உணவு வேளாண்மைக் கழகம்
uṇavu vēḷāṇmaik kaḻakam
உலக உணவுச் சிக்கல்களை ஆராய்ந்த ஐக்கிய நாடுகளவை, 1943–ஆம் ஆண்டு நடந்த வர்சீனியா (Virginia) மாநாட்டில் உணவு வேளாண்மைக் கழகத்தை உருவாக்க முன்மொழிந்தது.
உலக உணவுச் சிக்கல்களை ஆராய்ந்த ஐக்கிய நாடுகளவை, 1943–ஆம் ஆண்டு நடந்த வர்சீனியா (Virginia) மாநாட்டில் உணவு வேளாண்மைக் கழகத்தை உருவாக்க முன்மொழிந்தது. அதற்கான ஆவணங்கள் வரையப்பட்டு 30 உலக நாடுகளின் ஒப்புதலுடன் 1945–ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 16–ஆம் நாளில் இக்கழகம் செயற்படத் தொடங்கியது. இக்கழகம் இப்போது 152 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்டுள்ளது.
குறிக்கோள்கள்
உறுப்பு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், உடல் வலிமைக்கும் நல்வாழ்வுக்கும் உரிய ஊட்டச்சத்துள்ள (Nutritional) உணவுப் பொருள்களைப் பெருக்க வழி வகுத்தல், வேளாண்மையைச் சார்ந்து வாழும் ஊரக மக்களின் வாழ்க்கை நிலையை (Living Conditions) உயர்த்துதல், அதன் மூலம் அவர்களிடையே காணப்படும் பசியையும் (Hunger) வறுமையையும் (Poverty) ஒழித்தல், நிலவளத்தையும் காட்டு வளத்தையும் மீன்வளத்தையும் பெருக்குதல், உணவு உற்பத்தியையும் அதன் பங்கீட்டு முறையையும் முன்னேற்றமடையச் செய்து அவற்றை ஒழுங்கான வகையில் சீரமைத்தல் ஆகியவையாகும்.
அமைப்பு
உணவு வேளாண்மைக் கழகத்தின் தலைமைச் செயலகம் உரோம் (Rome) நகரில் நிறுவப்பட்டுள்ளது. வட்டார அலுவலகங்கள், ஆப்பிரிக்காவிற்குக் கானாவிலும் (Ghana), ஆசியப் பசிபிக்கு நாடுகளுக்குத் தாய்லாந்திலும் (Thailand), இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சிலியிலும் (Chile) செயற்படுகின்றன. உறுப்பு நாடுகள் யாவும் பங்குபெறும் பொது மாநாடு (General Conference) இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இம் மாநாடு கழகத்தின் வரவு செலவுத் திட்டம், பணித் திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து கோட்பாட்டு முடிவுகளைச் (Policy Decision) செய்கிறது. இம்மாநாடு தேர்வு செய்யும் 49 நாடுகளைக் கொண்ட குழு கழகத்தின் ஆட்சிக் குழுவாகப் (Governing Body) பணியாற்றுகிறது. பொது மாநாடு 366 மிலியன் தொகையை 1982–83–ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத் தொகையாக ஒப்புதல் அளித்தது. உறுப்பு நாடுகள் இத்தொகையைச் செலுத்துகின்றன. தலைமைச் செயலகத்தின் மேலாண்மைச் செலவுகள், தொழில்நுட்பக் கூட்டுறவுத் திட்டச் (Technical Co-operation Programmes) செலவுகள், சிறப்புச் செயல் திட்டச் (Special Action Programmes) செலவுகள் ஆகியன வரவு செலவுத் திட்டத்தில் அடங்குகின்றன.
