முறியடிக்கும் பொருட்டு இங்கிலாந்தும் பிரான்சும் எகிப்தின் மீது படையெடுத்தன.
நியாயமான நட்ட ஈடு வழங்காமல் ஒரு நாடு அந்நாட்டிலுள்ள வெளிநாட்டு மூலதனம், தொழிற் கழகங்கள் ஆகியவற்றை அரசுடைமையாக்குதல் பன்னாட்டுச் சட்ட (International Law)த்திற்கு முரணான செயலாகும் என்பது மேற்கத்திய நாடுகளின் வாதமாகும். ஆனால், ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் இந்த வாதத்தை ஏற்க மறுக்கின்றன. இறைமையுடைய ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் எல்லைக்குள் இருக்கும் வெளிநாட்டுத் தொழில்களையும் தொழிற் கழகங்களையும், நட்ட ஈடு கொடுத்தோ கொடுக்காமலோ அரசுடைமையாக்க உரிமையுண்டு என்பது அவர்களின் வாதமாகும். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் இந்த வாதத்தை ஐ.நா. (U.N.O.)வின் பொது அவை (General Assembly) 1952-ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டது. பன்னாட்டு நீதிமன்ற (International Govt. of Justice)மும் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.எஸ்.மு.
துணை நூல்கள்
Albert H. Hanson., (Ed) “Nationalism – A Book of Readings”, Allen & Unwin, 1963.
William A. Robson., “Nationalized Industry and Public Ownership”, University of Toronto Press, 1960.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 736)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6wg7y2yf/
தமிழ்“அரசுடைமையாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6wg7y2yf/APA
Oliyon Research. (2026). அரசுடைமையாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6wg7y2yf/MLA
"அரசுடைமையாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6wg7y2yf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment