நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் இராமகிருட்டிண பரமஅம்சர் போன்ற ஒரு பெருமகன் உலகத்தில் தோன்றி ஓரியக்கத்தை உருவாக்க முடியும். சூழ்நிலைகளை ஒட்டியே இயக்கங்கள் உருவாகின்றன. இந்திய நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியால் மேல்நாட்டு நாகரீகத் தாக்குதல் ஏற்பட்டது. பழைமையான சமய நெறிகளிலும் ஒழுக்கங்களிலும் மக்கள் கொண்டிருந்த பிடிப்புத் தளர்ந்தது. அதே சமயம் மேல் நாட்டுப் பண்பாட்டுத் தொடர்பினால் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய மறுமலர்ச்சி முகிழ்த்தது. கலை, அறிவியல், சமுதாய வாழ்வு, அரசியல் முதலான துறைகளில் இராசாராம் மோகன்ராய் போன்ற தலைவர்கள் தோன்றினர். ஆரிய சமாசம் போன்ற இயக்கங்கள் தோன்றின. கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர் இராமகிருட்டிண பரமஅம்சர். இராமகிருட்டிண பரமஅம்சர் வங்காளத்தில் கமர்புகூர் என்னும் ஊரில் கி.பி. 1836–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 18–ஆம் நாள் அந்தணர் குலத்தில் குதிராம் சட்டோபாத்தியாயர் என்பவருக்கும் சந்திராதேவி என்ற அம்மையாருக்கும் கதாதரர் என்பவர் பிறந்தார். இளமையிலேயே இவரிடம் கலையுணர்யும் கடவுட் பற்றும் காணப்பட்டன. இவர் இசை, நடிப்பு முதலியவற்றில் நாட்டம் கொண்டிருந்தார்; இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் சிற்சில சமயங்களில் தியானத்தில் ஒன்றி மெய்ம்மறந்த நிலையில் காணப்படுவார். இறையுணர்வுடனேயே அன்றாட வாழ்க்கையைக் கழித்து வந்தார். கல்கத்தாவுக்கருகில் தட்சிணேசுவரம் என்னும் சிற்றூரில் உள்ள காளி கோவிலிலேயே தம் ஆயுட்காலம் முழுதும் தங்கிக் கோவில் பூசை செய்துவந்ததோடு, ஆத்ம சாதனையையும் மேற்கொண்டார். இக்கோவிலில் கிருட்டிணன், சிவன் முதலான தெய்வங்களுக்கும் கோவில்கள் அமைந்திருந்த சூழ்நிலை அமைந்திருந்த கடைப்பிடித்து வந்த சமயப் பொதுநோக்கிற்கு உதவிற்று. அவரவர் தத்தம் சமய நெறிகளையும் ஒழுக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்று உபதேசித்து வந்ததோடு, ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும் இவர் வலியுறுத்தினார். இராமகிருட்டிண பரம அம்சர் முறையாகச் சாத்திரங்கள் கற்றவரல்லர். ஆயினும், கேள்வியறிவு இவருக்கு மிகுதியாக இருந்தது. கமர்புகூர் தருமசாலையில் வரும் சாதுக்கள், பக்தர்கள் ஆகியோருடைய கூட்டுறவு அத்தகைய கேள்வியறிவை இவருக்கு ஊட்டியது. இயல்பாகவே இறையுணர்வு இவருள்ளத்தில் மிக்கிருந்ததால் இவர் ஆன்மிகத்துறையில் வேகமாக முன்னேறினார். நூலறிவின்றியே இறைவனை அணுக முடியும் என்பதைத் தம் வாழ்வில் காட்டிய வித்தகர் இவர். இவருடைய உபதேசங்கள் தம்மைச் சுற்றியிருந்தவர்களுக்கு இவர் நேரிடையாகக் கூறியவையே. அவை ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாக இருந்தன. இவருடைய உபதேசங்கள் எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருந்தன. எடுத்துக் காட்டாக, இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு சூரியனுக்கும் அதன் ஒளிக்கதிர்களுக்கும் உள்ளது போல பிரிக்க இயலாத ஒன்று என்று இவர் விளக்கியதைக் கூறலாம். காளிதேவியைப் பூசை செய்துவந்த இவர் ஒரு முறை சிவவேடம் தரித்துத் தம்முணர்வு கெட்டுச் சிவனது தன்மையையே பெற்றவராகக் காணப்பட்டார். ஒவ்வொரு மதத்திலும் உள்ள கொள்கைகளையும் ஒழுக்க நெறிகளையும் நேரில் அறியும் அவாவினைக் கொண்டிருந்தார். இதன் பொருட்டு வைணவச் சாதனையில் சில காலம் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு துறவு நிலையை மேற்கொண்டு அத்துவிதச் சாதனையை முறையாகப் பயின்றார். இவ்வாறு சில காலம் பக்தி நெறி, ஞான நெறி இரண்டிலும் மாறி மாறிச் சாதனை மேற்கொண்டார். கோவிலுக்கு வெளியில் தங்கி கி.பி. 1866–இல் இசுலாம் மதத்தின் நடைமுறையை மேற்கொண்டு உருவற்ற கடவுளிடத்தே தம்மை ஒன்றச்செய்து கொண்டார். கிறித்தவ நெறியை கி.பி. 1874–இல் மேற்கொண்டிருந்த போது கிறித்தவருடைய கொள்கையும் அன்பு தெறியும் இவரை ஆட்கொண்டன. இவ்வாறு ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் நேரிடையாக ஒன்றியிருந்து பெற்ற அனுபவ அறிவு, அனைத்துச் சமயங்களும் ஒரே குறிக்கோளை நோக்கிச் செல்லும் பல பாதைகள் என்ற உண்மையை இவருக்கு உணர்த்தியது. இதன் விளைவாகப் பொதுமை நோக்கோடு இவர் வாழ்வில் ஒவ்வொரு மதத்தையும் அணுகினார். எனினும் எல்லோரையும் தத்தம் சமய நெறியில் உறைப்புடன் ஒழுகச் செய்தார். மதமாற்றம் என்பது இராமகிருட்டிணருடைய கோட்பாட்டிற்குப் புறம்பானது. ஒரு குளத்திலுள்ள பல்வேறு துறைகளில் இறங்கி மூழ்கும் பல வகைப்பட்ட மக்களும் ஒரே நீரில்தான் மூழ்குகிறார்கள்; ஒரே பயனைத் தான் பெறுகின்றார்கள். அது போல் எம்மதத்தைச் சார்ந்தவரும், எம்முறையைப் பின்பற்றினாலும் அனைவரும் அடைகின்ற இறுதிப் பேறு ஒன்றே என்பதை இராமகிருட்டிணர் தம் அனுபவத்தைக்கொண்டே பிறருக்கு உணர்த்தினார். நீர், பானி, சலம், பாடர் என்ற சொற்கள் வேறுபட்டாலும் பொருள் ஒன்றேயாதல் போலப் பிரமம், சிவன், கிருட்டிணன், காளி, அல்லா, ஏசு என்று எப்பெயர் கொண்டு போற்றினாலும் போற்றப்படும் பரம்பொருள் ஒன்றே என்பதை உணர்ந்து உரைத்தவர் இராமகிருட்டிண பரமஅம்சர். ஒவ்வொருவரும் தத்தம் இயல்பு, சூழ்நிலைக்கேற்ப ஒரு நெறியைத் தேர்ந்து கடைப்பிடித்தால் அனைவரும் இறுதிக்குறிக்கோளை அடையலாம் என்று இராமகிருட்டிணர் கூறியுள்ளார். கரும நெறியில் நின்று மக்கட் சமுதாயத்திற்குப் பணி செய்வோரும், பக்தி நெறியில் நின்று இறைவனைத் தொழுவோரும், யோக நெறியில் நின்று உள்ளத்தில் உயிருக்குயிராய் இருக்கும் இறைவனைக் காண்போரும், ஞான நெறியில் நின்று மெய்யறிவு பெற்று இறைவனை உணர்வோரும் ஒரே வீடுபேற்று நிலையை அடைய வல்லவரே என்கிறார். இல்லறத்தான் துறவறத்தான் இருவருக்குமே இதில் உரிமை உண்டு. உலகியல் வாழ்க்கை, சமய வாழ்க்கை என்று பிரித்துக் காணத்தகாது என்பதை அவர் பின்வருமாறு கூறுகிறார். ‘நீ வேலை செய்யும் போது ஒரு கையால் உலகியல் பணியைச் செய்து கொண்டே மறுகையால் இறைவனுடைய தாளை இறுகப்பிடித்துக் கொள். செய்வதற்கு வேலை இல்லாதபோது இருகைகளாலும் அவன் தாள்களைப் பிடித்து உன் இதயத்தில் இருத்திக் கொள்’. இவ்வுலகும் உயிரும் இறைவனின் வெளிப்பாடே, உயிர்கள் அனைத்தினிடத்தும் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்பதையும் மக்கள் தொண்டும் மகேசன் தொண்டே என்பதையும், வலியுறுத்தி வந்தவர் இராமகிருட்டிணர். ஒரு மனிதனை மாயை சுயநலக்காரனாக ஆக்குகிறது. அம்மாயையை விடுத்து அருளை மேற்கொண்டு, ஏழை எளியவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தில் தன் முனைப்புடன் எப்பணியையும் செய்யாமல், அவர்களைக் கடவுளின் வடிவமாகக் கருதித் தொண்டுள்ளத்தோடு பணி புரிய வேண்டும் என்கிறார், ஒருமுறை இவர் தீண்டத்தகாதவர் என்று கருதப்படும் ஒருவருடைய இல்லத்தில் உள்ள கழிவறையைத் தம் தலைமயிரால் சுத்தம் செய்தார் என்பது இவர் கொண்டிருந்த இக்கருத்தை வலியுறுத்தும். ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் அவர் ஈசனுக்குப் பக்தரானால் அவர் தரும் உணவை உண்ணலாம் என்று கூறியுள்ளார். இவர் தம் அனுபவத்தில் மனிதர், விலங்கு, மரம், நிலம் அனைத்தையுமே சிவமும் சக்தியுமாய்க் கண்டதாகக் கூறியிருக்கிறார். அத்துவைதிகள் குணம் குறிகளற்ற நிர்க்குண பிரமமே மெய்; குணங்குறிகளைக் கொண்ட ஈசுவரன் அடுத்த நிலையில் வைக்கத்தக்கவர் என்பர். இராமகிருட்டிணர் இரண்டிற்குமிடையே வேறுபாட்டைக் காணவில்லை. நிர்க்குண பிரமமே பரம்பொருள் என்ற அத்துவைதிக்கும் எல்லாக் குணங்களும் நிரம்பப் பெற்ற வழிபடு கடவுளே பரம்பொருள் என்ற சைவ வைணவர்களுக்கும் பாலமாக அமைந்தவர் இராமகிருட்டிணர். குணமற்றபிரமமே மெய்ப்பொருள் என்று கருதியிருந்த பிரம சமாசப் பேரறிஞர் கேசவ சந்திர சென் இராம கிருட்டிணரைச் சந்தித்தபோது, இவருடைய ஆன்மிகச் செல்வத்தால் ஈர்க்கப்பட்டார்; பக்தி நெறியை மதித்தார்; குணங்குறிகள் கொண்ட ஈசுவரனும் வழிபடத்தக்கவனே என்பதை ஏற்றுக் கொண்டார். நீரும் பனிக்கட்டியும் எப்படி ஒரே பொருளின் இரண்டு நிலைகளோ அப்படிக் குணமற்ற பிரமமும் குணம் நிறைந்த ஈசுவரனும் ஏற்றத் தாழ்வற்ற ஒரே பொருள் என்பதை இராமகிருட்டிணர் பலருக்கும் உணர்த்தினார். எனினும் இறைவனோடு முழுதும் ஒன்றிவிடும் சச்சிதானந்த நிலையே ஒருவர் இறுதியாக அடைய வேண்டிய அத்துவைத அனுபவ நிலை என்பதை இவர் தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இராமகிருட்டிணர் மகளிர் அனைவரையும் தாயாகவே கருதினார். துறவுநிலையில் இருந்த இவர் பெண்ணையும் பொன்னையும் விலக்கி வந்தார். ஆன்மிகச் சாதனைக்கு இவை தடை என்று கருதினார். ஆகவே, இவர் தம் மனைவியான சாரதாமணி தேவியையும் சக்தியாகக் கண்டார். இவர் காளிதேவி பூசகராக இருந்ததால் அத்தெய்வத்தாயின் அருளால் இறைவனின் பல்வேறு உருவங்கள் இவர் காட்சியில் இடம் பெற்றன. பகுத்தறிவு, உள்ளுணர்வு இரண்டையும் கடந்து நிற்பதாகிய இவர் காணும் காட்சி, நிர்க்குண பிரமத்தில் ஒன்றி அதுவே ஆன நிலையும் உண்டு. ஆனால், அந்த நிலையினின்றும் கீழே இறங்கி வந்து தம் அனுபவத்தைப் பிறருக்கு எடுத்துக் கூறும் வாய்ப்பினையே பெரிதும் விரும்பினார் இவர். பலமுறை இப்படி இரு நிலைகளிலும் இருந்து வந்தது இவருடைய சிறப்பாகும். சங்கரரின் ஞானமும் புத்தரின் இதயமும் இவரிடம் அமைந்திருந்ததே இதற்குக் காரணம். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற தன்னலமற்ற தன்மை இவ்விரு நிலைகளையும் வரை ஏற்கச் செய்தது. நோயைத் தீர்த்தல், நீர்மேல் நடத்தல், வானில் எழும்புதல் போன்ற சித்திகளில் சிலருக்கு நாட்டமுண்டு. இராமகிருட்டிணர் இவற்றை ஒதுக்கினார். இறைவன் திருவடிப்பேற்றையே இவர் பெரிதாக மதித்தார். இறைவனிடம் நாம் எதையும் கேட்காமல் நம்மையே அவனிடம் அடைக்கலப் பொருளாகக் கொடுத்து விட்டால், அவன் தன்னையே நமக்குத் தந்துவிடுவான் என்று கூறியுள்ளார். சீவன் முத்தர்கள் இருவகைப்படுவர். ஒரு வகையினர் தம்மளவிலே பரம்பொருள் ஞானம் கைவரப் பெற்று முத்திப் பேற்றினை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டவர். மறுவகையினர் தாம் பெற்ற அனுபவநிலைகளை விளக்கிப் பிறரையும் அந்நிலைகளுக்கு இட்டுச் செல்வர். ஒரு சிலர் கிடைத்த மாங்கனியைத் தாமே உண்டு மகிழ்வர். வேறு சிலரோ பிறருடன் பகிர்ந்து உண்பர். இவ்விரு வகையினரைப் போன்றவரே மேலே கூறப்பட்டவர்கள். சீவன் முத்தர்கள் பிறருக்கு வாழ்க்கை நெறிமுறைகளை உணர்த்துவதற்காகவே தம் அன்றாடக் கடமைகளைச் செய்து வருவார்கள். அவர்கள் செய்யும் வினைகளின் பயன் அவர்களைப் பற்ற மாட்டா. இராமகிருட்டிணர் பரமஅம்ச நிலையை அடைந்தும் பிறருக்கு எடுத்துக்காட்டாகச் சாதனைகளை மேற்கொண்டு ஒழுகி வந்தார். பயன்படுத்தாத பித்தளைப் பாத்திரம் களிம்பேறி ஒளிகுன்றி விடுவது போலச் சாதனைகளைக் கைவிட்ட சீவன் முத்தனுடைய ஆன்மவொளியும் குன்ற நேரிடும் என்பதற்காகவே பரமஅம்சரும் செயல்களைப் பயன் கருதாது செய்து வந்தார். ஞானியாக இருந்த இவர் கருமயோகியாகவும் வாழ்ந்து வந்தார். இறைவனுடைய மாயை இருவகையானது. அவித்தையாகிய மாயை அறியாமை, புறப்பற்று, சினம் முதலியன. அவை மனிதனை இறைவனிடமிருந்து விலகி இருக்கச் செய்யும். வித்தையாகிய மாயை, மெய்யறிவு, பக்தி உயிர்களிடத்து இரக்கம் முதலியன. அவை இறைவனிடம் மக்களைச் சேர்க்கின்றன. இராமகிருட்டிணர் போன்ற பரஅம்சர்கள் அவித்தையை வென்று இறைவனைச் சிக்கெனப் பற்றிக் கொள்ளும் திறம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இராமகிருட்டிண பரமஅம்சர், மேனாட்டுக் கல்வி பெற்றுச் சமயச்சீர் திருத்தம் செய்ய வேண்டும் என்று கருதிப் பிரம்ம சமாசம் போன்ற நிறுவனங்களோடு தொடர்பு கொண்ட அறிஞர்களையும் சந்தித்தார். நரேந்திரர் என்ற படித்த இளைஞர் இவரைச் சந்தித்துக் கடவுளைக் காட்ட முடியுமா என்று வினவினார். பகுத்தறிவில் நம்பிக்கை கொண்ட நரேந்திரர் பரமஅம்சரால் ஈர்க்கப்பட்டார். வேதாந்தத்தில் தெளிவு பெற்றார். அதை ஒரு நடைமுறைப்படுத்தத்தக்க மதமாக மேனாட்டாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகச் செய்தவர். பின்னாளில் விவேகானந்தர் என்று அழைக்கப்பட்ட இந்த நரேந்திரரே. இன்று ஆல்போல் விரிந்து சமயப் பணியையும், சமூகப் பணியையும் ஆற்றிவரும் இராமகிருட்டிண மட நிறுவனத்திற்கு வித்திட்டவர் இராமகிருட்டிண பரமஅம்சரேயாவர். பெ.தி.