பணிகள்
உணவு வேளாண்மைக் கழகம் தன் குறிக்கோள்களை நிறைவேற்றத் தேவையான அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுகிறது. இது சத்துணவு, விளைபொருள்கள், வேளாண்மையியல் ஆகியவற்றைச் சார்ந்த புள்ளிவிவரங்களைச் சேகரித்துத் தொகுத்து அவற்றை ஆராய்ந்து கிடைக்கப்பெறும் கருத்துகளை உறுப்பு நாடுகளுக்கு அளிக்கிறது. இது தனிப்பட்ட நாடுகளும் உலக நாடுகளும், தனித்தனியாகவும் கூட்டாகவும் திட்டமிட்டுச் செய்ய வேண்டிய வேளாண்மைத் திட்டங்களை அரசுகளுக்குப் பரிந்துரைகளாக வழங்குகிறது. இப்பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் இது அளிக்கிறது. அரசுகள் விரும்பினால், அவற்றோடு கூட்டாகச் சேர்ந்து பல நடைமுறைத் திட்டங்களைச் செயலாற்றும் பணிகளில் ஈடுபட்டு, உணவுப் பற்றாக்குறையை ஒழிக்கப் பாடுபடுகிறது. வேளாண்மைத் துறையில் ஆராய்ச்சிகள் பெருகவும் முதலீடுகளை ஊக்குவிக்கவும் தேவையான சூழ்நிலையை உருவாக்க இது வலியுறுத்துகிறது. வளரும் நாடுகளில் (Developing Countries) நில வளப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை (Water Management), கால்நடைகள், விளைபொருள்கள் ஆகியவற்றின் தரத்தை உயர்த்துதல், தொழில்நுட்ப இடப் பெயர்வு, வேளாண்மை ஆராய்ச்சி ஆகியவற்றை முன்னேற்றமடையச் செய்யும் திட்டங்களை அரசுகளின் ஒத்துழைப்புடன் இக்கழகம் செயற்படுத்துகிறது. இந்நாடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள், இரசாயன உரங்கள், உணவுப் பாதுகாப்பு இரசாயனங்கள் (Food Preservatives) ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் திட்டங்களிலும் அவற்றைப் பயன்படுத்தும் செயல் விளக்கத் திட்டங்களிலும் இக்கழகம் பங்கேற்கிறது. இது கால்நடைகளின் மருத்துவத் துறை முன்னேற்றத்திற்கும் மீன்வளப் பெருக்கத்திற்கும் வனத்துறைப் பாதுகாப்பில் தேவையான ஆலோசனைகளையும் நிதி உதவிகளையும் அளிக்கிறது. மேலும் நிலச் சீர்திருத்தம், வேளாண்மைப் பொறியியல் (Agricultural Engineering) வளர்ச்சி, போக்குவரத்து, தகவல் துறை முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகள், உணவுப் பொருள் வீணாவதைத் தடுத்தல் ஆகியவற்றிற்கேற்ற தொழில்நுட்ப அறிவைப் பயிற்சிகள் மூலம் இது வழங்குகிறது.
வாணிக மந்தம், அரசியல், பொருளாதாரச் சிக்கல், போர், உணவுப்பொருள் பற்றாக்குறை ஆகியவற்றால் உணவு நெருக்கடி (Food Crisis) ஏற்படும் காலங்களில் துயர் தவிர்ப்புதவிக்காக நாடுகள் உணவைச் சேமித்துக் காப்பாக வைத்திருக்கும் பண்ட சாலைகளை அமைத்து, உயர் விளைச்சல் காலங்களில் மிகை உற்பத்தியைச் சேமித்து வைக்கும் திட்டத்தைச் செயற்படுத்த உணவு வேளாண்மைக் கழகம் முனைகிறது. இதற்கென இக்கழகம் உலகளாவிய செய்தி எச்சரிக்கை முறையை (Global Warning System) அமைத்துள்ளது. இதனால் உணவு நெருக்கடி நிகழக்கூடிய நாடுகள் முன் அறிவிக்கப்பட்டு உதவி அவை ஏற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு செய்யப்படுகிறது. மிகை விளைச்சல் உள்ள நாடுகளையும், உணவைச் சேமித்துக் காப்பாக இருப்பு வைத்திருக்கும் நாடுகளையும் முன் குறித்து, அந்நாடுகளிலிருந்து பற்றாக்குறை நாடுகள் உதவி பெற்றுக் கொள்ள உதவுகிறது. நாட்டளவிலும் வட்டார அளவிலும் உணவு நெருக்கடியை முன்கூட்டியே அறியும் செய்தி எச்சரிக்கை முறை நிறுவப்பட உணவு வேளாண்மைக் கழகம் உதவுகிறது.
