ஒரு சூழ்நிலை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள ஆற்றலை இயலும் அளவுக்கு நன்முறையில் பயன் படுத்துவதே நிறைவான பாதுகாப்பாகும். சூழ்நிலைக் காரணிகளைப் பொறுத்தே, சூழ்நிலையின் பாதுகாப்பு அமைகிறது. பாதுகாப்புத் திட்டத்தில் நிலத்தின் இயற்கை வளங்கள், நீர், காட்டு விலங்குகள், தாவரங்கள், நில அமைப்பியல் (natural topography) ஆகியவை அடங்கும். இச்சூழ்நிலைக் காரணிகளை ஒருமைப்படுத்துவதில், சூழ்நிலையின் தத்துவங்களைப் பயன்படுத்துவதும் அடங்கும். நில அரிப்பு, நெருப்பு, வெள்ளம், நீர் தூய்மைக் கேடு அடைதல் (water pollution) ஆகியவற்றால், சூழ்நிலை பாழாவதை முறையாகக் கட்டுப்படுத்த வேண்டும். பாதுகாத்தல் மனப் பான்மையை (conservation attitude) மக்களிடம் உருவாக்க வேண்டும். சூழ்நிலைக் காரணிகளான நிலம், நீர், ஒளி, நெருப்பு, வளி மண்டலம் முதலியவற்றில் ஏற்படும் வேறுபாடுகள் சூழ்நிலையின் சமச் சீர்மையைப் பாதிக்கின்றன. காரணிகளில் ஏற்படும் வேறுபாடுகளைத் தகுந்த வழிகளில் களைவதால், சூழ்நிலையின் பாதுகாப்பை நன்முறையில் ஏற்படுத்தலாம். சூழ்நிலையிலுள்ள, வறண்ட நிலையைத் தாங்க வல்ல தாவரங்களைப் பயிர் செய்தல் போன்ற வழி முறைகளைக் கையாளுவதன் மூலம், பாலைவனங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தக்க ஊட்டச் சத்துகளை அளித்து, நைட்ரஜன் தேவையைக் குறைந்த அளவிற்குக் கொணர்தல், ஒரு பாசனத்திற்கும், மற்றொரு பாசனத்திற்கும் இடைப்பட்ட கால அளவை அதிகரித்துத் தாவரங்களை ஆழமாக வேர் விடச் செய்தல், விதைகளை நீர் அல்லது கால்சியம் குளோரைடு கரைசல் அல்லது பொட்டாசியம் பாஸ்ஃபேட் கரைசல் அல்லது குளோரோ கோலின் குளோரைடு (CCC) என்ற வளர்ச்சிப் பொருள் கரைசலில் 10–12 மணி நேரம் ஊற வைத்துப் பிறகு, நிழலில் உலர்த்தி விதைத்தல் போன்ற முறைகளால் தாவரங்களின் வறட்சி தாங்கும் திறன் அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் அறியப் பட்டுள்ளது. இம்முறைகளால், வறண்ட சூழ்நிலைகளில் தாவர வளர்ச்சியைச் சீரமைத்துத் தாவர இனங்களைப் பாதுகாக்கலாம். வறட்சியைத் தாங்கும் பல தகவமைப்புகளைப் பெற்றுள்ள தாவரங்களை வளர்த்து, தாவரச் சூழ் மண்டலங்களைக் காக்கலாம். நீராவிப் போக்கைக் குறைக்க தாவரங்கள், வறண்ட சூழ்நிலைக்கேற்றவாறு, தங்களின் இலைத் துளைகளைச் சுருக்கியும், அதிக சூரிய ஒளியைத் தவிர்த்தும் வளர்கின்றன. மெழுகு கரைசல், அப்சிசிக் அமிலம் போன்ற வளர்ச்சி கட்டுப்படுத்தும் பொருள்களை இலைகளின் மீது தெளிப்பதால், நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்தி, வறண்ட சூழ்நிலையிலும், தாவர இனங்கள் வளர வழி செய்யலாம். வெப்ப நிலைக் குறைவும், மிகையும் தாவரங்களுக்கு அழிவை ஏற்படுத்துவதால், அவற்றின் அழிவிலிருந்து தகுந்த முறைகளைக் கையாண்டு, தாவர சமூகத்தைப் பாதுகாக்க முடியும், உறை பனியின் அழிவிலிருந்து தாவரங்களைப் பாதுகாக்க, இரவில் புகை மண்டலங்களை உண்டாக்குதல், இரவில் நீர்ப் பாசனம் செய்தல், காலை வேளைகளில் வெப்பம் வெளிப்படா வண்ணம் செடிகளின் மீது நீரைத் தெளித்தல், குளிர் காற்றுப் பரவாத (cold air drainage) இடத்தைத் தேர்ந்தெடுத்தல் போன்ற வழிமுறைகளைக் கையாளலாம். அமில குணமற்ற, காற்றோட்டமான, ஈரமான அல்லது சற்றுச் சூடான மண் தாவர வளர்ச்சிக்கேற்றவாறு அமைகிறது. மட்குதல், உப்பாகுதல் போன்றவை நிகழக் காரணமான நுண்ணுயிர்கள் பெருக, மண்ணின் தன்மை தகுந்த முறையில் அமைய வேண்டும். சூழ்நிலைக் காரணிகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும், சத்துப் பொருள் உண்டாகும். வேதிச் சுழற்சித் தடைப்பட்டுக் காற்றோட்டக் குறைவால், மண்ணிலுள்ள தாவர நுண்ணுயிர்களின் வளர்ச்சி குறையும். மண்ணிலுள்ள உலோக அயனிகளை மழை நீர் அடித்துச் செல்லாதவாறு பாதுகாத்தால், மண் வளம் பெருகும். ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரில் அமிலக் காரத் தன்மையை உண்டாக்க வல்ல உப்புகள் உள்ளன. இந்தக் கழிவு நீர், ஆறு அல்லது ஓடைகளில் கலந்து, நிலங்களில் அமில–காரத் தன்மையை உண்டாக்கும். அமில–கார நிலங்களில், தாவரங்கள் சத்துப் பொருள்களை உறிஞ்ச இயலுவதில்லை. அமிலத் தன்மை உள்ள நிலத்தில், தகுந்த அளவு சுண்ணாம்புச் சத்தைச் சேர்த்து, காரத் தன்மை உள்ள நிலத்தில் ஜிப்சம் இட்டு, நீரை மிகுதியாகப் பாய்ச்சி, உப்புகளை அடித்துச் செல்லச் செய்து, நிலத்தின் வளத்தைப் பெருக்கி, மண் வளத்தைப் பாதுகாக்கலாம். தேவையான சத்தை அளிக்கக் கூடிய, அதே சமயத்தில், மண் தன்மையை மாற்றக் கூடிய செயற்கை உரங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன் படுத்தி, நிலத்தின் வளத்தைப் பாதுகாக்கலாம். உப்புத் தன்மையைத் தாங்க வல்ல தாவரங்களை வளர்ப்பதன் மூலம், மண்ணின் தன்மை மாறி, பயிர் முளைக்க ஏற்றதாக மாற்றப் படுகிறது. உலகின் பல இடங்களில் உள்ள வளமிக்க பண்ணை நிலங்கள் தகுந்த மண் வளப் பாதுகாப்பு முறைகள் கையாளப் படாமையால், பயனற்ற தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. மண் அரிப்பினால், நில வளம் வீணாவது மனித இனத்திற்கு மிகவும் கேடு செய்யும். மண் வளப் பாதுகாப்பை மேம்படுத்தப் பல வகை முறைகள் கையாளப்படுகின்றன. தாவரங்களை நெருக்கிப் பயிர் செய்து, மண்ணில் இலை மட்குகளையும் (humus), ஊட்டச் சத்துகளையும் அதிகரிக்கலாம். நீர், காற்று மூலமாக ஏற்படும் மண் அரிப்பைத் தாவரங்கள் தடுக்கின்றன. நிலத்தின் மேல் மண்ணின் வளத்தைப் பாதுகாக்க, இயற்கை, செயற்கை உரங்களை நிலத்திற்கு இட வேண்டும். மேலும், சணப்பை போன்ற தாவரங்களை பயிர் செய்தும், தகுந்த பயிர்ச் சுழற்சி முறைகளைக் கையாண்டும், தகுந்த ஊடு பயிர்களை வளர்த்தும், நிலத்தை வளமாகப் பாதுகாக்கலாம். மலைச் சரிவுகளில் ஏற்படும் மண் அரிப்பைக் காடுகளை வளர்த்தும், புல்வெளிகளை ஏற்படுத்தியும் தடுக்கலாம். காற்றினால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்க, படர்ந்து வளரும் தாவரங்களையும், காற்றுத் தடைகளையும் அமைக்கலாம். காடுகளில், பல்வேறு உயரமுள்ள மரங்களை வளர்த்து, காற்றின் வேகத்தைக் குறைத்து, மண் அரிப்பைத் தடுக்கலாம். குளிர்ந்த வெப்ப நிலை உடைய பகுதிகளிலும், திறந்த சமவெளிகளிலும், கடற்கரை ஓரங்களிலும் காற்றுத் தடையால், பொருளாதாரச் சிறப்பு மிக்க பயிர்கள் நன்கு வளர்கின்றன. கரிமப் பொருள்களை இயற்கை அல்லது செயற்கை முறையில் சேர்த்து, மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம். உதிர்ந்த இலை அடுக்குகள் மழை நீர் மண்ணை அரித்துக் கொண்டு ஓடாமல் தடுக்கின்றன. தேவையற்ற பொருள்களும், வளிமங்களும், வளி மண்டலத்திலும், நீரிலும் கலப்பதால், தூய்மைக் கேடு ஏற்படுகிறது. சூழ்நிலையைக் கெடுக்கும் இப்பொருள்கள், தொழில் வளம் பெருகி வரும் அனைத்து நாடுகளிலும் இடையூறாக உள்ளன. தொழிற்சாலைக் கழிவுப் பொருள்கள், ஊர்திகளிலிருந்து வெளிப்படும் நச்சு வளிமங்கள் முதலானவை சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பைக் குறைத்துக் கேடுகளை விளைவிக்கின்றன. சாயத் தொழிற்சாலைகள், கரும்பு ஆலைகள், வேதிப் பொருள் தயாரிக்கும் ஆலைகள், நூற்பாலைகள், காகித ஆலைகள் முதலியன கந்தக டைஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைடு, வளிமம் முதலியவற்றை வெளியேற்றுகின்றன. அவை தாவர வளர்ச்சிக்குக் கேடு விளைவித்துத் தாவர இனத்தையே அந்தப் பகுதிகளிலிருந்து அழித்து விடும் தன்மை வாய்ந்தவை. தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பொருள்களால், சுற்றுப் புறச் சூழல் தூய்மைக் கேடு அடைதலைத் தவிர்க்க, அரசு பல வித முயற்சிகள் எடுத்து வருகிறது. ஊர்திகளிலிருந்து வெளி வரும் புகை, ஓசோன், நச்சுப் பொருள்கள், பிற வளிமங்கள் ஆகியன தாவரங்களின் வளர்ச்சியைச் சீர் குலைக்கின்றன. சிமெண்ட் தொழிற்சாலைகளிலிருந்து உண்டாகும் துகள்களையும், வளிமங்களையும், புது வகைப் பொறியியல் உத்திகள் மூலம் (electro static precipitator) வளி மண்டலம் மாசு படாமலும், தாவரங்களுக்குக் கேடு விளைவிக்காமலும் செய்யலாம். காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் கழிவு நீர், ஆற்று நீரை மாசு படுத்துகின்றது. அந்தக் கழிவு நீரிலுள்ள நச்சுப் பொருள்களை வடிகட்டியும், பல வேதி மருந்துகளைச் சேர்த்தும், நச்சுத் தன்மையை நீக்கி வேளாண்மைக்குப் பயன்படுத்தத் தீவிர முயற்சிகளும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.—கு, பத்மநாதன் நூலோதி. இரா. சுந்தரம், தாவரச் சுய சூழ் நிலையியல், தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1972; H.G. Jones, Plants and. Micro Climate, Cambridge University Press, Sydney 1983. இயற்கையின் மூன்று பெரும் உறுப்புகளான காற்று, நீர், நிலம் ஆகியவற்றை மாசுறுத்துவதைப் பொறுத்துச் சூழ்நிலைத் தூய்மைக் கேட்டை முறையே காற்றுத் தூய்மைக் கேடு (air pollution), நீர்த் தூய்மைக் கேடு (water pollution), நிலம் அல்லது மண் தூய்மைக் கேடு (land pollution) எனப் பாகுபடுத்தலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> விலங்கினங்களின் உயிருக்கோ, உடல் நலத்திற்கோ ஊறு விளைவிக்கும் பொருள்கள் காற்றில் கலத்தலால், காற்றின் தூய்மை கேடுறுகிறது. இம்மாசு வளிம வடிவிலோ, துகள் வடிவிலோ (particulate matter) இருக்கக் கூடும். இவற்றுள் முதன்மையானவை கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், ஃப்ரியான், பூச்சி கொல்லிகள், புகை மூட்டப் பொருள்கள் (fumigants), ஃபுளூரைடு, பாஸ்ஃபேட், ஆர்செனிக், கேட்மியம், பாதரசம், காரீயம், வெள்ளி, வனேடியம் ஆகியனவாகும். இவை கண், தொண்டை ஆகிய உறுப்புகளில் தோன்றும் எரிச்சல், பக்க வாதம், புற்று நோய் போன்ற கேடுகளை விளைவிக்கக் கூடியன. தொழிலகங்களிலிருந்து உமிழப் படும் மாசுப் பொருள்களின் தன்மை, தொழிலுக்குத் தொழில் மாறுபடுகிறது. உரத் தொழிற்சாலைக் கழிவுகளில் நைட்ரஜன் ஆக்சைடுகள், யூரியா, கரி, கந்தகம், சுண்ணாம்புக் கல், பாஸ்ஃபேட் போன்றவற்றின் துகள்கள் மிகுந்துள்ளன. சிமெண்ட் ஆலையின் புகை போக்கியில் வெளியாகும் தூசில் அலுமினியம், சோடி- யம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் சிலிக்கானின் ஆக்சைடுகள் உள்ளன. அனல் மின் நிலையங்களில் தூசுச் சாம்பல் (fly ash) எனும் நுண் துகள் வகைச் சாம்பல் சிறு குன்றுகளைப் போல் குவிந்து கிடக்கின்றது. மேலும் கந்தகம் உள்ளடங்கிய கரியை எரிமமாகப் பயன்படுத்துவதால், புகை, அமிலத் தன்மை பெறுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> உரத் தொழிற்சாலைகள். உரத் தொழிற்சாலைகளில் நைட்ரஜன், பாஸ்ஃபேட் என இரு வகைப்பட்ட உரங்கள் தயாராகின்றன. இவற்றிலிருந்து நைட்ரஜன் ஆக்சைடுகள், யூரியா, கரி, கந்தகம், சுண்ணாம்புக் கல், சல்ஃபைடுகள், பாஸ்ஃபேட்டுகள் ஆகியன நுண் துகள் வடிவில் வெளியேற்றப்படுகின்றன. சிமெண்ட் ஆலைகள். அலுமினியம், பொட்டாசியம், சிலிக்கான், கால்சியம், சோடியம் போன்றவற்றின் ஆக்சைடுகளின் கலவையே சிமெண்ட் தூசு ஆகும். இவை பயிர்களின் இலை, தண்டுகளின் மீது படிந்து, வளர்ச்சியைப் பாதிக்கின்றன. அமிலத் தொழிற்சாலைகள். உரத் தொழிலுக்கு அடிப்படையான சல்ஃப்யூரிக் அமிலத் தயாரிப்பில் கந்தக டைஆக்சைடு ஒரு கிளை விளை பொருளாகும். நைட்ரிக் அமிலத் தயாரிப்பில் வெளி வரும் நைட்ரிக் ஆக்சைடு சல்ஃபர் டைஆக்சைடைப் போன்றே அமிலத் தன்மை மிக்கதாதலால், அமில மழையைத் தோற்றுவிக்கக் கூடும். வளி மண்டலத்தில் இவ்வாக்சைடு ஒளி வேதி வினையை ஊக்குவித்து, நச்சுப் பொருள்களை உருவாக்கி, புவியின் காப்பு வளையமான ஓசோன் படலத்தை மெலிதாக்குகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> குளோரின் தயாரிப்புக் கலங்கள். இங்கு குளோரின் வளிமம், எரிகாரம், பாதரசம் ஆகியன காற்றிலும், கழிவு நீரிலும் கலக்கும் வாய்ப்பு உள்ளது. விலங்கினங்களின் அன்றாட வாழ்க்கையின் விளைவாகக் கழிவுப் பொருள்களும் சூழ்வெளியை மாசுபடுத்துகின்றன. மாசுப் பொருள்களின் தாக்கம் அட்டவணை 1இல் தொகுக்கப்பட்டுள்ளது. காற்றின் தூய்மைக் கேட்டைத் தடுக்கும் வழி முறைகள். தானியங்கி ஊர்திகளிலிருந்து வெளியேற்றப் படும் கார்பன் மோனாக்சைடு (CO), ஹைட்ரோகார்பன்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்குச் சில முறைகள் கையாளப்படுகின்றன. காற்று–எரி பொருள் கலப்பியைத் தகுந்த வடிவமைப்பில் உருவாக்கி, காற்றில் கலக்கும் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரோகார்பன்கள் ஆகியவற்றின் விழுக்காட்டினைக் குறைக்கலாம்; வெளியேற்றுக் குழாய் அமைப்பில் எரி கருவி- களைப் பொருத்தி, வெளியேறும் வளிமங்களை எரிக்கலாம். இம்முறையில் செலவு கூடுதலாக இருப்பதுடன், வருவாயும் கருதத் தக்க அளவுக்கு இல்லை; இவ்வெரி கருவிகளுடன், வினையூக்கியையும் இணைத்துப் பயன்படுத்தலாம்; வெளியேறும் வளிமக் கலவையைக் குளிர்விக்கலாம்; வெளியேறும் வளிமக் கலவையில், நைட்ரிக் ஆக்சைடின் விழுக்காட்டைக் குறைப்பதற்குப் பெரும எரி நிலையைக் குறைக்கலாம் அல்லது எரி பொருள் பெரும எரி நிலையை அடையும் போது, ஆக்சிஜனைக் குறைந்து வழங்கலாம். தொழிலகங்களிலிருந்து உமிழப்படும் காற்றுக் கசடுகளின் அளவைக் குறைக்க வேண்டும். தொழிலகங்களிலிருந்து வெளியாகும் கழிவு வளிமங்கள் திண்ம, நீர்மத் துகள்களைச் சுமந்துள்ளன. இத்துகள்கள் மிகச் சிறியனவாக உள்ளமையாலும், நிலை மின்னேற்றம் கொண்டுள்ளமையாலும், தொங்கல் நிலையிலுள்ளன. இவற்றைப் பிரித்தெடுப்பதற்குக் கீழ்க் காணும் பொறிகள் பயன்படுகின்றன; புவி ஈர்ப்புப் படிவிப்பு அறைகள், சடத்துவப் பிரிப்பிகள் (inertial separators), சுழல்வான்கள் (cyclones), வடிகட்டிக் கூடங்கள், மின் வீழ் படிவிப்புக் கூடங்கள், நீர்ம வழிக் கழுவும் அமைப்புகள் முதலியவையாகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> உரத் தொழிற்சாலை, ரேயான் தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து வெளியாகும் SO₂ஐ நீக்குவதற்கு இவ்வளிமத்தை ஓர் உலையில் செலுத்திச் சுண்ணாம்புத் தூளைத் தூவ வேண்டும். இம்முறை மூலம் 30% SO₂ஐ மட்டுமே நீக்க முடியும் என்னும் நிலையில் நாடிகோலைட், சோடியம் பைகார்பனேட் ஆகியவற்றைப் பயன்படுத்தினால், 70% வரை நீக்கலாம். சோடியம் அலுமினேட்டைப் பயன்படுத்தினால், 85% வரை SO₂ ஐ உறிஞ்சலாம். கழிவு வளிமங்களை MnO₂ உடன் வினைப்படுத்தி, MnSO₄ ஆக மாற்றி. இவ்வாறு பெறப்படும் MnSO₄ஐ நீர்ம அம்மோனியாவுடன் வினையுறுத்தி, காற்றூட்டம் செய்து, மீண்டும் MnO₂ஐப் பெறலாம். இவ்வழி முறையைப் பயன்படுத்தி 90% SO₂ நீக்கப்படுகிறது, MnO₂ + SO₂ → MnSO₄ MnSO₄ + 2NH₃ + H₂O + ½O₂ → MnO₂ + (NH₄)₂ SO₄ உருகிய கார்பனேட் உப்புகளில் (430°C இல் 32% Si₂CO₃,33% Na₂CO₃ மற்றும் 35% K₂CO₃ ஆகியவற்றின் கலவை) SO₂ வளிமத்தை உறிஞ்சலாம். M₂CO₃ + SO₂ → M₂SO₃ + CO₂ (M = Si, Na,K) M₂SO₃, 600°Cஇல் M₂S மற்றும் M₂SO₄ ஆகக் சிதைவுறுத்தப் படுகிறது. M₂S நீராவி CO₂ கலவையுடன் 430°C க்குச் சூடு படுத்தப் படுகிறது. இதன் வாயிலாக