வடக்குப் பாகிசுத்தானில் உள்ள இலொரலைப் பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சிற்றூர்; தொல்லியல் சிறப்புப் பெற்றது. இராணாகுண்டையின் (Rana Ghundai) பழமை முதன் முதலாக நோட்லிங்கு (Noteling) என்பவரால் 1927–இல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அருல் இசுடென் (Aruel Stein) என்பவர் இப்பகுதியில் கள ஆய்வினை மேற்கொண்டார். இ.செ. உரோசு (E.J. Ross) என்பவர் 1930–இலும், வால்டர் பேர்சர்வீசு (Walter Fairservis) என்பவர் 1950–இலும் மிகச் சிறிய அளவில் அகழாய்வினை மேற்கொண்டனர். இங்கிருந்த தொன்மையான நாகரிகம் ஐந்து காலங்களாகப் பிரிக்கப்பட்டு, அ முதல் உ வரை (A to E) பெயரிடப்பட்டது. முற்காலத்தில் (Phase A) எருது, குதிரை, ஆடு, கழுதை ஆகிய விலங்குகளின் எலும்புகளும், எலும்புக் கருவிகளும், கற்களினால் செய்யப்பட்ட பட்டைக் கத்திகளும் (Stone Blade) கிடைத்தன. வீடுகள் இருந்ததற்கான எவ்வித அறிகுறிகளும் கிடைக்கவில்லை. இரண்டாம் காலகட்டத்தில் கற்கள் பதிக்கப்பட்டு அதன் மீது சுட்ட களிமண்ணும், சாம்பலும் பூசப்பட்ட வீட்டுத்தரை கண்டுபிடிக்கப்பட்டது. கிண்ணங்களும், குவளைகளும் (Jars) இக்காலகட்டத்தில் கிடைத்தன. இவற்றின் விளிம்பின் மீது எருது, மான் ஆகியவற்றின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. அதனால் இக்காலம் ‘எருதுக்குவளை’க் காலம் என்று குறிக்கப்பட்டது. இக்காலகட்டத்தின் இறுதியில் மண்ணினால் செய்யப்பட்ட சுடப்படாச் செங்கற்களினாலான சுவர்கள் தென்பட்டன. இவற்றைத் தவிரச் சக்கரத்தினால் வனையப்பட்டு நன்கு சுடப்பட்ட மட்பானைகளும் கிடைத்தன. எலும்பு முனைகள், ஊசிகள் (Needles) போன்றவையும் கிடைத்தன. இவை அனைத்தும் அங்கு இக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் நாடோடிகளாக வாழாது ஓர் இடத்தில் நிலையான வாழ்வை மேற்கொண்டமைக்குச் சான்று பகர்கின்றன. மட்பாண்டங்களின்மீது கருப்புக்கலந்த பழுப்பு நிற வண்ணம் (Brown black) பூசப்பட்டிருந்தது முதற்கால கட்டத்தையும் (Phase A) இரண்டாம் காலகட்டத்தையும் (Phase B) ஒப்பு நோக்குமிடத்துப் புதியவர்கள் இங்கு வந்து குடிபுகுந்தமை அறியப்படுகிறது. மூன்றாம் காலாட்டத்தில் மேற்கூறிய சிறப்புக் கூறுகள் தொடர்ந்தபோதிலும் புதியதாகச் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்கள் பூசப்பட்ட மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வண்ணங்கள் முந்தைய காலகட்டத்தைவிடத் தெளிவாகவும் நல்ல நிலையிலும் வரையப்பட்டிருந்தன. நான்காம் காலகட்டம், அரப்பா நாகரிகத்தின் சமகாலத்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், அரப்பா நாகரிகத்தின் தனிப்பட்ட கூறுகள் இங்குக் கிடைக்கவில்லை. கே.இரா.