உணவு வேளாண்மைக் கழகம் உலக உணவுத் திட்டம் (World Food Programme) எனப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த திட்டத்தை 1963–ஆம் ஆண்டில் மூன்றாண்டுத் திட்டமாகத் தொடங்கியது. அதனால் விளைந்த பெரும்நன்மைகளினால் 1965–ஆம் ஆண்டுக்குப் பின்னர் இத்திட்டம் கால வரையறையின்றி நிலையான திட்டமாக மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் உணவு நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உழைப்புச் செறிந்த (Labour Intensive) வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஊதியமாகப் பணத்திற்குப் பதில் உணவுப் பொருள்களை உணவு வேளாண்மைக் கழகம் வழங்குகிறது. உலக உணவுத் திட்டத்தினால் வேலைவாய்ப்பற்றவர்கள் சாலைகள் அமைத்தல், நீர்ப்பாசன வசதிகளை உருவாக்கல், சமுதாய முன்னேற்றப் பணிகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இவை பெரும்பாலும் பொருளாதார வளர்ச்சிக்கான அகக் கட்டுமானப் (Infrastructure) பணியானமையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலக உணவுத் திட்டம் அண்மைக்காலத்தில் ஆலோசனைகளையும் அறிவுரைப் பணிகளையும் வழங்குவதுடன், உணவுப் பொருள்களை வாங்கிக் கப்பல் மூலம் பாதுகாப்பாகத் தேவையான நாடுகளுக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபடுகிறது. இவற்றிற்கான நிதி உதவிகளை, உதவி பெறும் நாடுகளும் ஐக்கிய நாடுகளவையின் பிற அமைப்புகளும் வழங்குகின்றன. உலக உணவுத் திட்டத்திற்கென 1980–ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட்ட மூலதன வளம் $ 2.45 மிலியனாகும். இதில் உணவுப் பொருள்களாக வழங்கப்பட்ட $ 2.45 மிலியனும், பணமாகவும் பணியாகவும் வழங்கப்பட்ட $ 870 மிலியனும் அடங்கும். உலக உணவு மாநாட்டின் பரிந்துரையின் அடிப்படையில் 1975–ஆம் ஆண்டு உணவு வேளாண்மைக் கழகம் பன்னாட்டு நெருக்கடிக் கால உணவுக் காப்பு இருப்பு (International Emergency Food Reserve) அமைப்பையும் நிருவகித்துவருகிறது.
உணவு வேளாண்மைக் கழகம் வட்டார அளவில் 12க்கும் மேற்பட்ட மன்றங்களையும் (Councils) ஆணையங்களைவும் (Commissions) நிறுவி, அவற்றின் மூலம் தன் பணிகளைச் செயற்படுத்துகிறது. மேலும் துயர் தவிர்க்கும் சிறப்பு இயக்க அலுவலகம் (office for Special Relief Operations-OSRO) ஒன்றை 1973–ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் தீவிர வறட்சி நிலையின் (Drought Striken) இன்னல்களைப் போக்கச் சாகிலியன் வட்டாரத்தில் (Sahelian Region) நிறுவியது. இது தொடக்கத்தில் வறட்சியால் ஏற்பட்ட இன்னல்களை மட்டும் தீர்க்க முனைந்தது. எனினும், இப்போது அதன் நடவடிக்கைகள் போர், உள்நாட்டு அமைதியின்மை, இயற்கையால் ஏற்படும் எதிர்பாராத துயர நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இவற்றிற்கான நிதி உதவியைத் துயர் தவிர்க்கும் சிறப்பு இயக்க அலுவலகத்தின் (OSRO) பொது அறநிதியும் (General Trust Fund) ஐக்கிய நாடுகளவையின் முன்னேற்றத் திட்டமும் உணவு வேளாண்மைக் கழகத்தின் தொழில்நுட்பக் கூட்டுறவுத் திட்டமும் (Technical Co-operation Programme-TCP) வழங்குகின்றன.
தொழில் நுட்பக் கூட்டுறவுத் திட்டம் 1976–இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தினால் உணவு வேளாண்மைக் கழகத்தின் உறுப்பு நாடுகள் வேளாண்மைத் துறையின் உடனடித் தேவைகளை நிறைவு செய்கின்றன. அதனால் பல சிக்கல்கள் அவ்வப்போது தீர்க்கப்பட்டுப் பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்படாதவாறு தடுக்கப்படுகின்றன. வேளாண்மையினரின் தொழில்நுட்ப அறிவைப் பெருக்கவும் வேளாண்மைத் தொழிலில் தோழில்நுட்ப முறையைப் புகுத்தவும் வேளாண்மை முதலீட்டைப் பெருக்கவும் தொழில்நுட்பக் கூட்டுறவுத் திட்டம் பல திட்டங்களைச் செயற்படுத்துகிறது. இத்திட்டங்கள் 1980–ஆம் ஆண்டு வரையிலும் 61.7 மிலியன் மதிப்புப் பெறும் 952 திட்டங்களைக் கொண்டிருந்தன. இத்திட்டங்களில் 38 விழுக்காடு ஆப்பிரிக்க நாடுகளிலும், 24 விழுக்காடு ஆசியா, தூரக்கிழக்கு நாடுகளிலும், 24 விழுக்காடு இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், 12 விழுக்காடு கிழக்கு ஆசிய நாடுகளிலும், 2 விழுக்காடு ஐரோப்பிய நாடுகளிலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
உலக வேளாண்மைக் கழகம் 1980–இல் வெளியிட்ட உலக வேளாண்மை நிலையைப் பற்றிய ஆய்வுக் கருத்துகள் வரவேற்கத்தக்கனவாயில்லை. உணவு வேளாண்மைக் கழகத்தின் 35 ஆண்டு முயற்சிக்குப் பின்னரும் உணவில் பற்றாக்குறை நீடித்திருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உலக நாடுகளில் 420 மிலியன் மக்கள் தேவையான உணவின்றி வாழ்கின்றனர். இதனுடன் பெருகிவரும் மக்கள் தொகை அடிப்படையில் எழும் தேவைகளையும் கணக்கிட்டால் ஆண்டுக்கு 3.8 விழுக்காடு வீதத்தில் உணவு உற்பத்தி பெருகினால் மட்டுமே 2000 ஆண்டளவில் பேரளவில் உணவுப் பற்றாக்குறை நெருக்கடி நிகழாமல் தடுக்க இயலும். இதற்கு உலக உணவு உற்பத்திக் காப்பீடு (Insured World Food Production) முயற்சி இன்றியமையாததாகும். இதற்கான திட்டங்களை உணவு வேளாண்மைக் கழகம் பன்முகப்படுத்தி நிறைவேற்றி வருகின்றதெனினும், நாடுகளின் ஒத்துழைப்பைச் சார்ந்தே வெற்றியைக் காண இயலும். உலக உணவுத் திட்டத்தின்கீழ் 1980–இல் தாய்லாந்து எல்லைப்பகுதிகளிலும் கம்பூச்சியா (Kampuchea) நாட்டிலும் 2.5 மிலியன் மக்கள் பசி, மக்கள் பசி, பட்டினி, வறுமை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஆப்கானிசுத்தான் (Afghanistan) நாட்டு அகதிகள் பேரளவில் உதவி பெற்றுக்கொண்டிருக்கின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான எத்தியோப்பியா, சூடான் (Sudan), சாடு (Chad) போன்ற நாடுகளைப் பஞ்சத்தின் கொடுமைகளினின்று விடுவிக்க உணவு வேளாண்மைக் கழகம் தீவிரமாய் ஈடுபட்டுக் குறுகிய கால, நீண்டகாலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 868)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6npu9qtq/
தமிழ்“உணவு வேளாண்மைக் கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6npu9qtq/APA
Oliyon Research. (2026). உணவு வேளாண்மைக் கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6npu9qtq/MLA
"உணவு வேளாண்மைக் கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/6npu9qtq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment