சாதனம் பேணல்
cātaṉam pēṇal
ஒரு சாதனத்தை இயங்கும் தன்மையில் வைத்திருப்பதே சாதனம் பேணல் ஆகும்.
ஒரு சாதனத்தை இயங்கும் தன்மையில் வைத்திருப்பதே சாதனம் பேணல் ஆகும். 100%க்குக் குறைவான நம்பகத் தன்மை உள்ள எந்தச் சாதனத்திற்கும், பேணல் இன்றியாமையாதது. மேலும், சிக்கலான அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த அவற்றின் பகுதிகளை இணைக்கும் பல்வேறு நிலைகளிலும் சில சீரான சரி செய்யும் அமைப்புகள் தேவைப்படுகின்றன. ஓர் அமைப்பின் பகுதிகளையும், சாதனங்களையும் வடிவமைக்கும் போது, அவற்றை விரைவாகவும், எளிதாகவும் சீர் செய்து,பழுது பார்க்கும்படி அமைக்க வேண்டும். அமைப்பின் சோதனை முறைகளை வசதியாக அமைத்தலும், சீர் செய்தலும், அளவீடு செய்ய வேண்டிய பகுதிகளை அணுகு நிலையில் வைத்திருத்தலும் வடிவமைக்கும் போது கருத்திற்கொள்ள வேண்டியவையாகும்.
சாதனம் பயன்படும் இடத்தில் அதன் பகுதிகளைப் பழுது பார்க்கும் போது தேவையான பொருள்கள் எளிதில் மாற்றத் தக்கனவாக இருக்க வேண்டும். வீட்டில் பயன்படுத்தும் வானொலிப் பெட்டியில் உள்ள மின்தடையம் (resistor), மின்தேக்கி (capacitor), மின்தூண்டம் (inductor), அடியில் செல்லும் மின்கடத்தி (conductor) போன்றவை உதிரி உறுப்புகளுக்கான சிக்கலை எடுத்துக் காட்டுகின்றன. அமைப்பின் உறுப்புகள் எளிய அணுகு நிலைக்கேற்றவாறு சீராக அமைக்கப்பட்டிருத்தலும், அவற்றைச் சார்ந்த பிற பகுதிகளுக்கு எந்தச் சேதமுமின்றி அகற்றப்படக் கூடியனவாக இருத்தலும், விரைவாக எளிதில் மாற்றக் கூடியனவாக இருத்தலும் ஒரு நல்ல வடிவமைப்பின் இயல்புகளாகும்.
நீண்ட நேரம் செயல்பட வேண்டிய சாதனங்களில் பழுது நேர்ந்தால், பழுதடைந்த பகுதிகளுக்குப் பதிலாக நல்ல நிலையில் உள்ள வேறு பகுதிகளை அமைக்க ஏதுவாக, பழுதடைந்த பகுதிகள் எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் அகற்றக் கூடியனவாக இருத்தல் வேண்டும். இவற்றைக் கருத்திற் கொண்டு, ஓர் அமைப்பில் பழுதடைந்த பகுதியைப் பகுத்தறியவும், அகற்றவும், மாற்றியமைக்கவும், பழுதுபார்க்கவும் வசதியாக அமைப்பின் பல பகுதிகளும் தனித்தனியே பிரிக்கக் கூடியனவாக அமைக்கப்பட்டிருக்கும்.
அலகினைப் பழுது பார்க்க இயலாத வகையில் வடிவமைப்பும், சேர்த்து வைக்கும் கோட்பாடுகளும் இருக்கும். இந்த அணுகுமுறையை முழுமையாக ஆய்ந்தால் இயங்கும் அலகுகளின் பயனீட்டுக் கோட்பாடு இடம் பெறும். சிக்கலான அமைப்புச் சாதனங்கள் எளிய செந்தரப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன. இயங்கும் அலகுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும் தேவைப்படும் நேரம், வழக்கமான சிக்கலான அளவுகளை விடக் குறைவாகவே இருக்கும்.
ஒவ்வொரு கட்டமைப்பும் ஓர் இயங்கும் அலகைக் குறிப்பதால், புதிய சிறந்த மாதிரிகள் கிடைக்கும் போது இருக்கின்ற அலகுகளை மாற்ற முடியும். மேலும் எளிய இயங்கும் அலகுகள் எந்திர உற்பத்திக்கு ஏற்றவை. இந்த இயங்கும் அலகுகளைப் பொதுவாகச் செந்தரப்படுத்த இயலுமானால், மேலும் சிக்கலான பகுதி அமைப்புகளும் பல்வேறு கட்டமைப்புகளின் சேர்க்கையில் பயனுறும். இந்த அதிக அளவு உற்பத்தியை வழங்குவோரிடம் அளிப்பதால், மின்னணுவியல் சாதனங்களின் அடிப்படை விரிவடைகிறது. பழுது பார்க்காமல் மாற்றும் கொள்கை, நேரத்தையும், மனித ஆற்றலையும் குறைக்கிறது. இயக்கம் பழுதான இடத்தைக் கண்டு பிடித்தால் போதும். இயங்கும் அலகிற்குள் பழுதான பகுதியைக் கண்டு பிடிக்க வேண்டியதில்லை. ஆகவே, பேணல் எளிதாகிறது.
இயக்க வழியில் சாதனங்களைப் பிரித்தலால், நல்ல வெப்ப வடிவமைப்புச் செய்ய முடிகிறது. சிறப்பான சூழல்கள் தேவைப்பட்டால், அக்குறிப்பிட்ட அலகுகளுக்காகக் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களை நிறுவுவதும் இயலும், இயங்கும் அலகுகள் செந்தரப்படுத்தப்படுவதால், உற்பத்தி உயரும். ஆகவே, உயர்ந்த தரம் வாய்ந்த ஒத்த அலகுகள் கிட்டும்; அலகுகள், மொத்த சாதனங்களின் நம்பகத் தன்மை ஆகியவை மேம்படும். —எஸ். சுந்தரசீனிவாசன் நூலோதி. R.L. Peurifoy, Construction Planning, Equipment and Methods, Third Edition, McGraw-Hill International Book Compay, London, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 49)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vxvzu3z/
தமிழ்“சாதனம் பேணல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6vxvzu3z/APA
Oliyon Research. (2026). சாதனம் பேணல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vxvzu3z/MLA
"சாதனம் பேணல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6vxvzu3z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment