ஒரு பொருள் விற்பனைக்கு வருமுன் பல உற்பத்தி நிலைகளைக் கடந்து வருகிறது. அதன் ஒவ்வொரு நிலையிலும் அதன் நிலைக்கேற்ப ஆகும் பலவிதச் செலவுகளைக் கணக்கில் கொண்டு, அப்பொருளுக்கான அடக்கவிலை வரையறுக்கப்படுகிறது. மேலாண்மையினருக்குப் பொருள்களின் ஒவ்வொரு நிலையும், அதன் அடக்க விலையை நன்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நிலையிலும் அதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும். இவை பற்றிய கணக்குகள், பதிவேடுகள், விவரங்கள், கட்டுப்பாடுகள் அனைத்தும் அடக்க முறைக் கணக்குகள் எனப்படும். ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்வதற்கோ ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கோ ஆகக்கூடிய செலவுகளின் கூட்டுத் தொகையை அதற்கான அடக்கச் செலவு என்பர். ஆகவே அடக்கச்செலவை வரையறுக்கும் முறைகளை அடக்க விலை முறைகள் (Costing) என்று கூறுவர். அடக்கக் கணக்கு முறைகளைக் கையாளும் வல்லுநர்களை அடக்கக் கணக்கர் (Cost Accountant) என்பர். அடக்கக் கணக்கர், தம் கடமைகளைச் செய்யும்போது சில ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்கைகளையும், வழிமுறைகளையும் கையாள்வர். அந்நிலையில் அடக்கக் கணக்கு முறை அறிவியல் தொடர்புடையதாகக் கருதப்படும். அடக்கக் கணக்கர் அடக்கவிலை விவரங்களைக் (Cost Data) கையாளும்போது பலவித எடுகோள்களையும் (Assumptions) முடிவுகளையும் மேற்கொள்வர். பொதுவாக இவை ஒரே தன்மையாக இருக்கமாட்டா. இதில் மாறுபாடுகளும் இருக்கும். ஆகவே அடக்கவிலைக் கணக்கு ஓர் இயலாகவும் கருதப்படுகிறது. அடக்கக் கணக்குப் பதிவுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை 1) அடக்கவிலை வரையறை (Cost Ascertainment), 2) அடக்கவிலைத் தெரிவிப்பு (Cost Presentation), 3) அடக்கவிலைக் கட்டுப்பாடு (Cost Control) எனப்படும். அடக்கவிலை வரையறை ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ வேலைக்கோ ஆகும் செலவு விவரங்களைச் சேகரித்தல்; பொருளின் ஒவ்வொரு உற்பத்தி நிலையிலும் அதன் உற்பத்தியளவை வரையறுத்தல்; அனைத்து உற்பத்திக்கும் தொடர்புள்ள பிற செலவுகளை வரையறுத்தல் ஆகிய மூன்றும் அடக்கவிலை வரையறையின் சிறப்புக் கூறுகளாகும். மேலும், பழைய பதிவுச் செலவுக் கணிப்பு (Historical Costing); மதிப்பீட்டுச் செலவுக் கணிப்பு (Estimated Costing); வேலைச் செலவுக் கணிப்பு (Job Costing); தொழில் முறைச் செலவுக் கணிப்பு (Process Costing); மதிப்பீட்டுக் கட்டுப்பாடு (Budgetary Control); இறுதி நிலைச் செலவுக் கணிப்பு (Marginal Costing); திட்டச் செலவுக் கணிப்பு (Standard Costing) போன்ற முறைகள் அடக்கவிலை வரையறையில் பின்பற்றப்படுகின்றன. பொருள் உற்பத்தியின் பின்னும், பொருள் உற்பத்தியின் போதும், அதன் அடக்கவிலைக் கணிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். அடக்கவிலை விவரங்கள் மேலாண்மையினரின் தேவைக்கேற்ப அளிக்கப்படும். மேலாண்மையினர் அவ்வப்போது முடிவுகளை எடுக்க இது உதவுகிறது. அடக்கவிலை ஏடு (Cost Sheet), மூலப் பொருள் நுகர்வுக் கணக்கேடு (Consumption of Materials Statement), உழைப்புப் பயன்பாட்டுக் கணக்கேடு (Labour Utilisation Statement), உற்பத்தி நிலை அறிக்கை (Production Report), விற்பனை அறிக்கை (Sales Report), சரக்கிருப்பு அறிக்கை (Inventory Report) முதலியன மேலாண்மையினர் முடிவுகளை மேற்கொள்ள உதவுகின்றன. அடக்கவிலைக் கட்டுப்பாடு, அடக்கவிலையைக் கட்டுப்படுத்தக் கையாளப்படுகிறது. மதிப்பீட்டுக் கட்டுப்பாடு திட்டச் செலவுக் கணிப்பு, பொறுப்பேற்புக் கணக்கு முறை (Responsibility Accounting) முதலியவை, அடக்கவிலைக் கட்டுப்பாட்டு முறைகளாகும். அடக்கவிலைக் கட்டுப்பாட்டு முறைகள், நிறுவனத்தின் அனைத்துத் துறை அலுவலராலும் தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டியவை. அடக்கவிலைக் கட்டுப்பாடு என்பது, அடக்க விலையைக் குறைப்பதற்கான முறைகள் மட்டுமன்று. ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான தேவைகள் அனைத்தும் அடக்கவிலைக் கட்டுப்பாட்டில் அடங்கும். இதன் சிறப்புக் குறிக்கோள் பொருள் உற்பத்தியில் திறமையின்மையையும் பொருள் வீணாக்கலையும் பெருமளவில் தடுப்பதுதான். அடக்கவிலைக் குறைப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி விலை அதன் மதிப்பு மாறாத நிலையைக் காட்டுகிறது. மேலும், அடக்கவிலைக் குறைப்பு, நிறுவனம் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டியதொரு முயற்சி, அடக்கவிலைக் கட்டுப்பாடு என்பது, தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கச் செயற்படுத்தும் முறையாகும். அடக்கவிலைத் தணிக்கை அடக்கவிலைக் கணக்குகளையும் அடக்கக் கணக்குப் பதிவேடுகளையும் வரையறுக்கப்பட்ட ஒழுங்குகளின்படி சரிபார்ப்பது அடக்கவிலைத் தணிக்கை (Cost Auditing) எனப்படும். நிறுவனத்தில் குறிப்பிட்ட அலுவலர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும். இவ்வமைப்புகள் “பொறுப்பு மையங்கள்” (Responsibility Centres) எனப்படும். அடக்கவிலை மையம் (Cost Centre), ஆதாய மையம் (Profit Centre), முதலீட்டு மையம் (Investment Centre), மதிப்பீட்டு மையம் (Budget Centre) போன்ற பல அமைப்புகள் இருக்கும். அடக்கவிலை மையம் இது ஒரு செலவு மையம். ஒரு துறையையோ விற்பனையாகும் இடத்தையோ, விற்பனையாளரையோ ஒரு குறிப்பிட்ட எந்திரத்தையோ குறிக்கும். தகுந்த அடக்கவிலை மையங்களை முடிவு செய்வது அடக்கவிலையை வரையறுப்பதற்கு மிகவும் இன்றியமையாதது. மையத்தின் மேலாளர், அம்மையத்தின் அடக்கக் கட்டுப்பாட்டு முறைகளுக்குப் பொறுப்பேற்கிறார். ஒரு நிறுவனத்தில் மிகுதியான அடக்கவிலை மையங்கள் இருந்தால் கணக்குகளை எல்லா விவரங்களுடனும் கணிக்க இயலும். ஆனால் பல மையங்களை வைத்துக் கொள்வதால் மிகுந்த செலவாகும். ஆதாய மையம் நிறுவனத்தின் அமைப்பு, பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பிரிவின் செயல் திறன், அப்பிரிவுக்காகும் செலவுகளாலும் அப்பிரிவினால் வரக்கூடிய வருமானத்தினாலும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பிரிவின் மேலாளரும் தம் பிரிவில் மிகுந்த ஆதாயம் ஈட்ட முனைவர். இதற்குப் “பங்களிப்பு மையம்” (Contribution Centre) என்று பெயர். முதலீட்டு மையம் ஒவ்வொரு பிரிவின் மேலாளரும் அப்பிரிவினால் வரக்கூடிய ஆதாயத்திற்கு மட்டும் பொறுப்பேற்பதில்லை. அப்பிரிவில் அவர் பயன்படுத்தும் சொத்துகளுக்கும் அவரே பங்கேற்கிறார். அப்பிரிவிற்கான முதலீடும் அதனால் வரக்கூடிய வருமானமும் கணக்கிடப்படுகின்றன. இதைப் பொறுத்தே அங்கு வேலை செய்யும் தொழிலாளரின் செயல் திறனும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு மேலாளரும் அவர் கையாளும் முதலீட்டிற்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறையாத வருமானம் ஈட்ட ஊக்குவிக்கப்படுவர். திறமைமிகு மேலாளர்கள் மேலாண்மை முடிவுகளைத் தாமே எடுக்க முழு உரிமையும் அளிக்கப்படுகிறது. மதிப்பீட்டு மையம் மதிப்பீட்டுக் கட்டுப்பாடுகளுக்காக இம்மையம் இயங்குகிறது. ஒவ்வொரு மதிப்பீட்டு மையத்திற்கும் தனித்தனியே மதிப்பீடுகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு செயல்பட ஒரு மேலாளர் பொறுப்பேற்கிறார். அம்மதிப்பீட்டின்படி செயல்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் அவரே பொறுப்பேற்கிறார். பொருள்களுக்கேற்பப் பொருத்தமான வகைகளில் அடக்கவிலை வரையறுக்கப்படுகிறது. அடக்கக் கணக்கின் சிறப்புக் கொள்கைகள் 1) ஒவ்வொரு நிறுவனமும் அதன் நடவடிக்கைகளின் சிறப்புத் தன்மைக்குத் தக்கவாறு அடக்கக்கணக்கு முறைகளைக் கையாள வேண்டும். 2) ஒரு செலவினம், செலவு செய்யப்படுவதற்கு முன் அடக்கவிலைக் கணக்கில் சேர்க்கப்படக் கூடாது. 3) அடக்கக் கணக்கு உருவாக்கத்தில் பழைமை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கலாகாது. 4) கடந்த காலச் செலவுகளை எதிர்காலச் செலவிற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. 5) பொதுவாக, நிகழாத, ஆனால் எப்போதாவது நிகழக் கூடிய, செலவுகளும் அடக்கக் கணக்கில் வாரா. 6) அடக்கக் கணக்குகள் இரட்டைப் பதிவு (Double Entry) முறைக் கணக்கின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். 7) நடவடிக்கைகளின் உண்மைத் தன்மைக்கேற்றவாறு செலவுகள் அந்தந்தக் செலவுகள் அந்தந்தக் கணக்குகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அடக்கக் கணக்கின் வகைகள் பல வகையான முறைகளில் அடக்கவிலை முடிவு செய்யப்படலாம். ஆனால், எல்லா முறைகளிலும் பொதுவான கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உற்பத்திப் பொருளுக்குத் தகுந்தவாறும் உற்பத்தி முறைகளுக்குத் தகுந்தவாறும் செலவுகள் ஒதுக்கப்படுவதும் அடக்க விலைக் கணக்குகள் உருவாக்கப்படுவதும் மாறுபடும். இதில் இருவகையான முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை 1) வேலைச் செலவுக் கணிப்பு, 2) தொழில் முறைச் செலவுக் கணிப்பு. வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவைக்குத் தக்கவாறு பொருள் உற்பத்தி செய்யும்போது, அதற்கான அடக்கவிலை வரையறை செய்யப்பட்டு, அனைத்துச் செலவுகளும் கணக்கில் கொண்டுவரப்படுகின்றன. இவ்வடிப்படையிலேயே அச்சகங்களிலும் கப்பல் கட்டும் நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டட வேலைகளிலும் பழுதுபார்க்கும் பணிமனைகளிலும் அடக்கக் கணக்குகள் வரையறை செய்யப்படுகின்றன. பொதுவாக, பொருள் உற்பத்தி வெவ்வேறு முறைகளில் நிகழ்கிறது. ஒரு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், அடுத்த முறைக்கு மூலப் பொருளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு முறையிலும் சில துணைப்பொருள்கள் (By-products) உருவாவதும் உண்டு. இரசாயனத் தொழிற்சாலைகள், நெசவாலைகள், தோல் பதனிடு தொழிற்சாலைகள் காகிதத் தொழிற்சாலைகள், செங்கற் சூளைகள், சோப்புத் தொழிற்சாலைகள் போன்றவற்றில் இம்முறையில் அடக்கவிலை கணக்கிடப்படுகிறது. சில நிறுவனங்கள் ஒரே தன்மையான பொருள்களை உருவாக்கும். அங்கு ஒவ்வொரு பொருளின் தனி அடக்க விலை (Unit Costing) கண்டுபிடிக்கப்படும். போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள், மின்சார நிறுவனங்கள், குடிநீர்ப்பங்கீட்டு நிறுவனங்கள் முதலியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பொதுவாகக் கையாளப்படுகின்றன. அம்முறைகளுக்குப் பல்வகைச் செலவுக் கணிப்பு (Multiple Costing) என்பது பெயர். அடக்கக் கணக்கின் நுட்பம் 1) பழைய விவர அடிப்படைக் கணிப்பு (Historical Costing): ஒரு பொருளின் உற்பத்திக்குப் பின், அதன் செலவு விவரங்களிலிருந்து உற்பத்திச் செலவைக் கணக்கிடுதல், இதில் அடக்க விலைக் கட்டுப்பாட்டு முறையைக் கையாள முடியாது. 2) திட்டச் செலவுக் கணிப்பு: ஒரு பொருள் உற்பத்திக்கு முன்பே செலவினங்களை வரையறுப்பது திட்டச் செலவுக் கணிப்பு எனப்படும். உற்பத்திக்குப் பின், செலவையும் திட்டக்காலச் செலவுக் கணிப்பையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைத் திட்டச் செலவுக் கணிப்பு கணக்கிடுகிறது. 3) இறுதிநிலைச் செலவுக் கணிப்பு: ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சில செலவுகள் ஏற்படலாம். சில, உற்பத்திக்குத் தக்கவாறு மாறும் செலவுகள் (Variable Costs); சில மாறாச் செலவுகள் (Fixed Costs): மாறாச் செலவுகளைக் கணக்கிடாமல், மாறக்கூடிய நேரடிச் செலவுகளை மட்டும் கணக்கிடுவது இறுதிநிலைச் செலவுக் கணிப்பு எனப்படும். இந்த இறுதிநிலைச் செலவை விற்பனை விலையிலிருந்து நீக்கினால், கிடைப்பது ஆதாயப் பங்கு (Contribution). இத்தொகையிலிருந்து மாறாச் செலவுகளைக் கழித்தால் கிடைப்பது ஆதாயமாகும் (Profit). சேர்ப்புச் செலவுக் கணிப்பு (Absorption Costing) இம்முறையில் ஒரு பொருளுக்காகும் நேரடியானதும் மறைமுகமானதுமான அனைத்துச் செலவுகளும் கணக்கிடப்படுகின்றன. ஒரு தன்மைச் செலவுக் கணிப்பு (Uniform Costing) ஒரு தன்மைப் பொருள்களை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களும் ஒரே வகையான அடக்கக் கணக்குக் கொள்கைகளைக் கையாள்வதைக் குறிக்கும். அவை நிறுவனங்களின் உற்பத்தி அடக்க விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் விற்பனை விலையை வரையறுக்கவும் உதவும். சில செலவுகள், அவை செலவிடப்படும் இனத்தைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் செலவுகள், உற்பத்திச் செலவு என்றும் மேற்பார்வைச் செலவு என்றும் விற்பனைச் செலவு என்றும் இனப்படுத்தப்படுகின்றன. அடக்கக் கணக்கின் பயன்கள் அடக்கவிலைக் கணக்குகளின் மூலமாக 1) அடக்கவிலை முடிவு செய்யப்படுகிறது. 2) எந்தெந்த வருமானத்திற்கு எந்தெந்தச் செலவுகள், முறையாகக் காட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். 3) ஒரு குறிப்பிட்ட பணியை அதற்காகும் அடக்கச் செலவின் அடிப்படையில் கணக்கிட இயலும். 4) விற்பனை விலையை உறுதிசெய்ய முடியும். 5) நடவடிக்கை ஒவ்வொன்றிலும் ஈட்டக்கூடிய ஆதாயத்தை வரையறை செய்ய முடியும். 6) மேலாண்மையினர் எதிர்காலத் திட்டத்தைத் தீட்டவும் உறுதியான முடிவுகளை மேற்கொள்ளவும் இயலும்.பி.இரா. துணைநூல்கள் Bhar, B.K., “Cost Accounting”, Academic Publishers, Calcutta, 1978. Sarkar, N., “Cost Accounting”, Academic Publishers, Calcutta. 1976.