M₂CO₃ மீண்டும் பெறப் படுகிறது. நீரேற்றப்பட்ட லிக்னைட் சாம்பல் படுகைகளின் மீது SO₂ வளிமத்தைச் செலுத்தியும் பிரிக்கலாம். இச்சாம்பலிலுள்ள காரப் பொருள் (சுண்ணாம்பு) SO₂ உடன் வினைப்பட்டுச் சல்ஃபைட் உப்புகளை விளைவிக்கிறது. இவ்வுத்தி மூலம் 80% SO₂ஐ நீக்கலாம். ஈர வழிமுறைகள் லர்கி முறை. தொழிலகக் கழிவு வளிமங்களைக் காற்று முன் வெப்பமூட்டிகள் (air preheaters), மிகை வெப்பம் பயனுறு கொதி கலன்கள், வெப்பப் பரிமாற்று அமைப்புகள் ஆகியவற்றில் செலுத்தி, வெப்ப நிலை 100°Cக்குக் கீழ் கொண்டு வரப் படுகிறது. திண்மத் துகள்கள் வென்ச்சரி வளி துலக்கிகள் (Venturi scrubber) மூலம் நீக்கப்படும். இறுதியாக, SO₂ முழுவதும் H₂SO₄ ஆக மாற்றப்படும். அம்மோனியா கழுவு கலன். புகை போக்கி வளிமங்கள் 140°Cக்குக் குளிர்விக்கப்பட்டு, நீராவியுடன் கலவையாக அம்மோனியாவில் செலுத்தப்படுகின்றன. இங்கு விளைவாகும் அம்மோனியம் சல்ஃபைட், அம்மோனியம் சல்ஃபேட்டாக ஆக்சிஜனேற்றப்பட்டு, விற்கப்படுகிறது. இவ்வழிமுறையால் 90–95% வரை SO₂ நீக்கப்படுகிறது. நீர் தூய்மைக் கேடு. தொழிலகக் கழிவுகள் கலப்பதால், நீர் இயற்பியல், வேதியியல், உயிரியல் தன்மைகளிலிருந்து வேறுபட்டுப் பயனற்ற நிலை அடைதலே நீரின் தூய்மைக் கேடு ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வேதிப் பொருள் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் அமிலங்கள், காரங்கள், சோப்பு போன்ற மாசு நீக்கிகள், ஃபீனால், சயனைடு, துத்தநாகம், காரீயம், பாதரசம், பூச்சி கொல்லி, பாசி கொல்லிகள் ஆகியவற்றாலும், தோல் பதனிடும் அமைப்புகள், சர்க்கரை ஆலைகள், துகில், உரம், இரும்பு, எஃகு, சாராயம், மருந்து ஆகியவற்றின் தயாரிப்பில் விளைவாகும் கழிவுகளாலும் நீர் கேடுறுகிறது. தூய்மையாக்கும் வழி முறைகள். தொங்கல் நிலையிலுள்ள கழிவுகள் படிவிப்பு, வடி கட்டல் முறைகளில் அகற்றப்படுகின்றன. கூழ்ம நிலைப் பொருள்கள் திரிதல் மூலம் அகற்றப்படுகின்றன. கரைந்த நிலையிலுள்ளவை வீழ் படிவாக்கல் மற்றும் அயனிப் பரிமாற்ற முறையில் அகற்றப்படுகின்றன. நீரைக் குடிப்பதற்கு ஏற்றதாகச் செய்வதற்கு மூன்று நிலைகளில் தூய்மையாக்கல் நிகழ்த்தப்படுகிறது. அவை தெளிய வைத்து இறுத்தல், வடி கட்டல், நுண்ணுயிரகற்றம் என்பன. தேக்கத் தொட்டிகளுக்குக் கொண்டு வரப் படும் நீருடன் படிகாரம் சேர்க்கப்பட்டு, கூழ் நிலை மாசுகள் திரிக்கப்படுகின்றன. சற்றே தெளிந்த நீர், வடி பாத்திகள் வழியே வடி கட்டப்படுகிறது. சரளைக் கற்களாலான வடி பாத்திகளில் மெதுவாக இயங்குபவை. விரைவாக இயங்குபவை என இரு வகைகள் உள்ளன. குளோரின், சலவைத் தூள், புற ஊதாக் கதிர் வீச்சு, ஓசோன் ஆகியவற்றைக் கொண்டு, நீரில் நுண்ணுயிரகற்றம் செய்யலாம். தொழிலகக் கழிவு நீரை இத்தகைய விரிவான வழி முறைகளில் தூய்மைப் படுத்துவது செலவு மிக்க பணியாகும். எனவே, பின் வரும் எளிய முறைகள் பின்பற்றப் படுகின்றன. (அ) கடற்கழி உருவாக்குதல் (lagooning). கழிவு களில் அமிலம், காரம், கரிமப் பொருள்கள் மிகுந்திருப்பின், இம்முறை கையாளப்படுகிறது. தொட்டி களில் தேக்கப்பட்டுள்ள நீரில் ஆக்சிஜனைச் செலுத்தி, கழிவின் உயிர் வேதி ஆக்சிஜன் தேவையை நிரப்பலாம். (ஆ) ஆக்சிஜனேற்ற குட்டைகள் (oxidation ponds). இம்முறையில் ஆக்சிஜனேற்ற சூழ்நிலையில் மிகை வெப்ப நிலையில் கழிவுகள் செரிக்கப்பட்டு, நிலைப்படுத்தப்படுகின்றன. (இ) கிளர்வுற்ற கசடு முறை (activated sludge process). கரிம அடக்கம் மிகுந்த பால், இறைச்சி ஆகிய கழிவு வகைகளுக்கு மட்டுமே இம்முறை ஏற்றது. (ஈ) சொட்டும் வடி கட்டி (trickling filter). இவ்வமைப்பில் நொறுக்கப்பட்ட கற்கள், சல்லி, சரளைக் கல் ஆகியன அடுக்கப்பட்டுக் கழிவு நீர் இதன் மீது தெளிக்கப்படுகிறது. கழிவு நீர் வடிகட்டும் திண்மப் பரப்பின் மீது மெல்லிய படலமாகப் படிந்து, பாக்டீரியா உருவாக அடிப்படையாகிறது. காற்று உட்புக வசதியும், வாய்ப்பும் உள்ளமையால், வளி வாழ் நுண்ணுயிர்கள் படலத்தின் மீது செழித்து வளர்ந்து, ஆற்றல் நிலையிறக்கம் அடையச் செய்கின்றன. குறிப்பிட்ட சில முதன்மைத் தொழிற்சாலைகளின் கழிவுகளும், அவை நீக்கப்படும் முறைகளும் வருமாறு: உணவுப் பொருள் தயாரிப்பு. பழம், காய்கறி ஆகியவற்றைப் பதப்படுத்துதல், குளிர்வித்தல் மற்றும் உலர்த்தல் கூடங்கள். பால் வகைப் பொருள் தயாரிப்புக் கூடங்கள் ஆகியவற்றின் கழிவுகள் பயிர் நிலங்களில் தெளிப்பதற்கு ஏற்றவை. இவற்றில் கொழுப்பும், மாவுப் பொருளும் மிகுந்துள்ளமையால், இவை கடற்கழித் தேக்க முறைக்கு ஏற்றவை. துகள் நிலைப் பொருள்கள் சலித்தல் மூலமும், எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருள்கள் மிதப்புக் சுலங்களில் பால்மமாகவும் வெளியேற்றப்படுகின்றன. காகித ஆலைகள். காகித ஆலைக் கழிவுகள் கரிம, கனிமப் பொருள்களைக் கொண்டவை. அவற்றின் pH மதிப்பு நிலையில்லாமல் இருப்பதாலும், கழிவுகள் வண்ணக் கலவையாக இருப்பதாலும், திருத்த முறை சற்றே கடினமானது. கூழ்ம நிலைப் பொருள்களைத் திரளாக்குதல், pH மதிப்பு மாறாதிருக்கும் போது மட்டுமே இயலும். நுண்ணுயிர்களை அவற்றின் உணவுத் தேவையுடன் கழிவு நீரில் புகுத்தினால் கழிவு நிலையிறக்கம் அடைந்து, இறுதியில் முழுமையாகச் செரிக்கப்படுகிறது. இரும்பு உருக்கு ஆலைகள். ஊது உலைகளில் கழுவப் பயன்படுத்தப்பட்ட நீர், படிவிப்பான்கள் மற்றும் கெட்டியாக்கல் கருவிகளின் வாயிலாகச் செலுத்தப்பட்டுத் திண்மச் செறிவேற்றம் அடைகின்றது. வடி கட்டப்பட்ட நீர், சுண்ணாம்பால் நடு நிலைப் படுத்தப்படுகிறது. இதனால், கரைந்துள்ள இரும்பு உப்புகள் இரும்பு (II) ஹைட்ராக்சைடாக வீழ் படிவாக்கப்பட்டு, உலர்த்தப்பட்டு, அகற்றப்படும். வேதிப்பொருள் ஆலைகள். அமில, கார மற்றும் வெடியுப்புத் தயாரிப்பு ஆலைக் கழிவுகள் நடு நிலைப் படுத்தப் படுகின்றன. சாயக் கழிவில் இடம் பெறும் பொருள்களுள் சில ஆக்சிஜனேற்றத்திற்கும், சில ஒடுக்கத்திற்கும் (reduction) உட்பட வல்லனவாதலால், ஒரு கட்டச் சீரமைப்புக்கு ஏற்றவையல்ல. கெட்டியாக்கல் முதல் அயனிப் பரிமாற்று முறை வரை பல முறைகள் வழக்கிலுள்ளன. கதிரியக்கக் கழிவுகள். கதிரியக்கத் தன்மை வாய்ந்த கழிவுகள் பொதுவாக, யுரேனியம் பிரித்தெடுக்கும் கூடம், புளூட்டோனியம் தயாரிப்புக் கூடம், அணு ஆற்றல் ஆய்வு மையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. யுரேனியம் பிரிப்பு வகைக் கழிவுகள் அமிலத் தன்மையும் இரும்புச் செறிவும் மிகுந்தவை. அயனிப் பரிமாற்ற முறையின் மூலம் இவை அகற்றப்படுகின்றன. செறிவாக்கப் பட்ட கழிவுகள் கடலடியில் புதைக்கப்படுகின்றன. நிலத்தின் தூய்மைக் கேடு. வேதிப் பொருள்கள் மண்ணுடன் கலப்பதால், நிலத்தின் செழிப்புக் குன்றும். இந்நிலை பின் வரும் காரணங்களால் உருவாக்கப் படுகிறது. விலங்கினங்களின் கழிவு, வீட்டுக் கழிவு (குப்பை). கனிமம், நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து எழும் திண்மக் கழிவு, புழு பூச்சிக் கொல்லி ஆகியவற்றின் மிகுதி; தேவைக்கு மேல் உரத்தைத் தூவுவதாலும், பாதிப்புத் தோன்றக் கூடும். எடுத்துக் காட்டாக, மிகையளவு அம்மோனியம் சல்ஃபேட் சேர்க்கப்படும் போது, அம்மோனியம் அயனிகள் ஊடு பயிர்களால் உறிஞ்சப்பட்டு, சல்ஃபேட் அயனிகள் மண்ணில் தங்கி விடுகின்றன. இதனால், மண்ணில் அமிலத் தன்மை கூடுகிறது. அதே போன்று, KNO₃ மிகையளவில் சேர்க்கப்பட்டால், K+ மண்ணில் செறிவுற்றுக் காரத் தன்மை கூடுகிறது. இதன் விளைவாக மண் பயனற்றதாகி விடக் கூடும். கதிரியக்கப் பொருள் சிதறிப் பரவுதல் (radioactive fallout) எனும் தோற்றப்பாடு மூலம், கதிரியக்கத் தன்மை கொண்ட பொருள்கள் நிலத்தில் விழுந்து மண்ணைப் பல ஆண்டுகளுக்குக் கேடுறுத்தும். நிலம் கேடுறுதலைத் தடுப்பதற்கு, நில நிரப்புதல் (land fill) எனும் முறை எளியதாகும். தாழ்வான பகுதிகளில், கழிவுகளைக் கொட்டி, அடுக்குகளாக நிரம்பிய குவியல், கெட்டிப்பட்ட பின்பு, மண்ணால் மூடலாம். திண்மப் பொருள்களை மிகைக் காற்றோட்டத்தில் நன்கு எரிக்கலாம். தொழிலக மற்றும் வீட்டுக் கழிவுகளை நிலைப்படுத்தித் தோன்றும் கசடுகளை, நிலத்தில் நிரப்பலாம். திண்மக் கழிவுகளில் நெகிழிகள், தாள், உலோகப் பொருள்கள், பீங்கான், எரிக்கப் படாத கரிமப் பொருள்கள் ஆகியவை அடங்கும். இவை, நகராட்சி மையங்களில் சேகரிக்கப்பட்டுப் பிரிக்கப்படுகின்றன. நெகிழிகள் அவற்றின் அடர்த்தியின் அடிப்படையில், மிதப்பு முறையால் பிரித்தெடுக்கப் படுகின்றன. இரும்புப் பொருள்கள், மின் காந்த முறையில் பிரித்தெடுக்கப் படுகின்றன. கண்ணாடி, தாள் ஆகியன காற்றுப் பிரிப்பான் வழியாக அகற்றப் படுகின்றன. இரும்பு வகையல்லாத உலோகங்கள் சுழல் வகை நொறுக்குவான்கள் (gyratory crushers) மூலம் பொடியாக்கப்படுகின்றன. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. John W. Clark, et. al., Water Supply and Pollution Control, Harper International, New York, 1977. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->